என் மலர்
புதுக்கோட்டை
- திருவப்பூர் ரெயில்வே கேட்டை ஒட்டிய தண்டவாள பகுதியில் இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார்.
- காரைக்குடியில் இருந்து சென்னை வரை செல்லும் பல்லவன் எக்பிரஸ் ரெயில் மோதி அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட்டை ஒட்டிய தண்டவாள பகுதியில் இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார்.
அவர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. இன்று காலை காரைக்குடியில் இருந்து சென்னை வரை செல்லும் பல்லவன் எக்பிரஸ் ரெயில் மோதி அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டதா அல்லது தற்கொலை செய்யும் எண்ணத்தோடு ரெயில் முன்பு பாய்ந்தாரா? என்று புதுக்கோட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 29-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- துருசுப்பட்டி, மெய்குடி பட்டி, அக்கச்சிப்பட்டி, வளவம் பட்டி, வெள்ளாள விடுதி சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 29-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்,
இங்கிருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப் பாளை, சொக்கநாத பட்டி, மாந்தான்குடி காட்டு நாவல், மட்டையன் பட்டி மங்கலத்துப்பட்டி,
கந்தர்வகோட்டை, அக்கட்சிப்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவன்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான்பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர்,
துருசுப்பட்டி, மெய்குடி பட்டி, அக்கச்சிப்பட்டி, வளவம் பட்டி, வெள்ளாள விடுதி சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சிக்குட்பட்ட மாணிக்கவாசகர் நகர், அம்பாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளில் முறையான சாலை வசதிகள் இல்லாமலும், வடிகால்வாய்க்கால் தூர்வாரப்படாமல் கழிவு நீர் தேங்கியும் கானப்படுகிறது. மேலும் ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் பராமரிக்கப்படாமல் தெரு ஓரம் மற்றும் குளக்கரைகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எதிர் வருகின்ற மழைக்காலத்திற்குள் சாலைகள் அமைத்தும், வடிகால்வாய்க்கால் மற்றும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- இந்தி திணிப்பை கண்டித்து நடந்தது
புதுக்கோட்டை
மாநிலங்கள் மீது மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து புதுக்கோட்டையில் வாலிபர்கள், மாணவர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மகாதீர் ரூபவ் இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சந்தோஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாணவர் சங்க மாநில துணை செயலாளர் ஜனார்த்தனன்ரூபவ் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் குமாரவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னாள் மாவட்ட செயலாளர் துரை.நாராயணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- சட்ட விரோதமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
- ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்
புதுக்கோட்டை:
ஆலங்குடி கலைஞர் காலனியைச்சேர்ந்தவர் கணேசன் மகன் மணிவண்ணன் (வயது 35) இவர் ஆலங்குடி மேகலா தியேட்டர் டாஸ்மாக்கடை எதிரில் சட்ட விரோதமாக மது விற்றுக் கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குடி போலீசார் இதனை பார்த்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 21 மது பாட்டில்களை பறிமுதல் ெசய்தனர். பின்னர் அவரை ஆலங்குடி காவல் நிலையம் கொண்டு வந்தனர் ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை வழக்கு பதிவு செய்து வி சாரித்து வருகிறார்.
- தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு தடை செய்த புகையிலை பொருட்களை எஸ்கேஎம் வளாகம் அருகில் உள்ள கடைகளில் வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண் டேவுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது குப்பக்குடியைச்சேர்ந்த சரலப்பள்ளம் நடராஜன் மகன் சண்முகம் (வயது 52) தனது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை பார்த்த, தனிப்படை போலீசார் அவரை பிடித்தனர். மேலும் கடையில் இருந்த ரூ.2600 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்து ஆலங்குடி போலீசில் ஒப்படைத்தனர்.ஆலங்குடி சப் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- கறம்பக்காடு ஜீவா நகரைச்சேர்ந்த (17 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
- ராஜா, சின்ராஜ், பிரசாத் ஆகியோர் சிறுமியை வாயை பொத்தி தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டை கறம்பக்காடு ஜீவா நகரைச்சேர்ந்த (17 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று சமையல் அறையில் படுத்திருந்தபோது, பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ராஜா, சின்ராஜ், பிரசாத் ஆகியோர் வாயை பொத்தி தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி தனது தாயிடம் சிறுமி அழுதுகொண்டே கூறினார்.
இதையடுத்து சிறுமியின் தாயார் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி வழக்குப்பதிவு செய்து சின்ராஜ், பிரசாத் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தார்.
இதற்கிடையே பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில் சிறுமியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.
