என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • மருதுபாண்டியர், தேவர் குருபூஜையை முன்னிட்டு 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்ைக மாவட்டத்தில் 31-ந் தேதி (திங்கட்கிழமை) வரை 144 தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான உத்தரவை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பிறப்பித்துள்ளார். நாளை (24-ந் தேதி) மருது சகோதரர்களை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்ட நினைவு தினம் திருப்பத்தூரில் அரசு சார்பிலும், 27-ந்் தேதி அவர்களின் சமாதி அமைந்துள்ள காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழாவாகவும் அனுசரிக்கப்படவுள்ளது.

    இந்த நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவார்கள். மேலும் அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா நடைபெறுகிறது.

    இதையொட்டி 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவித்துள்ளார்.

    • மானாமதுரை பகுதியில் சனிபிரதோஷ வழிபாடு செய்யப்பட்டது.
    • 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள குறிச்சிகாசி விஸ்வநாதர் கோவிலில் சனிபிரதோஷ வழிபாடு நடந்தது. காசிவிஸ்வநாதர், காசிநந்திக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் சிவலிங்கத்திக்கு அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர்.

    இதேபோல் இடைக்காட்டூர் மணிகண்டேஸ்வரர், மேலெநெட்டூர் சொர்ண வாரீஸ்வரர், வேம்பத்தூர் கைலாசநாதர், கட்டிக்குளம் ராமலிங்கம் சுவாமி, மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர், சிருங்கேரி சங்கரமடத்தில் உள்ள சந்திர மவுலீசுவரர் ஆகிய கோவில்களிலும் சனிபிரதோஷம் வழிபாடு-அபிஷேகம் பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • தொடர் மழையால் நீரில் மூழ்கி வாழை, நெற்பயிர்கள் சேதமானது.
    • விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் காயாம்பட்டி வருவாய் கிராமத்தில் விவசாயிகள் நெல், தென்னை, வாழை பயிரிட்டு வருகின்றனர்.

    கடந்த வருடங்களில் பருவமழை காலத்தில் தொடர்மழை பெய்வதால் மதுரை மாவட்டத்தின் எல்லையில் உள்ள செம்மிணிபட்டி கிராமத்திற்கு உட்பட்ட கருப்பாச்சி கண்மாய் துார் வாரததால் சுமார் 25 ஏக்கருக்கு மேல் பட்டா இடத்தில் நீர்பிடிப்புக்கு உள்ளாகிறது.

    அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மற்றும் நெல் நடவு செய்தனர். தற்போது சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக கண்மாய் நிரம்பி வாழை பயிரிட்ட நிலத்தில் 2 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பியது. இதனால் சுமார் 25 ஏக்கர் வாழை, நெற் பயிர்கள் கண்மாய் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

    இதனால் வருடம் தோறும் பெருத்த நஷ்டத்தை இந்த பகுதி விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயி ராமநாதன் கூறுகையில், அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும், மதுரை- சிவகங்கை என இரு மாவட்ட அதிகாரிகளும் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி எங்களது கோரிக்கை களை நிறைவேற்ற முடியாமல் தட்டிக்கழிப்பதாக குற்றம் சாட்டினார்.

    • அ.தி.மு.க. வினர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கினர்.
    • அவைத்தலைவர் பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    அ.தி.முக. 51-வதுஆண்டு விழாவையொட்டி சிவகங்கை நகர் அ.தி.மு.க. வட்டசெயலாளர் சேதுபதி ஏற்பாட்டில் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

    மேலும் சிவகங்கை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன், காமராஜர் காலனி அருகே உள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவை வழங்கினார்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், நகர செயலாளர் ராஜா, மண்டல தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் தமிழ்செல்வன், அவைத்தலைவர் பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு வனத்துறையினர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
    • 38 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்திற்கு அருகில் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமம் அமைந்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். சுமார் 38 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்திற்கு அருகில் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு மழைகாலங்களில் உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் வந்து இனப்பெருக்கம் செய்து செல்கின்றன.

    இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகள் ஒலி எழுப்பினால் அச்சமுற்று வேறு இடத்திற்கு சென்றுவிடும் என்பதால் சரணாலயத்திற்கு அருகில் வசிக்கும் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராம மக்கள் ஆண்டு முழுவதும் பட்டாசு வெடிப்பதில்லை. திருமணம், திருவிழாக்கள், தீபாவளி மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தலைமுறையாக பறவைகளின் நண்பர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்கள் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் சிறு மகிழ்ச்சியை தியாகமாக செய்வதை போற்றும் வகையில் சிவகங்கை வனக்கோட்டம், திருப்பத்தூர் வனச்சரக அதிகாரிகள் ஆண்டு தோறும் தீபாவளிக்கு முன்பு கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கி கவுரவிப்பார்கள். அது போல் இந்த ஆண்டும் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 200 குடும்பங்களுக்கு வனத்துறை சார்பில் இனிப்பு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

    • நெற்குப்பையில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
    • அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் இலவச சைக்கிள்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் இலவச சைக்கிள்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார். இதில் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார்,பேரூராட்சி சேர்மன் அ.புசலான், துணைச் சேர்மன் கே.பி.எஸ். பழனியப்பன், செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பெண் குழந்தைகள் பிறக்கும்போதே புறக்கணிக்கப்படுகின்றனர்.
    • மழைநீர் கால்வாயில் தண்ணீர் இல்லாத பகுதியில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அனாதையாக கிடந்தது.

