என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • காட்டுபட்டி பகுதியில் 13 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யபட்டது
    • இதுகுறித்து புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் மாந்தங்குடி காட்டுபட்டி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்படி காட்டுபட்டி பகுதியில் ஒரு குடோனில் சுமார் 7 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, சுமார் 2,500 கிலோ பச்சரிசி, சுமார் 3 ஆயிரம் கிலோ கருப்பு அரிசி, சுமார் 700 கிலோ உடைக்கப்பட்ட குருணை அரிசி ஆகியவற்றை கலந்து விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை பதுக்கி வைத்த அதே பகுதியை சேர்ந்த செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் சுமார் 13 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை சேகரிக்க பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றினர். இதுகுறித்து புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • அறந்தாங்கி பகுதிகளில் மிதமான மழை பெய்தது
    • இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி மற்றும் தா.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் இளநீர், தர்பூசணி போன்ற குளிர்ச்சியூட்டும் பழச்சாறுகளை அருந்தி வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வெப்ப சலனம் காரணமாக திடீரென கோடை மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் இன்று காலை முதல் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


    • ஆலங்குடியில் சித்தி விநாயகர் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது
    • அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெம்மக்கோட்டையில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்தி விநாயகர், பொற்பனை முனீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், ராகு கால துர்க்கை அம்மன் மற்றும் நவக்கிரக தெய்வங்கள் அருள் பாலித்து வருகின்றன.இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு வைரத்தேர் செய்யும் பணியில் கோவில் நிர்வாகமும், ஊர் பொதுமக்களும் இணைந்து முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் 27 அடி உயர வைரத்தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் நிலையை வந்தடைந்தது. நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்கமணி, ரத்தினவேல் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கொன்னைபட்டியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது
    • பொதுமக்கள் தண்ணீரில் உற்சாகத்துடன் இறங்கிய போது தண்ணீருக்குள் இருந்த மீன்கள் துள்ளி குதித்து தரையில் விழுந்தது

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைபட்டியில் மழை வளம் பெருகி, விவசாயம் செழிக்க வேண்டி, மீன் பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்து 15 வருடங்களாக மீன்பிடி திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டு மீன் பிடி திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை கேட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு கொன்னைகம்மாயில் மீன் பிடி திருவிழா நடைபெற்றதை தொடர்ந்து கம்மாயில் குவிந்த பொதுமக்கள் கொன்னைபட்டி மடை கருப்பர் கோவிலில் வழிபாடு நடத்தி சாமி கும்பிட்டனர்.

    அதன் பின்னர் மீன்பிடித் திருவிழாவை முக்கியஸ்தர்கள் தொடங்கி வைத்தனர். பொதுமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தண்ணீரில் துள்ளி குதித்தோடி மீன் பிடித்தனர். பொதுமக்கள் தண்ணீரில் உற்சாகத்துடன் இறங்கிய போது தண்ணீருக்குள் இருந்த மீன்கள் துள்ளி குதித்து தரையில் விழுந்தது. இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தரையில் துள்ளிய மீன்களை போட்டி போட்டுக்கொண்டு பிடித்தனர். கம்மாய் தண்ணீரில் இருந்து நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, சிசி ,போட்ல,ரோகு,விரால் உள்ளிட்ட மீன்களை ஒரு கிலோ முதல் 20 கிலோ வரை எடை கொண்ட மீன்களை பிடித்து மகிழ்ச்சியில் உற்சாகமடைந்தனர்.

    இந்த மீன் பிடி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்தவர்கள் இது பற்றி கூறும்போது.... வழக்கமாக மீன் பிடி திருவிழாவில் சில பேருக்கு மீன்கள் கிடைக்காது. ஆனால் இந்த வருடம் அப்படி இல்லாமல் அனைவரும் மீன் கிடைத்துள்ளது, எல்லா தரப்பினரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது என்று கூறினர்.

    • பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யபட்டனர்
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    இலுப்பூர் அருகே கோவிந்தநாயக்கன்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-டிவிசன் சிறப்பு போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிறுத்த பகுதியில் சூதாடி கொண்டிருந்த மலைக்குடிப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 35), மாரிமுத்து (29), செல்வம் (32), ஜெயக்குமார் (26), வடிவேல் (39), தமிழன் (50) ஆகிய 6 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து சூதாட்ட அட்டைகள், ரூ.490 உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுக்கோட்டை:

    விராலிமலை அருகே அக்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 24). கொத்தனார். இவர் தற்போது அன்னவாசல் என்.எஸ்.ஆர். நகர் பகுதியில் வசித்து வந்தார். இவரும், கனிமொழி என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அருண்குமாருக்கும், கனிமொழிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அருண்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அருண்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • புதுக்கோட்டையில் ஓடும் பேருந்தில் ரூ.37 ஆயிரம், 6 கிராம் தங்கம் திருட்டு போனது
    • இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அய்யப்பன் வயல் பகுதியை சேர்ந்த முருகேஷன் என்பவரின் மனைவி சுப்புலட்சுமி (வயது 38). அட்சய திருதியை முன்னிட்டு புதுக்கோட்டை கடைவீதிக்கு சென்றுள்ளார். இதற்காக 37 ஆயிரம் ரூபாய் பணம், 6 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை ஒரு பையில் வைத்துக்கொண்டு கீரனூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் ஏறி உள்ளார். பையை தனது அருகில் வைத்து விட்டு பயணம் செய்துள்ளார்.

