என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கடந்த 2-ந்தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் டாக்டர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளையும் களமிறங்கியது.
    • இறந்த கருப்பு கொம்பன் காளை இதுவரை 300-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது.

    விராலிமலை:

    முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். விஜயபாஸ்கர், காளைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர். ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர் பல காளைகளை வளர்த்து வருகிறார். இதில் தனிக்கவனம் செலுத்துவதோடு, அதனை பராமரிக்க பணியாட்களை நியமித்து அவ்வப்போது அந்த காளைகளுடன் பழகியும் வருகிறார்.

    இந்த காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அந்த வகையில் சிறப்பு பயிற்சியும் அளிக்கிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட் டம் அன்னவாசல் ஒன்றியம் வடசேரிபட்டியில் கடந்த 2-ந்தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் டாக்டர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளையும் களமிறங்கியது.

    வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை சீறிப்பாய்ந்து வெளியே வந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த தடுப்பு கட்டையில் தலைமோதி அந்த இடத்திலேயே காளை சுருண்டு விழுந்தது. தன்னுடைய வளர்ப்பு காளை களத்தில் நின்று விளையாடுவதை நேரில் காண வந்திருந்த டாக்டர் விஜயபாஸ்கர், காளை காயமடைந்து விழுந்ததை பார்த்ததும் பதறிப்போனார். அதன் மீது தண்ணீர் தெளித் தும் பயனில்லை.

    கேலரியில் இருந்து இறங்கி வந்த அவர் அசைவற்று மயங்கிய நிலையில் கிடந்த காளையை தடவிக்கொடுத்தார். எப்படியும் காளை எழுந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த அவர் உடனடியாக அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த காளை உயர் சிகிச்சைக்காக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    குழந்தையை போல் பார்த்துக்கொண்ட டாக்டர் விஜயபாஸ்கர் சொந்த ஊரில் இருந்து 2 முறை காளையை பார்க்க ஒரத்தநாடு சென்றார். நேற்றும் காளைக்கு அளிக்கப்படும் சிகிச்சையை டாக்டர்களிடம் கேட்டு தெரிந்துகொண்ட பின்னரே அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கருப்பு கொம்பன் காளை இன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த கருப்பு கொம்பன் காளை இதுவரை 300-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது.

    ஏற்கனவே முன்னாள் அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கரின் புகழ்பெற்ற கொம்பன் காளை 6 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் கல்லில் மோதி உயிரிழந்தது குறிப்பிடதக்கது. இரண்டு காளைகளும் வாடிவாசலில் மோதி இறந்ததால் டாக்டர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    இதற்கிடையே இறந்த கருப்பு கொம்பன் காளைக்கு டாக்டர் விஜயபாஸ்கர் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இலுப்பூர் அருகே ஓலைமான்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

    • புதுப்பட்டியை சேர்ந்த பார்வையாளர் சுப்பிரமணியன் என்பவர் காளை குத்தி உயிரிழந்தார்.
    • மின்செல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் நவநீதகிருஷ்ணன் என்பவரின் வயிற்றில் காளை குத்தி உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கல்லூர் கிராமத்தில் அரியநாயகி அம்மன் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்ளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது.

    மஞ்சுவிரட்டில் களைகள் அவிழ்த்துவிடப்பட்டது. இதில் சீறிப்பாய்ந்த காளைகள் வீரர்களிடம் பிடிப்படாமல் தப்பி ஓட முயற்சித்தன. அப்போது, புதுப்பட்டியை சேர்ந்த பார்வையாளர் சுப்பிரமணியன் என்பவர் காளை குத்தி உயிரிழந்தார்.

    இதேபோல், மஞ்சுவிரட்டு போட்டியில் படுகாயம் அடைந்த நபரை மீட்க சென்ற மின்செல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் நவநீதகிருஷ்ணன் என்பவரின் வயிற்றில் காளை குத்தி உயிரிழந்தார்.

