என் மலர்
புதுக்கோட்டை
- தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கேரளாவில் கைது
- தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காரக்கோட்டை கோழிசனம் பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 60). கணவரை இழந்து விதவையான இவர், வெளியூரில் மகள் வேலை பார்த்து வருகின்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2-ந்தேதி முதல் தாய் சுலோச்சனாவை கானவில்லை என மகள் மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் காவல்த்துறையினர் தீவிரமாக தேடியதில் சுலோச்சனா மணமேல்குடி அலையாத்திக்காடு பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து காவல்த்துறையினர் விசாரணை நடத்தியதில் அதே ஊரை சேர்ந்த உறவினரான ரமேஷ் என்பவர் சுலோச்சனாவிற்கு தேவையான உதவிகள் மற்றும் பண உதவிகள் செய்து வந்துள்ளது தெரிந்தது. ஒரு கட்டத்தில் ரமேஷ் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு சுலோச்சனாவால் பணத்தை திருப்பிக் கொடுக்கமுடியாத சூழ்நிலையில், சுலோச்சனாவை ஒரு இடத்திற்கு வரும்படி ரமேஷ் தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் சோமநாதபட்டினம் கடற்கரை பகுதிக்கு சென்று அங்கே இருந்த நண்பர் செந்தில்குமாரை கூட்டிக்கொண்டு அங்கிருந்து படகு மூலம் கடலுக்குச் சென்றுள்ளனர். நடுக்கடல் பகுதிக்கு சென்றதும் ரமேஷ் தான் வைத்திருந்த கட்டையால் சுலோச்சனாவின் பின் தலையில் அடித்துள்ளார். இதில் சுலோச்சனா மயங்கி விழுந்ததும் கத்தியால் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். மேலும் சுலோச்சனாவின் உடலை மணமேல்குடி அலையாத்திக்காடு புதர் பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.அதனை தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நண்பரான செந்தில்குமாரை கைது செய்த காவல்த்துறையினர் தலைமறைவாக இருந்த ரமேசை, காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். சம்பவத்திற்கு பிறகு ரமேஷின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கேரளா பாலக்காடு பகுதியிலிருந்து ரமேஷின் செல்போன் சிக்னல் கிடைத்துள்ளது.அதனடிப்படையில் கேரளா விரைந்த தனிப்படையினர், ஆதார் எண் அடிப்படையில் அங்கிருந்த லாட்ஜ்களில் தேடியதில், அங்கிருந்த ஒரு தனியார் லாட்ஜில் ரமேஷ் தலைமறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. பின்னர் ரமேஷை கைது செய்த காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான தனிப்படையினர் மணமேல்குடி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணைக்கு பிறகு அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
- பொன்னமராவதியில் அய்யப்பன் கோவில் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- அய்யப்பன் படத்திற்கு மாலை அணிவித்து, வணங்கி, வழிபாடு செய்து, சரண கோஷத்துடன் கூட்டம் தொடங்கியது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி நகரில் அய்யப்பன் கோவில் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். அதற்கான கட்டுமான பணி துவங்குவது சம்பந்தமாக பொன்னமராவதி வலையபட்டி அண்ணாமலை திருமண மண்டபத்தில் அய்யப்ப பக்தர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அய்யப்பன் படத்திற்கு மாலை அணிவித்து, வணங்கி, வழிபாடு செய்து, சரண கோஷத்துடன் கூட்டம் தொடங்கியது. அகில பாரத அய்யப்ப சேவா சங்கத் தலைவர் சொ.முத்தாவுடையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்க்கு ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர், பூலாங்குறிச்சி கருப்பையா குருசாமி முன்னிலை வகித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூறினர்.
- கந்தர்வகோட்டையில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது
- தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக சென்று வெள்ளை முனியன் கோவில் திடலில் நிறைவடைந்தது.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக சென்று வெள்ளை முனியன் கோவில் திடலில் நிறைவடைந்தது. தொடர்ந்து கோவில் திடலில் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் தோற்றம், நோக்கம், வளர்ச்சி, சங்க உறுப்பினர்களின் கடமைகள், எதிர்காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ( பொறுப்பு) சியாமளா தேவி அறிவுறுத்தலின்படி, டி.எஸ்.பி. ராகவி மேற்பார்வையில், கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.
- புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் மூடப்பட்ட தபால் அலுவலகத்தை மீண்டும் அதே இடத்தில் செயல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தினர்
- செல்போன்களின் தாக்கத்தால் தபால் சேவை குறைந்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகரில் வடக்கு 2-ம் வீதியில் மச்சுவாடி கிளை தபால் நிலையம் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. இதனை மச்சுவாடி, காமராஜபுரம், வண்டிப்பேட்டை, ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்த நிலையில் மச்சுவாடி கிளை தபால் நிலையம் தற்போது மாவட்ட தலைமை தபால் நிலைய அலுவலகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.இதனை புதுக்கோட்டை நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழு கண்டித்து உள்ளது.
இது பற்றி அவர்கள் கூறும் போது, மச்சுவாடி கிளை தபால் நிலையத்தை போன்று புதுக்கோட்டை நகரில் பல கிளை தபால் நிலையங்கள் மாவட்ட தபால் நிலையத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இது தபால் நிலையத்தை பயன்படுத்தும் மக்களை அப்புறப்படுத்த கூடிய செயலாகும். மச்சுவாடி கிளையில் பணிபுரிந்த ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மீண்டும் மச்சுவாடி கிளை தபால் நிலையம் அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஏற்கனவே புதிய பேருந்து நிலையம், சின்னப்பா பூங்கா செல்லும் வழியில் இயங்கி வந்த தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. செல்போன்களின் தாக்கத்தால் தபால் சேவை குறைந்துள்ளது. ஆனால் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கும், அலுவல் ரீதியிலான தபால்கள் அனுப்புவதற்கும் தபால் அலுவலகங்களை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிளை தபால் அலுவலகங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
- புதுக்கோட்டையில் வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது
- அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சன்மார்க்க நெறியினை பரப்பும் பணியில் ஈடுபட்ட 31 நபர்களுக்கும் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மஹாலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சன்மார்க்க நெறியினை பரப்பும் பணியில் ஈடுபட்ட 31 நபர்களுக்கும் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சரால் வள்ளலார் 200 முப்பெரும் விழா தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், பல்வேறு நகரங்களில் இவ்விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் வள்ளலார் 200 முப்பெரும் விழா துவக்கி வைக்கப்பட்டுள்ளது. எல்லாம் உடைய அற்புத ஜோதி என்கின்ற ஜோதியினை கடவுளாக கொண்டுள்ளார். வள்ளலார் அவர்களின் கொள்கையினை பின்பற்றியும் மற்றும் அவர்களின் கருத்துக்களின்படி வாழ்வதன் மூலம் சிறப்பான வாழ்க்கையினை மேற்கொள்ள முடியும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும் என்பதையும், சுத்த சன்மார்க்கத்தினை முக்கிய இலச்சியமாக்கிய ஆன்மநேய ஒருமைப்பாட்டினையும் உள்ளிட்டவைகளை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.