    புதுக்கோட்டை வந்ததும் பேருந்தை விட்டு இறங்குவதற்காக தனது பையை எடுக்க நினைத்த போது, அது காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக நகர காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் சரவணம், பணம், தங்கம், வெள்ளி பொருட்களுடன் பையை திருடி சென்ற மர்ம ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


    • ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது
    • குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் அமர்ந்து அருள் பாலித்து வருவார்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக விளங்கும் நாமபுரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் அமர்ந்து அருள் பாலித்து வருவார். ஒரு ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு அடுத்த ராசிக்கு பெயர்ந்து செல்வது குரு பெயர்ச்சி என்று வணங்கப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு ராசியிலும் குரு பகவான் பெயர்ச்சி அடையும் நிலையில் ஒவ்வொரு ராசியை சேர்ந்தவர்களுக்கும் பலவிதமான பயன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த ஆண்டு நேற்று இரவு 11.27 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ந்து சென்றார். இதனைத் தொடர்ந்து நாமபுரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழாவினையொட்டி குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு, சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • உலக புவி தினத்தை முன்னிட்டு அரசுப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
    • நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முத்துராமன் தலைமை வகித்தார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக புவி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முத்துராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட இணைச்செயலாளர் துரையரசன் மற்றும் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு உலக புவி தினம் குறித்து எடுத்துரைத்தனர்.

    அப்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது, கார்பன் வெளியேற்றும் வாகனத்திற்கு பதிலாக மின்சார வாகனங்கள், சைக்கிள் பயன்படுத்துவது, மரங்களை நடுவது, மறுசுழற்சி செய்த பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகள் மூலம் இயற்கையை பாதுகாத்திட முடியும் என்றும், பசுமையான வளமானதாக இந்த பூமியை மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றனர்.


    • புதுக்கோட்டை கலெக்டர் தலைமையில் நில கையப்படுத்துவது குறித்த கூட்டம் நடைபெற்றது
    • மாவட்ட தனிநபர் பேச்சுவார்த்தை குழு (பத்தாம் கட்டம்) கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை, ஏப். 22-

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காவேரி-வைகை -குண்டாறு இணைப்பு க்கால்வாய் திட்டத்திற்காக நில எடுப்பு செய்யப்படவுள்ள நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் நிலம் கையகப்படுத்த அமைக்கப்பட்ட மாவட்ட தனிநபர் பேச்சுவார்த்தை குழு (பத்தாம் கட்டம்) கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    காவேரி- வைகை- குண்டாறு இணைப்பு க்கால்வாய் திட்டத்திற்காக புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா குன்னத்தூர், குளத்தூர் தாலுகா புலியூர், மண்டையூர், செட்டிபட்டி, பூங்குடி, சீமானூர், வாலியம்பட்டி மற்றும் வத்தனாகுறிச்சி ஆகிய 8 கிராமங்களில் தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் நிலம் கையகம் செய்யப்படவுள்ள 92 பட்டா தாரர்களின் 91 புலஎண்களில் மொத்த கையக பரப்பு 11.71.23 ஹெக்டேர் நிலத்திற்கு மற்றும் மரங்கள், கட்டிட ங்கள், கிணறுகள் நில உரிமை யாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது தொடர்பாக, மாவட்ட அளவிலான தனிநபர் பேச்சுவார்த்தை குழு கூட்டம் (பத்தாம் கட்டம்) மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    மேலும் காவேரி-வைகை- குண்டாறு இணைப்புக்கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்ம ந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


    • புதுக்கோட்டையில் 8662 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது
    • விராலிமலை வட்டத்தில் 680 பயனாளிகள் பயனடைந்துள்ளன

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியிருப்பு மனைக்கு வீட்டுமனைப் பட்டா பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆலங்குடி வட்டத்தில் 1,282 பயனாளிகளுக்கும், திருமயம் வட்டத்தில் 993 பயனாளிகளுக்கும், கந்தர்வக்கோட்டை வட்டத்தில் 768 பயனாளி களுக்கும், கறம்பக்குடி வட்டத்தில் 387 பயனாளிகளுக்கும், புதுக்கோட்டை வட்டத்தில் 426 பயனா ளிகளுக்கும், இலுப்பூர் வட்டத்தில் 539 பயனாளி களுக்கும், குளத்தூர் வட்டத்தில் 864 பயனாளிகளுக்கும், பொன்னமராவதியில் 840 பயனாளிகளுக்கும், விராலிமலை வட்டத்தில் 680 பயனாளிகளுக்கும், அறந்தாங்கி வட்டத்தில் 874 பயனாளிகளுக்கும், ஆவுடை யார்கோயில் வட்டத்தில் 354 பயனாளிகளுக்கும், மணமேல்குடி வட்டத்தில் 655 பயனாளிகளுக்கும் என ஆக மொத்தம் விலையில்லா வீட்டுமனைப் பட்டா நத்தம் பிரிவில் 8,662 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.





    • ஆலங்குடியில் த.மு.மு.க. சார்பில் ரமலான் அரிசி வழங்கும் விழா நடைபெற்றது
    • நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் ச.ச. முகமது சருக் தலைமை வகித்தார்

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் த.மு.மு.க. சார்பில் ரமலான் மாதத்தை முன்னிட்டு 29-ம் ஆண்டு அரிசி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் ச.ச. முகமது சருக் தலைமை வகித்தார் . செயலாளர் அப்துல் லத்தீப், தமுமுக மாவட்ட துணைசெயலாளர் அக்பர் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக நகர தலைவர் சையது முகமது வரவேற்றார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ரமலான் பித்ரா அரிசி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமுமுக உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் ஜமாத் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். வெற்றிலை ராஜா நன்றி கூறினார்.


    ×