என் மலர்tooltip icon

    சேலம்

    • நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
    • சூரப்பள்ளி அருகே வந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் சூரப்பள்ளி பகுதியை சேர்த்தவர் ராஜா. இவரது மகன் மாதேஷ் (23). இவர் அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். சூரப்பள்ளி அருகே வந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் மாதேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாதேசை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மின் விளக்கை ஒளிர விடாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே இது போன்ற விபத்துக்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சுகாதார வசதிகளுடன் பயனாளிகள் வரவேற்பு அறை, தாமரைக்குளம், மூலிகைத் தோட்டத்துடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது.
    • வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முயற்சியால் வாழப்பாடி அரிமா சங்கத்துடன் இணைந்து சேலம் மாவட்டத்தில் முதன் முறையாக 1000 அரிய நூல்களை கொண்ட புதிய நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

     வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே பேளூரில் சிறந்த கட்டமைப்பு, சுகாதார வசதிகளுடன் பயனாளிகள் வரவேற்பு அறை, தாமரைக்குளம், மூலிகைத் தோட்டத்துடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. மேலும் தேசிய தரச் சான்றிதழ் பெற்றதோடு மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்தது. இதையொட்டி மத்திய அரசு ரூ. 15 லட்சம் பரிசுத்தொகை வழங்கி பாராட்டியது.

    புதிய நூலகம்

    இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முயற்சியால் வாழப்பாடி அரிமா சங்கத்துடன் இணைந்து சேலம் மாவட்டத்தில் முதன் முறையாக 1000 அரிய நூல்களை கொண்ட புதிய நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் தமிழ்மணி நூலகத்தை திறந்து வைத்தார்.

    இவ்விழாவில் அரிமா சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், டாக்டர் மோதிலால், தேவராஜன் மண்டல தலைவர் பாபு, வட்டார தலைவர் ஜவஹர், கந்தசாமி, கலைஞல் புகழ் பன்னீர்செல்வன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக நோயாளிகள், உடனாளர்கள் அமர்ந்து படிப்பதற்கு உதவிடும் நோக்கில் பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நூலகம் திறக்கப்பட்டதற்கு கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்து தற்போது 505 காசுகளுக்கு விற்பனையாகிறது.
    • தொடர்ந்து முட்டை விலை உயர்ந்து வருவதால் முட்டை நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.

    கடந்த 7-ந்தேதி முட்டை விலை ரூ. 4.95-ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு, ரூ. 5.00 ஆனது. நேற்று மாலை நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இதை அனைத்து பண்ணையாளர்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை (பைசாவில்) சென்னை 560, பர்வாலா 517, பெங்களூரு 550, டெல்லி 533, ஐதராபாத் 510, மும்பை 570, மைசூர் 555, விஜயவாடா 533, ஹொஸ்பேட் 510, கொல்கத்தா 600.

    வழக்கமாக புரட்டாசி மாதம் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். இதனால் கறி , முட்டை சாப்பிட மாட்டார்கள். இதனால் அதிக அளவில் கறி மற்றும் முட்டைகள் தேக்கம் அடையும், விலையும் குறையும். ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக முட்டை விலை கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்து தற்போது 505 காசுகளுக்கு விற்பனையாகிறது. தொடர்ந்து முட்டை விலை உயர்ந்து வருவதால் முட்டை நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு தீவன பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் முட்டை கோழி வளர்ப்பு குறைந்துள்ளதாகவும், இதனால் முட்டை உற்பத்தி சரிந்துள்ளதால் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

    முட்டை விலை உயர்வு குறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறியதாவது,

    நாமக்கல் மண்டலத்தில் வழக்கமாக 6 கோடிக்கும் அதிகமாக முட்டை உற்பத்தி செய்யப்படும், தற்போது முட்டை கோழி தீவனம் விலை உயர்ந்துள்ளதால் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் அந்த தொழிலை கைவிட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். இதனால் 6 கோடிக்கும் மேல் முட்டை உற்பத்தி செய்து வந்த நிலையில் தற்போது ஒரு கோடி முட்டை உற்பத்தி குறைந்து 5 கோடியாக சரிந்துள்ளது. இதனால் முட்டை விலை அதிகரித்து வருகிறது என்றனர்.

