என் மலர்
சேலம்
- சேலம் மாநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 100-க்கும் மேற்பட்டோர் போலீசாரிடம் சிக்கினர்.
- மாணவர் அவர்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை வேகமாக இயக்கியதால் தவறி கீழே விழுந்தார்.
சேலம்:
சேலம் மாநகரில் சமீப காலமாக போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக தலைகவசம் அணியாதவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்வது, சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது என பல்வேறு போக்குவரத்து விதி மீறுபவர்களையும் பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.
குறிப்பாக சேலத்தில் முள்ளுவாடி கேட், கலெக்டர் அலுவலகம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அணைமேடு பாலம், உடையாப்பட்டி பைபாஸ் என அனைத்து பகுதிகளிலும் மறைவான இடத்தில் நின்று கொண்டு தலைகவசம் அணியாதவர்களை விரட்டி விரட்டி பிடித்து வருகிறார்கள்.
மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் போலீசாரிடம் சிக்கினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு சேலம் மாநகரில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதி களிலும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் தலா 10 பேரை பிடித்து அபராதம் விதிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து சேலம் மாநகரில் ஒவ்வொரு போலீஸ் நிலைய பகுதிகளிலும் போலீசார் நேற்றிரவு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அதன்படி சேலம் மாநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 100-க்கும் மேற்பட்டோர் போலீசாரிடம் சிக்கினர். அதில் சிலருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பணம் கையில் இருந்தவர்கள் பணத்தை கட்டிவிட்டு சென்றனர். ஆனால் கையில் பணம் இல்லாதவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு பணத்தை எடுத்து வந்து அபராதத்தை செலுத்தி விட்டு வாகனத்தை எடுத்து செல்லுமாறு அனுப்பி வைத்தனர். இதில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்கள் ஆவர்.
சேலம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அப்சரா இறக்கம் பகுதியில் டவுன் போலீசார் தீவிர வகான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கல்லூரி மாணவர் ஒருவரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த மாணவர் அவர்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை வேகமாக இயக்கியதால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் முறிந்தது. தற்போது அவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதே போல சூரமங்கலம் புதுரோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி. நேற்றிரவு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் பரிசோதனை செய்த போது அவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அபராதத்தை கட்டி விட்டு போலீஸ் நிலையத்தில் வந்து வாகனத்தை எடுத்து செல்லுமாறு கூறினர்.
இதை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற அவர் சாணி பவுடரை குடித்து மயங்கி விழுந்தார் . தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் போலீசார் அவரை மீட்டு சேலம் அர சு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி அவரை பிரிந்து சென்றதும், நேற்று மனைவியை சந்தித்து விட்டு வீட்டிற்கு திரும்பியபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் மாநகரில் நேற்றிரவு நடந்த இந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடந்த சில நாட்களாக கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து மொத்தம் 17 ஆயிரத்து 960 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பொய்த்து போனதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.
இதனால் அணைக்குள் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை முழுமையாக தெரிய ஆரம்பித்தது. மேலும் அணையின் நீர்தேக்க பகுதிகள் மற்றும் 16 கண் பாலம் ஆகிய இடங்கள் தண்ணீர் இன்றி வறண்டு பாளம் பாளமாக நிலம் வெடித்து காணப்படுகிறது.
பண்ணவாடி உள்ளிட்ட நீர்த்தேக்க பகுதிகளில் தண்ணீர் இன்றி புல் முளைத்து காணப்படுகிறது. அந்த பகுதிகளில் விவசாயிகள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு உள்ளனர்.
இந்த நிலையில் டெல்டா மாவட்டத்தில் பயிரிட்டுள்ள 3 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியை காப்பாற்ற கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்க தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடப்பட்டது. மேலும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த 3 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த 17-ந் தேதி வினாடிக்கு 3 ஆயிரத்து 260 கனஅடி தண்ணீர் வந்தது. அது நேற்று 9 ஆயிரத்து 394 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரத்து 523 கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டு இருக்கிறது.
