என் மலர்tooltip icon

    சிவகங்கை

    மானாமதுரை அருகே வீட்டில் இருந்த வாகனத்திற்கு சுங்கச்சாவடியில் இருந்து பணம் எடுக்கப்பட்டு உள்ளதாக வந்த குறுஞ்செய்தி தகவலால் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரம் கிராமத்தில் வசித்து வருபவர் கமர் ரகுமான். இவர் சொந்தமாக 4 சக்கர வாகனம் வைத்துள்ளார். இவர் வீட்டில் ஒருவாரமாக தனது வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார்.

    இந்நிலையில் அவருக்கு மதுரை - ராமேசுவரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் இருந்து பணம் எடுக்கப்பட்டு உள்ளதாக குறுஞ்செய்தி தகவலாக வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காரின் உரிமையாளர் இதுகுறித்து உடனடியாக ஆதாரத்துடன் சுங்கச்சாவடி சென்று முறையிட்டு உள்ளார். அதற்கு சுங்கச்சாவடி மேலாளர், இதற்கும் எங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. நாங்கள் பொறுப்பு இல்லை. அந்த பணம் எடுத்த நேரத்தில் உங்கள் வண்டி செல்லவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதுகுறித்து வாகனத்தின் உரிமையாளர் கூறுகையில், இதேபோல வங்கிக் கணக்கில் இருந்து அடிக்கடி பணம் எடுக்கப்படுகிறது. பணத்தையும் பறிகொடுத்துவிட்டு அதைப்பற்றி கேட்டாலும் அதற்கு தகுந்த பதில் வரவில்லை. எனவே இந்த சுங்கச்சாவடியை கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    மேலும் மானாமதுரை வாடகை கார் ஓட்டுனர்களும் இதே குற்றச்சாட்டை கூறுகின்றனர். ஒரே நேரத்தில் 3 முறை வசூல் செய்வதாகவும் புகார் கூறுகின்றனர்.
    இளையான்குடி அருகே மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடியில் பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்றதாக தாயமங்கலத்தில் அழகு(வயது 61), இளையான்குடி புறவழிச்சாலையில் சேகர்(44), அதிகரை பஸ் நிறுத்தத்தில் உடையார்(66), கோட்டையூரில் நாகராஜ்(35) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 மதுபாட்டில்களும், ரூ.1350-ம் பறிமுதல் செய்யப்பட்டது.
    தொடர் மழை காரணமாக 16 ஆண்டுகளுக்கு பிறகு ஏரியூர் ஏரிக்கண்மாய் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்டது ஏரியூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் மலை கோவில் அருகில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஏரிக்கண்மாய் உள்ளது. விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் இந்த கண்மாய் பல ஆண்டுகளாக மழை இன்றியும் உப்பாறு நீர்வரத்து இன்றி வறண்ட நிலையில் கிடந்தது 16 ஆண்டுகளாக வறண்ட ஏரிக்கண்மாய் சமீபத்தில் பெய்த மழையால் நீர்நிரம்பி மறுகால் செல்கிறது. இந்த கண்மாய்க்கு உப்பாறில் இருந்து நீர்வரத்து வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மழைநீரால் உருவாகும் உப்பாறு மதுரை மாவட்டம் மலம்பட்டி வழியாக சிவகங்கை மாவட்டம் எருமைப்பட்டி மற்றும் உப்பிலாம்பட்டி வழியாக ஏரியூர் ஏரிக்கண்மாய் வந்து அடைகிறது. தற்போது கண்மாய் நிரம்பி தடுப்பணையை தாண்டி மறுகால் பாய்கிறது. இந்த தண்ணீர் அரளிக்கோட்டை பெரிய கண்மாய் சென்று அடைகிறது. அந்த பெரிய கண்மாயை நிரம்பி சிறு, சிறு கண்மாய்கள் நிரம்பி கல்லல் வழியாக மணிமுத்தாறு சென்று அடைகிறது. அங்கிருந்து தொண்டி சென்று கடலில் கலக்கின்றது.

    16 ஆண்டுகளுக்கு பிறகு ஏரிக்கண்மாய் நிரம்பி உள்ளதால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தற்போது அது ஒரு சுற்றுலா தலமாக மாறி உள்ளது. சுற்றுவட்டார கிராம மக்கள் கண்மாய்க்கு சுற்றுலா வர தொடங்கி உள்ளனர். மறுகால் பாயும் தண்ணீரில் அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    தற்போது கண்மாய் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே கிராம மக்கள் பாதுகாப்பாக குளிப்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    திருட்டு மணல் அள்ளுவது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாக கருதி தலையாரியை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த வாணியங்குடியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 40). இவர் பெரியகோட்டை வழுதாணி கிராம தலையாரி ஆக இருக்கிறார். சம்பவத்தன்று இரவு பாண்டி தாலுகா அலுவலகத்தின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவா (33) என்பவர் உள்பட 5 பேர் அங்கு வந்தனர். பாண்டியிடம் அவர்கள், சிவா மணல் அள்ளுவதை அதிகாரிகளுக்கு நீதான் தகவல் கொடுக்கிறாயா? என்று கேட்டு தகராறு செய்தனர். திடீரென்று அவர்கள் பாண்டியை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் பலத்த காயமடைந்த பாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி சிவா உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சிவா, அஜித் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
    இளையான்குடி அருகே கண்மாய்க்கு வரும் தண்ணீரை திருப்பி விட்டதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள சோதுகுடியில் நேற்று பகல் 2 மணியளவில் திடீரென்று கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. அந்த பஸ்களை சிறைப்பிடித்து கிராம மக்கள் கோஷமிட்டனர்.