எனவே நாம் அனைவரும் வள்ளலாரின் வாழ்க்கை முறையினை நன்கு அறிந்துகொண்டு அதன்வழி பின்பற்றி நல்வாழ்வினை வாழ வேண்டும் என பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) சூரியநாராயணன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) அனிதா, அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, மெய். அருள் நந்தி சிவம், மணி, கிருஷ்ணமூர்த்தி, அருள் (எ) இளங்கோ, இலாபராசு, திருப்பதி, மரு.ராமதாஸ், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- அறந்தாங்கியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
- அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்
அறந்தாங்கி:
ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பை கடைபிடிப்பதோடு, இந்த காலகட்டத்தில் பிரார்த்தனைகளை தீவிரப்படுத்துவது, திருக்குர்ஆனை பாராட்டுதல் போன்ற நற்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் அறந்தாங்கி எல்.என்.புரம் தனியார் பள்ளியில் சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் நோக்கில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு நோன்பை திறந்து வைத்து அவர்களோடு உணவு உண்டு மகிழ்ந்தார்.அப்போது அமைச்சர் பேசுகையில், சிறுபான்மையினருக்கு தமிழக முதல்வர் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வருகிறார். தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் பாகுபாடின்றி ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றோம். இதனால் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், அறந்தாங்கி நகர் பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ள தனியார் அமைப்புகள் புது விதமான முயற்சிகளை மேற்கொண்டு 500 கிலோ பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை கொண்டு வருவோருக்கு தங்க நாணயம் அறிவித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இது வரவேற்கதக்கதாகும் என்றும் அதற்கான பணிகளை இன்று முதல் தொடங்கி வைப்பதாகவும் கூறினார். மேலும் அவர்கள் அறிவித்துள்ளது தங்க நாணயம் என்றாலும், குப்பைகளை விற்று அதன் மூலம் வரும் பணத்தையும் நாணயத்தோடு சேர்த்து வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் ஆனந்த், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், நகர்மன்ற துணை தலைவர் முத்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வது கிடையாது.
- அண்ணாமலை கூறுவது போன்று தமிழகத்தில் ரணகளம் எதுவும் ஏற்படபோவதில்லை.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ''பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து அவர் பதில் அளிக்கையில், "அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வது கிடையாது. அவரை நாங்கள் ஒரு ஜோக்கராகதான் பார்க்கிறோம். அண்ணாமலை கூறுவது போன்று தமிழகத்தில் ரணகளம் எதுவும் ஏற்படபோவதில்லை. வேறு எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம்'' என்றார்.
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு சிறந்த கொள்கை வீரர் என இப்தார் நோன்பு திறப்பு விழாவில் அமைச்சர் மெய்யநாதன் புகழாரம்
- ஆலங்குடி பேரூராட்சியில் வார சந்தை மேம்பாடு, சாலை மேம்பாடு, இஸ்லாமியர்களுக்கான சுடுகாடு மேம்பாடு, ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆலங்குடி:
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகிறார்கள். இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பெரிய பள்ளிவாசல் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஆலங்குடி தொகுதியில் கஜா புயல் மற்றும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது உதவி செய்ய இஸ்லாமியர்கள் முன்நின்றனர்.
அப்படிப்பட்ட இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பிருந்து ஏழைகளுக்கு உதவி செய்து வருவது வாழ்த்துக்குறியது. இது மட்டும் இன்றி சகோதரத்துவமும், நல்லிணக்கமும் நிலவும் வகையில் ஆலங்குடி சிவன் கோவில் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு இஸ்லாமியர்கள் சீர் எடுத்து வந்த சம்பவம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. ஆலங்குடி பேரூராட்சியில் வார சந்தை மேம்பாடு, சாலை மேம்பாடு, இஸ்லாமியர்களுக்கான சுடுகாடு மேம்பாடு, ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் அனைத்து பகுதிகளும் வடிகால் வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் இப்பகுதி மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவாசிய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற உறுதுணையாக இருப்பேன். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு சிறந்த கொள்கை வீரர். தமிழ் மொழியின் பெருமையை மண்ணுலகம் மட்டுமின்றி விண்ணுலகத்தில் இருந்தும் பார்க்கும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் காடு அமைக்கப்பட உள்ளது.
இதே போல் இஸ்லாமியர்கள் எதிர்த்து போராடிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகம் அனைத்து துறையிலும் மேன்மேலும் வளர்ச்சி பெற அயராவது பாடுபடுபவர் நமது முதல்வர் என்றார்.நிகழ்ச்சியில் திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை, பேரூராட்சி தலைவர் ராசி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்கமணி, நகர செயலாளர் பழனிக்குமார், ஜமாத் தலைவர் சரூக், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளர் சொர்ண குமார், கவுன்சிலர் சையது இப்ராஹிம், பாபு ஜான், முகமது இப்ராஹிம்,லத்தீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நல்லேர் பூட்டி விவசாயிகள் வழிபட்டனர்
- இதில் 11 ஜோடி மாடுகளைக்கொண்டு விவசாயிகள் உழவுப் பணியை உற்சாகத்தோடு தொடங்கினர்.
