என் மலர்tooltip icon

    சேலம்

    • கோட்டமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலு (47) இவர் ஓமலூர் சுங்கச்சாவடியில் பணியாற்றி வருகிறார்.
    • கோட்டை மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்துள்ளனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலு (47) இவர் ஓமலூர் சுங்கச்சாவடியில் பணியாற்றி வருகிறார்.

    இவர் கோட்ட மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் தார் சாலையில் ஓரமாக கிடந்த பையை எடுத்து பார்த்தபோது அந்தப் பையில் 3 பவுன் தங்கச் செயின் மற்றும் கவரிங் நகைகள் பட்டுப் புடவை உள்ளிட்ட பொருட்கள் இருந்தது இதுகுறித்து பாலு கோட்டைமேட்டுப்பட்டி ஊராட்சி தலைவருக்கு தகவல் கொடுத்தார்.

    கோட்டை மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரின் இரு சக்கர வாகனத்தில் இருந்து நகை இருந்த பை கீழே விழுந்தது தெரியவந்துள்ளது இதைத்தொடர்ந்து பாலு மற்றும் இதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் சாலையில் கண்டெடுத்த பையை ஒப்படைத்தனர்.

    இது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோத் (23) என்ற வாலிபர் வாகனத்தில் பையை மாட்டிக் கொண்டு வரும்பொழுது வேகத்தடையில் இருந்து பை கீழே விழுந்து தொலைந்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அந்த வாலிபரை கண்டுபிடித்து தொலைந்து போன நகை பொருட்களை அவரிடம் ஒப்படைத்தனர் கீழே கிடந்த நகை உள்ளிட்ட பொருட்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பாலு, ராஜ்குமார் ஆகியோரை போலீசார் வெகுவாக பாராட்டினர். தொடர்ந்து உரியவரிடம் உரிய ஆவணங்களை பெற்று 3 பவுன் நகை கவரிங் நகை பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்களை ஒப்படைத்தனர்.

    • மேட்டூரில், ரூ.6.40 கோடியில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்படவுள்ளது.
    • பஸ் நிலையம் எதிரே மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூரில், ரூ.6.40 கோடியில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்படவுள்ளது. தற்போதைய பஸ் நிலையம் உள்ள இடத்திலேயே புதிய பஸ் நிலையம் அமைக்கப்படவுள்ள நிலையில் அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டு, கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கப்படவுள்ளது.

    தற்காலிக பஸ் நிலையம்

    இந்நிலையில் பஸ் நிலையம் எதிரே மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையம் என்றாலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் செயல்பட உள்ளது. ஆனால் அவசரமாக அமைக்கப்பட்டதால் போதுமான இட வசதியின்றி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    அந்த இடத்தில் 15 முதல் 20 பஸ்கள் வரை மட்டுமே நிறுத்த முடிகிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் உள்ளே செல்ல முடியாமல் வெளியே நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன.

    பஸ்களுக்கான நிறுத்தங்கள் சரியாக ஒதுக்கப்படாததால் பஸ்கள் ஓட்டுநர்கள் சிரமம் அடைந்து வருகின்றன. அரசு நகரப் பஸ்கள் எங்கே உள்ளது என தெரியாமல் பயணிகள் அலைமோதுகின்றனர். அதேபோல, நிழற்குடை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    எனவே தற்காலிக பஸ் நிலையத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.

    • வீட்டுக்குள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வடமாநில வாலிபர் ஒருவர் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவியை பாலியல் சில்மிஷம் செய்தார்.
    • இதை பார்த்த கணவர் அந்த வாலிபரை பிடிக்க முயன்றபோது அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தும்பிப்பாடி பகுதியில் உள்ள விவசாயி ஒருவருடைய வீட்டுக்குள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வடமாநில வாலிபர் ஒருவர் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவியை பாலியல் சில்மிஷம் செய்தார்.

    இதை பார்த்த கணவர் அந்த வாலிபரை பிடிக்க முயன்றபோது அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் அந்த பெண்ணின் கணவருக்கு 2 பல்கள் உடைந்தன.

    வீடு புகுந்து பாலியல் தொந்தரவு

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் 3 வாலிபர்கள் ஒரே நேரத்தில் வந்து அடுத்தடுத்து வீடுகளுக்குள் புகுந்து பெண்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தனர். இதனால் பெண்கள் சத்தம் போடவே 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    ஒரு வாலிபர் மட்டும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை தாக்கி விட்டு ஓடினார். அந்த வாலிபரை பொதுமக்கள் துரத்திச் சென்றபோது தனியார் கம்பெனிக்குள் நுழைந்தார்.