    • அணையில் இருந்து ஆற்றில் 2ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5ஆயிரத்து 607கனஅடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 124.80 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.92 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3ஆயிரத்து 503 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 607கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி இந்த அணை நீர்மட்டம் 76.52 அடியாக உள்ளது. இந்த அணைக்கு 1261 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து ஆற்றில் 2ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5ஆயிரத்து607கனஅடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    • அதிகாலை வீட்டில் தூக்க கலக்கத்தில் எழுந்த கார்த்தி தண்ணீர் என நினைத்து அருகில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார்.
    • உறவினர்கள் அவரை மீட்டு ஆட்டையாம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள பாலம்பட்டியை சேர்ந்தவர் கார்த்தி (25), இவர் காகாபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் தூக்க கலக்கத்தில் எழுந்த கார்த்தி தண்ணீர் என நினைத்து அருகில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார்.

    இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஆட்டையாம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கார்த்தி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அருநூற்றுமலை பெலாப்பாடி மலை உச்சியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமன் ஆகிய 3 மலைக் கோவில்கள் அமைந்துள்ளன.
    • புரட்டாசி மாதத்தில் பாரம்பரிய முறைப்படி திருக்கோடி ஜோதி தீபம் ஏற்றும் திருவிழா நடைபெற்று வருகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநூற்றுமலை பெலாப்பாடி மலை உச்சியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமன் ஆகிய 3 மலைக் கோவில்கள் அமைந்துள்ளன.

    புரட்டாசி மாத திருவிழா

    இக்கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பாரம்பரிய முறைப்படி திருக்கோடி ஜோதி தீபம் ஏற்றும் திருவிழா நடைபெற்று வருகிறது.

    நேற்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை யொட்டி நடைபெற்ற இத்திருவிழாவில் கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமன் சாமிகளுக்கும் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி நிழலில் பூஜை பொருட்களை கொண்டு சென்று சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கோடி ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. பெலாப்பாடி கிராமத்திற்கு பஸ் போக்குவரத்து வசதியில்லாத நிலையிலும் பாத யாத்திரையாகவும், இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்க ளிலும், சுற்றுப்புற கிராம மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் வாழப்பாடி பேளூர் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

    விழாவில் பங்கேற்ற பக்தர்கள், பொதுமக்க ளுக்கு பொங்கல் உருண்டைச்சோறும், முன்னோர் வழியில் மொச்சை, அவரைக் கொட்டை குழம்பும் கோவில் பிரசா தமாக அன்னதானமாகவும் வழங்கப்பட்டது.

    • மேட்டூர் அருகே உள்ள பாலாறு பகுதியில் கர்நாடக வனத்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
    • தமிழக காவல்துறை சோதனை சாவடி 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரைக்காட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே உள்ள பாலாறு பகுதியில் கர்நாடக வனத்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை சோதனை சாவடி 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரைக்காட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    உத்தரவு

    பாலாற்றில் தமிழக வனத்துறை மற்றும் காவல்துறை சோதனை சாவடி அமைப்பது குறித்து ஆய்வு அறிக்கை அனுப்ப தமிழக அரசு 2 மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டது.

    இதனை அடுத்து நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு,வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் காரைக்காடு சோதனை சாவடி யிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

    முன்னதாக கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில் இரு மாவட்ட வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள்.

    ஆய்வுக்கு பிறகு ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக-கர்நாடக எல்லையான பாலாற்றில் கர்நாடகா அரசின் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஈரோடு மாவட்ட எல்லையில் வனத்துறை அல்லது காவல்துறை சோதனை சாவடி இல்லை ஏதாவது சம்பவங்கள் நடந்தால் யார் பொறுப்பு என்பது பற்றி பிரச்சனை எழுந்தது.

