என் மலர்
சேலம்
- டாக்டர்கள் நிஷாந்தினிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.
- மாவட்ட சுகாதாரதுறை அதிகாரிகளும், கர்ப்பிணி பெண் இறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிர்த்திவர்மன். பூ வியாபாரி. இவரது மனைவி நிஷாந்தினி (வயது 22). இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் 2-வது பிரசவத்திற்காக மனைவி நிஷாந்தினியை நேற்று காலை வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அங்கிருந்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள், அரை மணி நேரத்தில் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் நிஷாந்தினிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. பிரசவ வழியில் துடித்த நிசாந்தினி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
முறையான சிகிச்சை அளிக்காததாலும், கால தாமதம் செய்ததாலும் தான் நிஷாந்தினி உயிரிழந்துள்ளார் எனக் கூறி உறவினர்கள் மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்ட சுகாதாரதுறை அதிகாரிகளும், கர்ப்பிணி பெண் இறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், நிஷாந்தினி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பணியில் இருந்த டாக்டர்களிடம் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது.
- மனைவியை சந்திக்க ஹரிகிருஷ்ணன் பரோலில் சென்றார்.
- சேலம் மத்திய சிறை வாசல் வரை சென்றதும் உள்ளே போகாமல் தப்பி ஓடிவிட்டார்.
சேலம்:
சென்னை பள்ளிகரணையை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது52). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், பல்வேறு சிறைகளில் மாறி மாறி 12 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்தார்.
இதில், அவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவியை சந்திக்க, ஹரிகிருஷ்ணன், 2022 ஜூன் 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை பரோலில் சென்றார்.
பின்னர், அவர் சேலம் திரும்பியபோது, சேலம் மத்திய சிறை வாசல் வரை சென்றதும் உள்ளே போகாமல் தப்பி ஓடிவிட்டார். இதற்கு, சிறை வார்டன் ராமகிருஷ்ணன் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அப்போதைய சிறை எஸ்.பி. கிருஷ்ணகுமார், துறை நடவடிக்கை மேற்கொண்டு வார்டனை, சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
பின் கோவை கூடுதல் சிறை எஸ்.பி. சதீஷ்குமார், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் நடத்திய விசாரணையில், வார்டன் மோட்டார் சைக்கிளில் ஆயுள் தண்டனை கைதியை அழைத்துச் சென்று அஸ்தம்பட்டி சந்திப்பில் இறக்கி விட்டு, அவரை தப்பிக்கவிட்டார் என்பது உறுதியானது.
அதன்படி எஸ்.பி. தமிழ்செல்வன், வார்டனை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
- நாகலிங்க பூவையே நாம் சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜிக்கலாம்.
- மரத்தில் இன்று ஒரே பூவில் 2 மொட்டுக்கள் மலர்ந்துள்ளது.
சேலம்:
சிவ லிங்க பூஜைக்கு உதவக்கூடிய முக்கிய பொருட்களாக வில்வ இலை, தாமரைப்பூ, செவ்வரளிப் பூ வரிசையில் நாகலிங்கப் பூவுக்கும் முக்கிய இடம் வகிக்கிறது. நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம் இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும். பூவுலகின் மகத்தானது. நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது, நாம் பெற்ற புண்ணியம் தான். தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும். நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தால் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும். 3 கால பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை.
நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும். நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது. நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான, உஷ்ணமாய் இருப்பதை உணர்ந்திடலாம் . ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும். இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய, சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது.
நாகலிங்க பூவை வழங்கிய 21 ரிஷிகளை 'மாத்ருகா ரிஷிகள்' என்று அழைக்கப்படுகிறார்கள். நாகலிங்க பூவையே நாம் சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜிக்கலாம். நாகலிங்க பூவை வழிபாட்டால் நீண்ட கால தீராத நோய் தீரும். மன வேதனை குறையும்.
