என் மலர்
புதுக்கோட்டை
- மீன்பிடித்தடைக்காலம் தொடங்கியுள்ளதால் பழுதடைந்த படகுகள், மீன்பிடி உபகரணங்களை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்
- தடைக்கால நிவாரணம் 10 ஆயிரம், மானியம் ரூ.2 லட்சம் வழங்க கோரிக்கை
அறந்தாங்கி:
தமிழகத்தில் ஏப்ரல் 14-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரை 61 நாட்கள் மீன் பிடித்தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. கடலில் மீன்வளத்தை பெருக்குவதற்காக அமலில் இருக்கும் இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பழுது பார்த்து தயார் நிலையில் வைத்துக்கொள்வது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலிருந்து 520-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
இதனை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்களை பொறுத்தவரையில் வாரத்தில் சனி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருவதும், வெள்ளிக்கிழமையில் விடுமுறையில் இருப்பதும் வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் ஏப்ரல் 14-ந்தேதி தடைக்காலத்திற்கு முன்பே 12-ந்தேதியிலிருந்தே தடைக்காலத்தை அனுசரிக்க தொடங்கினர்.
இந்நிலையில் மீன்பிடித்தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வேண்டிய கோரிக்கைகள் குறித்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் அசன் மொகைதீன் கூறியதாவது:- ஆண்டு முழுவதும் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தாலும் அது வரவுக்கும், செலவுக்கும் சரியாக உள்ளது. இந்த வேளையில் 2 மாதகாலம் தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. மீன்வளத்தை பெருக்குவதற்காக கடைபிடிக்கப்படுகின்ற தடைக்காலம் வரவேற்கதக்கதாக இருந்தாலும், மீனவர்கள் வேறு வேலையின்றி வாழ்வாதாரத்திற்கு திண்டாடும் சூழ்நிலை உருவாகுகிறது.
எனவே தமிழக அரசால் வழங்கக்கூடிய தடைக்கால நிவாரண நிதி ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் தடைக்காலத்தில் 60 நாட்களுக்கும் மேலாக படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்படுவதால், படகின் என்ஜின்கள் ஓட்டப்படாமல் பழுதடைந்து விடுகிறது. இதனை சரி செய்வதற்கும், படகின் பழுதடைந்த பாகங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சரி செய்வதற்கும் அரசு மானியமாக ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்க வேண்டும்.அதனை தடைக்காலத்திற்கு பிறகு மீனவர்கள் சிறுக சிறுக அடைத்து விடுவார்கள் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நாட்டின் அன்னியச் செலாவணிக்கு மீனவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு மானியம் டீசல் ரூ.80-க்கு மேல் வழங்கப்படுகிறது. இந்த விலை மீனவர்களுக்கு கட்டுபடி ஆகாததால், டீசல் அதன் கொள்முதல் விலைக்கே வழங்கினால் பேருதவியாக இருக்கும். மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன் பிடித்துறைமுகங்கள் தலா ரூ.15 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும் அறிவித்திருந்தார். ஆனால் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. துறைமுக விரிவாக்கப் பணிகளை விரைந்து தொடங்கினால் மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்று தெரிவித்தார்.