அதே போல் நேற்று 53.50 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 54.19 அடியாக உயர்ந்து காணப்பட்டது. மேலும் கடந்த ஒரு வாரமாக பாசனத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இதே போல் இன்று காலை 8 மணி நிலவரப்படி 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 107.66 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 349 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 960 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
84 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 77.82 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1764 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து மொத்தம் 17 ஆயிரத்து 960 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மேலும் சிலர் காவிரி ஆற்றில் இறங்கியும் போராட்டம் நடத்தினர்.
- அங்கன்வாடி மையங்களில் தேசிய குடற்புழு நீக்க விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.
- பள்ளி மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க (அல்பென்டசோல்) மாத்திரைகள் வழங்கப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் தேசிய குடற்புழு நீக்க விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.
பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க விழிப்புணர்வு தின நிகழ்ச்சியை ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ஜெமினி தொடங்கி வைத்தார்.
1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க (அல்பென்டசோல்) மாத்திரைகள் வழங்கப்பட்டது. 20 வயது முதல் 30 வயதுடை யோருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், மருத்துவ அலுவலர் அபிராமி மற்றும் நர்சுகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ஜெமினி பேசுகையில், குடற்புழுவால் ஏற்படும் உபாதைகள், ரத்த சோகை பாதிப்பு, பேறு கால சிக்கல்கள் மற்றும் கையாளும் வழிமுறைகள் குறித்தும், குடற்புழு நீக்கத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினார்.
இதில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், நர்சுகள், பொதுமக்கள் அனைவரும், சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் வட்டார புள்ளியியலாளர் அவினாசிலிங்கம் நன்றி கூறினார்.
- சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த வாலிபர் முதுகில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார்.
சேலம்:
சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து பொதுமக்கள் குட்ஷெட் நிலைய அதிகாரி பிரகாஷ்குமாரிடம் தெரிவித்தனர். அவர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த வாலிபர் முதுகில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் தண்டவாளத்தை கடக்கும் போது அந்த வழியாக சென்ற ரெயில் மோதி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இறந்த வாலிபரின் மார்பில் கமலா எனவும் கையில் மணி எனவும் பச்சை குத்தப்பட்டிருந்தது. இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதையடுத்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் கோட்டை மெயின்ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள கடையின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
- இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் கோட்டை மெயின்ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள கடையின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவருடைய பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர் ? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று அதிகாலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
- அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராஜதுரை கையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.
சேலம்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் அடுத்த காட்டாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் வீரபாலன். இவரது மகன் ராஜதுரை (25).
இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
செல்போன் பறிப்பு
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராஜதுரை கையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து ராஜதுரை பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது சேலம் அரிசிபாளையம் ஆர்.டி.பால் தெருவை சேர்ந்த பிரகாசம் மகன் லோகேஷ் (18), பள்ளப்பட்டி நாராயணசாமிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் பிரகாஷ் (20) என்பது தெரியவந்து.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பிரகாஷ் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஈரடுக்கு பஸ் நிலையம், ேமம்பாலங்கள், சாலைகள் விரிவாக்கம், பாதாள சாக்கடை பணிகள் என நாளுக்கு நாள் பல பணிகள் நடைபெற்று வருகிறது.
- வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளும் அடிக்கடி அரங்கேறுகின்றன. மேலும் 4 சக்கர வாகனங்களையும் சில நாய்கள் ஓட ஓட துரத்துகின்றன.
சேலம்:
சேலம் மாநகரில் 60 வார்டுகள் உள்ளன. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் சேலம் மாநகராட்சி நாளுக்குநாள் விரிவடைந்து வருகிறது. ஈரடுக்கு பஸ் நிலையம், ேமம்பாலங்கள், சாலைகள் விரிவாக்கம், பாதாள சாக்கடை பணிகள் என நாளுக்கு நாள் பல பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆனால் சேலம் மாநகரில் சமீப காலமாக நாய்கள் தொல்லை மிக அதிகமாக உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் தனியாக சாலைகள் மற்றும் தெருக்களில் செல்ல முடியாமல் பயத்தில் தவித்து வருகிறார்கள். குறிப்பாக பெரியபுதூர், நகரமலை அடிவாரம், ரெட்டியூர், பள்ளப்பட்டி அம்மாப்பேட்டை, களரம்பட்டி, கிச்சிப்பாளையம், தாதகாப்பட்டி, பெரமனூர் உள்பட பல பகுதிகளில் சாலையிலேயே நாய்கள் படுத்து கிடக்கின்றன.