இத்தகைய அற்புத மலரான நாகலிங்க பூ சேலத்தில் மலர்ந்துள்ளது. சேலம் பெரம்மனூர் நாராயண பிள்ளை தெரு பகுதியில் ஒரு உள்ள வீட்டில் மிகவும் பழமையான நாகலிங்க மரம் உள்ளது. இந்த மரத்தில் இன்று ஒரே பூவில் 2 மொட்டுக்கள் மலர்ந்துள்ளது. சிவராத்திரி அன்று இந்த அதிசயப் பூ பூத்துள்ளதால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
- 19-ந் தேதி நடந்த ஒரு சம்பவத்தில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த, போலீசார் தடியடி நடத்தினர்.
- இதனை கண்டித்து, சேலம் நீதிமன்ற வக்கீல்கள் ஒவ்வொரு வருடமும், பிப்ரவரி 19-ந் தேதி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம்:
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி நடந்த ஒரு சம்பவத்தில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த, போலீசார் தடியடி நடத்தினர்.
இதனை கண்டித்து, சேலம் நீதிமன்ற வக்கீல்கள் ஒவ்வொரு வருடமும், பிப்ரவரி 19-ந் தேதி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, நாளை கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்த இருந்த நிலையில், விடுமுறை தினம் என்பதால் இன்று சேலம் நீதிமன்றத்தில் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சொத்து தகராறில் நடந்த இரட்டை கொலை வழக்கில், ஏற்காடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- நேற்று இரவு வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கனகராஜ், இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் நெத்திமேடு கோடம்பாக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கனகராஜ் (வயது 27). இவர் கடந்த 2015-ம் ஆண்டு, ஏற்காடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சொத்து தகராறில் நடந்த இரட்டை கொலை வழக்கில், ஏற்காடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீனில் வெளியில் வந்த கனகராஜ், செவ்வாய்ப்பேட்டையில் வசித்து வந்தார். இதனிடையே சுமை தூக்கும் தொழிலாளி மகேஸ்வரன்(32) என்பவர் மனைவி ரஞ்சிதாவுடன் (28) கனகராஜூக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரஞ்சிதாவுடன் நெத்திமேடு பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சிதாவிற்கும், கனகராஜூக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கனகராஜ், இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கனகராஜ் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியிலே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் பல்வேறு சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
- சாலை பராமரிப்பு, தரம் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
சேலம்:
சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் பல்வேறு சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 2021-22 ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சேலம் - உளுந்தூர்பேட்டை சாலைபணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலை பணிகளை தமிழக நெடுஞ்சாலைத்து றையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு செய்தார்.
சாலை பராமரிப்பு, தரம் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநகராட்சி எல்லையில் அமைக்கப்படும் சாலைகள் அனைத்தையும் மழைநீர் வடிகாலுடன் எல்லை வரை அமைக்குமாறும், அனைத்து சாலை பணிகளையும் இந்த நிதியாண்டில் முடித்து
பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு கொண்டுவர அதிகாரி களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம், கோட்டப் பொறியாளர் துரை, தரக்கட்டுபாடு கோட்ட பொறியாளர் முருகன், உதவிக் கோட்டப் பொறியாளர் சந்தோஷ்குமார், உதவிப் பொறியாளர் சுமதி மற்றும் தரக்கட்டுபாடு உதவிப் பொறியாளர் பிருந்தா ஆகியோர் உடனிருந்தனர்.
- தனியாருக்கு சொந்தமான மசாலா குடோன் செயல்பட்டு வருகிறது.
- இந்த குடோனில் நேற்று இரவு 12 மணி அளவில் திடீரென தீப்பிடித்து புகை வந்தது.
சேலம்:
சேலம் அரிசிபாளையம் துரைசாமிபுரத்தில் தனியாருக்கு சொந்தமான மசாலா குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் நேற்று இரவு 12 மணி அளவில் திடீரென தீப்பிடித்து புகை வந்தது. இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து பள்ளப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆத்தூர் அரசநத்தம் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- அப்போது அங்கு மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் முறைகேடாக கடத்தி சேமிக்கப்பட்டது தெரியவந்தது.
சேலம்:
சேலம் உணவு வழங்கல் துறை பறக்கும் படை தனி வட்டாட்சியர் ராஜேஷ்குமார் தலைமை யில், வருவாய் ஆய்வாளர் சங்கர் கணேஷ் மற்றும் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று காலை, ஆத்தூர் அரசநத்தம் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசா ரணையில் முறைகேடாக கடத்தி சேமிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து சுமார் 1200 கிலோ அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர். இது குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்து நடவ டிக்கை எடுக்க உள்ளனர்.
