என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கறம்பக்குடியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார் வந்த நிலையில் இருந்தன. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின்பேரில் சிறப்பு காவல் படையினர் கறம்பக்குடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் கறம்பக்குடி அருகே உள்ள சூரக்காடு என்ற கிராமத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற சுப்ரமணியன் (வயது 50), சதானந்தன் (48) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


    • கந்தர்வகோட்டையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் பழனி தொடங்கி வைத்து பயிற்சிக்கு தலைமை தாங்கினார்.

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வலியுறுத்தி பேரணியும், சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை வாசிப்பதற்கான பயிற்சியும் நடைபெற்றது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் பழனி தொடங்கி வைத்து பயிற்சிக்கு தலைமை தாங்கினார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தெய்வீகன் அனைவரையும் வரவேற்றார்.

    சிவன் கோவில் குருக்கள் பாலசுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சிவா, சிவனடியார் குழுவைச் சேர்ந்த பாலமுருகன், தொல்லியல் ஆர்வலர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஒருங்கிணைத்து கல்வெட்டு வாசிப்பு பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கினார். இதில் நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பாளர் சீனிவாசன், ஆசிரியர்கள் சித்ரா தேவி, பாத்திமா, ஐயப்பன், செல்வமணி, சரவணன், தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கறம்பக்குடி அருகே குடிநீரின்றி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மருதங்கோன் விடுதியில் உள்ள ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகவும், இதனை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கூறி எந்த நடவடிக்கை இல்லாததால் மருதங்கோன் விடுதி நால் ரோட்டில் பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கறம்பக்குடி காவல் நிலைய போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிநீர் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • புதுக்கோட்டை விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குனர் ஆலோசனை
    • மகசூல் பாதிக்காதவாறு பயன்படுத்த அறிவுரை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-மகசூல் பாதிக்காதவாறு களைக்கொல்லிகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.களைக்கொல்லிகளை பொறுத்தவரை களை முளைக்கும் முன் தெளிக்கும் மருந்துகள், களைகள் முளைத்தபின் தெளிக்கும் மருந்துகள் என இரு வகைகளாக உள்ளன. இது மட்டுமல்லாமல் பயிர்களுக்கு உகந்தவாறு தேர்வு திறன் உள்ள களைக்கொல்லிகள் உள்ளன.அனைத்து வகையான பயிர்கள் மற்றும் களைச்செடிகள் ஆகியவற்றை அழிக்கக்கூடிய வகையில் உள்ள களைக்கொல்லிகள் தேர்வு திறனற்ற களைக்கொல்லிகள் எனப்படும். இவற்றை பயன்படுத்தும்போது அதிக கவனம் செலுத்திட வேண்டும்.விவசாயிகள் களைக்கொல்லிகளை தேர்தெடுப்பது என்பது மிகவும் முக்கியமான செயலாகும். இதற்கு சம்பந்தப்பட்ட பூச்சி மருந்து விற்பனை நிலைய பொறுப்பாளர்கள் அல்லது தங்கள் பகுதி விரிவாக்க பணியாளர்கள் ஆகியோரிடம் பரிந்துரை பெற்று கீழ்க்கண்ட வழிமுறைகளையும் கடைபிடித்து களைக்கொல்லிகளை தெளிக்கலாம்.கண் கண்ணாடிகள், முகக்கவசம், கையுறைகள் பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை அணிந்து மருந்து தெளிக்க வேண்டும். வாங்குவதற்கு முன் களைக்கொல்லிகளின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.பரிந்துரைக்கப்பட்ட பயிர்களுக்கு ஏற்ப மட்டுமே களைக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும். களைக்கொல்லிகளை சரியான நேரத்தில், சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.வயலில் நிலவும் வறட்சி, ஈரப்பதம் போன்றவற்றை கருத்தில் கொண்டு களைக்கொல்லிகளை இட வேண்டும்.களைக்கொல்லிகள் தெளிக்க நாப்சாக் தெளிப்பான் பயன்படுத்தப்பட வேண்டும். காற்று வீசும் போது களைக்கொல்லிகளைப் பயன்படுத்தக்கூடாது. காற்று அதிகரிக்கும்போது மருந்து தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும். காலை மற்றும் மாலை வேலைகள் பொதுவாக களைகொல்லி தெளிக்க சிறந்த நேரமாகும். களைக்கொல்லிகளை பயன்படுத்திய பகுதிகளில் நடக்கக் கூடாது. தெளிப்பிற்கு தேவையான அளவு மட்டும் களைக்கொல்லி கலவையினை தயார் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் விபரீத முடிவு
    • போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை

    கறம்பக்குடி,

    கறம்பக்குடி அருகே உள்ள பந்துவக்கோட்டையை சேர்ந்தவர் சிவஞானம். இவரது மகன் மகேந்திரன் (வயது 18). இவர் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இவர் ஒரு பெண்னை காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் மனமுடைந்த மகேந்திரன் சம்பவத்தன்று குளிர்பானத்தில் எலிமருந்தை (விஷம்) கலந்து குடித்து மயங்கினார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார்.இதுகுறித்து மகேந்திரனின் தந்தை சிவஞானம் ரெகுநாதபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்
    • மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க அறிவுறுத்தல்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மார்த்தாண்டபுரத்தில், ஆரோக்கிய சிறுமிகள் குழந்தைகள் இல்லத்தினை கலெக்டர் கவிதா ராமு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த இல்லத்தில் 1 முதல் 12 -ம் வகுப்பு வரை பயிலும் 25 மாணவிகள் உள்ளனர். இங்கு தங்கும் இடம் வசதி குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் மாணவிகளிடம் கலெக்டர் கவிதாராமு கேட்டறிந்தார். மேலும் இந்த இல்லத்தில் உள்ள கணினி அறை, நூலகம், சமையலறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.பின்னர் புதுக்கோட்டை நரிமேடு அருகே உள்ள அன்னை சத்தியா அம்மையார் அரசு குழந்தைகள் காப்பகத்தினை கலெக்டர் கவிதாராமு நேரில் பார்வையிட்டு, மாணவிகளிடம் கல்வி தரம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.மேலும் இந்த காப்பகத்தில் சமையலறை, படுக்கை அறை, தையல் பயிற்சி நடைபெறும் இடம் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த காப்பகத்தில் 28 மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் எனவும், படுக்கை வசதிகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றார். மேலும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தனபால், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • தேசிய திறனறி தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்கள்
    • வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் செவ்வாய்ப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் தேசிய திறனறி தகுதி தேர்வு எழுதினர். இதில் 5 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதே போல் புதுக்கோட்டைவிடுதி, பாப்பாபட்டி, நைன் கொள்ளை, இலைகடிவிடுதி, முதலிபட்டி ஆகிய ஊர்களில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் 18 பேர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாணவி சிவனேகா மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வட்டார கல்வி அலுவலர், வள மைய மேற்பார்வையாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் ஆகியோர் வாழ்த்தினர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    • சென்னை தலைமை செயலகத்தில் லோகோவினை வெளியிட்டார்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்து, லோகவினை வெளியிட்டார், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் எஸ்.வி.எஸ். ஜெயக்குமார், புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர் சேது.கார்த்திகேயன், மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் செயலாளர் செழியன்,மதியழகன் மணிமாறன், அறக்கட்டளையின் நிர்வாகிகள், ஹரிகிருஷ்ணன், ஆகாஷ், மணிகண்டன் மாரிமுத்து, சித்தார்த், மணிகண்டன் பிரவீன்,வனிதா, அகிலா,பிரீத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கறம்பக்குடியில் நடைபெற்றது
    • வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் திறந்து வைத்தார்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நகர தி.மு.க. சார்பில் சீனி கடை முக்கத்தில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தி.மு.க. செயலாளரும் பேரூராட்சி தலைவருமான உ. முருகேசன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் வி முத்துகிருஷ்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் ராசி, பரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் கலந்து கொண்டு கோடைகால நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மற்றும் மோர், பழங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் அப்துல் லத்தீப், மாவட்ட பிரதிநிதிகள் அப்துல் அஜீஸ், செல்வராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நகரக் கழக நிர்வாகிகள் கழக முன்னோடிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது
    • 361 மனுக்கள் பெற்றப்பட்டது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 361 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.இம்மனுக்களை பெற்றுக்கொண்டு அம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், கை, கால் பாதிக்கப்பட்ட, செவித்திறன் குறைபாடுடையவர்கள் மற்றும் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்கள் என மொத்தம் 30 பயனாளிகளுக்கு ரூ.2,40,000 மதிப்புடைய மோட்டார் பொருந்திய தையல் எந்திரங்களை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செ.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது.
    • வன்புகொடுைமகளில் இருந்து சமூக நீதி கிடைக்க வலியுறுத்தல்