    இது குறித்து முதல்-அமைச்சரின் கள ஆய்வில் பேசப்பட்டது. இதனை அடுத்து சோதனை சாவடி அமைப்பதில் என்ன நடை முறைகளை பின்பற்றலாம்? வனத்துறை, காவல்துறை இணைந்து சோதனை சாவடி அமைக்க லாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இது குறித்து 15 நாட்களில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.மேட்டூர் அருகே தமிழக எல்லையில்

    சோதனைசாவடி அமைக்க ஆய்வு

    • புதிதாக சிறை பணியாளர் குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி நிலையம், பகல் காப்பகம், சிறை பணியாளர் குடியிருப்பு மருத்துவமனை
    • போட்டி தேர்வு மையம், சிறப்பு கல்வி மையம்

    சேலம்

    சேலம் மத்திய ஜெயிலில் 300-க்கும் மேற்பட்ட சிறை பணியாளர்கள் உள்ளனர். இவர்களின் வசதிக்காகவும் அவர்களுடைய குடும்பத்தின் உறுப்பினர்கள் மேம்பாட்டிற்காகவும் சிறை துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறை பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் நூலகம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உடற்பயிற்சி மையமும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் சிறை குடியிருப்பு வளாகத்தில் புதிதாக சிறை பணியாளர் குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி நிலையம், பகல் காப்பகம், சிறை பணியாளர் குடியிருப்பு மருத்துவமனை மற்றும் அரசு போட்டி தேர்வு மையம் ஆகியவை சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து குழந்தைகள் பகல் காப்பகம் மற்றும் சிறப்பு கல்வி நிலையங்களை பார்வையிட்டார். 

    பின்னர் இது குறித்து ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் கூறியதாவது:-

    சிறைத்துறை சார்பில் தற்போது சிறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு பகல் காப்பகம், மருத்துவமனை, போட்டி தேர்வு மையம், சிறப்பு கல்வி மையம் என ெதாடங்கப்பட்டுள்ளது. கணவன்- மனைவி பணிக்கு சென்ற நிலையில் குழந்தைகளை கவனிப்பதற்காக குழந்தைகள் காப்பகமும், சிறைப் பணியாளர்கள் குழந்தைகள் 9-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவிகள் நல்ல முறையில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு இலவச சிறப்பு டியூஷன் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் படித்து பயன் பெறலாம். மேலும் சிறை பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தும் வகையில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை சிறை அலுவலர் கிருஷ்ணகுமார், ஓய்வு பெற்ற சிறை பணியாளர்கள், சிறை ஊழியர்கள், வார்டன்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    • நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்க வில்லை யெனினும் ஓரளவு மழை பெய்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்தது.
    • இதனால் பல்வேறு இடங்களில் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்க வில்லை யெனினும் ஓரளவு மழை பெய்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்தது. குறிப்பாக சேலம், தம்மம்பட்டி, எடப்பாடி, மேட்டூர், ஏற்காடு, சங்ககிரி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இங்கு பல மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது.

    விவசாய பணிகள்

    இதனால் கிணறுகள், குளங்கள், குட்டைகள், ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் மதகுகள், ஓடைகள், வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    பூ செடிகள், காபி செடிகள், அழகு செடிகள், தென்ைன மர கன்றுகள், நெற்பயிர்கள், வெண்டைக்காய், தக்காளி, மிளகாய், புதினா, கொத்த மல்லி, சோளம், மரவள்ளிக்கிழங்கு, கரும்பு உள்ளிட்டவை சாகுபடி செய்துள்ளனர்.

    தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    எடப்பாடியில் பலத்த மழை

    இந்த நிலையில் எடப்பாடி, அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தாலும் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

    இதையடுத்து நள்ளிரவு நேரத்தில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் மழை வெள்ளம் சாலைகளில் கரைபுரண்டு தாழ்வான பகுதிகளில் பாய்ந்தோடியது.

    பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

    எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மழை வெள்ளம் குளம்போல் தேங்கியது. குறிப்பாக எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் மேற்கொண்டிருந்தனர். நள்ளிரவில் பெய்த மிக கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சோளம், வாழை, பருத்தி, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாய்ந்தன.

    பூலாம்பட்டி பில்லுக்குறிச்சி, உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு செய்யப்பட்டு இருந்த வயல்களில் தண்ணீர் அதிக அளவு தேங்கி உள்ளது. இதனால் நெற்பயிர்கள் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சோளப் பயிர்கள் மழைக்கு தாக்குப்பிடிக்க இயலாமல் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழைப் பாதிப்புகள் குறித்து அப்பகுதியில் வருவாய் துறையினர் மற்றும் வேளாண் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
    • அணைக்கு வினாடிக்கு 139 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. அதே நேரம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் தண்ணீர் வரத்து குறைந்தது.

