என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பூக்கள் கீரமங்கலத்தில் உள்ள மலர் கமிஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து பல மாவட்டங்களுக்கும் வியாபாரிகள் பூக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
சுபதினங்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். அதே போல இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கீரமங்கலம் மலர் சந்தையில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம் பூக்கள் ஒரு கிலோ ரூ.ஆயிரத்திற்கும், காட்டுமல்லி கிலோ ரூ.800-க்கும், அரளி பூ கிலோ ரூ.200-க்கும், சம்பங்கி பூ கிலோ ரூ.150-க்கும், ரோஜா பூ கிலோ ரூ.100-க்கும் விற்பனை ஆனது. தொடர் மழை காரணமாக பூக்களின் உற்பத்தி குறைவாக உள்ளது.
புதுக்கோட்டையில் நேற்று காலை வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. பின்னர் காலை 9 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசாக பெய்ய தொடங்கிய மழை பின் பலத்த மழையாக பெய்தது. அதை தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்தது. இந்த மழை 3 மணி வரை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. ஆனாலும் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளதாகவும், ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல வழியின்றி வீடு மற்றும் கடை பகுதிகளில் மழைத்தண்ணீர் தேங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்பகுதிகளில் உள்ள நீர் வழித்தடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகள் காரணமாக முறையாக பராமரிக்க முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் செடிகள் மற்றும் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தற்போது பெய்துள்ள மழையால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவரங்குளம் வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் திருவரங்குளம் பூவரசகுடி, கைக்குறிச்சி, கேட்பரை, மேட்டுப்பட்டி, திருக்கட்டளை, வேப்பங்குடி, காயாம்பட்டி, வம்பன் நால்ரோடு, கொத்த கோட்டை, தெட்சிணா புரம், வேங்கட குளம், கத்தக்குறிச்சி, வெண்ணாவல் குடி, குளவாய்பட்டி, கீழையூர், திருவுடையார்பட்டி, வல்லதீரா கோட்டை, மணியம்பலம், வாண்டா கோட்டை, பாலையூர், கிங்கினி பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆலங்குடி பகுதியில் நேற்று அதிகாலையிலிருந்து விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆண்டின் இறுதி நாளில் நல்ல மழை பெய்வதால் 2021-ம் ஆண்டு சிறப்பாகவும், செழிப்பாகவும் இருக்கும் என விவசாயிகள் கூறினர்.
அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் நேற்று பெய்த தொடர் மழையினால் நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்தனர். அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளான இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, வயலோகம், பரம்பூர், காலாடிப்பட்டி, செங்கப்பட்டி, குடுமியான்மலை, காட்டுப்பட்டி, புதூர், வயலோகம், கடம்பராயன்பட்டி, கீழக்குறிச்சி, பெருமநாடு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. கடைவீதிகளில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.
இந்த நிலையில் அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அறுவடை பணிகள் நடைபெற்று வந்தது. இந்த தொடர் மழையால் நேற்று அறுவடை பணிகள் நடைபெறவில்லை. மேலும் தொடர் மழையால் பயிரிட்டுள்ள நெற் கதிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் விவசாயிகள் நெற்பயிர்க்குள் கால்வாய் அமைத்து மழை நீரை வெளியேற்றி வருகின்றனர். சிலர் தங்களது வயலில் அறுத்த நெற்பயிர்களை சாலை ஓரங்களில் அடுக்கி வைத்து தார்ப்பாயால் மூடி வைத்திருந்தனர்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்த ரஜினிகாந்த், உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் அரசியல் களத்தில் இருந்து பின் வாங்கியுள்ளார். ஆனாலும் அரசியலுக்கு வராமலே, மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நண்பர் என்ற முறையில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். சென்னை சென்றதும் ரஜினியை சந்தித்து பேசுவேன். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். ரஜினி நலம் விரும்புபவர்களில் நானும் ஒருவன். நண்பர் என்பதால் தேர்தலில் ஆதரவு கோருவேன். ரஜினியின் முடிவு பாஜகவுக்கு ஏமாற்றமா என்ற யுகமான கேள்விக்கு நான் பதில் அளிக்க முடியாது. பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டும் என்று தமிழக மக்கள் விரும்பவில்லை.
ஆன்மீகத்திற்கும் எனக்கும் விரோதம் கிடையாது. ஆன்மீகத்தை ஏற்றுக் கொள்ளுமாறு யாரும் என்னை நிர்ப்பந்திக்க முடியாது. பகுத்தறிவை ஏற்றுக் கொள்ளுமாறு நான் யாரையும் நிர்பந்திக்க முடியாது. திராவிடம் யாருக்கும் சொந்தமில்லை; அனைவருக்கும் சொந்தமானது. நான் நேர்மையான அரசியலில் ஈடுபடுவேன்” என்றார்.
திருச்சி மண்டலத்தில் 3-ம் கட்ட பிரசாரத்தை தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்றிரவு புதுக்கோட்டை நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டார். சின்னப்பா பூங்கா, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக பிரசாரம் செய்து விட்டு லேணா திருமண மகாலை சென்றடைந்தார். அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
மக்கள் எழுச்சியை வரும் வழியில் பார்வையிட்டு வந்தேன். சினிமாகாரனை பார்க்க கூட்டம் வரும். அதெல்லாம் ஓட்டாக மாறுமா? என கேள்வி எழுப்புகின்றனர். தமிழகத்தின் அவலத்தை பலமுறை அரசுக்கு சங்கு ஊதினாலும் அவர்களுக்கு கேட்கவில்லை. சமீபத்தில் லஞ்ச பட்டியலை வெளியிட்டேன். ஆனால் உரிய பதில் வரவில்லை.
