என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கவேண்டும்
    X

    பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கவேண்டும்

    • பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
    • முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

    விராலிமலை,

    அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கடந்த 2012-ம் ஆண்டு 16 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பாடங்களை நடத்த அப்போது ரூ.5ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர். ஒரு ஆண்டுக்கு உள்ள 12 மாதங்களுக்கும் சம்பளம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது. ஒரு ஆண்டிற்கு 11 மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என அரசாணையில் இல்லை.ஆனால் கோடைகால விடுமுறைக்கு மே மாதம் சம்பளம் வழங்கவில்லை. 2012-ம் ஆண்டு மே மாதம் வழங்காததால், இப்படியே 2020-ம் ஆண்டுவரை 9 முறை மறுக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு ரூ.2,300 சம்பள உயர்வு கொடுத்து ரூ.10ஆயிரம் சம்பளமாக ஆக்கியபோது, இனி மே மாதம் சம்பளம் கிடையாது என திருத்தி புதிய ஆணையை பிறப்பித்து விட்டார்கள். இதனால் இனி மே மாதம் சம்பளம் கிடைக்காதபடி தற்போது இந்த வேலையில் தொடர்கிற, 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் நிலை ஆகிவிட்டது.இதையடுத்து 2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசும் மே மாத சம்பளம் வழங்காமல் விட்டுவிட்டது. தி.மு.க. வாக்குறுதிப்படி பணிநிரந்தரம் செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்போடு இருந்தனர். ஆனால் இரண்டு ஆண்டு முடிந்தும்கூட பணி நிரந்தரம் செய்யவில்லை. சம்பளமும் உயர்த்தப்படவில்லை.இதனால் 2021, 2022 இரண்டு ஆண்டு மே மாதங்களுக்கும் சம்பளம் வழங்கவில்லை. இப்படியே 11 ஆண்டு மே மாதம் சம்பளம் கிடைக்காமல் போய்விட்டது.ஒரு மாதம் சம்பளம் கிடைக்க வில்லை என்றால் அது எந்த அளவுக்கு கஷ்டமாக இருக்கும் என்பதை முதல்வர் நினைத்து பார்க்க வேண்டும். 2023-ம் ஆண்டு மே மாதம் சம்பளமாவது கருணையுடன் வழங்குங்கள் என கோரிக்கை வைத்துள்ளதை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.கோரிக்கை வைத்தால் அதை முதல்வர் நிறைவேற்றுவார் என மக்கள் என் மேல் நம்பிக்கை வைத்து உள்ளதாக முதல்வரே குறிப்பிட்டுள்ளார். தி.மு.க. 181-வது தேர்தல் வாக்குறுதி தான் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை ஆகும். இதனை நினைவூட்டி முதல்வருக்கு லட்சக்கணக்கில் கோரிக்கை மனு அனுப்புகிறோம். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யுங்கள். மே மாதம் சம்பளம் வழங்க ஆணையிடுங்கள்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×