    மானாமதுரை:

    பெண் குழந்தைகள் பிறக்கும்போதே புறக்கணிக்கப்படுகின்றனர். இதனை உறுதிப்படுத்துவது போல் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் மழைநீர் கால்வாயில் பெண் குழந்தை வீசி சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    மருது சகோதரர்கள் குருபூஜை மற்றும் பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன், மானாமதுரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், பெண் போலீஸ் ராதிகா ஆகிேயார் இன்று காலை மானாமதுரை பை-பாஸ் சாலை அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள கல்லறை தோட்டம் பகுதியை ஒட்டியுள்ள மழைநீர் கால்வாய் சிமெண்ட் சிலாப்பு பகுதியில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அங்கு வேறு யாரும் இல்லாத நிலையில் எங்கிருந்து அழுகுரல் வருகிறது என்று போலீசார் தேடினர்

    அப்போது மழைநீர் கால்வாயில் தண்ணீர் இல்லாத பகுதியில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அனாதையாக கிடந்தது. அதனை போலீசார் மீட்டு மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் போலீசார் மழைநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தையை வீசிவிட்டு சென்றது யார்? தாயே அந்த குழந்தையை அங்கு போட்டு விட்டு சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பச்சிளம் குழந்தையை பெற்றெடுத்த தாயே தனது மனதை கல்லாக்கி கொண்டு அங்கு போட்டு விட்டு சென்றாரா? அது தவறான உறவில் பிறந்த குழந்தையா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கல்லறை தோட்டம் பகுதியில் கால்வாயில் பச்சிளம் பெண் குழந்தையை போட்டு சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மழை பாதிப்புள்ள பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • கண்மாய் வரத்துக்கால் கலுங்குத்துறை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம், முத்தனேந்தல் உள்வட்டம், குவளைவேலி குருப், குவளைவேலி கண்மாய்க்கு தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமாகி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதையடுத்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில், குவளைவேலி கண்மாய் வரத்துக்கால் கலுங்குத்துறை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    மேற்கண்ட இடங்களில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்களுடன் கலுங்கில் இருந்த அடைப்பை தண்ணீர் வெளியேறும் வகையில் கிராமத்தினர் உதவியுடன் சரி செய்யபட்டது.

    மேலும், தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் மேற்கு புறத்தில் கருவக்குடி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குவளைவேலி கண்மாய் கழுங்கை அடைக்கக்கூடாது என குவளைவேலி கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவறுத்தப்பட்டு, குவளைவேலி கண்மாயின் நீர் நிலைமை, விளத்தூர் காலனி குடியிருப்பில் இருந்த வீடுகளைச் சுற்றி உள்ள தண்ணீர் ஆகியவை குறித்து கலெக்டர் ஆய்வு செய்து, அந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறி யாளர் (சருகனியாறு வடிநிலைக் கோட்டம்) பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், உதவிப் பொறியாளர்கள் செந்தில்குமார், பூமிநாதன், மானாமதுரை வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஜினிதேவி, சங்கர பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எடையளவு சட்டத்தின் கீழ் இனிப்பு, ஜவுளிக்கடை வியாபாரிகள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சென்னை தொழிலாளர் துறை முதன்மை செயலாளர் அதுல்ஆனந்த, ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்

    (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் சிவகங்கை மாவட்டடத்தில் உள்ள ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை கடைகள், இனிப்பு கடைகளில் மற்றும் நிறுவனங்களில் திடீர் சோதனை செய்தனர்.

    எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ், பொட்டலப்பொருட்களின் மேல் பொருளின் பெயர், பொட்டலமிடுபவர், தயாரிப்பாளர் பெயர் மற்றும் முழு முகவரி, நிகர எடை/நிகர எண்ணம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை (வரிகள் உட்பட), பொட்டலமிட்ட, தயாரித்த மாதம், வருடம், நுகர்வோர் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவை கட்டாயமாக குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யவேண்டும்.

    அவ்வாறு சட்டவிதிகளின்படி இனிப்பு மற்றும் ஜவுளி பொட்டலங்களில் உரிய விவரங்கள் குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 7 வணிகர்கள் மீது பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேலும், எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 2 வணிகர்கள் மீதும், எடையளவு மறு முத்திரை இடப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத, 10 வியாபாரிகள் மீதும் எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட 17 முரண்பாடுகளுக்கு சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும், வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் அனைத்து நிறுவனங்களும் அவர்களது பெயர் விவரங்களை labour.tn.gov.in என்ற விடுதலின்றி கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இந்த சோதனையில் சிவகங்கை தொழிலாளர் துணை ஆய்வாளர் வேலாயுதம் மற்றும் சிவகங்கை, காைரக்குடி, திருப்பத்தூர்,

    தேவகோட்டை தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தீனதயாளன், கலாவதி, வசந்தி ஆகியோர் ஈடுபட்டனர்.