தமிழக மக்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.60 ஆயிரம் கடன் உள்ளது. மக்கள் குரல் எழுப்பினால்தான் கேட்கும் போல். கல்வி பட்ஜெட்டில் ரூ.34,181 கோடிக்கு போடப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் ஒரு மாணவருக்கு ரூ.45 ஆயிரம் செலவாகிறது. ஆனால் கல்வி தரம் இல்லை. தமிழும், ஆங்கிலமும் அரைகுறையாக கற்பிக்கப்படுகிறது. அதேபோல் கழிப்பறை வசதி இல்லாத நிலை உள்ளது. இவற்றையெல்லாம் மாற்றி காட்டும் மக்கள் நீதி மய்யம்.
சமீபத்தில் திருச்சியில் தமிழகத்தில் உள்ள லஞ்ச பட்டியலை வெளியிட்டேன். அடுத்தது அமைச்சர்களின் ஊழல் பட்டியல் காத்திருக்கிறது. தமிழக அரசு பெரும் நோயால் தாக்கப்பட்டுள்ளது. பல டாக்டர்கள் சிகிச்சை அளிக்க தயாராகவுள்ளனர். என்னிடம் வெள்ளை பேப்பரை கேட்டார்கள். அவர்களுக்கு அச்சடித்தே தருகிறேன். தைரியம் என்பது ஆயுதத்தில் இல்லை. மூளையில் உள்ளது. கட்டாயம் மாற்றங்கள் நிகழும். அதன் பின்னர் ஒவ்வொன்றாக சரியாகும்.
மக்கள் நீதி மய்யம் சம்பாதிக்க வரவில்லை. மக்களுக்கு தேவையானவற்றை தர வருகிறார்கள். முதன் முதலில் கவிஞர் சினேகன் தன்னை இணைத்து கொண்டார். தற்போது பலரும் இணைந்து வருகிறார்கள். இணைய வருவார்கள். தூங்கும் தமிழகத்தை தட்டி எழுப்பும் நேரம் வந்துவிட்டது. மக்கள் நீதி மய்யம் முழுவதுமாக டிஜிட்டல் அலுவலகமாக மாற்றப்படவுள்ளது. தற்போதுதான் நமது குரல் அவர்கள் காதுகளுக்கு கேட்க தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் இலவச இண்டர்நெட் இணைப்பு வழங்கப்படும். இதனால் அரசு செயல்கள் வழுப்படும். அனைத்து தேவைகளும் மக்களை தேடி வரும். திராவிடம் என்பது நாடு தழுவியது. இது இரண்டு பேருக்கு மட்டும் உரிமை கிடையாது. மொகஞ்சதாரா, ஹரப்பா காலத்திலிருந்தே திராவிடம் உள்ளது. நாளை நமதே.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுக்கோட்டை:
கொரோனாவின் தாக்கம் சற்றே குறைந்த ஆறுதல் அளித்தபோதிலும், அதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த பலர் இன்னும் அதிலிருந்த மீளமுடியாமல் தவித்து வருவது ஆங்காங்கே இருந்து வருகிறது.
இருந்த தொழிலை விட்டு இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர். படிப்பு, கல்வித்தகுதியை மறந்து கிடைக்கும் தொழிலை செய்ய முன்வந்தவர்கள் ஏராளம். ஆனாலும் இருக்கும் பரம்பரை தொழிலை கைவிட மனமின்றி, தன்னை சார்ந்தவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் தொழிலை கற்றுத்தந்த பெருமை நிகழ்வு புதுக்கோட்டையில் நடந்துள்ளது.
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தின் பின்பக்கம் உள்ள தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார், தச்சுத் தொழிலாளி. இவரது மகள் 12 வயதான அஞ்சனா ஸ்ரீ.
தந்தைக்கு உதவியாக உளியை கையில் எடுத்த அஞ்சனா, இப்போது கை தேர்ந்த கலைஞராகி அசத்திக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது தந்தைக்கு உதவியாக உளியை பிடித்த அவருக்கு கொரோனா ஊரடங்கு முழுவதுமாக தச்சுத் தொழிலை கற்க நேரத்தை அளித்தது.
கதவில் இடம்பெற வேண்டிய டிசைன்களை அவரே சொந்த கற்பனையில் வரைகிறார். இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த டிசைன்களையும் அவளே யாருடைய உதவியும் இல்லாமல் செதுக்குகிறார்.
ஒரு இரட்டை கதவுக்கான டிசைன் மற்றும் சிற்ப வேலைகளுக்கு 4 நாள் மட்டுமே அஞ்சனா எடுத்துக்கொள்வதாக அவரது தந்தை முத்துக்குமார் பெருமிதம் தெரிவித்தார்.
கலை ஆர்வம் பற்றி அஞ்சனா கூறும்போது, இங்கு 70 முதல் 80 வகையான உளிகள் உள்ளன. எந்தவகையான மரத்திற்கு எந்த உளி பயன்படுத்த வேண்டும் என தெரிந்திருப்பது முக்கியமானது. அதன்பின்னர் வரை படத்திற்கு ஏற்ப செதுக்க வேண்டியது தான். இவை அனைத்தையும் என் தந்தையிடம் கற்றுக்கொண்டேன். அவரே என் குரு. அவரை பின்தொடர்கிறேன் என்றார்.
சிலம்பம், பரதநாட்டியம் போன்ற கலைகளையும் அஞ்சனா கற்று வருகிறார். கொரோனா விடுமுறையில் துள்ளி விளையாடும் வயதை கொண்ட அஞ்சனா தற்போதே தந்தைக்கு உதவியாக தொழிலை கற்றுக்கொண்டு அதில் காட்டும் ஆர்வம் மற்றவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக அமைந்துள்ளது.






