என் மலர்
சிவகங்கை
- திருப்பத்தூர் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நின்ற நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சியைத் தொடர்ந்து உற்சவரான நாராயண பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயண பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அதன் வழியாக சுவாமி வலம் வந்து கோவிலை 3 முறை சுற்றி வந்தது. சுவாமியைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள், பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக கோவிலை வலம் வந்தனர். பின்னர் பெருமாள் திருநாள் மண்டபத்தில் ஊஞ்சலில் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
- வீர அழகர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது.
- முன்னதாக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகையாற்று கிழக்குப்பகுதியில் உள்ளது பிரசித்தி பெற்ற வீர அழகர்கோவில். இங்கு வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் திரண்டனர்.
மேள தாளத்துடன் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாளை பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என வரவேற்றனர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதேபோல் அப்பன் பெருமாள் கோவில், தியாக விநோத பெருமாள், உடைகுளம் மான்பூண்டி நல்லாண்டவர் பெருமாள் கோவில், வேம்பத்தூர் பூமி நீளாபெருமாள் கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
- மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்காத தனியார் பஸ்களுக்கு டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- இதே நிலை தொடருமானால் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரை சுற்றி சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேற்படிப்புக்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் பஸ்கள் மூலம் தேவகோட்டை வந்து செல்கின்றனர்.
தற்போது அரையாண்டு தேர்வு முடிவடைந்து பள்ளிகள் நேற்று திறக்க ப்பட்டன. திருப்பத்தூர் சாலை ராம்நகரில் உள்ள மாணவ- மாணவிகளும், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளும் விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதற்காக தேவகோட்டை பஸ் நிலையத்திற்கு நேற்று வந்தனர்.
அந்த மாணவ-மாணவிகளை தனியார் பஸ்களில் ஏற்றாமல் காரைக்குடி பயணிகளை மட்டும் பயணம் செய்ய அனுமதித்தனர். இதனால் திரளான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்தனர். இதுகுறித்து பஸ் நிலைய காப்பாளர் சந்தியாகு கொடுத்த தகவலின் பேரில் தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார்.
மாணவ-மாணவிகளை பயணம் செய்ய மறுத்த தனியார் பஸ்களின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை எச்சரித்து அனுப்பினார். இதே நிலை தொடருமானால் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார்.
- சிவகங்கையில் குறை தீர்க்கும் கூட்டத்தில் 59 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 259 மனுக்கள் பெறப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.
இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, உள்ளிட் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி, பொதுமக்களிடமிருந்து 259 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய மனுக்கள் மீது கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு கலெக்டர்அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 59 பயனாளிகளுக்கு ரூ.35.37 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
இளையான்குடி வட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார். அவரது வாரிசுதாரராகிய மனைவிக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரண உதவித்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி, தொழிலாளர் நல ஆணையர் கோட்டீ சுவரி, மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- இதில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஹைதர் அலி அம்பலம் தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் பிலால், அப்துல் கபூர், பகுசியா முன்னிலை வகித்தனர். காஜாமைதீன் ஆலிம் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் இனாயத்துல்லா வரவேற்றார். திருப்பத்தூர் நகரில் தமிழர்களின் மொழி, பண்பாடு, மத நல்லிணக்கம் பாதுகாக்கும் வகையில் அண்ணா அறிவாலயம் ஏற்படுத்துதல், "உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்" என்ற பிரசாரத்தில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர ஆர்ப்பாட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
இதில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, போன்ற பல்வேறு கட்சி நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வழக்கறிஞர் முகமது மணிப்புறா நன்றி கூறினார்.
- சிங்கம்புணரி அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- முத்து ராமலிங்கதேவரின் 115-ம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 60-ம் ஆண்டு குருபூஜை விழாவையொட்டி இந்த பந்தயம் நடந்தது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூரில் முத்து ராமலிங்கதேவரின் 115-ம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 60-ம் ஆண்டு குருபூஜை விழாவை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 56- க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பெரியமாடு, கரிச்சான் மாடு ஆகிய 2 வகையான காளைகள் போட்டியில் பங்கேற்றன. பந்தய காளைகளுக்கு ஏற்ப தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடந்தது.
ராமநாதபுரம் மன்னர் பிரம்ம முத்துராமலிங்க நாகேந்திர சேதுபதி கொடியசைத்து பந்தயத்தை தொடங்கி வைத்தார். காளைகள் அ.காளாப்பூர்- திருப்பத்தூர் சாலையில் சீறிப்பாய்ந்து இலக்கை எட்டின. வெற்றி பெற்ற பெரிய மாட்டின் உரிமையா ளர்களுக்கு முறையே ரூ.33 ஆயிரத்து 333, 2-ம் பரிசாக ரூ.27 ஆயிரத்து 777, 3-ம் பரிசாக ரூ.21 ஆயிரத்து 111, 4-ம் பரிசாக ரூ.6 ஆயிரத்து 666 வழங்கப்பட்டது.
கரிச்சான் மாட்டில் 44 ஜோடி மாடுகள் பங்கேற்றதால். 2 போட்டிகளாக பிரித்து நடத்த ப்பட்டது. அதில் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.23 ஆயிரத்து 333, 2-ம் பரிசாக ரூ.19 ஆயிரத்து 999, 3-ம் பரிசாக ரூ.16 ஆயிரத்து 666, 4-ம் பரிசாக ரூ.5 ஆயிரத்து 555 வழங்கப்பட்டது.
- முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் கூறினார்.
- 04575-299293 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் நடைபெற உள்ளன.
ஆண்-பெண் இரு பாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் என மொத்தம் 50 வகையான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளன.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்-வீராங்கணைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in–ல் வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலுள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்திலோ அல்லது தொலைபேசி எண்களான 74017 03503 மற்றும் 04575-299293 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிள்ளையார்பட்டி கோவிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.
- கற்பக விநாயகருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் அதி காலை முதல் நீண்ட வரிசையில் நின்று கற்பக விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் டிரஸ்ட் சார்பில் கோவில் முழுவதும் காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பக்தர்களுக்கு கழிவறை, குடிநீர், உணவு வசதி வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கற்பக விநாயகருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது.
- திருப்பத்தூர் பயணிகளுக்கு அவலம் தொடருகிறது.
- இது போன்ற அசாதாரண சூழ்நிலையை அடிக்கடி சந்திக்க வேண்டி உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் முகமது தாரிக். இவர் தாயாருடன் மதுரையில் இருந்து திருப்பத்தூர் வருவதற்காக மாட்டு த்தாவணி பஸ் நிலையத்தில் மன்னார்குடி செல்லும் அரசு பஸ்சில் ஏறி உள்ளார். நடத்துனரிடம் திருப்பத்தூர் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு நடத்துனர் இது மன்னார்குடி செல்லும் பஸ். தொலைதூரமாக செல்லும் பயணிகளுக்கு மட்டுமே நாங்கள் முன்னுரிமை வழங்க முடியும். திருப்பத்தூர் பயணிகள் இந்த பஸ்சில் ஏறக்கூடாது என்று கூறினார். இருவ ருக்கும் கைகலப்பு ஏற்படும் நிலையில் அருகில் இருந்தவர்கள் அமைதிப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து முகமது தாரிக் திருப்பத்தூரில் உள்ள உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தகவலை தெரிவித்தார். அந்த பஸ் திருப்பத்தூர் வரும்போது சாலையில் பஸ்சை மறித்தனர். நடத்துனர் மற்றும் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆங்கில புத்தாண்டு தினமாக இருப்பதால் போராட்டத்தை கைவிடுமாறு வலியு றுத்தினார்.
இனி இதுபோன்று நடக்காத வகையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிக்கு பரிந்துரை செய்வதாகவும் இன்ஸ்பெக்டர் தெரி வித்தார். அவனைத் தொடர்ந்து நடத்துனர் ராஜே ந்திரன் போராட்டத்தில் ஈடுபட்ட வரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மதுரையில் இருந்து திருப்பத்தூர் வருபவர்கள் இது போன்ற அசாதாரண சூழ்நிலையை அடிக்கடி சந்திக்க வேண்டி உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
- சபரி சாஸ்தா பஜனை குழுவினர் அன்னதானம் வழங்கப்பட்டது.
- சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கருதாவூரணி சபரி சாஸ்தா பஜனைக் குழுவின் 26ம் ஆண்டு அன்னதானம் நடந்தது. இந்த குழு சார்பில் கார்த்திகை முதல் தேதியில் இருந்து தினமும் பஜனை நடைபெற்று, சிறப்பு தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தில் கலந்து கொண்டனர். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மேற்பார்வையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதில் தேவகோட்டை நகர் மற்றும் கண்டதேவி, ஆறாவயல், சித்தானூர், பெரியகாரை, கோட்டூர் காவனவயல், உடப்பன்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாணவர் தங்கம் வென்றார்.
- மாணவர் சாய்வாசனை பயிற்சியாளர் ஜெரிமார்டின், பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
சிவகங்கை
சிவகங்கை முதலியார் தெருவை சேர்ந்த பாஸ்கரன்-லதா தம்பதியரின் மகன் சாய்வாசன் (14). சென்னை தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். பாட்மின்டன் வீரரான இவர் ஒடிசா மாநிலம் புவனேசுவரில் நடந்த தேசிய பாட்மின்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்றார். 15 வயதிற்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சாய்வாசன், அசாம் வீரர் போர்னில் ஆகாசை 15-21, 23-21, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்.சாய்வாசனை பயிற்சியாளர் ஜெரிமார்டின், பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
- நெற்குப்பை பேரூராட்சி மன்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
- மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி மன்ற மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது.
சேர்மன் புசலான் தலைமை வகித்தார். செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். மாதாந்திர வரவு-செலவு கணக்குகள் உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டது. பேரூராட்சியில் நடை பெற்று வரும் பணிகளின் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
திட்ட இயக்குநரின் வேண்டு கோளுக்கிணங்க பேரூராட்சிகளில் அன்றாட பணிகள் மேற்கொள்ள உதவியாளர், எழுத்தாளர், மின் மற்றும் குடிநீர் பராமரிப்பு மேற்கொள்ள உதவியாளர், புள்ளிவிவர தொகுப்பாளர், அலுவலக காவலர், டிராக்டர் ஓட்டுநர் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு சுமார் 10 பேரை பணி நியமனம் செய்தல், மலம், ஜலம் கழிப்பில்லா பேரூராட்சியாக மாற்ற உறுதிமொழி எடுத்தல், குப்பை இல்லாத பேரூராட்சியாக மாற்றி நட்சத்திர அங்கீகாரம் பெற உறுதிமொழி எடுத்தல், போன்ற பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
இளநிலை உதவியாளர் சேரலாதன், மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.






