என் மலர்
சிவகங்கை
கரிசல்பட்டி கிராமத்தில் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டி கிராமத்தில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்துக்கு உட்பட்ட பழமை வாய்ந்த கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் 100 வருடங்களுக்கு பின் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழா குழு நிர்வாகிகள் சந்திரசேகரன், ராமன் முன்னிலையில் மாவட்ட சமஸ்தான தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.
இைதயொட்டி கோவில் அருகே பிரமாண்ட யாக சாலை அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொடர்ந்து யாக பூஜைகள் நடைபெற்று யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள், பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்து மஹா பூர்ணாஹூதி நடந்தது. மங்கள வாத்தியங்க ளுடன் கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்தது.
ராஜகோபுர கலசங்கள் மற்றும் மூலவர் விமான கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்த னர். அ.தி.மு.க. செயலாளர் எம்.வி.ஓமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் ஷாஜகான், வருவாய் ஆய்வாளர் இளையராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, கிராம நிர்வாக அலுவலர் அழகு, தானம் அறக்கட்டளை திட்ட இயக்குனர் செல்வமணி, உலகம்பட்டி இன்ஸ்பெக்டர் கலாராணி மற்றும் பலர் பங்கேற்றனர்.
திருக்கோஷ்டியூரில் சவுமியநாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கியது. தினந்தோறும் இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான நாளை (சனிக்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது. ரிஷப வாகனத்தில் திருத்தேருக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலையில் தேரோட்டம் நடைபெற இருக்கிறது.
கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற இருப்பதால் பக்தர்கள் அதிக அளவில் வரக்கூடும் என்ற காரணத்தினால் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானமும் மற்றும் கோவில் பணியாளர்களும் செய்து வருகின்றனர்.
சிவகங்கை அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் திரளானோர் பங்கேற்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள கழுங்குப்பட்டியில் உள்ள ஏரிக்கண்மாய் சுமார் 227 ஏக்கர் உள்பரப்பளவும், 383 நீர்ப்பாசன ஆயக்கட்டு தாரர்கள் பயன்பெறும் வகையிலும், 3 டிஎம்சி தண்ணீரை ஒரே நேரத்தில் தேக்கி வைக்க கூடிய அளவிற்கு உள்ள பெரிய கண்மாய் ஆகும்.
இந்த கண்மாய்க்கு நீர்வரத்தாக மதுரை மாவட்டத்தில் உள்ள கரந்தமலை, ஏறக்காழ மலை, அழகர்கோவில் மலை, பூதகுடிமலை போன்ற மலைகளில் இருந்து பருவகாலங்களில் பெய்யப்படும் மழைநீர் ஏரிக்கண்மாய்க்கு வருவது வழக்கமாக இருந்து வருகி றது.
இந்த கண்மாய் தண்ணீர் வரத்து பாதை சீமை கருவேல மரங்களால் முற்றிலுமாக தண்ணீர் வரத்து பாதை தடை பட்டு இருந்து வந்தநிலையில் முன்னாள் கலெக்டர் ஜெயகாந்தன் முயற்சியால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சென்ற ஆண்டு பெய்த பலத்த மழையால் இந்த ஏரிக்கண்மாய் நிரம்பி வழிந்தது.
அதேபோன்று இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரண மாக, ஏரிக்கண்மாய் தன்னு டைய முழு கொள்ளளவை எட்டிய காரணத்தினால் இருபோக விவசாயத்தை இந்தப்பகுதியில் உள்ள ஆயக்கட்டுதாரர்கள் மேற்கொண்டனர்.
தற்சமயம் முற்றிலுமாக விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்கப்பட்ட நிலையில் மீன்பிடி திருவிழா நடத்த வேண்டும் என ஊர் மக்கள் சார்பாக முடிவெடுக்கப்பட்டு இன்று அதிகாலை மீன்பிடி திருவிழா நடந்தது.
மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி, நெற்குப்பை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்று கட்லா, ரோகு, ஜிலேபி, சிசி, விரால் போன்ற பலதரப்பட்ட மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
கச்சா, ஊத்தா, கொசுவலை, முதலிய சாதனங்களைக் கொண்டு நபர் ஒருவர் சுமார் 3 கிலோவில் இருந்து 5 கிலோவரை மீன்களை பிடித்தனர்.
