search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடன் தொல்லையால் விபரீதம்- தந்தை, மனைவி, மகனை விஷம் கொடுத்து கொன்று சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை
    X

    கடன் தொல்லையால் விபரீதம்- தந்தை, மனைவி, மகனை விஷம் கொடுத்து கொன்று சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை

    • தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு திலக் பெங்களூருவில் உள்ள தனது சகோதரர் சந்துருவுக்கு செல்போன் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.
    • சிவராமன், மகேஷ்வரி, மகன் சாய்கிரிசாந்த் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்தவர் சிவராமன் (வயது 85). இவர் பெங்களூரு விமான நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி வசந்தா (75). இவர்களது மகன் திலக் (வயது 38). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கொரோனாவுக்கு பின்பு வீட்டில் இருந்தபடி சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

    திலக்குக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு மகேஷ்வரி (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சாய்கிரிசாந்த் (6) என்ற மகன் உள்ளான்.

    இந்த குழந்தை மனவளர்ச்சி குன்றிய நிலையில் கடுமையாக அவதிப்பட்டு வந்தது.

    ஒரே மகன் என்பதால் பாசத்துடன் வளர்த்து வந்தனர். ஆனால் சாய்கிரிசாந்த்க்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் பெற்றோர் மிகுந்த வேதனை அடைந்தனர். மகனை குணப்படுத்த பல்வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் குணப்படுத்த முடியவில்லை.

    இதற்கிடையே திலக் மருத்துவ செலவு, குடும்ப செலவிற்கு பலரிடம் பணம் கடன் வாங்கினார். ஆன்லைன் வர்த்தகம் தொடங்க கடன் வாங்கினார். இதில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர்.

    இதனால் திலக் மற்றும் அவரது குடும்பத்தினர் என்ன செய்வதென தெரியாமல் தவித்தனர்.

    இது ஒருபுறம் இருக்க மறுபுறம் குழந்தையை குணப்படுத்த முடியவில்லையே என சோகத்தில் மூழ்கினர். இதனால் திலக் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று இரவு திலக் தனது பெற்றோர் சிவராமன்-வசந்தா, மனைவி மகேஷ்வரி, மகன் சாய்கிரிசாந்த் ஆகியோருக்கு தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்தார். அவர்கள் விஷத்தை குடித்தனர். இதையடுத்து திலக் வீட்டின் மேல் மாடிக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு திலக் பெங்களூருவில் உள்ள தனது சகோதரர் சந்துருவுக்கு செல்போன் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். அதில் தனது குழந்தையை குணப்படுத்த முடியவில்லை. மேலும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ள போகிறோம் என குறிப்பிட்டு இருந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்துரு, அக்கம் பக்கத்தினருக்கும், நண்பர்களுக்கும் செல்போனில் தகவல் தெரிவித்தார்.

    இதனிடையே விஷம் குடித்த சிவராமன், மகேஷ்வரி, சாய்கிரிசாந்த் ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதில் வசந்தா மயங்கி நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இன்று காலை அக்கம் பக்கத்தினர், அங்கு சென்று கதவை திறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் துணை கமிஷனர் கவுதம் கோயல் மற்றும் கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வசந்தாவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவசர வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிவராமன், மகேஷ்வரி, மகன் சாய்கிரிசாந்த் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே வீட்டில் சோதனை மேற்கொண்டதில் உருக்கமான கடிதம் சிக்கியது. அதிலும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறோம் என உருக்கமாக கூறியுள்ளனர். இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×