என் மலர்
புதுக்கோட்டை
- ஆவுடையார்கோவில் அருகே 6 மாதமாக குடிநீர் தட்டுப்பாடு
- 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா புத்தாம்பூர், செங்கானம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பேயாடிக்கோட்டை , செங்கானம், பறையத்தூர், இடையூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்களுக்கு அடம்பூர் நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போராட்டம் மூலம் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பொதுமக்கள் முடிவு செய்தனர்.இதையடுத்து இன்று காலை 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருப்புனவாசல்-கரூர் சாலையில் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல வழியின்றி அணிவகுத்து நின்றன. போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துறை அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர்.
அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து பொது மக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- பொன்னமராவதி அருகே மூலங்குடி கிராமத்தில் நடைபெற்றது
- ஏராளமான பொதுமக்கள் மீன்களை அள்ளிச்சென்றனர்
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் மீன் பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீன்பிடித் திருவிழா நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமைக்காகவும் நடைபெறும்.அதன்படி இந்த ஆண்டும் பொன்னமராவதி பகுதிகளில் தினசரி மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி கிராமத்தில் உள்ள பெரியகம்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவிற்காக சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் குவிந்தனர்.பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசி, போட்டியை தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டுலாவகமாக மீன் பிடித்தனர். ஒவ்வொருவர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குறவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. அதனை மகிழ்ச்சியுடன் மக்கள் வீட்டிற்கு அள்ளிச் சென்றனர்.
- வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
- குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இந்த சம்பவத்தில் உள்ளூர் போலீசார் விசாரணையை அடுத்து, வழக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக வாட்ஸ்அப் உரையாடல் அடிப்படையில் ஆயுதப்படை காவலர் உள்பட 2 பேரிடம் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது 2 ஆண்கள், ஒரு பெண்ணின் மனித கழிவு என்பது பகுப்பாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தநிலையில் 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு செய்து, அதற்காக புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் உரிய அனுமதியை பெற்றனர்.
கோர்ட்டு உத்தரவுப்படி புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் தலைமையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்காக வேங்கைவயல் விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 11 பேருக்கு இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. பின்னர் அவை சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்த பரிசோதனை முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க அவர்கள் கூடுதல் கால அவகாசமும் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் திருச்சி வாலிபர் பலியானார்
- 22 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே சீமானூர் கிராமத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை குளத்தூர் தாசில்தார் சக்திவேல், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
இதில் 160 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 682 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
.இதில் படுகாயமடைந்த திருச்சி கே.சாத்தனூர் இச்சிக்காமலைப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஜெயந்த் (வயது 21) உள்பட 4 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயந்த் பரிதாபமாக இறந்தார். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மிக்சி, மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், ரொக்க பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கோட்டு வேலவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் சீமானூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.
- காட்டுபட்டி பகுதியில் 13 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யபட்டது
- இதுகுறித்து புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் மாந்தங்குடி காட்டுபட்டி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்படி காட்டுபட்டி பகுதியில் ஒரு குடோனில் சுமார் 7 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, சுமார் 2,500 கிலோ பச்சரிசி, சுமார் 3 ஆயிரம் கிலோ கருப்பு அரிசி, சுமார் 700 கிலோ உடைக்கப்பட்ட குருணை அரிசி ஆகியவற்றை கலந்து விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை பதுக்கி வைத்த அதே பகுதியை சேர்ந்த செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.
மேலும் சுமார் 13 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை சேகரிக்க பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றினர். இதுகுறித்து புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அறந்தாங்கி பகுதிகளில் மிதமான மழை பெய்தது
- இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி மற்றும் தா.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் இளநீர், தர்பூசணி போன்ற குளிர்ச்சியூட்டும் பழச்சாறுகளை அருந்தி வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வெப்ப சலனம் காரணமாக திடீரென கோடை மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் இன்று காலை முதல் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஆலங்குடியில் சித்தி விநாயகர் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது
- அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெம்மக்கோட்டையில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்தி விநாயகர், பொற்பனை முனீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், ராகு கால துர்க்கை அம்மன் மற்றும் நவக்கிரக தெய்வங்கள் அருள் பாலித்து வருகின்றன.இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு வைரத்தேர் செய்யும் பணியில் கோவில் நிர்வாகமும், ஊர் பொதுமக்களும் இணைந்து முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் 27 அடி உயர வைரத்தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் நிலையை வந்தடைந்தது. நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்கமணி, ரத்தினவேல் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கொன்னைபட்டியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது
- பொதுமக்கள் தண்ணீரில் உற்சாகத்துடன் இறங்கிய போது தண்ணீருக்குள் இருந்த மீன்கள் துள்ளி குதித்து தரையில் விழுந்தது
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைபட்டியில் மழை வளம் பெருகி, விவசாயம் செழிக்க வேண்டி, மீன் பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்து 15 வருடங்களாக மீன்பிடி திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டு மீன் பிடி திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை கேட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு கொன்னைகம்மாயில் மீன் பிடி திருவிழா நடைபெற்றதை தொடர்ந்து கம்மாயில் குவிந்த பொதுமக்கள் கொன்னைபட்டி மடை கருப்பர் கோவிலில் வழிபாடு நடத்தி சாமி கும்பிட்டனர்.