- கந்தர்வகோட்டை அருகே ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது
- அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆற்றங்கரை வெள்ளாளவிடுதி பாலம் கட்டும் பணியினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார். விழாவுக்கு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமை தாங்கினார். பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இதன்மூலம் பொதுமக்களின் பொருளாதாரம் உயர்வதற்கு வழிவகை ஏற்படுகிறது. அதன்படி இன்றையதினம் நபார்டு 2021-22 திட்டத்தின்கீழ், ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஆற்றங்கரை-வெள்ளாளவிடுதி பாலம் கட்டும் பணி அடிக்கல்நாட்டி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார். மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர்வசதி, சாலைவசதி, மின்வசதி உள்ளிட்டவைகள் நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனவே தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் இத்தகைய மக்கள்நலத் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி க்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கந்தர்வ க்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், கோட்டப் பொறியாளர் நபார்டு வி.செந்தில்குமார், ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர் சி.நளினி, மா.தமிழய்யா, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மா.பரமசிவம், கோ.அருணாசலம், உதவிப் பொறியாளர் நபார்டு ராஜதுரை, எம்.எம்.பாலு, ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் ராஜேந்திரன், திருப்பதி, முருகேசன் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- தமிழக அரசின் வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் பெற்று பயனடைய வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கவிதா ராமு பேசினார்
- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 807.10 மி.மீ. ஆகும். 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இயல்பான மழையளவான 73.30 மி.மீ.க்கு 80.05 மி.மீ அளவு மழை பெறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் வரையில் 6.75 மி.மீ. கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. பயிர்ச் சாகுபடி விவரம் 2022-2023ஆம் ஆண்டில் மார்ச் மாதம் முடிய நெல் 101375 எக்டேர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 2156 எக்டேர் பரப்பளவிலும், பயறு வகைப் பயிர்கள் 4800 எக்டேர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 14374 எக்டேர் பரப்பிலும், கரும்பு 2256 எக்டேர் பரப்பளவிலும், பருத்தி 452 எக்டேர் பரப்பளவிலும் மற்றும் தென்னை 12584 எக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இடுபொருட்கள் இருப்பு மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 31.907 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 36.310 மெ.டன் பயறு விதைகளும், 2.037 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 5.336 மெ.டன் சிறுதானிய விதைகளும், 0,048 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன. விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து பெற்றுச் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விதை விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களிலும் சான்று பெற்ற விதைகள் விநியோகம் செய்திடத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 1102 ஏக்கர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதால் 1374 விவசாயிகள் பயன்பெறுகிறார்கள்.
2021-22 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 68 தரிசு நிலத் தொகுப்புகளைப் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டு, 47 தரிசு நில தொகுப்புகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டிற்குப் புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் 79 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட 79 தரிசு நில தொகுப்பில் 39 தொகுப்புகள் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு ஒரு தொகுப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
தரிசு நில தொகுப்புகளில் மண்மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரம் இருப்பு விவரம், மானியத் திட்டங்கள், மானிய முன்பதிவு, உதவி வேளாண்மை அலுவலர் வருகை குறித்த தகவல், வானிலைச் செய்திகள், பயிர்க் காப்பீட்டு விவரங்கள் உள்ளிட்ட 21 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
- அறந்தாங்கி அருகே முத்துவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா தாணிக்காடு கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துவிநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் கடந்த 26-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 2 நாட்களாக 3 கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதி சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏம்பல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது
- புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அதிகாரியுமான சாமி சத்தியமூர்த்தி தனது சொந்த செலவில் மாணவர்களின் நலன் கருதி ரூ.1.05 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பள்ளிக்கு வழங்கினார்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவரும், புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அதிகாரியுமான சாமி சத்தியமூர்த்தி தனது சொந்த செலவில் மாணவர்களின் நலன் கருதி ரூ.1.05 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பள்ளிக்கு வழங்கினார். விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு சுத்திகரிப்பு எந்திரத்தை இயக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேலு, நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பாளர் சீனிவாசன், தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், ஆத்மா சேர்மன் ராஜேந்திரன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- ரூ.8 லட்சம் மதிப்பில் அண்ணாநகர் குளம் சீரமைப்பு பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது
- சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கோமாபுரம் ஊராட்சியில் அண்ணா நகர் பொதுமக்கள் பயன்படுத்தும் குளத்தின் கரைகளை பலப்படுத்தவும், புதிய படித்துறை கட்டித் தரவும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெறுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா, ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் ராஜமாணிக்கம் |மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் 3 நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
- முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் அழியா நிலையில் 37 மெ.டன், துளையனூரில் 8 ஆயிரம் மெ.டன் பாதுகாக்கும் வகையில் மேற்கூரையுடன், கான்கிரீட் தளம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மண்டலத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பொருட்டு கான்கிரீட் தளம், மேற்கூரை கட்ட தமிழக அரசு ரூ.47.11 நிதி ஒதுக்கீடு செய்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 40 ஆயிரம் மெ.டன் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் வகையில் அறந்தாங்கி தாலுகா, அழியா நிலையிலும், துளையனூரில் 12.50 மெ.டன் என மொத்தமாக 52.5 மெ.டன் பாதுகாக்கப்படும் வகையில் 37 மேற்கூரையுடன் கூடிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் அழியா நிலையில் 37 மெ.டன், துளையனூரில் 8 ஆயிரம் மெ.டன் பாதுகாக்கும் வகையில் மேற்கூரையுடன், கான்கிரீட் தளம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேலும் அழியா நிலையில் 3 ஆயிரம் மெ.டன் கொள்ளவு கொண்ட 2 கிடங்குகளையும், துளையனூரில் 4 ஆயிரம் மெ.டன் கொள்ளவு கொண்ட 3 கிடங்குகளையும் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.மேலும் புதுக்கோட்டை மாவட்டம், சிறுமருதூர், பொன்னன்விடுதி, நெற்குப்பை ஆகிய இடங்களில் தலா ரூ.62.50 இலட்சம் வீதம் ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் 3 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
இதற்காக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற் நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் எம்.சீதாராமன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து புதுக்கோட்டை அனைத்து அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
- அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசு திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான, அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோரின் தலைமையிலான கலந்தாய்வு ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, வருவாய்த்துறை சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை, ஊரக வேலை உறுதித் திட்டம், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம், சாலை மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்தும், நமக்கு நாமே திட்டம், பாதாள சாக்கடை, குடிநீர் வழங்கும் பணிகள், மக்களைத் தேடி மருத்துவம், சிறார் கண்ணொளித் திட்டம், புதுமைப் பெண் திட்டம், குழந்தை திருமணங்கள் தடுப்பு, காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளிகளின் கட்டமைப்பு, முதல்வரின் முகவரித் திட்டம், நான் முதல்வன் திட்டம், நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவச பேருந்து பயணங்கள் குறித்து காந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், வருவாய் கோட்டாட்சியர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றி யக்குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- அறந்தாங்கி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது
- பொதுமக்கள் போராட்டத்தால் அதிகாரிகள் நடவடிக்கை
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குருந்திரக்கோட்டை கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இங்கு தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.குடியிருப்பு பகுதியின் மையப்பகுதியில் அமைக்கப்படும் இந்த செல்போன் கோபுரத்தால் பாதிப்பு ஏற்படக்கூடும் என கூறி அப்பகுதி பொதுமக்கள் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் திடீர் சாலை மாறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தியதில் சிறிது காலம் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் சென்று முறையிட்டால் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் பிரேம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பணிகளை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- கிராம நிர்வாக அலுவலர் படுகொலையை கண்டித்து கந்தர்வகோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூறியும், பணி பாதுகாப்பு கோரியும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில செயலாளர் அரங்க வீரபாண்டியன் அறிவுறுத்தலின்படி கந்தர்வகோட்டை வட்ட கிளை தலைவர் கருப்பையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் பவுல் வின்சென்ட், முரளி, அன்பரசன், வருவாய் அலுவலர் செல்வ சத்யா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- குடிநீர் பகுப்பாய்வு, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- சேகரிக்கப்பட்ட 3 பேரின் ரத்த மாதிரி மட்டும் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்ட நிலையில் யாரும் கைது செய்யப்படவில்லை. குடிநீர் பகுப்பாய்வு, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் முதற்கட்டமாக 11 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்காக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 9 பேர், காவேரி நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் மற்றும் கீழமுத்துக்குடிக்காடு பகுதியை சேர்ந்த ஒருவர் என 11 பேருக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதையடுத்து நேற்று புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த மாதிரி சேகரிப்புக்கு 3 பேர் மட்டுமே வந்திருந்தனர். மற்ற 8 பேரும் ரத்த மாதிரி தர மறுத்துவிட்டனர். அவர்கள் தங்களை குற்றவாளிகளாக்க முயற்சி நடப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தனர். எனவே சேகரிக்கப்பட்ட 3 பேரின் ரத்த மாதிரி மட்டும் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 119 பேரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது மட்டுமின்றி நேற்று ரத்த மாதிரி தர மறுத்த 8 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார்
புதுக்கோட்டை
ஆதனக்கோட்டையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 16-ந் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தினமும் அம்மன் பல்வேறு வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ேதரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் பழைய ஆதனக்கோட்டை, சோத்துப்பாளை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையும், ஆதனக்கோட்டை கிராமமக்களும் செய்திருந்தனர்.






