என் மலர்
பெரம்பலூர்
- தகாத வார்த்தையால் திட்டி பெண்ணை தாக்க முயன்றவர் கைது செய்யப்ப்பட்டார்
- உடையார்பாளையம் போலீசார் நடவடிக்கை
பெரம்பலூர்,
உடையார்பாளையம் தெருவை சேர்ந்த பரமேஸ்வரனின் மனைவி இசபெல்லா (வயது 38). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ரெங்கநாதனின் மகன் மணிகண்டனுக்கும்(29) இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் இசபெல்லாவை மணிகண்டன் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் இசபெல்லா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நாளை காலை 9.30 மணிமுதல் மாலை வரை மின்விநியோகம் இருக்காது
- மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதாக உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு
பெரம்பலூர்,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம், அபிராமபுரம், துறைமங்கலம், கே.கே.நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அரியலூர் மெயின்ரோடு, மின்நகர், நான்குரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணாநகர், இந்திராநகர், சிட்கோ, அருமடல் ரோடு, அருமடல், ஆத்தூர் ரோடு மற்றும் கிராமிய பகுதிகளான செங்குணம், போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், இந்திராநகர், சமத்துவபுரம், வடக்குமாதவி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.30 மணி முதல் மாலை வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- தகவலின் உண்மை தன்னை கண்டறிந்து சிறப்பு பரிசு வழங்க முடிவு
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி அறிவிப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக போலி மதுபானங்களை விற்பனை செய்தல், மணல் திருடுதல், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்தல் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள், லாட்டரி மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள், மேலும் உங்கள் பகுதியில் நடைபெறும் திருட்டு, திருட்டில் ஈடுபட்ட நபர்கள் பற்றிய தகவல்கள், உங்கள் பகுதியில் யாரேனும் சந்தேகப்படும் வகையில் புதியதாக இருக்கும் நபர்கள் குறித்து, பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். இந்த தகவலை தெரிவிக்க 9498100690 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தங்களது இரகசியம் காக்கப்படும். உண்மையான தகவலை அதிகப்படியான முறை கொடுக்கும் நபர்களுக்கு, தாங்கள் சொன்ன தகவலின் உண்மை தன்மை அறிந்து சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.
- 50 ஆண்டுகளாக வசிக்கும் நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி
- கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது அகரம்சீகூர் கிராம மக்களில் சிலர் வந்து கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.அதில், நாங்கள் 50 ஆண்டுகளாக அரசு நிலத்தில் வசித்து வரும் வீட்டிற்கு முறையாக வீட்டு வரி உள்ளிட்டவை கட்டி வருகிறோம். தற்போது அந்த நிலத்தை அரசு கையகப்படுத்துவதாக தெரிகிறது. இதனால் எங்களை வீட்டை காலி செய்யுமாறு அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். வீட்டை காலி செய்தால் நாங்கள் எங்கு செல்வது என்று தெரியவில்லை. எனவே நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் எழில் நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 48). சென்ட்ரிங் தொழிலாளி. இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும், பழனியாண்டி, பாஸ்கர் என 2 மகன்களும் உள்ளனர். அண்ணாதுரைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் நேற்று காலையும் அண்ணாதுரைக்கும், குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அண்ணாதுரை வீட்டை விட்டு வெளியேறி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.இந்த நிலையில் அன்னக்கிளி மதியம் அருகே உள்ள ஒரு காட்டிற்கு மாடு மேய்க்க சென்றார். அப்போது காட்டில் அண்ணாதுரையின் மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்ததை கண்டார். பின்னர் அன்னக்கிளி தனது கணவரை சுற்றும், முற்றும் தேடினார். அப்போது அண்ணாதுரை இலவம் பஞ்சு மரத்தில் கேபிள் டி.வி. ஒயரில் தூக்கில் தொங்கினார். அவரது வலது கால் மரத்தில் சிக்கியவாறு இருந்தது. இதனை கண்ட அன்னக்கிளி கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூா் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அண்ணாதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாராய பாக்கெட் விற்பனைக்காக வைத்திருந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர்
- 11 லிட்டர் 300 மில்லி சாராயத்தை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, காரியானூரில் அரசால் தடை செய்யப்பட்ட சாராயத்தை பாக்கெட் போட்டு விற்பனைக்காக வைத்திருந்த 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, வைத்தியநாதபுரத்தை சேர்ந்த அருள்பாண்டியனின் மனைவி தனம் என்ற தனலெட்சுமி (வயது 32), காரியானூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமியின் மனைவி பவுனாம்பாள் (56) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 11 லிட்டர் 300 மில்லி சாராயத்தை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ரெஜி என்ற ரகுநாத் (வயது 31). இவர் நேற்று முன்தினம் இரவு அம்மாபாளையத்தில் உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் லாடபுரம் பிரிவு சாலை அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த ரகுநாத்தை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரகுநாத் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ரகுநாத் ரவுடி என்றும், அவர் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- பொது வினியோக திட்ட முகாமில் 30 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது
- முகாமிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன் தலைமை தாங்கினார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தழுதாழையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். முகாமில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் மற்றும் செல்போன் எண் இணைப்பு உள்ளிட்ட தேவைகளுக்கு பொதுமக்கள் 30 பேர் மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ரவி நன்றி கூறினார்.