    புதுக்கோட்டை,

    டாக்டர் அம்பேத்காரின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நம்புரன்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, சி.பி.ஐ. கட்சி மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி, பேராசிரியர் சுந்தரவள்ளி, அ.ம.இ. மாநில செயலாளர் மு.மெய்யர் மற்றும் பலர் சிறப்புரையாற்றினார்.இறுதியாக தலைமையுரையாற்றிய அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர்இளமுருகு முத்து, வேங்கைவயல் பிரச்சனையில் அரசின் அணுகுமுறையும், காவல் துறையின் மெத்தனத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தார். 110 நாட்களை கடந்தும் இன்னும் ஒரு குற்றவாளிகளையும் கண்டு பிடிக்காதது அரசின் நிர்வாகக் திறமையை கேள்விக்குறி யாக்கியுள்ளது என்றும் இது போன்ற வன்கொடுமைகளில் சமூக நீதி கிடைக்க வேண்டுமானால், அம்பேத்காரிய, பெரியாரிய சிந்தனையாளர்கள் அனைவரும் கட்சிகளை கடந்து ஓரணியில் நின்று அநீதிக்கு எதிராக போராடவேண்டும் என்று இளமுருகு முத்து தனதுரையில் பேசினார்.

    • புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகம் சார்பில் நடைபெற்றது
    • அனைத்து மதத்தினர் பங்கேற்பு

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகம் பல வருடங்களாக தொடர்ந்து நடத்தி வரும் இப்தார் ( நோன்பு திறப்பு) விருந்து நிகழ்ச்சி வர்த்தக கழக சில்வர் ஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வர்த்தக கழக தலைவர் சதர்ன் ஹாஜி எம்.சாகுல்ஹமீது தலைமையில் செயலாளர் சாந்தம் எஸ்.சவரிமுத்து வரவேற்றார். கூடுதல் செயலாளர் ஆர்.சம்பத்குமார் விழா தொகுத்து வழங்கினார்.அரபிக்கல்லூரி முதல்வர் அல்ஹாஜ் எஸ்.அப்துல் ஜப்பார் பாகவி, திரு இருதய ஆண்டவர் ஆலய பங்கு தந்தை எ.சவரிநாயகம் அடிகளார், திலகவதியார் ஆதீனம் தயானந்த சந்திரசேகர் சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட வர்த்தக கழக துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எ.முகம்மது அஷ்ரப்அலி நோன்பு திறக்கும் துஆ ஓதினார். மாவட்ட வர்த்தக கழக நிர்வாகிகள் ஆர்.சேவியர், ஆலங்குடி எ.டி.மன்மோகன், பரம்பூர் ஹாஜி எம்.முகம்மது பாருக், எஸ்.ராஜ்குமார், பொன்னமராவதி எஸ்.கே.எஸ்.பழனியப்பன், எஸ்.தியாகராஜன், ஜெ.ஜாகிர்உசேன், மற்றும் இனைப்பு சங்க நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர் ராஜாமுகம்மது, பெரிய பள்ளி செயலாளர் ராஜா தாஜ்முகம்மது, ஒப்பந்தகாரர் பண்ணீர் (எ)சாகுல்அமீது, மற்றும் வர்த்தக பிரமுகர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள்,திரளாக கலந்து கொண்டனர் .மாவட்ட வர்த்தக கழக துணைத்தலைவர்கள் எஸ்.தியாகராஜன், ஆர்.வைரவன், ராஜாமுகம்மது, கே.எஸ்.முகம்மது இக்பால், துணைச்செயலாளர்கள் ஹாஜி எ.கே.ஹபிபுல்லா, கே.திருப்பதி, ஆர்.ஆரோக்யசாமி, பி.எல்.பசுபதி, ஆர்.விவேகானந்தன், எஸ்.ஹெச்.சையதுநசீர், எம்.சையதுஇப்ராஹிம் அருணாச்சலம், எம்.பூபாலன், பி.பிரகாஷ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, ஆரம்பமாக மாஸ்டர் எ.முகம்மதுஅஸ்லம் கிராஅத் ஓதினார்.

    நிறைவில் மாவட்ட வர்த்தக கழக பொருளாளர் எஸ்.கதிரேசன் நன்றி கூறினார்.

    ×