- ஜெயவேல் (வயது 67). இவர் தனது உறவினர்களான தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகியோருடன் சேர்ந்து சேலம் அழகாபுரத்தில் அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்ற கூட்டுறவு வங்கியை தொடங்கினார்.
- முதிர்வு காலம் வந்தபின் தனக்கு சேர வேண்டிய பணத்தை தரவில்லை. என்னிடம் இருந்து ரூ.2.92 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர் எனக் கூறியிருந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் முனியப்பன் நகரை சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 67). இவர் தனது உறவினர்களான தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகியோருடன் சேர்ந்து சேலம் அழகாபுரத்தில் அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்ற கூட்டுறவு வங்கியை தொடங்கினார்.
அதன்மூலம் சேலத்தை சேர்ந்த ஏராளமானோரிடம் அதிக வட்டி தருவதாக பணத்தை முதலீடு பெற்றனர். தொடர்ந்து, அயோத்தியாப்பட்டணம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமுதசுரபி என்ற பெயரில் கூட்டுறவு கடன் சங்கங்களை தொடங்கி நடத்தினர். தனியாக ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி, அதற்கான எந்திரங்களையும் அந்தந்த கூட்டுறவு கடன் சங்க கிளைகள் முன் ஏற்படுத்தினர்.
இந்நிலையில் சேலம் அம்மாபேட்டை தங்க செங்கோடன் தெருவை சேர்ந்த பாஸ்கரன்(52) என்பவர், சேலம் பொருளா தார குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், அமுதசுரபி கூட்டுறவு சங்க முகவராக செயல்பட்ட குமரேசன் என்பவர் மூலம் அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் அவர்களது கூட்டுறவு சங்கத்தில் பணத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்தேன்.
ஆனால் முதிர்வு காலம் வந்தபின் தனக்கு சேர வேண்டிய பணத்தை தரவில்லை. என்னிடம் இருந்து ரூ.2.92 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர் எனக் கூறியிருந்தார். இதுபற்றி பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்பது போலியாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அந்த கூட்டுறவு கடன் சங்கத்தை ஏற்படுத்திய ஜெயவேல் உள்ளிட்ட 4 பேரும் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் கிளைகளை ஏற்படுத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பதும் தெரிந்தது.
இதனிடையே சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்ந்து புகார்களை கொடுத்தனர். இதைதொடர்ந்து, போலி கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக செயல்பட்ட ஜெயவேல், இயக்குநர்களான தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகிய 4 பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.
ஒட்டு மொத்தமாக 1000-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.58 கோடி அளவிற்கு மோசடி செய்திருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இன்னும் தொடர்ந்து பொதுமக்கள் புகார்களை கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே அமுத சுரபியின் அனைத்து கூட்டுறவு சங்க அலுவல கங்களிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி, ஆவணங்களையும், ஏ.டி.எம் கார்டு, எந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவான ஜெயவேல் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்நிலையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் ஜெய வேலைஅதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், மோசடி செய்யப்பட்ட பணத்தில் சொத்துக்கள் வாங்கி குவித்து வைத்துள்ளாரா?, வேறு எங்கும் பணமாக பதுக்கி வைத்துள்ளாரா? என்ற கோணத்தில் விசாரித்தனர்.
பின்னர், அவரை கோவை டான்பிட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகியோரை போலீ சார் தேடி வருகின்றனர்.
- மகாசிவராத்திரி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- சிவன் கோவிலில் விடிய விடிய கண்விழித்து இருப்பார்கள். குல தெய்வ கோவிலிலும் சிவ ஆலயங்களிலும் நடைபெறும்.
சேலம்:
மகாசிவராத்திரி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதிகாலை குளித்து விரதத்தை தொடங்க வேண்டும். சிவன் கோவிலில் விடிய விடிய கண் விழித்து இருப்பார்கள். குல தெய்வ கோவிலிலும் சிவ ஆலயங்க ளிலும் நடைபெறும்.
மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த 3 ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும்.