    ஒருவர் சிக்கினார்

    பொதுமக்கள் ஒன்று சேர்ந்து உள்ளே புகுந்து வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இந்திரா மற்றும் போலீசார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் கூறுகையில், வடமாநில வாலிபர்கள் கடந்த ஒரு வாரமாக தும்பிப்பாடி ஊராட்சியில் உள்ள சட்டூர், கொண்டையனூர், கொன்ரெட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டுக்குள் புகுந்து பெண்களிடம் பாலியல் அத்துமீறல்கள் செய்துள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அதற்கு போலீசார், விசாரணை நடத்தி சட்டபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானப்படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    வாலிபர் ஜெயிலில் அடைப்பு

    வடமாநில வாலிபர் தாக்கியதில் காயம் அடைந்த ஆறுமுகத்தை மீட்டு பொதுமக்கள் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிடிப்பட்ட வடமாநில வாலிபரை ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • நிலப்பத்திரம் காணவில்லை என்று சான்றிதழ் தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அரங்கனூர் பகு தியை சேர்ந்தவர் பிரபு. இவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் அரங்கனூரில் உள்ளது.

    இந்த நிலப் பத்திரங்களை வங்கியில் வைத்து கடன் வாங்க முடிவு செய்தார். இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மேச்சேரியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பத்திரங்களை நகல் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினார். அப்போது அவர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்குள்ள கடையில் பூ மாலை வாங்கிக் கொண்டு தனது மோட்டார் சைக்கிள் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்தார். அப்போது நிலப்பத்திரங்கள் வைத்திருந்த பையை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு இது பற்றி மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இப்புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் சண்முகம் நிலப்பத்திரம் காணவில்லை என்று சான்றிதழ் தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரபு இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தனது நிலப்பத்திரம் காணவில்லை என்று மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகத்திடம் புகார் கொடுத்தேன். ஆனால் ஒரு ஆண்டாக பத்திரம் காணவில்லை என்பதற்கு சான்றிதழ் தராமல் பல்வேறு காரணங்களை தெரிவித்து இழுத்தடித்து வந்தார். நீதிமன்ற உத்தரவு வாங்கி வரவேண்டும் என தெரிவித்தார். நானும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வாங்கி வந்து கொடுத்தேன். ஆனாலும் காணாமல் போன பத்திரம் தொடர்பாக சான்றிதழ் வழங்க வேண்டுமானால் ரூ.25 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என தெரிவித்தார். இதற்கு உடந்தையாக இன்ஸ்பெக்டரின் டிரைவர் போலீஸ்காரர் மனோஜ் விஜயன் இருந்தார். அவரும் பணம் கேட்டு வந்தார். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீஸ்காரர் மனோஜ் விஜயன் ஆகியோர் காணாமல் போன பத்திரத்திற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டது தெரியவந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகம், டிரைவர் மனோஜ் விஜயன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 13ஆயிரத்து 159 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • அணையின் நீர்மட்டம் 54.70 அடியாக உள்ளது. அணையில் தற்போது 20.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டபோது நீர்மட்டம் 103 அடியாக இருந்தது.

    அணையில் இருந்து தொடர்ந்து பாசன தேவைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாலும், மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து இல்லாமலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டது. மேலும் அணையில் குட்டைபோல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட்டது. மேலும் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த 4 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 17-ந் தேதி நீர்வரத்து வினாடிக்கு 3ஆயிரத்து 260 கனஅடியாக இருந்தது.

    தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 13ஆயிரத்து 159 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 54.70 அடியாக உள்ளது. அணையில் தற்போது 20.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டதால் பாசனத்திற்கு 6ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நேற்று 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வினாடிக்கு 10ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.

