என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அசோக ராஜன் தலைமை தாங்கினார்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுப்பட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அசோக ராஜன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய காவலர்கள் மழை வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்று செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    இந்த விழிப்புணர்வு முகாமில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியை இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் சையது ஆலம் செய்திருந்தார்.

    • கந்தர்வகோட்டை ஒன்றியம் பிசானத்தூர் ஊராட்சியில் திரவுபதி அம்மன், விநாயகர், ஆதி கோட்டை காளியம்மன் மற்றும் கோட்டை காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் பணிகள் நிறைவுற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீர் நிறைந்த கலசங்களின் கடம் புறப்பாடு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டது.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பிசானத்தூர் ஊராட்சியில் திரவுபதி அம்மன், விநாயகர், ஆதி கோட்டை காளியம்மன் மற்றும் கோட்டை காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் பணிகள் நிறைவுற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு கோவில் எதிர்புறம் யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீர் நிறைந்த கலசங்களின் கடம் புறப்பாடு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டது.

    விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் கீரை. தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • காவேரி நகர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் சி.வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் கீரை. தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் செவிலியர் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவி ஆர்.விசித்ரா வரவேற்றார். கீரை.தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனங்களின் தலைவர் கீரை.தமிழ்ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.பீட்டர் முன்னிலை வகித்தார்.

    காவேரி நகர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் சி.வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசுகையில், இன்றைய மாணவிகள் எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டுமெனவும், திறமை மிக்கவர்களாகவும், தேசப்பற்று உள்ளவர்களாகவும், மேதைகளாகவும், அறிஞர்களாகவும், வல்லுநர்களாகவும் உருவாகிட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

    விழாவில் செவிலியர் கல்லூரி முதல்வர் வி.எஸ்.நிர்மலா ஆசிரியர் தின வாழ்த்துகளை கூறி வாழ்த்துரை வழங்கினார். விழாவையொட்டி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா நிகழ்ச்சிகளை கல்வியியல் கல்லூரி தமிழ் விரிவுரையாளர் பி.தீபா தொகுத்து வழங்கினார். நிறைவில் செவிலியர் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவி ஆர்.காயத்ரி நன்றி கூறினார்.

    • டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் ஆசிரியர்களின் பணியை பாராட்டும் விதமாக மாணவ, மாணவிகளால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
    • இந்நிகழ்வுக்கு பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன் தலைமை தாங்கினார்.

    புதுக்கோட்டை :

    டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் ஆசிரியர்களின் பணியை பாராட்டும் விதமாக மாணவ, மாணவிகளால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    இந்நிகழ்வுக்கு பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் டாக்டர் ஜலஜா குமாரி முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன் பேசுகையில், ஆசிரியர் பணி என்பது தன்னலம் இல்லாத தியாகப்பணி, ஒவ்வொருவரும் நமது இரண்டாம் பெற்றோர்களாம் ஆசிரியர்களுக்கு நன்றியுள்ளவர்களாக செயல்பட வேண்டும்.

    முதல் பெண் ஆசிரியையாகிய சாவித்திரி பாய் பூலேவை போல ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தமது பணியை அறப்பணியாக்கி செயல்பட்டு வருகின்றனர் என்று பேசினார்.

    அதனைத் தொடர்ந்து கவிதை,பேச்சு, நாடகம், நடனம், பாடல் என்று பல கோணங்களில் ஆசிரியர்களை வாழ்த்தும் விதமாக மழலையார் பிரிவு முதல் மேல்நிலைப் பிரிவு வரை அனைத்து மாணவ மாணவிகளாலும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். விழா நிறைவில் பள்ளி முதல்வர் நன்றி கூறினார்.

    • அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • முஸ்லிம்கள், ஜமாத்தார்கள் சீர் கொடுத்து சிறப்பித்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே சேமங்கோட்டை விநாயகர், வில்லிதமுடையார் அய்யனார், தூண்டி கருப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் முக்கிய நிகழ்வாக அரசனாகரிபட்டினம், கோபாலபட்டினம், ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த முஸ்லிம்கள், ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்கள் கோவிலுக்கு சீர் கொடுத்தும் மற்றும் அன்னதானத்திற்கு 50 மூட்டை அரிசியும் கொடுத்து சிறப்பித்தனர். முஸ்லிம் இளைஞர்கள் மோர், தண்ணீர் பந்தல் மற்றும் ஊரில் நுழைவுவாயிலில் கும்பாபிஷேக வரவேற்பு குறித்து பதாகை வைத்திருந்தனர். இந்த பகுதியில் இந்துக்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக அங்கு உள்ளவர்கள் கூறினர்.

    • அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம்; 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவாக நடந்தது

    புதுக்கோட்டை:

    அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி அருகே ஏம்பல் சாலையில் உள்ள கரைமேல் அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது. இந்த குதிரை எடுப்பு விழாவையொட்டி பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தயத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவாக மாட்டு வண்டி பந்தயம் நடத்திய விழா கமிட்டியை சேர்ந்த 5 பேர் மீது கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவர்களுக்கு உற்ற தோழனாக ஆசிரியர்கள் திகழவேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி ஆதிகாலத்து அலங்கார மாளிகை நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு பெருமை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு நிர்வாக இயக்குனர் அ.ப.ஜெயபால் தலைமைவகித்தார்.வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன், நிர்வாக இயக்குனர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்தமிழ்ப்பாசறை அறங்காவலர் சந்திரன் அறிமுக உரையாற்றினார். கலெக்டர் கவிதா ராமு பங்கேற்று ஆசிரியர்களுக்கு பெருமை விருதுகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஆசிரியர் பணி மிகவும் உன்னதமான, போற்றத்தக்க பணியாகும். ஆசிரியர்கள் மாணவர்களின் வளர்ச்சிகண்டு பொறாமை கொள்வதில்லை. பெருமைப்படுபவர்கள். தன்னலமற்றவர்கள். மாணவர்களுக்கு உற்ற தோழனாக, ஆசிரியர்கள் திகழவேண்டும். வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகத்தில், சவால்கள் நிறைந்த உலகில் மாணவர்கள் கவனம் சிதறாமல் கல்வியில் சிறந்து விளங்க ஆசிரியர்கள் வழிநடத்தவேண்டும். மாணவர்களின் குடும்ப சூழ்நிலை மற்றும் திறன்களை அறிந்து ஊக்கப்படுத்தவேண்டும்.மாணவர்கள் குறித்து பெற்றோர்களின் எதிர்பார்ப்பினை, கனவினை ஆசிரியர்கள் நிறைவேற்றவேண்டும் என்றார்.

    விழாவில் பொன்ன மராவதி மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சார்ந்த சீரிய பணி, சமூக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பெருமை விருது வழங்கப்பட்டது.

    • அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, மேலாத்தூர் ஊராட்சியில் சிக்கப்பட்டி மற்றும் ஆலங்குடி புறநகர் பகுதிகளில் புறவழிச்சாலை அமைப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளவிடும் பணிகள் நடைபெற்றது. அப்போது எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

    தற்போது சிக்கப்பட்டி மேலாத்தூர் பகுதிகளில் விவசாய நிலங்களில் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை விவசாயிகள் மற்றும் புரட்சிகர கம்யூனிஸ்ட்டு கட்சியை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது அவர்கள், அரசு நிலங்கள் 100 ஏக்கருக்கும மேல் இருப்பதால் அந்த நிலங்களில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.மேலும் விவசாய நிலங்களில் அதிகாரிகள் புறவழிச்சாலை அமைத்தால் விவசாயிகளை சேர்த்து புரட்சிகர கம்யூனிஸ்ட்டு கட்சி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் எனவும் அறிவித்தனர்.

    • இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
    • வரும் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 'அங்கக வேளாண்மை" என்ற தலைப்பில் ஒரு மாத கால இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 'அங்கக வேளாண்மை" என்ற தலைப்பில் ஒரு மாத கால இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது

    வளர்ந்து வரும் மக்கள் எண்ணிக்கை காரணமாக வேளாண் உற்பத்தியை நிலைப்படுத்துதல் மட்டுமல்லாமல், அதனை சீரான நிலையில் உயர்த்துதலும் தற்போதைய தேவையாக உள்ளது. அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க, புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் அங்ககவேளாண்மை குறித்து 20 நபர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.

    இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் குறைந்த பட்சம் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 முதல் 40 வயது உள்ள நபர்கள் பங்கேற்கலாம். பெண்கள், ஆதரவற்ற விதவை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள தங்களது 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, வங்கி புத்தக நகல், குறைந்தபட்ச கல்வி தகுதிக்கான 10ம் வகுப்பு கல்விச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் வரும் 20-ந் தேதிக்குள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலோ அல்லது புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலோ பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்று தொழில் முனைவோராக தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • விஜயரெகுநாதபட்டி அங்கன்வாடி மையம் கட்டிடத்தின் மேற்கூரை திடீரென ஆங்காங்கே இடிந்து விழுந்தது
    • தற்போது அங்கு பயிலும் 20 குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு வெளிப்பகுதியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட விஜயரெகுநாதபட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை திடீரென ஆங்காங்கே இடிந்து விழுந்தது.

    ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் காயமின்றி தப்பினர். தற்போது அங்கு பயிலும் 20 குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு வெளிப்பகுதியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

    சிதலமடைந்த அந்த கட்டிடத்தால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பவே அச்சமாக இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடமும் சிதலமடைந்து காணப்படுவதாகவும், அதில் 20 மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் கல்வி பயின்று வருவதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்க–வில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சிதலமடைந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டடத்தை கட்டிக்கொடுத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதன், ராஜகுரு நேற்று கட்டுமாவடி-அறந்தாங்கி சாலையில் நாகுடி அருகே இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
    • அரசு வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த கம்பசேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமநாதன் (வயது 26) தனியார் பேருந்து நடத்துனர், ராஜகுரு (23) கூலி தொழிலாளி. இவர்கள் நேற்று கட்டுமாவடி-அறந்தாங்கி சாலையில் நாகுடி அருகே தங்களது இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக திருச்சியில் இருந்து மணமேல்குடி நோக்கி சென்று கொண்டிருந்த சுகாதாரத்துறைக்கு சொந்தமான அரசு வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ராமு, ராஜகுரு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நாகுடி போலீசார் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுதுது சம்பவ இடத்திற்கு விரைந்த துறை அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உறவினர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில், தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க 30.09.2022 ஆம் தேதிக்குள் மாவட்டத்தில் அனுமதி பெற்று இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • இத்தேதிக்குள் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில், தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க வெடிபொருள் சட்டமும், விதிகளும் (2008)-ன்கீழ், கீழ்க்கண்ட ஆவணங்களுடன் 30.09.2022 ஆம் தேதிக்குள் மாவட்டத்தில் அனுமதி பெற்று இயங்கி வரும் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற எதிர்வரும் 30.09.2022 தேதிக்குள் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் மனுச் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. தேவைப்படும் ஆவணங்கள், புல நீல வரைபடம் (6 நகல்கள்), சொந்த இடம் எனில் பத்திர ஆவணங்கள் (அசல் 5 நகல்கள்) வாடகை இடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திர நகல். ரூ.500-ஐ வங்கியில் செலுத்தப்பட்ட நகல் முகவரி (பான்கார்டு, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஸ்மார்ட் அட்டை), நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி வரி ரசீது, பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படம் ஆகும்.

    மேலும், தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பங்கள் அளிக்க கடைசி நாள் 30.09.2022 (மாலை 5.45 மணிக்குள்) ஆகும். இத்தேதிக்குள் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். மேலும் 01.10.2022 ஆம் தேதிக்கு பின்னர் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிக்க இயலாது எனவும், மேலும் உரிய காலத்திற்குள் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரம் முன்னதாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×