மகா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்தி ருக்கும். வழக்கமாக அனைத்து சிவாலயங்களும் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜை முடிந்து நடை சாத்துவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரி நன்னாளில், விடிய விடிய கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமரிசையாக நடைபெறும்.
முதல் காலத்தில் பிரம்மன் சிவனை பூஜிப்ப தாக ஐதீகம். இந்த நேரத்தில் சிவனை வழிபட்டால் ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பிறவா நிலையை அடைய முடியும். கடன் தொல்லை நீங்கும்.
2-ம் காலத்தில் பெருமாள் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். அப்போது சிவனை வழிபட வறுமை, கடன் தொல்லை, சந்திர தோஷம் நீங்கும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, 2-ம் கால பூஜையின் அபிஷேக நீரை பருக கொடுத்தால் சித்த சுத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. சகல பாவங்களும் நீங்கும்.
3-ம் காலத்தில் பூஜையை அம்பிகையே செய்வதாக ஐதீகம். மகா சிவராத்திரியின் உச்ச கட்ட வழிபாட்டு நேரம் இது. இதனை 'லிங்கோத்பவ காலம்' என்றும் கூறுவர். நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையான இந்த நேரத்தில்தான், அடிமுடியாக நின்ற ஈசன், மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் லிங்க ரூபமாக காட்சியளித்தார். மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் இந்த காலத்தில் வழிபாடு செய்தால் சகல பாவங்களும் நீங்குவதோடு, எந்த தீய சக்தியும் அண்டாது. சிவசக்தியின் அருள் நம்மை காக்கும்.
4-ம் காலத்தில் தேவர்க ளும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்க ளும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்ப தாக ஐதீகம். இவனால் இறைவன் சங்கடங்கள் அனைத்தையும் தீர்ப்பார். இந்த ஆண்டு மகா சிவராத்திரி சனிக்கிழமை மகா பிரதோஷ நாளில் வருவது இன்னும் சிறப்பு. வழக்கமாகவே மகா சிவ
ராத்திரியின்போது சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று சனி பிரதோஷமும் சேர்ந்து வருவதால் சிவாலயங்கள் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம், நாமக்கல் மாவட்ட சிவாலயங்களில் மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சேலம் சுகவனேசுவரர் கோவிலில் மகா சிவ ராத்திரியை முன்னிட்டு மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை சிவ வழிபாடு நடக்கிறது. இதையொட்டி பாரம்பரிய கலை, கலாசாரம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த சொற்பொழிவுகளும் பக்தி இசையும், நாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. சுகவனே சுவரர் கோவிலில் நடை பெறும் பூஜை உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் யு-டியூப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தாரமங்கலம் கைலாச நாதர், நங்கவள்ளி சோமேஸ்வரர், உத்தமசோழ புரம், கரபுரநாதர் கோவிலில் இன்று (சனிக்கி ழமை) பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாலை 5 மணிக்கு மேல் பெரியநாயகி சமேத கரபுரநாதர் சாமிக்கு பால், தேன், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து மகா சிவராத்திரி விழா தொடங்குகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர். அம்மாப்பேட்டை மாதேஸ்வ ரர் கோயில், அமரகுந்தி சொக்கநாதர் கோயில், அரசிராமணி சோளீஸ்வரர் கோயில், ஆத்தூர் காய நிர்மலேசுவரர் கோயில், பேரூர் பசுபதீசுவரர் கோயில், ஏத்தாப்பூர் சாம்ப மூர்த்திஸ்வரர் கோயில், கருப்பூர் கைலசநாதர் கோயில், கொங்கணாபுரம் உலகேஸ்வர சுவாமி கோயில், சுக்கம்பட்டி உதய தேவரீஸ்வரர் கோவில்,
கோனேரிப்பட்டி அனந்தஈஸ்வரர் கோயில், பாலமலை சித்தேஸ்வரர் கோயில், பாலவாடி ஜலகண்டேஸ்வரர் கோயில், பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் கோயில், பெரிய சோரகை பரமேஸ்வரன்சுவாமி கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், மேட்டூர் அணை மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்கள், நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டாபுரம் காசிவிஸ்வநாதர் கோயில், ஆனங்கூர் சக்தீஸ்வரர் கோயில், கூடச்சேரி சோழீஸ்வ
ரர் சுவாமி கோயில், கொல்லி மலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் கொளங்கொண்டை சீர்காழிநாதர் கோயில், திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோயில், திருச்செங்கோடு கைலாசநா தர் கோயில், பரமத்தி வேலூர் பீமேஸ்வரர் கோயில் பள்ளிபாளையம் அக்ரஹரம் விஸ்வேஸ்வ ரர்சுவாமி கோயில், பாண்டமங்கலம் புதிய காசிவிஸ்வ நாதர் கோயில், ராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில், பில்லூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், வெண்ணந்தூர் தீர்த்த கீரீஸ்வரர் கோயில், வையப்பமலை இடும்பேஸ்வரர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களி லும் இன்று சிவராத்திரி வழிபாடு நடைபெறுகிறது.
- பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள மின்கம்பம் ஒன்றை, அதே பகுதியை சேர்ந்த ஒருவர், வேறு இடத்தில் மாற்றி அமைக்குமாறு, மின்வாரியத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
- கழிவுநீர் சாக்கடையிலேயே நடப்பட்டுள்ள மின் கம்பத்தை அகற்றவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த துக்கி யாம்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் மேற்கு புறமுள்ள நடுவீதியில், பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள மின்கம்பம் ஒன்றை, அதே பகுதியை சேர்ந்த ஒருவர், வேறு இடத்தில் மாற்றி அமைக்குமாறு, மின்வாரியத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, ஒரு மாதத்திற்கு முன்பு இந்த கம்பத்தை மாற்றி அமைப்பதற்காக, அருகில் உள்ள மற்றொரு தெருமுனையில், கழிவுநீர் சாக்கடையில் புதிதாக மின்கம்பம் நடப்பட்டது.
இதற்கு இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மின்பாதையை புதிய கம்பத்தில் மாற்றி கொடுக்காமல், பழைய கம்பத்திலேயே தொடர்ந்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், கழிவுநீர் சாக்கடையிலேயே நடப்பட்டுள்ள மின் கம்பத்தை அகற்றவும், ஏற்கனவே, நல்ல நிலையில் பயன்பாட்டிலுள்ள மின் கம்பத்திலேயே தொடர்ந்து மின் வினியோகம் செய்யவும், மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தனியார் உரக்கடைகளில் விளை நிலத்தில் பயிரிடுவதற்கு தேவையான விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம், யூரியா, உயிர் நுண்ணுட்டசத்து இடுபொருட்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்கின்றனர்.
- இந்த நிலையில், தனியார் உரக்கடை உரிமையாளர்கள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு இடுபொருட்களை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான கிராமப்புற மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருகின்றனர்.
இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், வாழப்பாடி, பேளூர், புத்திரகவுண்டன்பாளையம், தும்பல், கருமந்துறை பகுதியில் இயங்கும் தனியார் உரக்கடைகளில் விளை நிலத்தில் பயிரிடுவதற்கு தேவையான விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம், யூரியா, உயிர் நுண்ணுட்டசத்து இடுபொ ருட்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்கின்றனர்.
இந்த நிலையில், தனியார் உரக்கடை உரிமையாளர்கள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு இடுபொருட்களை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. மேலும் வாங்கும் பொருட்களுக்கு உரிய ரசீது வழங்கப்படுவது இல்லை. எனவே இது குறித்து அதிகாரிகள் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து சேலம் மாவட்ட பா.ம.க உழவர் பேரியக்க செயலாளர் ரா.முருகன் கூறியதாவது:
விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் இழப்பை சந்தித்து வரும் நிலையில், வாழப்பாடி பேளூர், புத்திரகவுண்டன் பாளையம் பகுதியில் தனியார் உரக்கடைகளில், விதை, பூச்சிக்கொல்லி, இடுபொருட்களுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் விவசாயிகளிடம் கூடுதல் தொகை வசூலிக்கும் தனியார் உரக்கடைகளை, வட்டார வேளாண் உழவர்நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் நியாயமான விலைக்கு விவசாய இடு பொருட்களை விற்பனை செய்யவும், போலி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும், விவசாயிகளிடம் தொகைக்கு உரிய ரசீது வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் மெத்தனம் காட்டினால், விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.