மீன்பிடி திருவிழா நடத்தப்படுவதால் வரும் காலங்களில் விவசாயம் செழிக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகரில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க கூட்டமைப்பு சார்பில் வட்டார தலைவர் ஸ்ரீதர்ராவ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட செயலாளர் சிங்கராயர், மாவட்ட துணை தலைவர் ஸ்டீபன், வட்டார செயலாளர் முத்து மாரியப்பன், பொருளா ளர் நிர்மலா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்க ளான ஜெயராமன், அழகுமணி, வட்டார துணை செயலாளர்களான ஆம்ஸ்ட்ராங்க், முத்துக்கு மார், சரளா, வட்டார துணை தலைவர்கள் பெஞ்சமின், மரியதாஸ் மற்றும் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மானாமதுரையில் பெட்ரோல் பங்க்குகளில் மோசடி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பஸ் நிலையம் அருகே உள்ள பாரத் பெட்ரோல் பங்க்குக்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து ராமேசுவரத்து செல்வதற்கு சுற்றுலா குழுவினர் குடும்பத்துடன் காரில் வந்தனர். இவர்கள் அங்குள்ள ஊழியரை அழைத்து முழு டேங்க் நிரப்ப சொல்லியுள்ளனர்.
காரில் 50 லிட்டர் கொள்ளளவு உள்ள டேங்கில் ஏற்கனவே 10 லிட்டர் உள்ள நிலையில் 45 லிட்டர் பெட்ரோல் போட்டதாககூறி ஊழியர்கள் பணம் வாங்கி உள்ளனர். தொடர்ந்து கார் சிறிது தூரம் சென்ற போது பெட்ரோல் குறைந்துள்ளதாக கார் மீட்டர் காட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து காரை திருப்பி அதே பெட்ரோல் பங்கில் மீண்டும் டேங்கில் பெட்ரோல் நிரப்புமாறு கூறியுள்ளனர்.
மீண்டும் 12 லிட்டர் பெட்ரோல் போட்டபின் நிரம்பியதாக ஊழியர்கள் கூறி அதற்குரிய பணத்தை கேட்டுள்ளனர். காரின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 50 லிட்டர் இருக்கும் போது எப்படி கொள்ளளவை மீறி பெட்ரோல் போட்டீர்கள் என கேட்டதற்கு ஊழியர்கள் வாக்குவாதத்தில் தகாத வார்த்தையால் பேசி தகராறு செய்தனர். இதனால் பெட்ரோல் போட வந்த வாடிக்கையாளர்களுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
காரின் டேங்க் கொள்ளளவை மீறி பெட்ரோல் போட்டதால் பெட்ரோல் பங்க்கின் முறைகேடு தெரியவந்ததாக வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக மக்களிடத்தில் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு கொள்ளை லாபம் அடிக்கும் பெட்ரோல் பங்க் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல் மானாமதுரை-சிவகங்கை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்திருப்பது பெட்ரோல் போடவந்த வாடிக்கையாளுக்கு தெரியவந்தது. பெட்ரோல் பங்கில் அதிகமாக வாகனங்கள் வரிசையில் வரும்போது அவசர அவசரமாக பெட்ரோல் நிரப்பும் போது வாடிக்கையாளர்கள் அளவு குறைவதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தவிர்க்க கூடுதலாக ஆட்களை பணிஅமர்த்த வேண்டும். பெட்ரோல் கணக்கிடும் கருவிகளையும் வாரம் ஒருமுறை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும்.
மானாமதுரையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, ஏர்நிரப்பும் வசதி என எதுவும் கிடையாது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மானாமதுரை பகுதியில் பெட்ரோல் பங்கில் நடைபெறும் மோசடிகளை உடனடியாக தடுக்க அதிகாரிகள் முன் வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மானாமதுரை தாசில்தார் தமிழரசன் பஸ்நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் சோதனை செய்து விசாரித்தார்.
சிவகங்கையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
சிவகங்கை
சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (12-ந்தேதி) காலை 10 மணிக்கு வட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும்நாள் முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் இலவச வீட்டுமனைபட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கி கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் இதர கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட உள்ளன.
எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த முகா மில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்ற கைதி தப்பி ஓட்டம்
சிவகங்கை
சிவகங்கையை அடுத்துள்ள சாத்தரச ன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் முனுசாமி, சரவணலிங்கம். இருவரும் நேற்று சாத்தரசன்கோட்டை அருகே சிங்காவோடை பகுதியில் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் சரவணலிங்கம் முனுசாமியை கம்பியால் தாக்கினாராம்.
இதில் இருவருக்கும் காயம் ஏற்படவே சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்த முனுசாமி மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இது குறித்து சிவகங்கை தாலுகா காவல்நிலையத்தில் முனுசாமி மீது தாக்குதல் நடத்தியதாக சரவணலிங்கம் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சரவணலிஙகம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் 2 காவலர்கள் பாதுகாப்பில் 205-வது வார்டில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்ததும் அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர்.
