என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம், மாத்தூர் சிதம்பர நகரை சேர்ந்தவர் ஹரிதர்ராஜ் (வயது 32). தனியார் தொழிற்சாலையில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரியும் இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
நேற்று காலை 6 மணியளவில் வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து ஹரிதர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் மாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வெள்ளாள விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கார்ப் இந்தியா சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
- மன அழுத்தம், தற்கொலை ஏற்படுவதற்கான காரணங்கள், மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள், மற்றும்தற்கொலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூறப்பட்டது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கார்ப் இந்தியா சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சுகாதார நிலைய மருத்துவர் அதிகாரி ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். மன அழுத்தம், தற்கொலை ஏற்படுவதற்கான காரணங்கள், மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள், மற்றும்தற்கொலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஸ்கார்ப் இந்தியா களப்பணியாளர் கவிதா விளக்கமாக எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில் சுகாதார செவிலியர்கள் உதவியாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்டகிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரபணிகள் துணை இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் டெங்கு களப்பணிகள் பொன்னமராவதி பேரூராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதியில் நடைபெற்றது.
- இதில் சுமார் இரண்டரை டன் எடை கொண்ட வாகன டயர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரபணிகள் துணை இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் டெங்கு களப்பணிகள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை பொன்னமராவதி பேரூராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதியில் நடைபெற்றது.
சுகாதாரத்துறையினர், பேரூராட்சி டெங்கு களப்பணியாளர் மற்றும் கிராம சுகாதார பணியாளர் இணைந்து பொன்னமராவதி காமராஜர் நகர், புதுப்பட்டி, புதுவளவு, வலையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பாதிப்பினை ஏற்படுத்தும் உள்ள பொருட்களை கண்டறிந்தனர்.
அந்த வகையில் காணப்பட்ட சுமார் இரண்டரை டன் எடை கொண்ட வாகன டயர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் ரவீந்திரன், தியாகராஜன், ராமலிங்கம், முகேஷ் கண்ணா, பிரேம்குமார், கண்ணன் மற்றும் பேரூராட்சி டெங்கு களப்பணியாளர்கள், கிராமப்புற டெங்கு களப்பணியாளர்கள் இந்த பணியில் பங்கேற்றனர்.
- அறந்தாங்கி அருகே 16 கிராமங்களுக்கு காவல் தெய்வமாக திகழ்ந்து வரும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் மஹாகும்பாபிஷேக விழா நடை பெற்றது.
- விழாவில் தமிழக சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மூக்குடி கிராம மக்களால் சுயம்பு சிலையாக பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு, அப்பகுதியை சுற்றியுள்ள 16 கிராமங்களுக்கு காவல் தெய்வமாக திகழ்ந்து வரும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய திருப்பணிகள் நிறைவு பெற்று மஹாகும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக யாகசாலை அமைத்து கடந்த 5-ந்தேதி (திங்கட்கிழமை) கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்களாக 5 காலயாக பூஜை நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று 6-ம் கால யாக பூஜை, கோ பூஜை, கஜ பூஜை போன்றவைகள் சிறப்பாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்பட்ட புனித நீரைக்கொண்டு கடம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம் புறப்பாடானது கோவிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. பின்னர் பிச்சை சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் தமிழக சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரண்டிருந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் அம்மனின் அருள்பெற்றுச் சென்றனர். 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கும்பாபிஷேக விழாவையொட்டி, மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகளுக்கு, மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- தனிப்படை போலீசார் அனுமதியின்றி வெளி மார்க்கெட்டில் அரசு மதுபான பாட்டில் விற்பனை செய்த நபரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
- தேவா சட்ட விரோதமாக செம்பட்டி விடுதி மதுபான கடை அருகே அரசு மதுபான பாட்டில் விற்பனை செய்து வந்துள்ளார்.
புதுக்கோட்டை :
ஆலங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் தீபக் ரஜினிக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தனிப்படை போலீசார் அனுமதியின்றி வெளி மார்க்கெட்டில் அரசு மதுபான பாட்டில் விற்பனை செய்த நபரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்காக்குறிச்சி வடதெருவை சேர்ந்த தேவா (வயது 32) என்பது தெரிந்தது. இவர் சட்ட விரோதமாக செம்பட்டி விடுதி மதுபான கடை அருகே அரசு மதுபான பாட்டில் விற்பனை செய்து வந்துள்ளார்.
