என் மலர்
சேலம்
- ஆடிப்பண்டிகைக்கு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு மோனிஷா வீட்டிற்கு திரும்பினார்.
- பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு வயது (25), கோழிப்பண்ணை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் வெள்ளியம்பட்டி பள்ளக்காடு பகுதியை சேர்ந்த மோனிஷா (25) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஆடிப்பண்டிகைக்கு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு மோனிஷா வீட்டிற்கு திரும்பி உள்ளார்.
இந்தநிலையில் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் மோனிஷா நேற்று பிணமாக மிதந்தார். தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் விரைந்து சென்று மோனிஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று பிரேத பரிசோதனைக்கு பின் அ வரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மோனிஷாவின் தாய் லதா வாழப்பாடி போலீசில் புகார் கொடுத்தார். அதில் மோனிஷாவுக்கு உடல் நலம் சரியில்லாத நிலையில் அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்ைச அளித்து வந்தோம், இந்த நிலையில் அவர் கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார் என்று கூறி இருந்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த சில நாட்களாக மோனிஷா மன உளைச்சலில் இருந்ததாகவும் இதனால், கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சிங்கார வேலு மற்றும் அவரது உறவினர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே திருமணம் ஆகி 45 நாட்களுக்குள் மோனிஷா தற்கொலை செய்து கொண்டதால் சேலம் ஆர்.டி.ஓ., கணவர் சிங்காரவேல் மற்றும் அவரது பெற்றோரிடமும் இன்று விசாரணை நடத்துகிறார். அவர் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து சுரங்க நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர்:
தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களுக்கான 44 டி.எம்.சி. தண்ணீரை திறக்கவில்லை.
இதையடுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை விடுவிக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழகம் கோரியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என அந்த மாநில அரசு அறிவித்தது.
இதையடுத்து கடந்த 16-ந்தேதி (புதன்கிழமை) கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 11 ஆயிரத்து 602 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 6 ஆயிரத்து 25 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
தொடர்ந்து நேற்று (17-ந்தேதி) கிருஷ்ணராஜ சாகர் அணையில் 15 ஆயிரத்து 184 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 6 ஆயிரத்து 825 கன அடி தண்ணீரும் என மொத்தம் 22 ஆயிரத்து 9 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதையடுத்து இன்று நீர் திறப்பு குறைக்கப்பட்டு கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 13 ஆயிரத்து 145 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீரும் என மொத்தம் 18 ஆயிரத்து 145 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 552 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3 ஆயிரத்து 260 கன அடியாக உயர்ந்தது. பின்னர் நேற்று மாலை 9 ஆயிரத்து 394 கன அடியாக அதிகரித்தது.
இன்று காலையில் மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 9 ஆயிரத்து 938 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து சுரங்க நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கி உள்ளது.
நேற்று காலை 53.15 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 53.50 அடியாக உயர்ந்தது. அணையில் நீர் இருப்பு 20.08.டி.எம்.சி ஆக உள்ளது
மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளதால் பண்ணவாடியில் மூழ்கியிருந்த நிலப்பரப்பு பகுதிகள் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்ட பகுதியாக மாறி பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது.
தண்ணீர் வற்றிப்போன நீர் தேக்க பகுதிகள் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளன. இந்த நிலப்பரப்புகளில் கால்நடை தீவனங்கள் மற்றும் புற்கள் அதிகளவில் முளைத்து பார்ப்பதற்கு பசுமையான மேய்ச்சல் நிலமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை இந்த பகுதிகளில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.
- சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- 18-ந் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அஸ்தம்பட்டி, காந்தி ரோடு, வின்சென்ட் மரவனேரி, மணக்காடு, சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புதுஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், நால்ரோடு, மிட்டா பெரிய புதூர், சாராதா காலேஜ் ரோடு, செட்டிசாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் 18-ந் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
- தமிழகத்துக்கு வினாடிக்கு 21ஆயிரத்து 964 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 21ஆயிரத்து 964 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மேல்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. புட்டஅன்னையா என்பவரது தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மேலும் ஸ்ரீரங்கபட்டினம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
- நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை 150 சிறப்பு பஸ்கள் கூடுதல் நடைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு பஸ்கள்
இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் திருமண முகூர்த்தத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை 150 சிறப்பு பஸ்கள் கூடுதல் நடைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பஸ்கள் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்பட உள்ளது.
மேலும் சேலத்தில் இருந்து கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பஸ் நிலையங்களுக்கும் இயக்கப்பட உள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
பாதுகாப்பான பயணம்
எனவே பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்திடும்படி போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
- தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தொப்பூர் வழியாக கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் பகுதியில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவனுக்கு தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தொப்பூர் வழியாக கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு விரைந்து சென்று சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் பகுதியில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
மினி சரக்கு லாரி
அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்தபோது 700 கிலோ எடை கொண்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான குட்கா, ஹான்ஸ் உட்பட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை ஓட்டி வந்த கர்நாடகவை சேர்ந்த அஜய்குமார் என்பவரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.
டிரைவர் பெங்களூரில் இருந்து மேட்டூருக்கு போதை பொருட்களை கடத்தி செல்வதாக கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் அழகாபுரம் சிவாய நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி.
- இவர் தனது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் செடி கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.
கருப்பூர்:
சேலம் அழகாபுரம் சிவாய நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி. இவர் தனது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் செடி கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இந்த செடி இரவில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது.
இந்த நிலையில் பிரம்ம கமலம் செடியில் நேற்று இரவு 10 மணி அளவில் பூ பூத்தது. ஒரே செடியில் 12-க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்தன. இதனை அறிந்த அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் வந்து பூவுக்கு தேங்காய், பழம் உடைத்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர்.
