search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேங்கைவயல் விவகாரம்- குடிநீரில் 2 ஆண், ஒரு பெண்ணின் மலம் கலந்தது பகுப்பாய்வில் கண்டுபிடிப்பு
    X

    வேங்கைவயல் விவகாரம்- குடிநீரில் 2 ஆண், ஒரு பெண்ணின் மலம் கலந்தது பகுப்பாய்வில் கண்டுபிடிப்பு

    • குடிநீரில் மனித கழிவு கலந்த தொட்டியில் இருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • சென்னை தடயவியல் அலுவலகத்தில் குரல் மாதிரி சோதனைக்காக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 2 பேர் நேரில் ஆஜரானார்கள்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த ஒரு அவலம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மர்ம நபர்கள் மனித கழிவுகளை கலந்து விட்டு சென்றனர். இதனை பருகிய பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன.

    சம்பவம் நடந்த 20 நாட்களாக அங்கு முகாமிட்டு இருந்த தமிழக போலீசார் சுமார் 120 நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஆனாலும் தற்போது வரை இந்த இழிவு செயலில் ஈடுபட்டவர்கள் யாரும் கைது செய்யப்படாததற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் அரசுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கினர்.

    இதுதொடர்பாக தமிழக சட்டசபையிலும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிநபர் ஆணையம் அமைக்கவும் உத்தரவிட்டார். இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

    இதற்கிடையே குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் வேங்கைவயல் கிராமத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து படையெடுக்க தொடங்கினர்.

    அதேபோல் போலீசாரின் விசாரணையும் தீவிரமடைந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வேங்கைவயல் கிராமத்தின் நுழைவு பகுதியில் போலீசார் 24 மணி நேரமும் டெண்ட் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் குடிநீரில் மனித கழிவு கலந்த தொட்டியில் இருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து 4 வாரங்களாக நடத்தப்பட்ட பல்வேறு கட்ட ஆய்வில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவானது 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    அதன் அடிப்படையில் இன்னும் ஒருசில நாட்களில் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 9 பேர், காவேரி நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் மற்றும் கீழமுத்துக்குடி கிராமத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 11 பேருக்கு ரத்த மாதிரி எடுத்து, அதில் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

    இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தனர். இதுதொடர்பாக புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு, அரசு ராணியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் தலைமையில் இந்த டி.என்.ஏ. பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே வேங்கைவயல் பிரச்சினை தொடர்பாக ஆயுதப்படை காவலர் உள்பட 2 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்வதற்கான முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர். டி.என்.ஏ. பரிசோதனை முடிவில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தவர்கள் யார் என்ற தகவல் வெளியாகும் என்றும், அதன் மூலம் இந்த பிரச்சினையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் உண்மை குற்றவாளிகளும் கைதாவார்கள்.

    இந்நிலையில் சென்னை தடயவியல் அலுவலகத்தில் குரல் மாதிரி சோதனைக்காக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த முரளி ராஜா, கண்ணதாசன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். இருவரிடமும் குரல் மாதிரி பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×