    கிராம மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்ததும் இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசாரும், இளையான்குடி தாசில்தார் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் சோதுகுடி கண்மாய்க்கு வரும் தண்ணீரை கால்வாயில் மறித்து புதூர் ஊருணிக்கு திருப்பி விட்டதால் தங்கள் கண்மாய் நிரம்பவில்லை. எனவே தங்கள் கண்மாய் தண்ணீரை திருப்பி விட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்டோம் என்றனர்.

    இது தொடர்பாக போலீசாரும், வருவாய்த்துறையினரும் சோதுகுடி, புதூர், பூச்சியேந்தல் கிராமத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கண்மாய் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்பதை கூறியதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் இளையான்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சிவகங்கை அடுத்த மதகுபட்டி சலுகைபுரத்தில் வெள்ளை சேலை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை அருகே மதகுபட்டி கீழத்தெரு, மேற்குத்தெரு, சலுகைபுரம் பகுதிகளில் அதிகளவில் ஒரு சமூகத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் காவல் தெய்வங்களாக பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனை வழிபட்டு வருகின்றனர். மாட்டு பொங்கல் அன்று அம்மனுக்கு பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு தவிர்த்து வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்தனர்.

    அம்மனுக்கு நேர்த்திக்கடனாக தொட்டில் கரும்பு கட்டினர். விழா முடிந்ததும் மாலையில் கீழத்தெருவில் நேர்த்திக்கடன் கரும்புகள், விரதமிருந்து அம்மன் காலடியில் வைத்த எலுமிச்சை ஆகியவை ஏலம் விடப்பட்டது.

    இந்த ஏலத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.கரும்பு, எலுமிச்சையை ஏலம் எடுத்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதனால் அவற்றை போட்டி போட்டு கொண்டு ஏலம் எடுத்தனர். இதில் ஒரு கரும்பு அதிகபட்சமாக ரூ.35,001-க்கும், ஒரு எலுமிச்சை ரூ.15,100-க்கும் ஏலம்போனது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    எங்கள் தெய்வங்களுக்கு முன்பு ஏழை, பணக்காரர் என வித்தியாசமின்றி அனைவரும் சமம் என்பதற்காக அணிகலன்கள் அணியாமல் ஒரே மாதிரியாக உடையணிந்து பொங்கல் வைப்போம். இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே விரதம் இருக்க தொடங்கி விடுவோம். ஏலம் எடுப்போருக்கு நினைத்த காரியம் நடப்பதால் ஆண்டுதோறும் ஏலத்தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது என்றனர்.
    சாக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதி கொண்டனர். இதில் வீடு, கடை சூறையாடப்பட்டது. இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    காரைக்குடி:

    சாக்கோட்டை போலீஸ் சரகம் பெருந்தாக்குடி அருகே சாலையில் நேற்று முன்தினம் பகலில் ஒரு தரப்பினர் மோட்டார் சைக்கிளில் மற்றும் கார்களில் வேகமாக சென்றனர். அப்போது அங்கு நின்ற அப்பகுதியை சேர்ந்த சிலர் மெதுவாகச் செல்லக் கூடாதா? என கேட்க, காரில் சென்றவர்கள் ஓரமாக நிற்க கூடாதா? என்று கேட்க இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் காரில் வந்தவர்கள் சென்று விட்டனர். சிறிது நேரத்தில் மீண்டும் காரில் மேலும் சிலரை அழைத்துக்கொண்டு வேல் கம்பு, கட்டை மற்றும் ஆயுதங்களோடு சம்பவ இடத்திற்கு வந்திறங்கி அங்கே வீட்டின் முன் நின்றிருந்த கணேசன் (வயது 65) என்பவரையும், அவருடன் இருந்தவர்களையும் ஆபாசமாக பேசி தாக்கினார்கள்.