    • பூசாரிப்பட்டி வழியாக 100-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
    • இந்த பகுதியில் விபத்துகளை குறைக்க உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி வழியாக 100-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பகுதியில் விபத்துகளை குறைக்க உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் அவதி

    இந்த நிலையில் சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தர்மபுரி செல்லும் பஸ்கள் சில நிறுத்தங்களில் நிற்காமல் பாலம் வழியாக செல்கின்றன. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    உயர்மட்ட பாலம் அமைக்கும் முன்பு அனைத்து பஸ்களும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று சென்றன. ஆனால் தற்போது சில நிறுத்தங்களை தவிர்த்து பாலம் வழியாக பஸ்கள் சென்று விடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    சிறைபிடிப்பு

    இந்த நிலையில் நேற்று இரவு சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற 5 தனியார் பஸ்கள் வழக்கம் போல் பாலம் வழியாக இயக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பா.ம.க. ஒன்றிய செயலாளர் பி.எஸ்.கே.செல்வம் தலைமையில் பூசாரிப்பட்டி பகுதியில் அந்த 5 பஸ்களையும் சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் பஸ்கள் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    இதனை மீறி சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தர்மபுரி செல்லும் பஸ்கள் சில நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாக தெரிவித்தனர். பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினர். போலீ சார் அவர்களை சமாதா னப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.

    • கொங்கணாபுரம் அருகே ஆடு மேய்க்க சென்ற விவசாயி, அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
    • இறப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே ஆடு மேய்க்க சென்ற விவசாயி, அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் இறப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட, கோரணம்பட்டி ஊராட்சி, கல்மேடு மணியக்காரன் வளவு பகுதியைச் சேர்ந்த விவசாயி சின்னண்ணன் (71), இவர் தனது விவசாய நிலத்தில் ஆடுகளையும் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று சின்னண்ணன் வழக்கம்போல் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற நிலையில், இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள விவசாய நிலங்களில் தேடிப் பார்த்தனர்.

    இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே சின்னண்ணன் அணிந்திருந்த காலணிகள் கிடப்பதைக் கண்ட அவரது உறவினர்கள், இதுகுறித்து எடப்பாடி தீயணைப்பு துறை மற்றும் கொங்கணாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் கிணற்றிலிருந்த தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றி பார்த்தபோது, அங்கு விவசாயி சின்னண்ணன் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் அவரது சடலத்தை மீட்ட போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அவர் இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தீவட்டிப்பட்டி அடுத்த மோர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்.
    • இவருடைய விவசாய கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் காடையாம்பட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த மோர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய விவசாய கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் காடையாம்பட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் ராஜசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பிணத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தவர் அதே பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரது மனைவி மாரி (75) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் சில்லி சிக்கன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
    • வாடிக்கையாளர் ஒருவர் சுடச்சுட பொறித்த சில்லி சிக்கனை வாங்கி சாப்பிட்டார். அப்போது அந்த சில்லி சிக்கனில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் சில்லி சிக்கன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் சுடச்சுட பொறித்த சில்லி சிக்கனை வாங்கி சாப்பிட்டார். அப்போது அந்த சில்லி சிக்கனில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    வாக்குவாதம்

    கரப்பான் பூச்சியை கோழிக்கறியுடன் சேர்த்து பொறித்தது தெரிய வந்தது. இது குறித்து வாடிக்கையாளர் கடையின் உரிமையாளரிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து தகவல்அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த அந்த கடைக்கு சென்றனர். அப்போது அந்த சில்லி சிக்கன் கடையை பூட்டி விட்டு அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இன்று கடையை திறக்குமாறு கூறி உள்ளனர். மேலும் இன்று கடைக்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை முடிவில் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க படும் என தெரிவித்தனர்.    

    • சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை உண்ணா விரத போராட்டம் நடக்கிறது .
    • இதில் கட்சியினர், மக்கள் திரளாக பங்கேற்க மாவட்ட செயலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

    சேலம்:

    நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தரக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை உண்ணா விரத போராட்டம் நடக்கிறது . இதில் கட்சியினர், மக்கள் திரளாக பங்கேற்க மாவட்ட செயலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

    இது குறித்து சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வ கணபதி, ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மருத்துவ படிப்பில் சேருவதற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வாக நீட் எழுதுவதால், அனைத்து மாணவர்களும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆளுநர் பல மாதங்களாக நீட்விலக்கு சட்டமன்ற தீர்மானத்தை குடியரக தலைவருக்கு அனுப்பாமல் காலந்தாழ்த்தி, பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பின் அனுப்பி வைத்தார்.

    தற்போது அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் நிறை வேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் பெற்றிட வேண்டி நடக்கும் உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க கேட்டுக்கொள்கிறோம்.

    சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் நாளை( 20-ந் தேதி) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள உண்ணா விரத போராட்டத்தில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணியை சார்ந்தோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • ஏற்காடு ஊராட்சி ஒன்றிய டவுன் ஊராட்சிக்குட்ப்பட்ட ஜெரினாகாடு பகுதிதியில் சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
    • ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஆண்கள் பெண்கள் என 2 சுகா தார வளாகங்கள் கட்டப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

    ஏற்காடு:

    ஏற்காடு ஊராட்சி ஒன்றிய டவுன் ஊராட்சிக்குட்ப்பட்ட ஜெரினாகாடு பகுதிதியில் சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு ஏற்காடு ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஆண்கள் பெண்கள் என 2 சுகா தார வளாகங்கள் கட்டப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது .

    இதில் கழிவறை, குளியலறை என அனைத்து வசதிகளும் உள்ளது. ஏற்காடு டவுன் ஊராட்சி மன்றம் இதன் பராமரிப்பு பணிகளை கவனித்து வந்தது. அதிகளவில் ஜெரினாகாடு பொது மக்கள் இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர்.

    பூட்டப்பட்ட வளாகங்கள்

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இந்த சுகாதார வளாகங்கள் பூட்டப்பட்டுள்ளது. இதனால் ஜெரினாகாடு பொது மக்கள் பெருமளவு சிரமப்படுகின்றனர். இது குறித்து ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி ரவிசந்திரனிடம் கேட்டபோது:-

    கடந்த 10 நாட்களாக தண்ணீர் தொட்டி மற்றும் எலக்ரீசியன் பணிகள் நடந்தால் இவ்வளாககங்கள் பூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 10 நாட்களாக சுகாதார வளாகம் பூட்டப்பட்டுள்ளதால் ஜெரினாகாடு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.

    • ஏற்காடு பகுதியில் இருந்து சந்தன கட்டை கடத்தப்படுவதாக ஏற்காடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஏற்காடு பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி கையில் பையுடன் ஒருவர் நின்றிருந்தார். அவரது பையை சோதனை செய்ததில் அதில் சுமார் 12 கிலோ எடையுள்ள சந்தனகட்டை சிராய்ப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் இருந்து சந்தன கட்டை கடத்தப்படுவதாக ஏற்காடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனவர்கள் சக்திவேல், ஷஷாங் ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    12 கிலோ சந்தன கட்டை

    இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி அதிகாலை 5.30 மணியளவில் ஏற்காடு பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி கையில் பையுடன் ஒருவர் நின்றிருந்தார். அவரது பையை சோதனை செய்ததில் அதில் சுமார் 12 கிலோ எடையுள்ள சந்தனகட்டை சிராய்ப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவரை ஏற்காடு வனச்சரகர் முருகன் தலைமையிலான வனத்துறையினர் விசாரித்தனர்.

    அப்போது அவர் ஏற்காடு வாழவந்தி பகுதியை சேர்ந்த ரங்கராஜ் (59) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை விசாரித்ததில் ஏற்காடு குண்டூர் பகுதியை சேர்ந்த வெள்ளையன் (42), மாரமங்கலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் சந்தன மரத்தை வெட்டி சிராய்புகளாய் தயார் செய்து கொடுத்ததாக தெரிவித்தார். இந்த தகவலின் பேரில் வெள்ளையன், வெங்கடேசன் ஆகியோரை வனத்துறையினர் தேடி வந்தனர். இதில் கடந்த 16-ந் தேதி வெள்ளையனை வனத்துறையினர் கைது செய்தனர். அவர் வெங்கடேசனுடன் சேர்ந்து சந்தனமரங்களை வெட்டியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ரங்கராஜ், வெள்ளையன் ஆகியோருக்கு சந்தன மரம் வெட்டி கடத்தியதற்காக மாவட்ட வன அலுவலர் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    மேலும் தலைமறைவாக இருந்த வெங்கடேசனை வாழவந்தி பிரிவு வனவர் சஞ்சய் தலைமையிலான குழுவினர் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரும் சிக்கினார். அவரிடம் விசாரித்ததில் வெங்கடேசன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காட்டிற்கு சென்று ஒரு சந்தன மரத்தை 15 துண்டுகளாக வெட்டி சுமார் 7 கிலோ அளவுள்ள சந்தன மரக்கட்டைகளாக்கி அதை ரங்கராஜூக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். அவருக்கு மாவட்ட வன அலுவலர் வெங்கடேசனுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்தார். இதுகுறித்து வனச்சரகர் முருகன் கூறுகையில் வனகுற்றங்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ×