என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பணியாளர் கொண்டு தையல் போட்ட விவகாரம்- மருத்துவ அலுவலரிடம் விளக்கம் கேட்பு
- குடிபோதையில் 3 வாலிபர்கள் கருங்கல்லால் தாக்கி விட்டதாக கூறி ஓய்வுபெற்ற அரசு ஊழியரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
- மருந்து சீட்டில் எழுதிய மாத்திரையை வழங்காமல் மாற்று மாத்திரையை பயிற்சி மாணவர் வழங்கியுள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் 30 படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் புறநோயாளிகளாக 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
நேற்று முன்தினம் குடிபோதையில் 3 வாலிபர்கள் கருங்கல்லால் தாக்கி விட்டதாக கூறி ஓய்வுபெற்ற அரசு ஊழியரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவருக்கு கையில் தையல் போடுவதற்காக டாக்டர் பரிந்துரை செய்துள்ளார். அப்போது பணியில் இருந்த பல்நோக்கு மருத்துவ பணியாளர் நளினி என்பவர் கிருஷ்ணமுர்த்திக்கு தையல் போட்டதாக கூறப்படுகிறது.
மேலும் மருந்து சீட்டில் எழுதிய மாத்திரையை வழங்காமல் மாற்று மாத்திரையை பயிற்சி மாணவர் வழங்கியுள்ளார். இதனை தட்டிக்கேட்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. இது தொடர்பாக சேலம் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பானுமதி கெங்கவல்லி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் செந்தில்குமாரிடம் விளக்கம் கேட்டுள்ளார். உரிய விளக்கம் அளித்ததும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என இணை இயக்குனர் பானுமதி தெரிவித்துள்ளார்.






