search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    தூங்கும் தமிழகத்தை தட்டி எழுப்பும் நேரம் வந்துவிட்டது- கமல்ஹாசன் பேச்சு

    தூங்கும் தமிழகத்தை தட்டி எழுப்பும் நேரம் வந்துவிட்டதாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பேசியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    திருச்சி மண்டலத்தில் 3-ம் கட்ட பிரசாரத்தை தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்றிரவு புதுக்கோட்டை நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டார். சின்னப்பா பூங்கா, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக பிரசாரம் செய்து விட்டு லேணா திருமண மகாலை சென்றடைந்தார். அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    மக்கள் எழுச்சியை வரும் வழியில் பார்வையிட்டு வந்தேன். சினிமாகாரனை பார்க்க கூட்டம் வரும். அதெல்லாம் ஓட்டாக மாறுமா? என கேள்வி எழுப்புகின்றனர். தமிழகத்தின் அவலத்தை பலமுறை அரசுக்கு சங்கு ஊதினாலும் அவர்களுக்கு கேட்கவில்லை. சமீபத்தில் லஞ்ச பட்டியலை வெளியிட்டேன். ஆனால் உரிய பதில் வரவில்லை.

    தமிழக மக்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.60 ஆயிரம் கடன் உள்ளது. மக்கள் குரல் எழுப்பினால்தான் கேட்கும் போல். கல்வி பட்ஜெட்டில் ரூ.34,181 கோடிக்கு போடப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் ஒரு மாணவருக்கு ரூ.45 ஆயிரம் செலவாகிறது. ஆனால் கல்வி தரம் இல்லை. தமிழும், ஆங்கிலமும் அரைகுறையாக கற்பிக்கப்படுகிறது. அதேபோல் கழிப்பறை வசதி இல்லாத நிலை உள்ளது. இவற்றையெல்லாம் மாற்றி காட்டும் மக்கள் நீதி மய்யம்.

    சமீபத்தில் திருச்சியில் தமிழகத்தில் உள்ள லஞ்ச பட்டியலை வெளியிட்டேன். அடுத்தது அமைச்சர்களின் ஊழல் பட்டியல் காத்திருக்கிறது. தமிழக அரசு பெரும் நோயால் தாக்கப்பட்டுள்ளது. பல டாக்டர்கள் சிகிச்சை அளிக்க தயாராகவுள்ளனர். என்னிடம் வெள்ளை பேப்பரை கேட்டார்கள். அவர்களுக்கு அச்சடித்தே தருகிறேன். தைரியம் என்பது ஆயுதத்தில் இல்லை. மூளையில் உள்ளது. கட்டாயம் மாற்றங்கள் நிகழும். அதன் பின்னர் ஒவ்வொன்றாக சரியாகும்.

    மக்கள் நீதி மய்யம் சம்பாதிக்க வரவில்லை. மக்களுக்கு தேவையானவற்றை தர வருகிறார்கள். முதன் முதலில் கவிஞர் சினேகன் தன்னை இணைத்து கொண்டார். தற்போது பலரும் இணைந்து வருகிறார்கள். இணைய வருவார்கள். தூங்கும் தமிழகத்தை தட்டி எழுப்பும் நேரம் வந்துவிட்டது. மக்கள் நீதி மய்யம் முழுவதுமாக டிஜிட்டல் அலுவலகமாக மாற்றப்படவுள்ளது. தற்போதுதான் நமது குரல் அவர்கள் காதுகளுக்கு கேட்க தொடங்கியுள்ளது.

    தமிழகம் முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் இலவச இண்டர்நெட் இணைப்பு வழங்கப்படும். இதனால் அரசு செயல்கள் வழுப்படும். அனைத்து தேவைகளும் மக்களை தேடி வரும். திராவிடம் என்பது நாடு தழுவியது. இது இரண்டு பேருக்கு மட்டும் உரிமை கிடையாது. மொகஞ்சதாரா, ஹரப்பா காலத்திலிருந்தே திராவிடம் உள்ளது. நாளை நமதே.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×