அதன் பின்னர் மீன்பிடித் திருவிழாவை முக்கியஸ்தர்கள் தொடங்கி வைத்தனர். பொதுமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தண்ணீரில் துள்ளி குதித்தோடி மீன் பிடித்தனர். பொதுமக்கள் தண்ணீரில் உற்சாகத்துடன் இறங்கிய போது தண்ணீருக்குள் இருந்த மீன்கள் துள்ளி குதித்து தரையில் விழுந்தது. இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தரையில் துள்ளிய மீன்களை போட்டி போட்டுக்கொண்டு பிடித்தனர். கம்மாய் தண்ணீரில் இருந்து நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, சிசி ,போட்ல,ரோகு,விரால் உள்ளிட்ட மீன்களை ஒரு கிலோ முதல் 20 கிலோ வரை எடை கொண்ட மீன்களை பிடித்து மகிழ்ச்சியில் உற்சாகமடைந்தனர்.
இந்த மீன் பிடி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்தவர்கள் இது பற்றி கூறும்போது.... வழக்கமாக மீன் பிடி திருவிழாவில் சில பேருக்கு மீன்கள் கிடைக்காது. ஆனால் இந்த வருடம் அப்படி இல்லாமல் அனைவரும் மீன் கிடைத்துள்ளது, எல்லா தரப்பினரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது என்று கூறினர்.
- பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யபட்டனர்
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
இலுப்பூர் அருகே கோவிந்தநாயக்கன்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-டிவிசன் சிறப்பு போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிறுத்த பகுதியில் சூதாடி கொண்டிருந்த மலைக்குடிப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 35), மாரிமுத்து (29), செல்வம் (32), ஜெயக்குமார் (26), வடிவேல் (39), தமிழன் (50) ஆகிய 6 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து சூதாட்ட அட்டைகள், ரூ.490 உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை:
விராலிமலை அருகே அக்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 24). கொத்தனார். இவர் தற்போது அன்னவாசல் என்.எஸ்.ஆர். நகர் பகுதியில் வசித்து வந்தார். இவரும், கனிமொழி என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அருண்குமாருக்கும், கனிமொழிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அருண்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அருண்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- புதுக்கோட்டையில் ஓடும் பேருந்தில் ரூ.37 ஆயிரம், 6 கிராம் தங்கம் திருட்டு போனது
- இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அய்யப்பன் வயல் பகுதியை சேர்ந்த முருகேஷன் என்பவரின் மனைவி சுப்புலட்சுமி (வயது 38). அட்சய திருதியை முன்னிட்டு புதுக்கோட்டை கடைவீதிக்கு சென்றுள்ளார். இதற்காக 37 ஆயிரம் ரூபாய் பணம், 6 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை ஒரு பையில் வைத்துக்கொண்டு கீரனூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் ஏறி உள்ளார். பையை தனது அருகில் வைத்து விட்டு பயணம் செய்துள்ளார்.
புதுக்கோட்டை வந்ததும் பேருந்தை விட்டு இறங்குவதற்காக தனது பையை எடுக்க நினைத்த போது, அது காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக நகர காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் சரவணம், பணம், தங்கம், வெள்ளி பொருட்களுடன் பையை திருடி சென்ற மர்ம ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது
- குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் அமர்ந்து அருள் பாலித்து வருவார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக விளங்கும் நாமபுரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் அமர்ந்து அருள் பாலித்து வருவார். ஒரு ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு அடுத்த ராசிக்கு பெயர்ந்து செல்வது குரு பெயர்ச்சி என்று வணங்கப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு ராசியிலும் குரு பகவான் பெயர்ச்சி அடையும் நிலையில் ஒவ்வொரு ராசியை சேர்ந்தவர்களுக்கும் பலவிதமான பயன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு நேற்று இரவு 11.27 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ந்து சென்றார். இதனைத் தொடர்ந்து நாமபுரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழாவினையொட்டி குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு, சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