இதேபோல் போலீசார் தேடி வரும் ராஜா மது போதையில் மயக்க நிலையில் அறந்தாங்கி மருத்துவமனையில் உள்ளதாகவும் அவர் உடல்நிலை சரியான பிறகு போலீசார் அவரை கைது செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்ராஜ், பிரசாத் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் நேற்றிரவு அடைத்தனர்.
- கலைநிகழ்ச்சி தொடர்பாக இரு தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
- இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டதில் இருவர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்பட்டியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் நடைபெற்ற கலைநிகழ்ச்சி தொடர்பாக இரு தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று வம்பன் கடை வீதியில் இரண்டு தரப்பினரும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டதில் இருவர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த மோதலில் ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள 4.5 பவுன் தங்க செயின் ஒன்று காணாமல் போனதாகவும், 5000 மதிப்புள்ள இருசக்க ர வாகனத்தின் முன் விளக்கை சேதப்படுத்தியதாகவும் கூறி விஜயகுமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் கொத்தக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன், பாப்பான்பட்டியைச் சேர்ந்த துரையரசன், சுதாகர், செல்லத்துரை, விக்னேஷ்வரன் ஆகிய 5 பேர் மீதும்,
மற்றொரு தரப்பினரான கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் பாப் பான்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார், முகிலன், சந்தோஷ், அகிலன், சிவா ஆகிய 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதலில் கண்ணன் மற்றும் துரையரசன் ஆகியோர் காயங்களோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இலைச்சுருட்டுபுழுக்கள் நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்துக் கொண்டு அவற்றிலுள்ள பச்சையத்தைச் சுரண்டிஉண்பதால் இலைகளில் வெள்ளை வெள்ளையாகக் காணப்படும்.
- விளக்குப்பொறியினை மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒளிரவிட்டுத் தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம்.
புதுக்கோட்டை,
தற்பொழுது நிலவும் தட்பவெப்பநிலை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு மற்றும் தண்டு துளைப்பான் ஆங்காங்கே காணப்படுகிறது. இதனை விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர்(பொ) மெ.சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இலைச்சுருட்டுபுழுக்கள் நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்துக் கொண்டு அவற்றிலுள்ள பச்சையத்தைச் சுரண்டிஉண்பதால் இலைகளில் வெள்ளை வெள்ளையாகக் காணப்படும். இவ்வாறு பச்சையம் முழுவதும்சுரண்டப்பட்ட நிலையில் பயிர் எரிந்தது போல் காணப்படும். இதன் தாக்குதல் வயல் ஓரங்களில் நிழலான பகுதிகளிலும் அதிகமாக உரம் இடப்பட்ட பகுதிகளிலும் மிகுந்து காணப்படும். புரட்டாசி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரை தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.
இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வரப்புகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தழைச்சத்தினைப் பரிந்துரை அளவுக்கு மேல்இடாமல், தேவையான தழைச்சத்தினை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இட வேண்டும்.
விளக்குப்பொறியினை மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒளிரவிட்டுத் தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம். முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஏக்கருக்கு இரண்டு சி.சி. அளவு, நடவு செய்த 37, 44 மற்றும் 51ஆம் நாட்களில் காலை நேரத்தில் வயலில் விட்டு இப்புழுவின் முட்டை–க் குவியலை அழிக்க–லாம்.
குருத்துப்பூச்சி எனப்படும் தண்டு துளைப்பானின் தாக்குதலால் இளம்பயிரில் நடுக்குருத்துவாடிக் காய்ந்துவிடும். கதிர் பிடிக்கும் தருணத்தில் தாக்குதல் ஏற்படின் மணி பால் பிடிக்காமல் சாவியாகி வெண்கதிர்களாக மாறி மகசூல் பாதிப்படைகிறது.
இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்திட நாற்றுகளை நெருக்கமாக நடுவதைத் தவிர்த்து தேவையான தழைச்சத்தினை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இடுதல் வேண்டும்.
முதிர்ந்த நாற்றுகளை நடும்போது நுனியைக் கிள்ளிவிட்டு நடுவதனால் குருத்துப்பூச்சியின் முட்டைக் குவியல்களை அழித்துவிடலாம். விளக்குப்பொறியினை மாலை 6.30 மணிமுதல் இரவு 10.00 மணிவரை ஒளிரவிட்டுக் குருத்துப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம்.
மேலும் விவசாயிகள் தங்கள் பயிர்சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடன் உழவன் செயலி மூலம் படம் பிடித்து அனுப்பினால் 24 மணி நேரத்திற்குள் தங்களுடைய அலைபேசிக்கு உரிய பரிந்துரை அனுப்பி வைக்கப்படும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திடவும் கேட்டு–க்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மேல் படிப்பு தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் துவங்கப்பட்டுள்ளது
- அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்ைட மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
தமிழ்நாடு முதலமைச்சரால் 5.9.22 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் துவங்கப்பட்டது.
