என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை திருபுவனவாசலில் மதுபானம் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- புதுக்கோட்டை திருபுவனவாசலில் மதுபானம் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- சீரான குடிநீர் வழங்கிடவும் வலியுறுத்தல்
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா திருப்புனவாசல் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.மேலும் புகழ்பெற்ற மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான விருதபுரீஸ்வரர் ஆலயத் தேர்வீதியில் மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை அகற்ற வலியுறுத்தியும், குடிநீர் வசதி மற்றும் தேர் வீதி சாலைகளை செப்பனிட வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தில் பலமுறை மனு அளித்ததாகவும், ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் காலிக்குடங்களுடன் கண்டன முழக்கமிட்டனர். அதனை தொடர்ந்து ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள் ஆலய வாசலுக்கு எதிராக உள்ள மதுபானக் கடையை அகற்ற கோரி கடையை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினர் பொதுமக்களை தடுத்து நிறுத்தியதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி எதிர் வருகின்ற 15 தினங்களுக்குள் பொதுமக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர்.அதிகாரிகளின் உறுதியளித்ததை தொடர்ந்து தற்காலிகமாக கலைந்து சென்றனர். 15 தினங்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் எதிர் வருகின்ற 18 ம் தேதி அன்று மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர். போராட்டத்தில் பாஜக தெற்கு ஒன்றியத் தலைவர் சேகர், மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன்,கிழக்கு மாவட்ட பொது செயலாளர் முரளிதரன்,தெற்கு ஒன்றிய பொருளாளர் செல்வ விநாயகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