இந்தநிலையில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த சரவணலிங்கம் அவர்களது கண்காணிப்பையும் மீறி தப்பிவிட்டார். தப்பியோடிய சரவணலிங்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சி பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர். தப்பியோடிய சரவணலிங்கத்தை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. காவலர்கள் பாதுகாப்பில் இருந்தவர் தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவகோட்டையில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி பழமையான நகராட்சி ஆகும். வளர்ந்து வரும் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
நகராட்சியில் 40க்கும் மேற்பட்ட நகராட்சி தூய்மை பணியாளர்களும், 145 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது நகராட்சி விரிவடைந்து வரும் சூழலில் தூய்மைப் பணியாளர்களின் பணி நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும் மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயித்த ஊதியம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வால்துப்புரவு பணியாளர்கள் தங்களின் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத சூழ்நிலையில் உள்ளனர்.
எனவே ஊதிய உயர்வு வேண்டி நகராட்சி வாசலில் உள்ளிருப்பு போராட்டம் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து நடத்தினார்கள். இதனை அறிந்த நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகராட்சி ஆணையாளர் நகர் காவல்துறை ஆய்வாளர் சரவணன் நகராட்சிக்கு விரைந்து வந்தனர்.
நகர்மன்ற தலைவர் சுந்தர லிங்கம் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட கலெக்டரிடம் நாம் அனைவரும் சென்று உங்கள் கோரிக்கைகளை எடுத்துக் கூறுவோம் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க பணி யாளர்கள் பணிகளுக்கு சென்றனர்.
திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் சிராவயல் ஊராட்சிக்கு உட்பட்ட கீழையப்பட்டி கிராமத்தில் அழகுள்ள விநாயகர் கோவில் திருக்குட நன்னீ ராட்டு பெருவிழா மற்றும் 100ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது.
இதை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சு விரட்டு போட்டி ஏழுர், பத்து நாடு கிராம நாட்டார்கள் முன்னிலையில் நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக எந்த ஒரு விழாக்களும், மஞ்சு விரட்டுகளும், நடைபெறவில்லை.
தடை நீக்கம் காரணமாக இந்த ஆண்டு நடந்த மஞ்சு விரட்டு போட்டியில் மாவ ட்டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து 600க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு மஞ்சு விரட்டு தொழு வத்தில் இருந்தும், கட்டுமாடுகளாக வும், கண்மாய் மற்றும் வயல்வெளிகளில் அவிழ்த்து விடப்பட்டன. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி னர்.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்ம நாதன் தலைமையில் திருப்பத்தூர் மற்றும் நாச்சியாபுரம் காவல் நிலையத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்புவனம் மடப்புரத்தில் மதுபான பாரை அகற்றுமாறு வலியுறுத்தப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள மதுபான பாரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்புவனம் ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி, திருப்புவனம் நகரசெயலாளர் ஈஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த இயக்கம் குறித்து ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி கூறும்போது, மடப்புரம் கோவில் பக்தர்கள் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஏராளமான பெண்கள் வருகை தரும் பாதையிலும், தினந்தோறும் பள்ளிக்கூடத்துக்கு செல்கிற மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செல்கிற பாதையிலும் மற்றும் சென்மேரிஸ் அரியவா பள்ளி மாணவிகள் செல்கிற பாதையில் மதுபான பார் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்பகுதி பெண்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். மேலும் இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளோம் என்று தெரிவித்தார்.
மானாமதுரை பிரித்தியங்கிராதேவி கோவிலில் பால்குடம் உற்சவ விழா நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம். மானாமதுரை அருகே உள்ள மகாபஞ்சமுக பிரித்தியங்கிரா தேவிகோவில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசை தோறும் நடை பெறும் சண்டியாகத்தில் தமிழகம் மழுவதும் ஏராளமான பக்தர்கள்க லந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இங்குள்ள குண்டு முத்துமாரியம்மன் தனிசன்னதியில் சித்திரை பால்குடம் விழா நடைபெற்றது.
இதையொட்டி அருகில் உள்ள தர்மமுனீஸ்வரர் கோவிலில் இருந்து ஞான சேகரசுவாமி தலைமையில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலை வலம்வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் அன்னதானமும் நடைபெற்றது.
சிவகாசியில் வீடு புகுந்து 91 பவுன் நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அனுப்பக்குளம் பகுதியில் வசிப்பவர் செண்பகமூர்த்தி (வயது52). இவர் பட்டாசு ஆலைகளுக்கு டியூப் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் உள்ள இரும்பு பெட்டியில் 91 பவுன் நகைகளை வைத்திருந்தார்.
இந்தநிலையில் செண்பகமூர்த்தி மனைவியின் செயின் அறுந்துவிட்டது. அதனை சரிசெய்வதற்காக இரும்பு பெட்டியில் உள்ள நகையை எடுக்க பெட்டியை திறந்தனர்.அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த 90பவுன் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதனை மர்மநபர்கள் எடுத்து சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் நகை இருந்த இரும்புபெட்டி உடைக்கப்படாமல் இருந்த தால் அதிலிருந்த நகைகள் மாயமானது எப்படி?என்று கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றிய புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