இந்த நாய்கள் சாலைகளிலே படுத்து கிடப்பதால் பொதுமக்கள் அச்சத்துடனே அதனை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாணவ- மாணவிகள் சிறுமிகள் இந்த நாய்களால் பெரும் அச்சத்தில் உள்ளனர். சில நாய்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்களையும் விரட்டி விரட்டி விரட்டி கடிக்கிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோரையும் ஓட ஓட விரட்டியும் சில நாய்கள் கடிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளும் அடிக்கடி அரங்கேறுகின்றன. மேலும் 4 சக்கர வாகனங்களையும் சில நாய்கள் ஓட ஓட துரத்துகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் வாய்க்கால்பட்டடறை பகுதியில் 22 பேரை ஒரு நாய் கடித்து குதறியது. அதில் காயம் அடைந்த அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
சேலம் பள்ளப்படடி போலீஸ் நிலையத்தில் போலீஸ் காரர் ஒருவர் நாய் வளர்த்து வருகிறார். கடந்த வாரம் போலீஸ் நிலையம் முன்பு சென்ற 7 பேரை அந்த நாய் கடித்து குதறியது. இதேபோல சேலம் மாநகரில் தினம், தினம் பல இடங்களில் பொது மக்களை நாய்கள் அச்சுறுத்தி வருகிறது. ஆனால் சேலம் மாநகராட்சி சார்பில் கருத்தடை ஊசி போடவும், நாய்களை பிடிக்கவும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அதற்கு போதுமான நடவடிக்கைள் சமீப காலமாக மேற்கொள்ளப்படுவது இல்லை. இதனால் நாளுக்கு நாள் நாய்கள் அதிக அளவில் தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றி திரிகின்றன.
இதேபோல சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் முன்பு மற்றும் சுரங்கப்பாதைகளில் அதிக அளவில் நாய் தொல்லை உள்ளது.
குறிப்பாக அங்குள்ள சுரங்கப்பாதைகளில் நாய்கள் படுத்து தூங்குவதால் பயணிகள் அச்சத்துடன் கடக்கும் நிலை உள்ளது. ஒரு கட்டத்தில் சுரங்கப்பாதைக்குள் நாய்கள் சண்டையிட்டு கொள்வதால் பயணிகள் தங்கள் உடமைகளை விட்டு விட்டு அலறி அடித்து ஓட்டம் பிடிக்கும் சூழலும் நிலவுகிறது. இதனால் அந்த நாய்களை பிடித்து அகற்ற வேண்டும் என்பது ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
மாநகராட்சியில் நாய்கள் தொல்லை குறித்து புகார் கொடுத்தாலும் நாய்களை பிடிக்க யாரும் வருவதில்லை.இதனால் போன் செய்வதற்கும் பலர் விரும்புவதில்லை.
எனவே நாளுக்கு நாள் பெருகி மக்களை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பதுடன் அதனை பிடித்து அகற்றவும் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- முகாமில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 449 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
- 1541 மையங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
சேலம்:
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிைம திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந் தோறும் 1000 உதவி தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெற சேலம் மாவட்டத்தில் 2 கட்டங்களாக முகாம்கள் நடந்தது. முதல்கட்டமாக கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை 846 மையங்களில் நடந்த முகாமில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 449 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து 2-வது கட்டமாக கடந்த 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 695 மையங்களில் நடந்த முகாமில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 213 விண்ணப் பங்கள் என மொத்தம் 1541 முகாம்கள் மூலம் 7 லட்சத்து 13 ஆயி ரத்து 662 விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதற்கிடையே ஓய்வூதியம் பெறும் மாற்று திறனாளிகள் தவிர அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம் இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று (18-ந் தேதி) முதல் வரும் 20-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஏற்கனவே முகாம் நடைபெற்ற அதே 1541 மையங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் இன்று காலை தொடங்கியது.