    பின்னர் அங்கிருந்த கடைகள், வாகனங்கள், வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். வீடுகளுக்குள் புகுந்து அங்கு இருந்தவர்களையும் தாக்கியுள்ளனர். காயம் அடைந்தவர்களிடம் ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சாக்கோட்டை போலீசார் விரைந்தனர்.காயம் அடைந்த கணேசன் உள்பட 6 பேர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து பெருந்தாக்குடி கணேசன் சாக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சாக்கோட்டை போலீசார் ஆவத்தான் குடியிருப்பு பகுதியை சேர்ந்த அஜித் குமார் (வயது 23) செல்வம் (22) என்பவர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் அஜித்குமார் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தரப்பை சேர்ந்த சிறுகப்பட்டி, பெத்தாட்சிக்குடியிருப்பு, மித்திராவயல், பெரியகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சார்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் மித்திரா வயல் விலக்கு ரோட்டில் நேற்று பகல் 3 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நாங்கள் கொடுக்கும் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் .என கோரிக்கை விடுத்தனர். தொடர் மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், தாசில்தார் ஜெயந்தி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையின் போது, மறியலில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரவு 9 மணியளவில் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
    சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை:

    இந்தியா முழுவதும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சியின் தொடக்கவிழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார்.மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல் வரவேற்று பேசினார்.

    டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியும், மதுரையில் முதல்-அமைச்சரும் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் சிவகங்கையில் கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    முதல் தடுப்பூசி மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேலுக்கு போடப்பட்டது. தொடர்ந்து குழந்தைகள் நலப்பிரிவின் தலைவர் டாக்டர் சிவக்குமார் போட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து மற்ற மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    தடுப்பூசி போட வருபவர்கள் ஒரு வழியில் வந்தனர். அவர்கள் ஊசி போட்ட பின்னர் மற்றொரு வழியில் சென்றனர்.ஊசி போட்டு கொண்டவர்களை சுமார் அரை மணி நேரம் தங்க வைத்து கண்காணித்து அனுப்பினர். நேற்று ஒரு நாளில் 100 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, குடும்ப நலத்துறை துணை இயக்குனர் யோகவதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் .மஞ்சுளா பாலசந்தர் மற்றும் அரசு மருத்துவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஏற்பாட்டில் தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் காட்சியும், தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போடுவதை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியும் நேரடி ஒலிபரப்பு மூலம் காண்பிக்கப்பட்டது.
    சிவகங்கையில் தனிக்குடித்தனம் நடத்த வர மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டியது தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை இந்திராநகரை சேர்ந்தவர் முத்து (வயது 38). பெயிண்டர். இவரது மனைவி சுதா(34) இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சனையால் கணவன்-மனைவி இருவரும் கடந்த 3 வருடமாக பிரிந்து வாழ்கின்றனர். தற்போது சுதா அண்ணாமலை நகரில் உள்ள அவரது தாய் வீட்டில் வசிக்கிறார்.

    சம்பவத்தன்று சுதாவின் உறவினர் ஒருவர் இறந்து போனதால் அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுதா இந்திராநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்த முத்து தனிக்குடித்தனம் போகலாம் என்று சுதாவை அழைத்தாராம். ஆனால் சுதா மறுத்து விட்டாராம். இதில் ஆத்திரம் அடைந்து முத்து மற்றும் அங்கிருந்த மற்றொரு உறவினரான முத்துக்குமார் (40) ஆகியோர் சுதாவை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்தகாயம் அடைந்த சுதாவை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது தொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் மீனுப்பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முத்துவை கைது செய்தனர். முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.
    காரைக்குடியில் செல்போனை தந்தை வாங்கி வைத்துக்கொண்டதால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    காரைக்குடி:

    காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகபிரபு. இவர் சித்தா டாக்டர் ஆவார். அப்பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது மகள் ஹரிதா (வயது 18). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அதற்காக ஆன்லைன் மூலம் பாடங்களை கற்று வந்தார். தற்போது ஆன்லைன் வகுப்புகள் முடிவடைந்து விட்டதால் அவரிடம் இருந்த செல்போனை அவரது தந்தை வாங்கிக் கொண்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த ஹரிதா சம்பவத்தன்று மாடி அறைக்கு சென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் காரைக்குடி வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி அருகே மோட்டார்சைக்கிள் மோதி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி சத்யா நகரை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன் (64). இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று காசிவிஸ்வநாதன் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அண்ணாநகரைச்சேர்ந்த தினேஷ் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த காசிவிஸ்வநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டார்ச் லைட்டால் தாக்கி தந்தையை படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
    திருப்புவனம்:

    திருப்பாச்சேத்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது தூதை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மலையாளம் (வயது65) . இவரது மகன் சங்கையா (38). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தந்தை- மகன் இருவருக்கும் வீடு பிரிப்பது சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில் தந்தை மலையாளம் குடித்துவிட்டு வந்து மகனிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகன் சங்கையா டார்ச் லைட்டால் பயங்கரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மலையாளம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மகன் சங்கையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×