என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூதாட்டி லட்சுமி, தனபால் ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி.
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று மூதாட்டி உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி
- தனபால் மறைத்து எடுத்து வந்த கேனில் இருந்த டீசலை திடீரென தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
- லட்சுமி (75). இன்று காலை கலெக்டர் அலுவலகம் வந்த இவர் பையில் இருந்த மண்எண்ணையை எடுத்து திடீரென தலையில் ஊற்றினார்.
சேலம்
சேலம் மாவட்டம் அக்ரஹாரம் பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த தனபால், அவரது மனைவி மேனகா, 14 வயது மகன் ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்தனர்.
தீக்குளிக்க முயற்சி
அப்போது தனபால் மறைத்து எடுத்து வந்த கேனில் இருந்த டீசலை திடீரென தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தனபாலை தடுத்து நிறுத்தி அவரது உடலில் தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர்.
இதைதொடர்ந்து தனபால் போலீசாரிடம் கூறும்போது பூசாரிபட்டி பகுதியில் கடந்த 8 ஆண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பிளாஸ்டிக் நிறுவனம் நடத்தி வந்தார். அதிலிருந்து வெளியேறும் மாசு காரணமாக எனது மகனுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
கொலை மிரட்டல்
இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளரிடம் கேட்டதற்கு தகாத வார்த்தையில் பேசியும் என்னை அடித்தும் கொலை மிரட்டல் விடுத்தார்.
அந்தப் பகுதியில் பிளாஸ்டிக் நிறுவனத்தை அமைக்க தடை விதிக்க வேண்டும். மேலும் கொலை மிரட்டல் விடுத்த உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி
இதேபோல் எடப்பாடி வெல்லாண்டிவலசு சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (75). இன்று காலை கலெக்டர் அலுவலகம் வந்த இவர் பையில் இருந்த மண்எண்ணையை எடுத்து திடீரென தலையில் ஊற்றினார். இதை பார்த்த போலீசார் மூதாட்டியை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரை 108 ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆக்கிரமிப்பு
அந்த மூதாட்டி வைத்திருந்த மனுவில் வெல்லாண்டிவலசு பகுதியில் எனக்கு சொந்தமாக இடம் உள்ளது. அந்த இடத்தை ஏற்கனவே அளவீடு செய்து முட்டுக்கல் போடப்பட்டது.
தற்போது 2-வது முறையாக இடத்தை அளக்கும் போது எனது இடம் குறைவாக உள்ளது. அருகில் உள்ளார்கள் நிலத்தை ஆக்கிரமித்து விட்டனர். எனவே அந்த இடத்தை மீண்டும் அளவீடு செய்து இடத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்து இருந்தார்.