ஏற்கனவே 2 கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் விடுபட்டவர்களும் இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே விண்ணப்பங்களை பதிவு செய்யாதவர்கள் இன்று காலை முதல் இந்த முகாம்களில் திரண்டுள்ளனர். அவர்களிடம் விண்ணப் பங்களை பெற்று அதிகாரிகள் பதிவு செய்து வருகிறர்கள். இதனை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
- தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை விடுவிக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழகம் கோரியுள்ளது.
- டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து சுரங்க நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களுக்கான 44 டி.எம்.சி. தண்ணீரை திறக்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை விடுவிக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழகம் கோரியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என அந்த மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த 16ந்தேதி (புதன்கிழமை) கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 11 ஆயிரத்து 602 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 6 ஆயிரத்து 25 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
தொடர்ந்து நேற்று (17ந்தேதி) கிருஷ்ணராஜ சாகர் அணையில் 15 ஆயிரத்து 184 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 6 ஆயிரத்து 825 கன அடி தண்ணீரும் என மொத்தம் 22 ஆயிரத்து 9 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து இன்று நீர் திறப்பு குறைக்கப்பட்டு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 13 ஆயிரத்து 145 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீரும் என மொத்தம் 18 ஆயிரத்து 145 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 552 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3 ஆயிரத்து 260 கன அடியாக உயர்ந்தது. பின்னர் நேற்று மாலை 9 ஆயிரத்து 394 கன அடியாக அதிகரித்தது. இன்று காலையில் மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 9 ஆயிரத்து 938 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து சுரங்க நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கி உள்ளது. நேற்று காலை 53.15 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 53.50 அடியாக உயர்ந்தது. அணையில் நீர் இருப்பு 20.08.டி.எம்.சி ஆக உள்ளது
மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளதால் பண்ணவாடியில் மூழ்கியிருந்த நிலப்பரப்பு பகுதிகள் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்ட பகுதியாக மாறி பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது.
தண்ணீர் வற்றிப்போன நீர் தேக்க பகுதிகள் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளன. இந்த நிலப்பரப்புகளில் கால்நடை தீவனங்கள் மற்றும் புற்கள் அதிகளவில் முளைத்து பார்ப்பதற்கு பசுமையான மேய்ச்சல் நிலமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை இந்த பகுதிகளில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.
- சென்னையில் தங்கியிருந்து போட்டி தேர்வுக்கு படித்து வந்தார்.
- அங்கு வந்த கருப்பூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் வட்டக் காடு பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம், விவசாயி. இவரது மகள் திரிஷா (21), பி.ஏ. ஆங்கிலம் படித்துள்ள இவர் சென்னையில் தங்கியிருந்து போட்டி தேர்வுக்கு படித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் குளிக்க சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதவை தட்டி பார்த்த போது நீண்ட நேரமாகியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அவர் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இதற்கிடையே அங்கு வந்த கருப்பூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே திரிஷா பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றையும் மீட்டு போலீசார் ஆய்வு நடத்தி விசாரித்து வருகிறார்கள். விசாரணை முடிவில் அவரது தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
- சேலம் அம்மாபேட்டை சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த வேலு மனைவி ராமாயி வீட்டை வாங்கியவர் வீட்டை காலி செய்யுமாறு மூதாட்டியிடம் கூறியுள்ளார்.
- இதனால் மனமுடைந்த ராமாயி சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த வேலு மனைவி ராமாயி (72). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது வீட்டை அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு விற்று விட்டார். இருப்பினும் அதே வீட்டில் குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டை வாங்கியவர் வீட்டை காலி செய்யுமாறு மூதாட்டியிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ராமாயி சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மின்னாம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (19-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
- இந்த தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் மின்னாம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கூட்டாத்துபட்டி விளாம்பட்டி,ஏரிபுதூர், நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, எஸ்.என். மங்கலம், ஏ.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூர்,பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம், குள்ளம்பட்டி, காட்டூர், வலசையூர்,குப்பனூர், தாதனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளியம்பட்டி, கத்திரிப்பட்டி, பூவனூர் ஆகிய பகுதிகளில் நாளை (19-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.






