என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 15-ந் தேதி வரை 15 நாட்களுக்கு காலை 6.30 முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து மற்றும் கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகள் மற்றும் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றுள்ள பெரிய விளையாட்டுகளும் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும். எனவே மாவட்டத்திலுள்ள அரசு உயர், மேல், மெட்ரிக், நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைத்து மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை அலுவலக வேலை நேரங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.
- 3 குழந்தைகளின் தாய் தற்கொலை கொண்டார்.
- எலி மருந்து தின்றார்
புதுக்கோட்டை
விராலிமலை ஒன்றியம், மண்டையூர் ஆசாரி தெருவை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி பவித்ரா (வயது 27). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பவித்ராவிற்கு மூலநோய் இருந்ததாகவும், பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் சரி ஆகாததால் விரக்தி அடைந்த பவித்ரா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை தின்று மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பவித்ராவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன்
புதுக்கோட்டை:
ஆவுடையார்கோவில் தாலுகா புத்தாம்பூர், செங்கானம் ஆகிய ஊராட்சிகளில் பேயாடிக்கோட்டை, செங்கானம், பறையத்தூர், இடையூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அடம்பூர் நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் திருப்புனவாசல்-ஆவுடையார்கோவில் சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 6 மாதத்திற்கு முன்பு போராட்டம் நடத்துவதாக வந்த பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் கூறினர்.
ஆனால் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறினர். இதையடுத்து அங்கு வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் திருப்புனவாசல்-ஆவுடையார்கோவில் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அங்கன்வாடியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்ததால் இந்த போராட்டம் நேற்று இரவு வரை நீடித்தது.
- ரத்த மாதிரி அளிக்க மறுத்த 8 பேரும் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
- 8 பேரும் ரத்த மாதிரி அளிக்க ஒத்துழைப்பு அளிக்காதது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 11 பேருக்கு இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த மாதிரி சேகரிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆயுதப்படை காவலர் முரளி ராஜா உள்ளிட்ட 3 பேர் மட்டுமே ரத்த மாதிரியை அளித்துள்ளனர். மற்ற 8 பேர் ரத்தம் தர வரவில்லை. அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், ஏற்கனவே நாங்கள் இந்த பிரச்சினையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். மீண்டும் இதுபோன்ற சோதனை என்ற பெயரில் எங்களை குற்றவாளிகளாக ஆக்குவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் முயற்சி செய்கிறார்கள். எனவே நாங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வரமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். ரத்த மாதிரி அளிக்க மறுத்த 8 பேரும் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்த 8 பேரும் ரத்த மாதிரி அளிக்க ஒத்துழைப்பு அளிக்காதது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
ரத்த மாதிரி கொடுத்தவர்களின் பரிசோதனை முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
- விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோவிலில் நடைபெற்றது
- முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வருடம் தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.முன்னதாக போட்டியை முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். மொத்தம் எட்டு குழுக்களாக வீரர்கள் பிரிக்கப்பட்டு காளைகளை அடக்கி வருகின்றனர். முதலில் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து தொடர்ந்து மற்ற காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
திருச்சி, திண்டுக்கல், கரூர், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் கால்நடை துறையின் பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது. போட்டியில் சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பணம் முடிப்பு, சைக்கிள், டிரஸ்சிங் டேபிள், சில்வர் பாத்திரம், பிளாஸ்டிக் சேர் உள்ளிட்டவைகள் பரிசுகளாக வழங்கப்படுகிறது.போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கண்டு களித்து வருகின்றனர். மாவட்ட மருத்துவ துறை சார்பில் ஜல்லிக்கட்டு திடல் அருகே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காயம் அடைபவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். விபத்து ஏதும் ஏற்பட்டால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
பாதுகாப்பு பணியில் இலுப்பூர் டி.எஸ்.பி. காயத்ரி தலைமையில் 132 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- புதுக்கோட்டை வடகாட்டில் நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் அப்பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதலோடு தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான வைரத்தேரோட்டம் வான வேடிக்கையுடன் நடைபெற்றது. தேரோட்ட விழாவில் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு மற்றும் அணவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- அன்னவாசலில் வேதனை சம்பவம்
- 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது . இதனைத் தொடர்ந்து அன்னவாசல், இலுப்பூர், புதுக்கோட்டை என பல பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புதுறை வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் தீயணைப்பு பணிக்கு உதவி செய்தனர். பெரும்பாலானவர்கள் தீ பற்றி எரிவதையும் அதனை தீயணைப்பு வீரர்கள் அணைக்க போராடுவதையும் தங்களது செல்போன்களில் படம் எடுப்பத்திலேயே குறியாக இருந்தனர். தீப்பற்றி எரியும் வேலையில் அதனை அணைக்க முயற்சிக்காமல் செல்போனில் படம் எடுக்கும் மனநிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டது வேதனைக்குரியதாக இருந்தது.இயற்கையை காக்கும் போராட்டத்தில் மனித சமுதாயம் இதுபோன்ற நிலைக்கு சென்றது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
- ஆவுடையார்கோவில் அருகே 6 மாதமாக குடிநீர் தட்டுப்பாடு
- 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா புத்தாம்பூர், செங்கானம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பேயாடிக்கோட்டை , செங்கானம், பறையத்தூர், இடையூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்களுக்கு அடம்பூர் நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போராட்டம் மூலம் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பொதுமக்கள் முடிவு செய்தனர்.இதையடுத்து இன்று காலை 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருப்புனவாசல்-கரூர் சாலையில் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல வழியின்றி அணிவகுத்து நின்றன. போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துறை அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர்.
அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து பொது மக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- பொன்னமராவதி அருகே மூலங்குடி கிராமத்தில் நடைபெற்றது
- ஏராளமான பொதுமக்கள் மீன்களை அள்ளிச்சென்றனர்
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் மீன் பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீன்பிடித் திருவிழா நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமைக்காகவும் நடைபெறும்.அதன்படி இந்த ஆண்டும் பொன்னமராவதி பகுதிகளில் தினசரி மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி கிராமத்தில் உள்ள பெரியகம்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவிற்காக சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் குவிந்தனர்.பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசி, போட்டியை தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டுலாவகமாக மீன் பிடித்தனர். ஒவ்வொருவர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குறவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. அதனை மகிழ்ச்சியுடன் மக்கள் வீட்டிற்கு அள்ளிச் சென்றனர்.
- வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
- குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இந்த சம்பவத்தில் உள்ளூர் போலீசார் விசாரணையை அடுத்து, வழக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக வாட்ஸ்அப் உரையாடல் அடிப்படையில் ஆயுதப்படை காவலர் உள்பட 2 பேரிடம் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது 2 ஆண்கள், ஒரு பெண்ணின் மனித கழிவு என்பது பகுப்பாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தநிலையில் 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு செய்து, அதற்காக புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் உரிய அனுமதியை பெற்றனர்.
கோர்ட்டு உத்தரவுப்படி புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் தலைமையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்காக வேங்கைவயல் விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 11 பேருக்கு இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. பின்னர் அவை சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்த பரிசோதனை முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க அவர்கள் கூடுதல் கால அவகாசமும் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் திருச்சி வாலிபர் பலியானார்
- 22 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே சீமானூர் கிராமத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை குளத்தூர் தாசில்தார் சக்திவேல், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
இதில் 160 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 682 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
.இதில் படுகாயமடைந்த திருச்சி கே.சாத்தனூர் இச்சிக்காமலைப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஜெயந்த் (வயது 21) உள்பட 4 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயந்த் பரிதாபமாக இறந்தார். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மிக்சி, மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், ரொக்க பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கோட்டு வேலவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் சீமானூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.