மேலும் அவரிடம் இருந்து ஒன்பது மது பாட்டில்கள், ரூ.680 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கடுக்காக்காடு கிராமத்தைச்சேர்ந்தவர் குழந்தை பர்னாந்து ( வயது 38).
- கடந்த ஜூன் 25-ந்தேதி ஆரோக்கியமேரி வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கடுக்காக்காடு கிராமத்தைச்சேர்ந்தவர் ஆரோக்கியம் மகன் குழந்தை பர்னாந்து ( வயது 38). இவரது மனைவி ஆரோக்கியமேரி (31). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
வெளிநாட்டில் வேலை செய்து வந்த குழந்தை பர்னாந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது, தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் 25-ந்தேதி ஆரோக்கியமேரி வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து வடகாடு போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் மற்றும் ஆலங்குடி காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆகியோர் அப்போது விசாரித்து வந்தனர். அவர்கள் அளித்த அறிக்கையின்படி, ஆரோக்கிய மேரியின் கழுத்தை நெரித்து குழந்தை பர்னாந்து கொலை செய்ததும், அதை மறைப்பதற்காக தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, மனைவியை கொலை செய்ததாக குழந்தை பர்னாந்தை வடகாடு போலீசார் நேற்று கைது செய்தனர்.மேலும் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப் பை ஏற்படுத்தி உள்ளது.
- கந்தர்வகோட்டை பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள், நாய்கள் மற்றும் தெருக்களில் சுகாதாரக் கேட்டை உண்டாக்கும் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
- கந்தர்வகோட்டையில் காலை மாலை நேரங்களில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் நலன் கருதி பேருந்துகளை இயக்கவும்நடவடிக்கை எடுக்க வேண்டும்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக்மழவராயர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில்கந்தர்வகோட்டை பேருந்து நிலைய பணிகளை உடனே தொடங்கவும், கந்தர்வகோட்டை பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள், நாய்கள் மற்றும் தெருக்களில் சுகாதாரக் கேட்டை உண்டாக்கும் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவும்,
தொடர் மழையால்நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், காலை மாலை நேரங்களில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் நலன் கருதி பேருந்துகளை இயக்கவும்நடவடிக்கை எடுக்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தில் துணைத் தலைவர் செந்தாமரை குமார், உறுப்பினர்கள் பாண்டியன், ராஜேந்திரன், கலியபெருமாள், திருப்பதி, முருகேசன், பாரதி பிரியா, மலர், சுதா, பரிமளா, நதியா, வைரக்கண்ணு, கோவிந்தராஜ்மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- வைரிவயல் கண்மாயை போர்க்கால அடிப்படையில் தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது,
புதுக்கோட்டை:
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளரும், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான பி.ஆர். பாண்டியன் அறந்தாங்கியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அறந்தாங்கி அருகே வைரிவயல் கண்மாயில் கழிவு நீர் கலந்து குப்பைத்தொட்டியாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளை பலமுறை தொடர் கொண்டும் பயன் இல்லை, எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு போர் கால அடிப்படையில் கண்மாயை தூர்வாரி விவசாயிகள் மீண்டும் விவசாயம் செய்ய வழிவகுக்க வேண்டும், இல்லையெனில் தனது தலைமையில் அறந்தாங்கி நகராட்சி முன்பு மிகப் பெரிய போராட்டம் நடைபெறும்.
இதே போன்று தமிழகம் முழுவதும் நகர்புறங்கள் அருகே உள்ள கிராம நீர் நிலைகளில் கழிவு நீர் கலந்து கிராம மக்கள் அங்கிருந்து வெளியேறும் நிலை உருவாகி வருகிறது. தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக மக்கள் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை எதிர்பார்த்து க்கொண்டிருக்கின்ற வேளையில், கடந்த 5 ஆண்டுகளில் ஆறுகள் வழியாக 2 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது,
இதனை அரசு ஆறுகளை இணைப்பதன் மூலம் வறட்சி பகுதிகளுக்கு தண்ணீரை திரும்பி விடலாம் என்றார். மேலும் பெங்களூருவில் தற்போது வரலாறு காணாத பேய்மழை பெய்துள்ளது. இங்கு பெய்த மழை நீர் தென்பெண்ணை வழியாக கடலில் சென்று கலக்கிறது. எனவே தெண்பெண்ணை பகுதி மக்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். பேட்டியின்போது விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள் உடனிருந்தனர்.