    இந்நிலையில், மாடு முட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பலியான சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

    • பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
    • முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

    விராலிமலை,

    அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கடந்த 2012-ம் ஆண்டு 16 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பாடங்களை நடத்த அப்போது ரூ.5ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர். ஒரு ஆண்டுக்கு உள்ள 12 மாதங்களுக்கும் சம்பளம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது. ஒரு ஆண்டிற்கு 11 மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என அரசாணையில் இல்லை.ஆனால் கோடைகால விடுமுறைக்கு மே மாதம் சம்பளம் வழங்கவில்லை. 2012-ம் ஆண்டு மே மாதம் வழங்காததால், இப்படியே 2020-ம் ஆண்டுவரை 9 முறை மறுக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு ரூ.2,300 சம்பள உயர்வு கொடுத்து ரூ.10ஆயிரம் சம்பளமாக ஆக்கியபோது, இனி மே மாதம் சம்பளம் கிடையாது என திருத்தி புதிய ஆணையை பிறப்பித்து விட்டார்கள். இதனால் இனி மே மாதம் சம்பளம் கிடைக்காதபடி தற்போது இந்த வேலையில் தொடர்கிற, 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் நிலை ஆகிவிட்டது.இதையடுத்து 2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசும் மே மாத சம்பளம் வழங்காமல் விட்டுவிட்டது. தி.மு.க. வாக்குறுதிப்படி பணிநிரந்தரம் செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்போடு இருந்தனர். ஆனால் இரண்டு ஆண்டு முடிந்தும்கூட பணி நிரந்தரம் செய்யவில்லை. சம்பளமும் உயர்த்தப்படவில்லை.இதனால் 2021, 2022 இரண்டு ஆண்டு மே மாதங்களுக்கும் சம்பளம் வழங்கவில்லை. இப்படியே 11 ஆண்டு மே மாதம் சம்பளம் கிடைக்காமல் போய்விட்டது.ஒரு மாதம் சம்பளம் கிடைக்க வில்லை என்றால் அது எந்த அளவுக்கு கஷ்டமாக இருக்கும் என்பதை முதல்வர் நினைத்து பார்க்க வேண்டும். 2023-ம் ஆண்டு மே மாதம் சம்பளமாவது கருணையுடன் வழங்குங்கள் என கோரிக்கை வைத்துள்ளதை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.கோரிக்கை வைத்தால் அதை முதல்வர் நிறைவேற்றுவார் என மக்கள் என் மேல் நம்பிக்கை வைத்து உள்ளதாக முதல்வரே குறிப்பிட்டுள்ளார். தி.மு.க. 181-வது தேர்தல் வாக்குறுதி தான் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை ஆகும். இதனை நினைவூட்டி முதல்வருக்கு லட்சக்கணக்கில் கோரிக்கை மனு அனுப்புகிறோம். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யுங்கள். மே மாதம் சம்பளம் வழங்க ஆணையிடுங்கள்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • நகை, பணத்திற்காக கொலை செய்ததாக வாக்குமூலம்
    • புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி மாப்படைச்சான் ஊரணி வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 54), கட்டிட பொறியாளர். இவருக்கு கரூரில் ஆசிரியையாக பணிபுரியும் உஷா என்ற மனைவியும், ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி அன்று இரவு பழனியப்பன் பூர்வீக வீட்டில் வசிக்கும் அவரது தாயார் சிகப்பிக்கு (75) உணவு வழங்க சென்றார். அப்போது பழனியப்பன் மற்றும் சிகப்பி இருவரும் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.இதுகுறித்து பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில், 5 தனிப்படைகள் அமைத்து வேந்தன்பட்டி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.இந்தநிலையில் பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் இடையபுதூர் பஸ் ஸ்டாப் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா கள்ளங்காலப்பட்டியை சேர்ந்த சின்னையா மகன் சக்திவேல் (33), தேவகோட்டை தாலுகா உருவாட்டி மாவிலிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சுந்தரம் மகன் அலெக்ஸ் என்கிற அலெக்சாண்டர் (36) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினார்.விசாரணையில், வேந்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் மற்றும் அவரது தாய் சிகப்பி ஆகியோரை பணத்திற்காகவும், நகைக்காகவும் திட்டம் தீட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கட்டை, கையுறை ஆகியவைகளும் கைப்பற்றப்பட்டது.இதையடுத்து கொலையாளிகள் 2 பேரையும் போலீசார் பொன்னமராவதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை அதிகாரிகள் மற்றும் போலீசாரை நேரடியாக வரவழைத்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார். கொலை குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறைக்கு வேந்தன்பட்டி பொதுமக்கள் நன்றி கூறினர்.

    • புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் இருப்பிடத்திற்கே சென்று சேரும்
    • கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், 'நகல் மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளுக்கு அஞ்சல் வழியில் வழங்கும் திட்டத்தின்கீழ், கலெக்டர் கவிதா ராமு, தலைமை தபால் நிலைய அலுவலர் லலிதாவிடம் வழங்கினார்.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில், உணவுப் பொருள் வழங்கல் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது 'அஞ்சல்வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும்" என்ற அறிக்கையினை வெளியிட்டார்.அதன்படி இந்திய அஞ்சல் துறையினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, நகல் குடும்ப அட்டையினை ஆன்லைன் முறையில் விண்ணப்பித்துள்ள நகல் குடும்ப அட்டையினை இந்திய அஞ்சல் துறை வாயிலாக அட்டைதாரர்களின் இல்லத்திற்கே நேரடியாக தபால் மூலம் அனுப்புவதற்கு உரிய மென்பொருள் வசதிகள் செய்யப்பட்டு, இத்திட்டமானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டது.இத்திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் வட்டத்தில் ஆன்லைன் முறையில் ரூ.45- அரசுக்கணக்கில் செலுத்திய 472 குடும்ப அட்டைதாரர்களுக்கு நகல் குடும்ப அட்டையினை இந்திய அஞ்சல் துறை வாயிலாக குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே நேரடியாக தபால் மூலம் அனுப்பும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சேவையினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தார்.இந்நிகழ்வில், வழங்கல் அலுவலர் கணேசன், விற்பனை அலுவலர் நாகநாதன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • புதுக்கோட்டை அய்யங்காடு கிராமத்தில் நடைபெற்றது
    • டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் மருத்துவமுகாம் நடத்தப்பட்டது

    புதுக்கோட்டை,

    முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நோய் கண்டறியும் மற்றும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம், தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, டீம் மருத்துவமனை சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா, அய்யங்காடு கிராமத்தில் நடைபெற்றது. டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.எச்.சலீம் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த முகாமிற்கு அய்யங்காடு கிராம பஞ்சாயத்து தலைவர் ரெத்தினம் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.தற்போது நிலவி வரும் நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்செரிக்கை பற்றியும் டெங்கு, பன்றிக்காய்ச்சல், இன்ஃபுளுயன்சா போன்ற வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் சோர்வு, தலைவலி, அதிக உடல் வெப்பம், தொண்டைவலி, உடல்வலி, வாந்தி, வயிறுவலி, எலும்புவலி, மயக்கம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுகி பரிசோதனை செய்துகொண்டு முறையாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் முகாமில் அறிவுறுத்தப்பட்டது. இக்காலக்கட்டத்தில் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். கை, கால்களை சுத்தமாக அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். சத்துநிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும். அதிக எண்ணெயில் வறுத்து, பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முககவசம் அணியவும், சிறிதளவு சமூக இடைவெளியுடன் இருந்தால் நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கலாம் என்று மருத்துவர் விளக்கி கூறினார். டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் சூரிய பிரகாஷ் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனையும், ஆலோசனையும் வழங்கினார். முகாமில் இரத்த அழுத்தம், உயரம், எடை, வெப்பத்தின் அளவு, இரத்த சர்க்கரை அளவு போன்ற மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப், செவிலியர் கண்காணிப்பாளர் யோகேஸ்வரி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மதுபாலன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    • ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது பாம்பு கடித்தது
    • மருத்துவமனை கொண்டு செல்லும்முன்பே இறந்த பரிதாபம்

    புதுக்கோட்டை.

    இலுப்பூர் அருகே இருந்திராப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). விவசாயி. இவர் அருகில் உள்ள தன்னங்குடி குளம் அருகே நேற்று முன்தினம் ஆடுமேய்த்து கொண்டிருந்தார். அப்போது சுரேசை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுரேஷ் மனைவி போதும் பொண்ணு கொடுத்த புகாரின் பேரில், இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் டெய்லர் பலியானார்
    • இதுகுறித்து கீரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே பனங்குளத்தை சேர்ந்தவர் திருமாறன் (வயது 45). டெய்லர். இவர், மோட்டார் சைக்கிளில் காசிம்புதுப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சிலத்தூர் மாளிகை புஞ்சை பகுதியை சேர்ந்த ராசு மகன் செந்தில்குமார் (35) என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக திருமாறன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருமாறன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமாறன் மனைவி ரதி (38) கொடுத்த புகாரின் பேரில், கீரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



    • மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்
    • இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் குமார் மகன் கேசவன் (வயது 22). இவர், விராலிமலை அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கேசவன் தனது மோட்டார் சைக்கிளில் விராலிமலை தெப்பக்குளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக இறங்கிய போது, அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கேசவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • திருமயம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம் திருமயம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் மணவாளன்கரையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார்.அப்போது அவர் பேசுகையில் ஜல்ஜீவன் திட்டத்தில் நான் ஒப்பந்தகாரரிடம் லஞ்சம் கேட்டதாக ஒரு ஆடியோவை வெளியிட்டனர். அதே போல் யாரோ பேசியதை தனியார் தொலைகாட்சிகளிலும் தவறான அடிப்படையில், ஆதாரமற்ற பொய்யான, தகவலை ஒப்பந்தகாரர்கள் பரப்பி வருகின்றனர்.

    அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். ஊராட்சி மன்ற அலுவலகம் தினந்தோறும் காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை பொது மக்கள் பிரச்சினைகளை ஆராய்ந்த தீர்த்து வருகிறது. நாங்கள் வருவதற்கு முன்னர்இருந்த ஊராட்சி மன்றம் தற்போது எப்படி உள்ளது என்று 8 குக்கிராமங்களை உள்ளடக்கிய அனை வருக்கும் தெரியும். மேலும் என் மீது ஒரு பி.சி.ஆர். வழக்கு, 65 புகார்மனுக்கள் என அனைத்தையும் பார்த்து வருகிறேன்.

    என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை நிரூபித்தால் இங்கேயே புளியமரத்தில் தூக்குமாட்டி உயிரை விட தயார் என்றார். இந்த பேச்சு கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தில் கூட்டுறவு சங்க தலைவர் சரவணன், மற்றும் மன்றம் உறுப்பினர்கள், காவல் துறையினர், ஆர்.ஐ., வி.ஏ.ஓ., பொதுமக்கள் ஏராளமானனோர்கலந்துக் கொண்டனர்.

    • அறந்தாங்கி நற்பவளக்குடி ஊராட்சி கிராமசபா கூட்டத்தில் 13 கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது
    • கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் சுப மணி மொழியன் தலைமையில் நடைபெற்றது

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நற்பவளக்குடி ஊராட்சியில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தலைவர் சுப மணி மொழியன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது சுத்தமான குடிநீர் விநியோகிப்பது, கிராம வளர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் உள்ளிட்ட 13 கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சித்ரா, தலைமை ஆசிரியர்கள் சொக்கலிங்கம், வள்ளிக்கண்ணு, ஊராட்சி செயலர் கருப்பையா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதிமூலம், வீரையா , தேன்மொழி, சித்திரா, நவநீதம், சிஎல்எஃப் கவிதா, சமுதாய வள பயிற்றுனர் விடத்தி, மக்கள் நலப்பணியாளர் ராக்கம்மாள், பணித்தள பொறுப்பாளர் லெட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை திருபுவனவாசலில் மதுபானம் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • சீரான குடிநீர் வழங்கிடவும் வலியுறுத்தல்

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா திருப்புனவாசல் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.மேலும் புகழ்பெற்ற மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான விருதபுரீஸ்வரர் ஆலயத் தேர்வீதியில் மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை அகற்ற வலியுறுத்தியும், குடிநீர் வசதி மற்றும் தேர் வீதி சாலைகளை செப்பனிட வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தில் பலமுறை மனு அளித்ததாகவும், ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    எனவே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் காலிக்குடங்களுடன் கண்டன முழக்கமிட்டனர். அதனை தொடர்ந்து ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள் ஆலய வாசலுக்கு எதிராக உள்ள மதுபானக் கடையை அகற்ற கோரி கடையை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினர் பொதுமக்களை தடுத்து நிறுத்தியதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி எதிர் வருகின்ற 15 தினங்களுக்குள் பொதுமக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர்.அதிகாரிகளின் உறுதியளித்ததை தொடர்ந்து தற்காலிகமாக கலைந்து சென்றனர். 15 தினங்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் எதிர் வருகின்ற 18 ம் தேதி அன்று மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர். போராட்டத்தில் பாஜக தெற்கு ஒன்றியத் தலைவர் சேகர், மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன்,கிழக்கு மாவட்ட பொது செயலாளர் முரளிதரன்,தெற்கு ஒன்றிய பொருளாளர் செல்வ விநாயகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×