ஆலங்குடி
தமிழர் புத்தாண்டான சித்திரை முதல் நாள் நல்லேர் பூட்டி விளை நிலத்தை வழிபட்டால் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், சித்திரை முதல் நாளான நேற்று முன்தினம் ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட எஸ்.குளவாய்ப்பட்டியில் நல்லேர் பூட்டும் நிகழ்வு நடந்தது.இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடி தேங்காய், பழம், தானியங்கள் மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பூஜைப் பொருட்களை வைத்து விளைநிலத்தில் வழிபட்டனர்.
அதன் பின்பு வரிசையில் அணிவகுத்து நின்ற டிராக்டர்களுக்கும் பூஜைகள் செய்யபட்ட பின் நல்லேர் பூட்டும் நிகழ்வு தொடங்கியது.இதில் 11 ஜோடி மாடுகளைக்கொண்டு விவசாயிகள் உழவுப் பணியை உற்சாகத்தோடு தொடங்கினர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறுகையில், கடந்த காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் மாடுகளைக்கொண்டு நல்லேரு பூட்டி தமிழ்புத்தாண்டை வரவேற்றனர். ஆனால் போதுமான மழை இல்லாததால், மாடுகளுக்கு தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனால், விவசாயிகள் தங்களது மாடுகளை வளர்க்க இயலாமல் விற்பனை செய்துவிட்டனர்.இருப்பினும் ஒரு சில விவசாயிகள் மட்டும் பாரம்பரியமாக கால்நடைகளை கொண்டே வேளாண் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சித்திரை முதல் நாள் நல்லேறு பூட்டினால் விவசாயம் செழிக்கும் என்று தங்கள் முன்னோர்கள் கடைபிடித்து வந்த மாண்பை தாங்களும் ஆண்டு தோறும் அதனை கடைபிடித்து வருவதாகவும், இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையிலே நல்லேரு பூட்டியுள்ளோம் என்று கூறினர்.
- பொன்னமராவதியில் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- அமைச்சர் ரகுபதி வழங்கினார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வர்த்தக மஹாலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசும்போது, 57 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 31 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலும் (முழுப்புலம்), 7 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலும் (உட்பிரிவு) என ஆகமொத்தம் 100 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்புடைய அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொன்னமராவதியில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடை க்கலமணி, இலுப்பூர் வரு வாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி பேரூ ராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், பேரூராட்சி துணைத் தலைவர்வெங்கடேசன், வட்டாட்சியர் பிரகாஷ், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்து, தொட்டியம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் கீதா சோலையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கந்தர்வகோட்டையில் தீயணைப்பு துறை சார்பில் தீ கொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டது
- நிலைய அலுவலர் குமரேசன் தலைமையில் காவலர்கள் முக்கிய கடைவீதிகளிலும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீ கொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டது. பனிக்காலத்தில் இறந்த காவலர்களின் பணியை நினைவு கூறும் வகையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியாகும் என்ற வகையில் நிலைய அலுவலர் குமரேசன் தலைமையில் காவலர்கள் முக்கிய கடைவீதிகளிலும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற்றது
- கந்தர்வ கோட்டையில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் ராஜா தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். அ.தி.மு.க. சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில், ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராயர், தெற்கு ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட பிரதிநிதி கவிதா சிவா, நகரச் செயலாளர் அய்யா. செந்தில் குமார், மாவட்ட பாசறை அருண் பிரசாத், எம்.ஜி.ஆர். மன்றம் செல்லத்துரை, வார்டு உறுப்பினர்கள் முத்துராமன், சாமிநாதன், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணர் ஜெய்சங்கர் தலைமையில் மாலை அணிவித்தனர்.






