search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர் மழை: ஏற்காடு மலைப்பாதையில் அருவிகளில் கொட்டும் வெள்ளம்- குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்
    X

    ஏற்காடு மலை பாதையில் கொட்டும் அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் - கிழக்கு சரபங்கா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சி

    தொடர் மழை: ஏற்காடு மலைப்பாதையில் அருவிகளில் கொட்டும் வெள்ளம்- குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

    • ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • ஓமலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக பெத்த நாயக்கன் பாளையம், தலைவாசல், ஆனைமடுவு, ஆத்தூர் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டியது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளர்வதுடன் நீர்நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் ஏற்காடு மலைப்பாதையில் 3 மற்றும் 4-வது கொண்டை ஊசி வளைவு, 40 அடி பாலம் ஆகிய பகுதிகளில் உள்ள அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. வெள்ளியை காய்ச்சி ஊற்றுவது போல இந்த தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளை இந்த அருவிகள் வெகுவாக கவர்ந்துள்ளது.

    இதனால் மலைப்பாதையில் கொட்டும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். மேலும் செல்பி எடுத்தும் உற்சாகமாக நீரில் விளையாடியும் வருகிறார்கள். இதனால் ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர். ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    ஓமலூர் அருகே உள்ள சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள பனிக்கரடு பகுதியில் கிழக்கு சரபங்கா நதி உற்பத்தியாகிறது. இந்த நதி சக்கர செட்டிப்பட்டி ஊராட்சி நாலுகால்பாலம் வழியாக காமலாபுரம் ஏரியை வந்து அடைகிறது.

    இந்த நிலையில் ஓமலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதனிடையே நேற்று முன்தினம் இரவு ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் கிழக்கு சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சக்கரசெட்டிப்பட்டி வனப்பகுதியில் விவசாயிகள் ஏற்படுத்திய ஏரி நிரம்பி, தற்போது காமலாபுரம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    கனமழையின் காரணமாக ஒரே நாளில் ஏரி நிரம்பி உள்ளதால் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்த நாயக்கன்பாளையத்தில் 20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது . தலைவாசல் 19, ஆனைமடுவு 18, ஆத்தூர் 9.4, சங்ககிரி 7.4, தம்மம்பட்டி 4, ஏற்காடு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 78.8 மி.மீ. மழை பெய்துள்ளது.

    Next Story
    ×