என் மலர்tooltip icon

    சேலம்

    • எட்டிக்குட்டை மேடு பகுதியில் செயல்படாமல் உள்ள அரசு பி.எட். கல்லூரி வளாகத்தில் மாணவர் குணால் தூக்கில் பிணமாக தொங்கினார்.
    • செயல்படாத கல்லூரி வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கச்சுப்பள்ளி கிராமம் கோணந்தியூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன்.

    இவரது மகன் குணால் (21). இவர் திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். நேற்று மாலை பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற மாணவர் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை எட்டிக்குட்டை மேடு பகுதியில் செயல்படாமல் உள்ள அரசு பி.எட். கல்லூரி வளாகத்தில் மாணவர் குணால் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து அப்பகுதியினர் கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குணால் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செயல்படாத கல்லூரி வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற (22-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பால நகர், நெடுஞ்சாலை நகர், கென்னடி நகர், வசந்தம் நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தாநகர், காசகாரனூர், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலப்பிள்ளையார் கோவில், சண்முகசெட்டி காடு, ஆண்டிப்பட்டி, வேடகாத்தம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்க்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தாளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர்நகர், மல்லமூப்பம்பட்டி, காந்திநகர், சித்தானூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், ஆரியகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர் நகர், காமநாயக்கன்பட்டி, ராமகவுண்டனூர், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம், பழைய சூரமங்கலம், ஐய்யம்பெருமாம்பட்டி, மாங்குப்பை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.

    • கடந்த 10-ந் தேதி ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் சாப்பிட்ட சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த பள்ளி மாணவி கலையரசி (14) வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார்.
    • இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

     சேலம்:

    நாமக்கல் பரமத்திரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 10-ந் தேதி ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் சாப்பிட்ட சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த பள்ளி மாணவி கலையரசி (14) வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் அசைவ உணவு சாப்பிட்டு மயங்கிய 43 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அதிரடி சோதனை

    சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைைமயில் அதிகாரிகள் 33 ஓட்டல்களில் நேற்று சோதனை நடத்தினர். இதில் சேலம் அஸ்தம்பட்டி, பேர்லேண்ட்ஸ், புதிய பஸ் நிலையம், சாரதா கல்லூரி ரோடு உள்பட பல பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஆத்தூர் எடப்பாடி பகுதிகளிலும் ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்த இந்த சோதனைகளில் சுகாதாரமற்ற முறையில் இருந்த 182 கிலோ கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக 1 0 கடைகளுக்கு விளக்கம் ேகட்டு நோட்டீஸ் அனுப்பி ய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடை உரிமையாளர்கள் அளிக்கும் அறிக்கையை பொறுத்து இந்த கடைகளுக்கு போலீசார் மூலம் சீல் வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் கடை உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    2-வது நாளாக சோதனை

    தொடர்ந்து 2-வது நாளாக இன்று சேலம் மாநகரில் ஜங்சன், கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் புறநகர் மாவட்ட பகுதிகளில் ஓமலூர், தம்மம்பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அந்தந்த பகுதி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையின் போது அதிக அளவில் தரமற்ற இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சோதனை தொடரும் என்றும், ஓட்டல்களில் தரமற்ற உணவுகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • அமைச்சர் செந்தில்பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து அனல் மின் நிலையத்துக்கு தேவையான மின் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டது.
    • அதிகாரிகள் சோதனை முடித்து வெளியே வந்தால்தான் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்னென்ன என்று தெரியவரும்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்திற்கு இன்று காலை வருமான வரித்துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் திடீரென வந்தனர். பின்னர் அவர்கள் அனல் மின்நிலையத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அமைச்சர் செந்தில்பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து அனல் மின் நிலையத்துக்கு தேவையான மின் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. எனவே அந்த மின் உபகரணங்கள் தரமானதா என்றும் அவற்றின் விலை குறித்தும் வருமான வரித்துறையினர் ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும் அனல் மின்நிலையம் தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்காமல் சம்பளம் ஒதுக்கி முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதுதொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அனல் மின்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் சோதனை முடித்து வெளியே வந்தால்தான் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்னென்ன என்று தெரியவரும்.

    • மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் ஆதரவற்ற முதியோர் மற்றும் வீட்டை விட்டு வெளியேறி வந்த பலர் சாலை ஓரங்களிலும் பஸ் நிலையம், ரெயில் நிலையம் போன்ற இடங்களிலும் தங்கி உள்ளனர்.

    இவர்கள் அன்றாட உணவு தேவைக்காக யாசகம் பெறுவதும், கோவில்களில் சென்று அன்னதானம் பெற்று உண்டும் வாழ்ந்து வருகின்றனர்.

    இதில் பிரேமா (வயது 70) என்ற மூதாட்டி ஆதரவற்ற நிலையில் உடையாப்பட்டி பகுதியிலும், அம்மாப்பேட்டையில் உள்ள மிலிட்டரி ரோடு பகுதியிலும் கடந்த சில நாட்கள் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் திருமணிமுத்தாறு ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியிலும் சுற்றி திரிந்து வந்தார்.

    இந்த நிலையில் வாழ வழியின்றி எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வந்த பிரேமா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, இன்று காலையில் பழைய பஸ் நிலையம் அருகே திருமணிமுத்தாறு ஆட்கொல்லி பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

    ஆனால் திருமணிமுத்தாற்றில் முழங்கால் அளவே தண்ணீர் ஓடுவதால் பக்கவாட்டு சுவற்றில் உருண்டு கீழே விழுந்து காயம் அடைந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்த டவுன் போலீசார் மற்றும் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினர் ஆற்றுக்குள் இறங்கி மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மூதாட்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
    • அனுமதி இல்லாமல் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஈடுபட்ட இந்து முன்னனி கோட்ட பொறுப்பாளர் பழனிசாமி உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

    இதையடுத்து வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் கரைப்பதற்காக 30-க்கும் இந்து முன்னணியினர் வனவாசி, தானபதியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா தலைமையில் ஏராளமான போலீசார் வந்தனர். உரிய அனுமதி பெறாமல் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தக்கூடாது என போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அனுமதி இல்லாமல் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஈடுபட்ட இந்து முன்னனி கோட்ட பொறுப்பாளர் பழனிசாமி உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • விநாயகர் சிலை ஊர்வலம் முடிந்ததும் நேற்று நள்ளிரவில் அனைவரும் ஒரு மினிவேனில் ஊருக்கு புறப்பட்டனர்.
    • வேன் இரவு 11.30 மணி அளவில் தீவட்டிப்பட்டி அருகே உள்ள கொண்ரெட்டியூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காருவள்ளி சின்ன திருப்பதி பகுதியை சேர்ந்த சாணக்கியன் (வயது 16), ஜான்ஷினா (16), மைக்கேல் தேவன்(25), சந்துரு (19), ஸ்ரீகாந்த்(19), முனீஸ் (17)) உள்பட 11 பேர் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மேளம் வாசிப்பதற்காக ஜோடிகுளி பகுதிக்கு சென்றனர். விநாயகர் சிலை ஊர்வலம் முடிந்ததும் நேற்று நள்ளிரவில் அனைவரும் ஒரு மினிவேனில் ஊருக்கு புறப்பட்டனர்.

    வேன் கவிழ்ந்தது

    வேன் இரவு 11.30 மணி அளவில் தீவட்டிப்பட்டி அருகே உள்ள கொண்ரெட்டியூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் அனைவரும் காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஸ்ரீகாந்துக்கு மட்டும் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருந்தது. அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மீதமுள்ள 10 பேரும் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    போலீசார் விசாரணை

    இது குறித்து தகவல் கிடைத்ததும் தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற போது ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்காக சுமார் 150 மூட்டை தேங்காய் பருப்பு.
    • இந்த பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.7,431 முதல் ரூ.7,639 வரை விற்பனையானது.