    இந்த தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.

    • நிலக்கடலை பயிர் சாகுபடியில் ஒரு செடிக்கு 150 முதல் 160 கடலை விற்பனை செய்யப்படுகிறது.
    • எஸ்.புதூர் ஒன்றிய மேலாண்மை உழவர் நலத்துறை உதவி இயக்குனர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள வலசுப்பட்டி பிள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சின்னம்மாள் ராமன். இவர் தனது மானாவாரி நிலத்தில் நிலக்கடலை பயிர் செய்தார்.

    எஸ்.புதூர் ஒன்றிய வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை உதவி அலுவலர் பால முருகனின் நவீன கடலை சாகுபடி அறிவுரைக்கு ஏற்ப, கடலை விதைகள் வரிசை முறையில் ஒரு அடி இடைவெளியில் விதைகள் பதிக்கப்பட்டு, விதை நேர்த்தி, உர நிர்வாகம், இலைவழி தெளிப்பு மற்றும் ஜிப்சம் இட்டு மண் அணைத்தல் உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் கடை பிடித்தார்.

    அவருடைய மானாவாரி நிலத்தில் பயிரிட்ட கடலை அறுவடை செய்யப்பட்டதில் ஒரு கடலை செடியில் சுமார் 150 முதல் 160 நிலக்கடலைகள் வரை சாகுபடி இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சரியான நேரத்தில் நவீன விவசாய தொழில்நுட்பங்கள் கடைபிடிக்கப்பட்டு சரியான அளவில் மண்ணை அணைத்து சாகுபடி செய்ததால் நிலக்கடலை விளைச்சல் அமோகமாக இருந்துள்ளது.

    இது விவசாயிகளிடையே மிகுந்த ஆச்சரியத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது. ஏக்கருக்கு சுமார் 1500-ல் இருந்து 1600 கிலோ வரை மகசூல் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விவசாயி ராமன் எஸ்.புதூர் ஒன்றிய மேலாண்மை உழவர் நலத்துறை உதவி இயக்குனர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    • பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • ஒவ்வொரு பள்ளிக்கும் அத்தியாசிய புனரமைப்பு தேவைக்காக ரூ.10 ஆயிரத்தையும் அமைச்சர் வழங்கினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியங்களில் உள்ள ஏரியூர், எஸ்.எஸ். கோட்டை, முறையூர், சிங்கம்புணரி, கிருங்காகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 732 மாணவ- மாணவிகளுக்கு ரூ.37 லட்சத்து 34 ஆயிரத்து 451 மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    2021-22-ம் ஆண்டு பொதுத் தேர்வில் அந்தந்த பள்ளியில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சொந்த நிதியில் இருந்து முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் ஒவ்வொரு பள்ளிக்கும் அத்தியாசிய புனரமைப்பு தேவைக்காக ரூ.10 ஆயிரத்தையும் அமைச்சர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், திருப்புவனம் பேரூராட்சி சேர்மன் வேங்கை மாறன், சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், முறையூர் ஊராட்சி மன்ற தலைவர் என்.எம்.சுரேஷ், கிருங்கா கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அகிலா கண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • நிவேதா பிரசவ வலியால் துடித்ததால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மலையரசன் ஆம்புலன்சை விரைந்து ஓட்டிச் சென்றார்.
    • ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி நிவேதாவும், அவரது தாயும் இறந்த செய்தி அவரது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள நெஞ்சத்தூரைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி நிவேதா (வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு இன்று அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

    இளையான்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் நிவேதாவை 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக வீட்டில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

    சிறிது நேரத்தில் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்தது. மருத்துவ உதவியாளர் திருச்செல்வி நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்துக்காக ஆம்புலன்சில் ஏற்றினார். அவருடன் நிவேதாவின் தாய் விஜயலட்சுமி (55), உறவினர் சத்யா ஆகியோர் உடன் சென்றார். விளத்தூரை சேர்ந்த மலையரசன் என்பவர் ஆம்புலன்சை ஓட்டினார்.

    நிவேதா பிரசவ வலியால் துடித்ததால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மலையரசன் ஆம்புலன்சை விரைந்து ஓட்டிச் சென்றார். இளையான்குடி சாலை செங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    வேகத்தில் ரோட்டோர மரத்தில் ஆம்புலன்ஸ் பயங்கரமாக மோதியது. விபத்தில் ஆம்புலன்சில் இருந்த நிவேதா, அவரது தாய் விஜயலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    வலியால் அலறி துடித்த நிவேதாவும், அவரது தாய் விஜயலட்சுமியும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் மலையரசன், உதவியாளர் திருச்செல்வி, சத்யா ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகங்கை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிவேதா, விஜயலட்சுமி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் உட்பட 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி நிவேதாவும், அவரது தாயும் இறந்த செய்தி அவரது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்று குழந்தை பிறந்து விடும் என்ற சந்தோஷத்தில் இருந்த நிவேதாவின் குடும்பத்தினருக்கு இந்த செய்தி இடியை இறக்கியது. நிவேதா மற்றும் அவரது தாயின் உடல்களை பார்த்து அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    ×