இதுகுறித்து சரஸ்வதி கூறுகையில், பிரம்ம கமலம் பூ அனைத்து கடவுள்களுக்கும் படைக்கும் ஓர் அற்புதமான பூ ஆகும். இதில் சங்கு, சக்கரங்கள் உள்ளது. இதனால் இரவில் மட்டும் பூக்கும் இந்த அதிசய பூவை வணங்கினால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கையாகும் என்றார்.
- தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது.
- இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
சேலம்:
தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது.
மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
கூடுதல் தண்ணீர்
குறிப்பாக டெல்டா பாசன விவசாயிகள் மேட்டூர் அணையை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் தண்ணீர் திறக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
எனவே மேட்டூர் அணைக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை விரைந்து வழங்க வேண்டும்.
மேலும் தமிழக அரசு நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம், மரவள்ளி கிழங்குக்கு டன்னுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்திப் பட்டன.
- டிரோன் கேமரா சிறுத்தை அருகில் கொண்டு செல்லும்போது, அது கீழே இறங்கி செல்வது பதிவாகி இருந்தது.
- சிறுத்தை இருந்த பகுதியில் மரங்கள், பாறைகள் ஆகிய இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் கட்டி வைத்துள்ளனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி ஊராட்சியில் வைரன்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டியுள்ள பெரிய கரட்டில் கடந்த 2 நாட்களாக சிறுத்தை ஒன்று நடமாடி வந்துள்ளது.
இதை பார்த்த கிராம மக்கள் அச்சத்தில் வனத்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வனத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து கண்காணித்தனர்.
சிறுத்தை ஒரே இடத்தில் இல்லாமல் ஒவ்வொரு கரடாக மாறிமாறி சென்று வைரன்காடு பகுதியில் உள்ள கரட்டில் 2 நாட்களாக பதுங்கி இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 4 ஆடுகளை சிறுத்தை வேட்டையாட முயன்றது.
அப்போது சிறுத்தையிடம் இருந்து தப்பிய 4 ஆடுகள் அங்குள்ள செங்குத்தான பாறைக்கு சென்று தஞ்சமடைந்தன. ஆனால் 4 ஆடுகளும் கீழே இறங்க முடியாமல் எட்டி எட்டி பார்த்தபடி பாறையிலேயே நின்றது. இரவு நேரமானதால் வனத்துறை அதிகாரிகள், ஆடுகள் இருந்த பகுதிக்கு செல்லாமல் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆடுகள் இருந்த பாறையின் மீது ஏறிய சிறுத்தை பாறை மீது பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனை டிரோன் கேமரா மூலம் வனத்துறை அதிகாரிகள் படம் பிடித்தனர். ஆடுகள் செங்குத்தான பாறை பகுதியில் இருந்ததால், சிறுத்தையால் ஆடுகளை வேட்டையாட முடியாமல், பாறையின் மேலே படுத்துக்கொண்டு ஆடுகளை கீழே விரட்டும் வகையில் அச்சுறுத்தி வந்துள்ளது.
இந்த நிலையில் டிரோன் கேமரா சிறுத்தை அருகில் கொண்டு செல்லும்போது, அது கீழே இறங்கி செல்வது பதிவாகி இருந்தது. இந்த நிலையில் காலை வனப்பகுதிக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், ஆடுகளை பாதுகாப்பாக கீழே விரட்டிவிட்டு, சிறுத்தை படுத்திருந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு சிறுத்தையின் முடி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறுத்தை இருந்த பகுதியில் மரங்கள், பாறைகள் ஆகிய இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் கட்டி வைத்துள்ளனர். தொடர்ந்து வனத்தை சுற்றிலும் வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுத்தை இருப்பதை உறுதி செய்துள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து அங்கேயே தங்கி கண்காணித்து வருகின்றனர்.
- வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலன் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
- சில நாட்களுக்கு முன்பு தனபாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சேலம்:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர் கனகராஜ். இவர் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையவர். கனகராஜை கைது செய்வதற்குள் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலன் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வந்த அவர் கடந்த வாரம் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு இன்று இதய அடைப்பை நீக்க ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக சேலத்தில் இருந்து தனபாலனை போலீசார் ஆம்புலன்சில் அழைத்து சென்றபோது தனது 2 மகன்களையும் முதல்வர் தான் காப்பாற்ற வேண்டும் என்று கதறி அழுதார்.
- திரவுபதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
- சிவப்பு பட்டாடை அலங்காரத்தில் திரவுபதி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. சிவப்பு பட்டாடை அலங்காரத்தில் திரவுபதி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் உள்ள தருமராஜர் உள்ளிட்ட பஞ்சபாண்டவர், கிருஷ்ணபகவான் சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். இதேபோல் வாழப்பாடி ஆத்துமேடு பெரியாண்டிச்சி அம்மன், வாழப்பாடி செல்வமுத்து மாரியம்மன், புதுப்பட்டி மாரியம்மன் கோவில்களிலும் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து உள்ளது.
- கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
மேட்டூர்:
தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களுக்கான 44 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை திறக்கவில்லை.
இதையடுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. காவிரியில் தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழகம் கோரியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
அதே நேரத்தில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து உள்ளது. இதன் காரணமாகவும் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என அந்த மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 14 ஆயிரத்து 136 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
தொடர்ந்து நேற்று இரவு முதல் நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 21 ஆயிரத்து 964 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது. இன்று காலை வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த தண்ணீர் மேட்டூர் அணையை இன்று வந்தடைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 552 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 3 ஆயிரத்து 260 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
நேற்று 53.38 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 53.01 அடியாக சரிந்துள்ளது.






