என் மலர்tooltip icon

    சேலம்

    • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக உள்ளது.
    • கடந்த 6 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2.94 அடி வரை சரிந்துள்ளது.

    மேட்டூர்:

    காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது.

    ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக உள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 3,483 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 3,123 கன அடியாக சரிந்துள்ளது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரத்தை காட்டிலும், நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 117.48 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 117.06 அடியாக சரிந்தது. கடந்த 6 நாட்களில் நீர்மட்டம் 2.94 அடி வரை சரிந்துள்ளது.

    • கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் ஒப்பந்த நர்சுகள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
    • போலீசாரின் வேன்களில் ஏற மறுத்த நர்சுகள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    சேலம்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின்போது அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 2000-க்கும் மேற்பட்ட நர்சுகள் நியமிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதை அடுத்து தங்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த செவிலியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கடந்த 1-ந் தேதி முதல் சேலத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முதல் நாளில் கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீசாரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 2-ம் நாள் போராட்டத்திற்கு கூடுதல் நர்சுகள் பங்கேற்று மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    3-ம் நாளான நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த திட்டமிட்டனர். நர்சுகளின் போராட்டத்தை தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வந்தனர். இதையடுத்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்புற வாசல் அருகே சாலையோரம் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

    போராட்டத்தின் போது அனைவரும் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நிரந்தர பணி வழங்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதை அடுத்து அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக நேற்று இரவு நாட்டாமை கட்டிடம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 131 நர்சுகளை போலீசார் கைது செய்து கோட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    பின்னர் இன்று அதிகாலை அவர்களை மண்டபத்தில் இருந்து வெளியேறுமாறு போலீசார் கூறினார். ஆனால் நர்சுகள் வெளியேற மறுத்ததால் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர். இதில் சிலர் மீண்டும் மண்டபத்திலிருந்து வெளியேற மறுத்ததால் அவர்களை போலீசார் வேன்களில் ஏறுமாறு கட்டாயப்படுத்தினார். ஆனால் போலீசாரின் வேன்களில் ஏற மறுத்த நர்சுகள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    அப்போது, போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் தற்போது சேலத்தில் இருந்து வெளியேறுகிறோம். ஆனால் மாற்று வழியில் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று கூறியபடி 5 கிலோமீட்டர் தூரம் நடந்தபடியே சென்றனர். இதனால் அவர்கள் மீண்டும் வேறு வழியில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கருதி, போலீசார் கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • நாகேஸ்வரன் (வயது 42). இவருக்கு ரஞ்சிதம் மலர் (38) என்ற மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
    • மது குடிக்கும் பழக்கம் உள்ள நாகேஸ்வரன், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை காமராஜர் காலனி சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வந்தவர் நாகேஸ்வரன் (வயது 42).

    இவருக்கு ரஞ்சிதம் மலர் (38) என்ற மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள நாகேஸ்வரன், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

    புத்தாண்டு அன்றும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரத்தில் பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் தின்னரை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நாகேஸ்வரன் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வைகுண்ட ஏகாதசி ஒட்டி திருப்பதி வெங்கடாஜலபதி கோவி–லுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
    • வைகுண்ட ஏகாதசி ஒட்டி சிறப்பு பூஜைக்கு, சேலத்தில் இருந்து 5 டன் பூக்கள் லாரியில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    சேலம்:

    ஸ்ரீ பக்தி சாரார் பக்த சபா சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி ஒட்டி திருப்பதி வெங்கடாஜலபதி கோவி–லுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி திருப்பதி வெங்கடாஜலபதி கோவி–லில் நாளை வைகுண்ட ஏகாதசி ஒட்டி சிறப்பு பூஜைக்கு, சேலத்தில் இருந்து 5 டன் பூக்கள் லாரியில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்காக சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில், ஏராளமான பெண்கள் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற சாமந்தி பூக்களை மாலையாக தொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவை லாரி மூலம் இன்று மாலை அனுப்பி வைக்கப்பட்டு நாளை காலை திருப்பதி சென்றடையும் நிலையில், இந்த பூக்கள் சாமிக்கு அலங்காரம் செய்யப்படவுள்ளது.

    • அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
    • முகாமில் ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி முடித்த மாணவர்கள் தங்களுக்கு உரிய தொழிற்பழகுனர் இடங்களை தேர்வு செய்து உதவித்தொகையுடன் தொழிற்பழகுனர் பயிற்சி பெற்று பயனடையலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் காலியாக உள்ள தொழிற்பழகுனர் இடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு வருகிற 9-ந்தேதி(திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

    முகாமில் ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி முடித்த மாணவர்கள் தங்களுக்கு உரிய தொழிற்பழகுனர் இடங்களை தேர்வு செய்து உதவித்தொகையுடன் தொழிற்பழகுனர் பயிற்சி பெற்று பயனடையலாம். இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

    எனவே, இது நாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி முடிக்காத, ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி முடித்த மாணவர்கள் அனைவரும் தங்களது அனைத்து உண்மை சான்றுகள் மற்றும் சுய விவரத்துடன் (பயோடேட்டாவுடன்) தொழிற்பழகுநர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • சேலம் கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மேயர் தொடங்கி வைத்தார்.
    • அதில் ஒரு வாகனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து வாகனத்தில் பெருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரோ கருவியை பார்வையிட்டார்.

    இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளால் உயரம், உடல் எடை, இரத்த அழுத்தம், சளி பரிசோதனை, அதிநவீன பரிசோதனை, மார்பக எக்ஸ்ரே ஆகிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்டத்திற்கு இரண்டு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வாகனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    2 மாத காலத்திற்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மாநகராட்சிப் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத நாடாக மாற்றும் வகையில் காசநோய் ஒழிப்பில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் தான் நகர்ப்புற பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து அதன் அடிப்படையில் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரே கருவி மூலம் காசநோய் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

    இந்த வாகனத்தில் 5 சமூக பணியாளர்கள் பணிபுரிவார்கள். எனவே, மாநகராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் காசநோய் தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 15 நபர்களுக்கு மருத்துவ பெட்டகத்தையும் மேயர் ராமச்சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் யோகானந், கவுன்சிலர் மஞ்சுளா மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 

    • அரசு உயர்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஸ்ரீதுர்கா, கலைத்திருவிழாவில் கவிதைப் புனைதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றார்.
    • இதேபோல், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர் மணிகண்டன் 2-ம் பரிசு பெற்றார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஸ்ரீதுர்கா, கலைத்திருவிழாவில் கவிதைப் புனைதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றார். இதேபோல், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர் மணிகண்டன் 2-ம் பரிசு பெற்றார்.

    தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 9-ம் வகுப்பு மாணவிகள் தீபிகா, ஜீவிதா ஆகியோர் பங்கேற்றனர். இதுமட்டுமின்றி, பல்வேறு தனித்திறன் மற்றும் அறிவியல் படைப்புத்திறன் போட்டியில் மாவட்ட அளவில் பங்கேற்ற, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நேற்று பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு, தலைமை யாசிரியர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் பெரியசாமி வரவேற்றார். உதவித் தலைமையாசிரியர் ஞானசேகரன், ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பசுமை அறக்கட்டளை தன்னார்வலர்கள் அப்பு அப்துல்நயீம், சிங்கிபுரம் ராஜா, உதயா பழனிசாமி, குருஜி பாஸ்கர், ராஜ் திலக் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு, பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். இதனை யடுத்து, பள்ளி வளாகத்தில் பசுமை அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இறுதியில் ஆசிரியர் உதயசூரியன் நன்றி கூறினார்.

    • சேலத்தில் செவ்வாய்பேட்டை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெள்ளிப் பட்டறைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.
    • பொங்கலையொட்டி ஆர்டர்கள் அதிகரித்து வருவதால், சேலம் வெள்ளி மார்க்கெட் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது.தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலத்தில் செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, மணியனூர், தாதகாப்பட்டி, லைன்மேடு, கொண்டலாம்பட்டி, பள்ளப்பட்டி, சிவதாபுரம், பனங்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகத்தான்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெள்ளிப் பட்டறைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் கால் கொலுசுகள், அரைஞாண் கயிறு, சந்தன கிண்ணம், குங்குமச் சிமிழ், தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்ட பல்வேறு வெள்ளிப் பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    குறிப்பாக வட மாநிலங்களில் சேலம் வெள்ளிப் பொருட்களுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. ஏனென்றால் சேலத்தில் தயார் செய்யப்படும் வெள்ளிப் பொருட்கள் சீக்கிரம் கருக்காது என்று அந்த பகுதியில் உள்ள மக்கள் மனதில் தனி நம்பிக்கை உள்ளது.

    பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெள்ளி வியாபாரிகள்,சேலம் வெள்ளி வியாபாரிகளிடம் கொலுசுகள் உள்ளிட்ட வெள்ளிப் பொருட்களுக்கு ஆர்டர்கள் தந்து வருகின்றனர்.

    பொங்கலையொட்டி ஆர்டர்கள் அதிகரித்து வருவதால், சேலம் வெள்ளி மார்க்கெட் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது.தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.

    இது குறித்து வெள்ளி வியாபாரிகள் கூறுகையில், "ஒவ்வோர் வருடமும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, தெலுங்கானா மாநில வெள்ளி வியாபாரிகளும் சேலம் வெள்ளிவியாபாரிகளிடம் ஆர்டர்கள் தருவது வழக்கம் ஆகும். இந்த வருடம் பொங்கல் பண்டிகை, தை, மாசி மாதங்களில் அடுத்தடுத்து திருமண முகூர்த்த தினங்கள் வருவதால், கொலுசுகள் உள்ளிட்ட வெள்ளிப் பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக 'லைட் வெயிட்' எனப்படும் எடை குறைவாக உள்ள கொலுசுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அந்த மாடல் கொலுசுகளை அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறோம். கால்கொலுசுகளுக்கு அடுத்தப்படியாக அரைஞாண் கயிறு, டம்ளர்கள் உள்ளிட்டவை அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளிக்கட்டி ரூ.66 ஆயிரத்துக்கு விற்றது. கடந்த ஓராண்டாக தங்கம் , வெள்ளி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

    விலை உயர்வு இருந்த போதிலும், பொங்கல் பண்டிகை ஆர்டர்கள் அதிகளவில் வருவதன் காரணமாக, வெள்ளிப் பட்டறைகளில் உற்பத்தி மற்றும் வேலை நேரத்தை அதிகப்படுத்தி உள்ளோம். உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்களை அந்தந்த பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகிறோம். பொங்கலுக்கு முந்தைய நாள் வரை இந்த வேலைகள் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்று காலை ராமேஸ்வரம் பகுதியில் இருந்து லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு பூசாரிப்பட்டி பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்தார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் லாரி மோதியது. இதில் பாதி மின்கம்பம் லாரியின் மீதுசாய்ந்தது. உடனே டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரதாப் (வயது23).

    லாரி டிரைவர். இவர் இன்று காலை ராமேஸ்வரம் பகுதியில் இருந்து லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு பூசாரிப்பட்டி பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்தார்.

    பூசாரிபட்டி பழைய சினிமா கொட்டாய் பகுதி யில் ஒரு விவசாயிக்கு 5 கட்டுகளை இறக்கிவிட்டு லாரி புறப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் லாரி மோதியது. இதில் பாதி மின்கம்பம் லாரியின் மீதுசாய்ந்தது. உடனே டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் .இந்த விபத்தில் மின் இணைப்பு துணிக்கப்படாமல் இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும்.

    தகவல் அறிந்த போலீசார் மற்றும் மின் வாரிய அதிகாரிகல் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் விவசாயிக–ளுக்கான கருத்தரங்கு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒட்டு ஆமணக்கு விதை உற்பத்தி பயிற்சி மற்றும் பல்வேறு கருத்துக்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிக–ளுக்கான கருத்தரங்கு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு மையத்தின் தலைவர் மாணிக்கம் வரவேற்றார்.

    சேலம் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நீர் நுட்பவியல் இயக்குனர் பழனிவேலன், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விதை மைய இயக்குனர் உமாராணி ஆகியோர் விவசாயிகளுக்கான கருத்துரை வழங்கினர்.

    தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்ப–டுத்துதல் திட்டத்தின் கீழ் வேளாண்மை எந்திரங்களை பயனாளிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வழங்கினார். மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒட்டு ஆமணக்கு விதை உற்பத்தி பயிற்சி மற்றும் பல்வேறு கருத்துக்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

    இறுதியில் ஏத்தாப்பூர் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய மரவியல் மற்றும் பயிர் பெருக்கத் துறை பேராசிரியர் வெங்கடாஜலம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இறுதி ஆண்டு மாணவர்கள் முசிறி எம்.ஐ.டி வேளாண்மை கல்லூரி மாணவர்கள் தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • நாடு முழுவதும் பெண்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சைபர் கிரைம் பாதுகாப்பு கோவையில் இருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக காத்மாண்டு வரை 7000 கி.மீ தூரம், கடந்த 20 நாட்களாக மோட்டார் சைக்கிளின் பேரணி சென்று பிரசாரம் செய்தனர்.
    • பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் வன்கொடுமை தவிர்ப்பு உத்திகள் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வாழப்பாடி:

    நாடு முழுவதும் பெண்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சைபர் கிரைம் பாதுகாப்பு பயிற்சியாளர் சங்கர்ராஜ் சுப்பிரமணியன் தலைமையிலான இளைஞர்கள் அகிலன், அருண்பிரசாத், உமாசங்கர், திலீப்குமார், தினேஷ் ஆகியோர் கோவையில் இருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக காத்மாண்டு வரை 7000 கி.மீ தூரம், கடந்த 20 நாட்களாக மோட்டார் சைக்கிளின் பேரணி சென்று பிரசாரம் செய்தனர்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக மீண்டும் கோவை திரும்பிய இக்குழுவினருக்கு, வாழப்பாடி நெஸ்ட் மற்றும் துளி அறக்கட்டளை தன்னார்வலர்கள், காவல் துறையினர் சார்பில் வாழப்பாடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து வாழப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.சி.செல்வம் தலைமையில் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. பள்ளித் தலைமையாசரியர் ஜெயலட்சுமி வரவேற்றார்.

    வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, பயிற்சியாளர் சங்கர்ராஜ் சுப்பிரமணியன், ஜவஹர், சட்டக்கல்லுாரி மாணவி விவேகா, தன்னார்வலர் லோகநாதன் ஆகியோர் இணைய குற்றங்கள் தவிர்ப்பு, இணைய தளம், சமூக ஊடகங்களை பாதுகாப்பாக கையாளும் முறை, சட்டவிதிமுறைகள், சட்ட பாதுகாப்பு குறித்தும், பாதுகாப்பு செயலி, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் குறித்தும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் வன்கொடுமை தவிர்ப்பு உத்திகள் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியில் ஆசிரியர் வெங்கடாஜலம் நன்றி கூறினார்.

    • தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பாக நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் ஜனவரி மாத குறைதீர் கூட்டங்கள் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது.
    • அதன்படி சேலம் ஸ்டீல் பிளான்ட் ரோடு தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் தலைமையில் கூட்டம் நடக்கிறது.

    சேலம்:

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பாக நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் ஜனவரி மாத குறைதீர் கூட்டங்கள் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. அதன்படி சேலம் ஸ்டீல் பிளான்ட் ரோடு தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் தலைமையில் கூட்டம் நடக்கிறது.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகம் மேற்கு இணைப்பு சாலை, கூட்டுறவு காலனி, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் ஹிமான்ஷு தலைமையிலும், ஈரோடு மாவட்ட அலுவலகம் ராஜ்மெஜஸ்டிஸ்ட், காவேரி சாலை, ஈரோடு சேலம் பிரதான சாலை கருங்கல்பாளையம், ஈரோடு, என்ற முகவரியில் அமலாக்க அதிகாரி வீரேஷ் தலைமையிலும் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டங்களில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அதுகுறித்த விவரங்களுடன், தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யு. ஏ. என். எண், டெலிபோன் மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை 9-ந் தேதிக்கு முன்னதாக இந்த அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    ஈரோடு மாவட்ட அலுவலகம் அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகம் அல்லது மின்னஞ்சல் முகவரியிலும் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×