search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா
    X

    அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா

    • அறந்தாங்கி அருகே 16 கிராமங்களுக்கு காவல் தெய்வமாக திகழ்ந்து வரும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் மஹாகும்பாபிஷேக விழா நடை பெற்றது.
    • விழாவில் தமிழக சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மூக்குடி கிராம மக்களால் சுயம்பு சிலையாக பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு, அப்பகுதியை சுற்றியுள்ள 16 கிராமங்களுக்கு காவல் தெய்வமாக திகழ்ந்து வரும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய திருப்பணிகள் நிறைவு பெற்று மஹாகும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக யாகசாலை அமைத்து கடந்த 5-ந்தேதி (திங்கட்கிழமை) கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்களாக 5 காலயாக பூஜை நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று 6-ம் கால யாக பூஜை, கோ பூஜை, கஜ பூஜை போன்றவைகள் சிறப்பாக நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்பட்ட புனித நீரைக்கொண்டு கடம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம் புறப்பாடானது கோவிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. பின்னர் பிச்சை சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது.

    விழாவில் தமிழக சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரண்டிருந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் அம்மனின் அருள்பெற்றுச் சென்றனர். 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி, மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகளுக்கு, மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×