    மேட்டூர் அணை கட்டிய 90 ஆண்டு கால வரலாற்றில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அணையின் நீர்மட்டம் இந்த அளவு குறைந்தது இல்லை.

    இந்த நிலையில் கர்நாடக அரசும் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விடவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதன் காரணமாக இந்த ஆண்டில் 2-வது முறையாக கிருஷ்ண ராஜசாகர் அணை 100 அடியை எட்டியது. அதே போல் கபினி அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது.

    ஆனாலும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை கொடுக்கவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 31.72 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 139 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் மீன்வளம் மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நாளை முதல் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இதனிடையே கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு 3,719 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 101.20 அடியாக உள்ளது.

    இதேபோல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணையின் நீர்மட்டம் 76.65 அடியாக உள்ளது.

    இந்த 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 4,719 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • ஆசிரியை தமிழ்வாணி கடந்த ஆண்டுகளில் மாணவிகள் சேர்க்கையின் போது கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் சிக்கினார்.
    • தலைமை ஆசிரியை தமிழ்வாணியை இளம்பிள்ளை அரசு ஆண்கள் பள்ளிக்கு மாற்றி மாவட்ட கல்வி அதிகாரி கபீர் உத்தரவிட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் கோட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் வகுப்பை புறக்கணித்து 3 மணிநேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் உள்பட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை.

    குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருப்பதாக புகார் கூறிய மாணவிகளை தலைமை ஆசிரியை மிரட்டியதுடன் கணவரை வைத்து வீடியோ எடுத்து மிரட்டல் விடுப்பதாகவும், முட்டிபோட வைத்து கொடுமை படுத்தியதாகவும் புகார் கூறினர். இதனால் தலைமை ஆசிரியை தமிழ்வாணியை பணிநீக்கம் செய்ய வேண்டும். வேறு தலைமை ஆசிரியையை இப்பள்ளிக்கு அரசு நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த கல்வி அதிகாரிகள் மோகன், சந்தோஷ்குமார், மற்றும் வருவாய்துறையினர், போலீசார் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அடிப்படை வசதிகளை செய்து தருவதாகவும், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். இதையடுத்து தலைமை ஆசிரியையும் மாணவிகளிடம் என்மீது தவறு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் என்று கூறினார். தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தலைமை ஆசிரியை தமிழ்வாணியை இளம்பிள்ளை அரசு ஆண்கள் பள்ளிக்கு மாற்றி மாவட்ட கல்வி அதிகாரி கபீர் உத்தரவிட்டுள்ளார்.

    ஆசிரியை தமிழ்வாணி கடந்த ஆண்டுகளில் மாணவிகள் சேர்க்கையின் போது கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் சிக்கினார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் முகப்பு பக்கங்களை தைக்கும் பணிகளில் மாணவிகளை ஈடுபடுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சஸ்பெண்டு செய்யப்பட்டு பின்னர் மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி நெடுந்தூர ஓட்டப்போட்டி இன்று காலை நடைபெற்றது.
    • 25 வயதிற்குட்பட்டோருக்கு 8 கிலோமீட்டர்தூரமும், 25 வயது மேற்பட்டோருக்கு 10 கிலோமீட்டர் தூரமும் நடைபெற்றது.

    சேலம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி நெடுந்தூர ஓட்டப்போட்டி இன்று காலை நடைபெற்றது.

    2 பிரிவில் போட்டிகள்

    இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆண்களுக்கான பிரிவில் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டோருக்கு 8 கிலோமீட்டர்தூரமும், 25 வயது மேற்பட்டோருக்கு 10 கிலோமீட்டர் தூரமும் நடைபெற்றது.

    மேலும், பெண்களுக்கான பிரிவில் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர் தூரமும், 25 வயது மேற்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் என நான்கு பிரிவுகளில் இப்போட்டியானது நடைபெற்றது.

    ரொக்கப்பரிசு

    இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 5,000-மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 3,000-மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 2,000-மு ம்வழங்கப்பட்டது.

    மேலும், 4 முதல் 10 இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு ரூபாய் 1,000- மும் வழங்கப்பட்டது. இதனை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார். இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×