- பென்னக்கோணம் மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது
- திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள பென்னக்கோணம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 6-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, மகா மாரியம்மன், செல்லியம்மன், அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் மலர் அலங்காரத்துடன் தினமும் சாமி வீதியுலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
அதன் பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மகா மாரியம்மன் தேரோட்டம், மேள, தாளங்கள் மற்றும் வாண வேடிக்கையுடன் நடைபெற்றது.கீழக்குடிக்காடு, கழனிவாசல், பெருமத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவச கோஷத்துடன், தேரின் வடம் பிடித்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு மங்களமேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
- செட்டிக்குளம் செல்லியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடினர்
- 2 பித்தளை மணிகளையும் திருடிச்சென்றனர்
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாத முயல்வேட்டை திருவிழா பிரசித்தம். இந்நிலையில் இரு தரப்பினர் பிரச்சினையால் இந்த கோயில் கடந்த 3 வருடங்களாக எந்தவித பூஜைகளும் நடைபெறவில்லை. முயல்வேட்டை திருவிழா மட்டுமே நடைபெற்று உள்ளது.இதன் காரணமாக அனைத்து கதவுகளும் எப்போதும் பூட்டி இருக்கும். ஆனால் கோவிலின் பிரதான வாயில் மட்டும் திறந்து இருக்கும்.
இந்நிலையில் இந்த கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் உடைக்கப்பட்டிப்பதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து பாடாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் அங்கு வந்து நடத்திய விசாரணையில், உண்டியல் பூட்டை உடைக்க முயன்று முடியாததால், கடப்பாறையால் உண்டியலின் பக்கவாட்டில் உள்ள மூடியை பிளந்து, ஒரு குச்சியை பயன்படுத்தி, பணத்தை லாவகமாக திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது.
கோவில் உண்டியலில் சுமார் 40 ஆயிரம் பணம் இருந்திருக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் கோவிலில் இருந்த பழமையான இரண்டு பித்தளை மணிகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து கோவில் தர்மகர்த்தா சக்திவேல், மூடப்பாடி சுதந்திரம் ஆகியோர் அளித்த புகாரின் பேரில், பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூரில் அரசு ஊர்தி டிரைவர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
- இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூரில் அரசு துறை ஊர்தி டிரைவர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சகாதேவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வெளி மாவட்ட ஓட்டுநர்கள் இயற்கை இல்லா மரணம் அடைந்தால் நமது சங்க உறுப்பினர்களால் இயன்ற தொகையை சேர்த்து சங்கத்தின் பெயரில் உதவி தொகையாக வழங்க வேண்டும், சங்க உறுப்பினர்கள் இயற்கை மரணம் அல்லது அகால மரணம் அடைந்தால் உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்,அதேபோல் மற்ற மாவட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், டிரைவர்களுக்கு கல்வி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்,15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களுக்குப் பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, அதனை தொடர்ந்து சென்னையில் வருகின்ற 22-ம்தேதி நடைபெறும் கோட்டை நோக்கி பேரணியில் கலந்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சிறுவாச்சூர், எசனை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்
- நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட சிறுவாச்சூர் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராம பகுதிகளான சிறுவாச்சூர், அய்யலூர், விளாமுத்தூர், செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன்நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்பநகர் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாள் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதே போல் பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட எசனை துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராம பகுதிகளான கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாப்புதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.