புதுக்கோட்டை:
மத்திய அரசின் நதி மேம்பாடு மற்றும் கங்கை புதுப்பிக்கும் துறை, நிலத்தடி நீரை உயர்த்தும் விதமாக மழைநீர் சேகரிப்பு, நீர் ஆதாரத்தை புதுப்பித்தல், நீர் பயன்பாட்டுத் திறனை ஊக்குவித்தல், நீரை சுழற்சி செய்து மீளப் பயன்படுத்துதல் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய இனங்களில் புதிய நடைமுறைகளை பின்பற்றும் அதன் பங்காளர்களான தொண்டு நிறுவனங்கள், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், நீரை பயன்படுத்துவோர் சங்கங்கள், நிறுவனங்கள், தொழில் துறை அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் ' தேசிய நீர் விருதுகள்" வழங்கி வருகிறது.
இது தொடர்பாக எதிர்வரும் நான்காவது 'தேசிய நீர் விருதுகள்" வழங்கும் போட்டியில் கலந்துகொள்ள தொண்டு நிறுவனங்கள், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நீரை பயன்படுத்துவோர் சங்கங்கள், நிறுவனங்கள், தொழில் துறை அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் தங்கள் பங்கேற்பை வரும் 15-ந் தேதிக்குள் ராஷ்ட்ரீய புரஸ்கார் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
- ஊராட்சிமன்ற தலைவர்களுடன் கலெக்டர் கலந்தாலோசனை மேற்கொண்டார்
- ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிகள் குறித்து
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிகள் குறித்து ஊராட்சிமன்ற தலைவர்களுடன், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கலந்தாலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் 146 கிராம ஊராட்சிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் 2020-21 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் வீடுகளுக்கான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளுக்கு பொதுமக்களின் பங்களிப்பு தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் கிராமங்களில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் அனைத்து இல்லங்களுக்கும் முறையான அளவில் குடிநீர் கொண்டு சேர்க்கப்படுவதை உறுதி செய்வதுடன், மாவட்ட நிருவாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து, இத்திட்டத்தின் முழு பயனும் பொதுமக்களுக்கு சென்றுசேர வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, உதவி திட்ட அலுவலர் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- அனைத்துதுறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
- காலை உணவு திட்டம் செயலாக்கம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்துவது குறித்து முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர், காலை உணவு திட்டத்தை வரும் 15 -ந் தேதி அன்று துவக்கி வைக்கவுள்ளார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 8 தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டமானது செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் வகையில் மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளின் உடலுக்கு தேவையான ஆற்றலை காலை உணவு அளிப்பதோடு, இரவு உணவுக்கு பின் ஏற்படும் நீண்ட இடைவெளியுடன் கூடிய பசியை தவிர்ப்பதாக அமையும். இத்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவுத்துறைகள் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தினை புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநார் கருப்பசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலார் மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நர்முக உதவியாளர் (சத்துணவு) தேவிகா ராணி, நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது
- திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி பொய்சொல்லா மெய்யர், பத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
பழமை வாய்ந்த இக்கோயிலில் அண்மையில் நாட்டுக்கோட்டை நகரத்தார் பெருமக்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவின் தொடக்கமாக யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. காலை 10 மணியளவில் கோவனூர் சுவாமிநாத பண்டிதர் தலைமையில் பண்டிதர்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை கும்பத்தில் ஊற்றி விநாயகர், பொய் சொல்லா மெய்யர், பத்ரகாளியம்ன், மூலிகைமலையான், பிரம்மர் கருப்பர் மற்றும் பொன்னையா சுவாமி உள்ளிட்ட சன்னிதானங்களுக்கு குடமுழுக்கு செய்தனர்.
விழாவின் போது திருமுறை பாராயணங்கள் ஒதப்பட்டது.விழாவை சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான காவல்துறையினர் செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நகரத்தார்கள், ஊர்ப்பொதுமக்கள் மற்றும் பரம்பரை பூஜகர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து ஐம்பெரும் கடவுளர் திருவீதி உலா நடைபெற்றது.