    எடப்பாடி:

    கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற போது ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்காக சுமார் 150 மூட்டை தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இந்த பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.7,431 முதல் ரூ.7,639 வரை விற்பனையானது. 2-ம் ரக தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.5,889 முதல் ரூ.7,325 வரை விலைபோனது. இதன் மூலம் ரூ. 2 லட்சத்து 72 ஆயிரத்து 626-க்கு தேங்காய் பருப்புகள் ஏலம் போனது. 

    • தனியார் வாகனங்கள் சில அனுமதி இன்றி பள்ளி குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச் செல்கின்றனர்.
    • இதனால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சங்ககிரி போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

    எடப்பாடி:

    எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தனியார் வாகனங்கள் சில அனுமதி இன்றி பள்ளி குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச் செல்வதாகவும், இதனால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சங்ககிரி போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

    திடீர் ஆய்வு

    இதையடுத்து எடப்பாடி, கொங்கணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியம் மற்றும் போக்குவரத்து ஆய்வா ளர்கள் செந்தில்குமார், புஷ்பா ஆகியோர் தலைமையில் தனித்தனி குழுக்க ளாக பல்வேறு இடங்க ளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக ஜலகண்டாபுரம்- சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் நேற்று மாலை போக்குவரத்து அலுவலர்கள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு தனியார் வேன் ஒன்று உரிய அனுமதி இன்றி அப்பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளை அதிக அளவில் ஏற்றி வந்ததை கண்டறிந்த போக்குவரத்து துறையினர் வாகனத்தை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து வாகன உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட வாகன டிரைவரிடம் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் இது போன்று உரிய அனுமதி இன்றி தனியார் வாகனங்கள் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வது கண்டறி யப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்கு வரத்து துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெட்டியில் பயணம் செய்த கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஏகியா (28), சுகில்தேவ் (30) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கஞ்சா கடத்துவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த ரெயிலில் இன்று அதிகாலை ஜோலார் பேட்டையில் இருந்து சேலம் ஜங்சன் வரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பொது ரெயில்பெட்டியில் சீட் எண் 45-க்கு கீழ் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 பேக்குகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெட்டியில் பயணம் செய்த கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஏகியா (28), சுகில்தேவ் (30) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ஒடிசா மாநிலம் பெரம்பூர் பகுதிக்கு சென்று 4 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து கேரளாவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறினர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • கடைகளில் இருந்த தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    நாமக்கல் பரமத்திரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 10-ந் தேதி ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் சாப்பிட்ட சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த பள்ளி மாணவி கலையரசி (14) வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் அசைவ உணவு சாப்பிட்டு மயங்கிய 43 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஷவர்மா விற்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து ஓட்டல்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி தரமற்ற இறைச்சிகளை பறிமுதல் செய்து வருகிறார்கள். இதனால் மாவட்டம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

    இதற்கிடையே நாமக்கல்லில் உள்ள ஒரு ஓட்டலில் பூங்கா நகரை சேர்ந்த சஞ்சய் (18 )உள்பட 8 பேர் பர்க்கர் சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிசிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் 7 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினர். சஞ்சய் மட்டும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரது பெற்றோர் கதறியபடி உள்ளனர்.

    இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த கடையில் இன்று காலை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடைகளில் இருந்த தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தால் நாமக்கல் நகர பகுதியில் மீண்டும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    • ஒரு தரப்பினர் அங்கிருந்து தங்களது நண்பர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டனர்.
    • காயம் அடைந்த இருவரையும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் அன்சர்அலி (வயது 34). இவர் பொன்னம்மாபேட்டை வாய்க்கால் பட்டறை பகுதியில் சமோசா கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் டீ மாஸ்டர் உள்பட 8 பேர் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம் போல் இன்று அதிகாலை கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியை சிலர் இன்று அதிகாலை கடைக்கு வந்து 250 ரூபாய்க்கு சமோசா வாங்கிவிட்டு பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து ஒரு தரப்பினர் அங்கிருந்து தங்களது நண்பர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது இருதரப் பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் கடையில் வேலை பார்க்கும் ருக்குல்லா, அம்சத் அலி இருவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த இருவரையும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பால்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றார். மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×