இதுவரை 2, 3 மற்றும் 4 ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித் தொகையை பெற்று பயனடைந்துள்ளார்கள். தற்போது இவ்வலைத்தளத்தில் (https://www.puthumaipenn.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வலைத்தளத்தில், மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத் திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS No) மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், 2, 3 மற்றும் 4ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் முதற்கட்டத்தில் இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9150056809, 9150056805, 9150056801 மற்றும் 9150056810 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வைத்தியலிங்கம் வேலை நிமித்தமாக சிங்ப்பூர் சென்றுவிட்டு கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார்.
- வீட்டை சுற்றி முற்புதர்கள் மண்டியிருந்த நிலையில் வீட்டிற்குள் சென்ற அவர் 4 நாட்கள் ஆகியும் வெளியில் வரவில்லை.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது50) இவரது மனைவி விஜயலெட்சுமி இருவரும் தங்களது மகளுடன் அறந்தாங்கியில் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். வைத்தியலிங்கம் வேலை நிமித்தமாக சிங்ப்பூர் சென்றுவிட்டு கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வந்த அவர் தனது சொந்த ஊரில் உள்ள பழைய வீட்டை புதுப்பிப்பதற்காக மாங்குடிக்கு சென்றுள்ளார். அங்கே வீட்டை சுற்றி முற்புதர்கள் மண்டியிருந்த நிலையில் வீட்டிற்குள் சென்ற அவர் 4 நாட்கள் ஆகியும் வெளியில் வரவில்லை. இந்நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியதும் சந்தேக மடைந்த அக்கம்பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி காவல்த்துறையினர், உள்ளே சென்று பார்க்கையில் வைத்தியலிங்கம் காலில் மின் ஒயர் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு,அடக்கம் செய்யப்பட்டது.
பழைய வீட்டை புதுப்பிக்க சென்று மின்சாரம் தாக்கி உயிரிழந்து 4 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
- பயிருக்குத் தேவையான கந்தகச்சத்து 13 சதம் இருப்பதனால் பயிரின் வளர்ச்சி சீராகி அதிக மகசூல் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் டி.ஏ.பி. உரங்களுக்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் உரங்களைப் பயன்படுத்தலாம் எனப் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மெ.சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிப்பதாவது :
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். மாவட்டத்தில் ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர்பரப்பளவில் சம்பா சாகுபடிப் பரப்பு எதிர் பார்க்கப்படுகிறது.
பொதுப் பரிந்துரையாக மத்தியகால மற்றும் நீண்டகாலப் நெற்பயிர் களுக்குத் ஏக்கருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் முறையே 60, 20, 20 கிலோ தேவைப்படும். இச்சத்துக்கள் குறைவின்றிக் கிடைப்பதற்கு யூரியா 53 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 150 கிலோ, பொட்டாஷ் 17 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இடலாம். அல்லது 20:20:0:13 என்ற காம்ப்ளக்ஸ் உரம் 120 கிலோ அளவிலும் பொட்டாஷ் உரத்தினை 21 கிலோ அளவிலும் அடியுரமாக இடலாம்.
இதனால் நெற்பயிர் நன்கு செழிப்பாக வளர்வதால் மகசூல் அதிகரிக்கும். தொடர்ந்து மேலுரமாக யூரியா இடும்பொழுது ஒரு ஏக்கருக்கு 26 கிலோ என்ற அளவில் மேலுரமாக 3 முறை இட வேண்டும். காம்ப்ளக்ஸ் உரங்களைப் பயன்படுத்துவதனால் உரம் வீணாவது தடுக்கப்படுவதோடு பயிருக்குத் தேவையான உரங்கள் மண்ணில் தேவையான அளவு கிடைப்பதனால் பூச்சி, நோய்த் தாக்குதலும் வெகுவாகக் குறைகின்றது. பயிருக்குத் தேவையான கந்தகச்சத்து 13 சதம் இருப்பதனால் பயிரின் வளர்ச்சி சீராகி அதிக மகசூல் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தழை, மணி, சாம்பல் சத்துக்களை உரப் பரிந்துரையின்படி இடுவதால் உரச் செலவு குறைவதோடு, பூச்சி, நோய்த் தாக்குதலும் குறைந்து அதிக மகசூல் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டாவதால், ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தினைக் கடைப்பிடித்துப் பயனடைந்திடுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மெ.சக்திவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.






