என் மலர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புஜங்கராயநல்லூர் கிராமத்தில் வடக்கு தெருவை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி சுமதி (வயது 46). இவர் தனது வீட்டில் கால்நடைகள் வளர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் வீட்டின் அருகிலுள்ள பட்டியில் ஆடுகளை கயிற்றால் கட்டிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு முகமூடி அணிந்த 3 நபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவன் மட்டும் திடீரென்று சுமதி அருகே வந்தான். அவனை பார்த்த சுமதி யார் நீ என்று கேட்டார்.
அவன் பதில் ஏதும் கூறாமல் சுமதியை தாக்க தொடங்கினான். அதற்குள் அவனுடன் வந்த மற்ற இருவரும் சுமதியை பிடித்துக் கொள்ள, அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.
இதுகுறித்து சுமதி அளித்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே அதே கொள்ளை கும்பல் அருகிலுள்ள பேரையூர் கிராமத்திற்குள்ளும் புகுந்தது.
பேரையூர் ஊராட்சிமன்ற தலைவராக இருந்து வரும் மோகன் என்பவரது வீட்டின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்ற முகமூடி கொள்ளையர்கள் தனி அறையில் இருந்து பீரோவை லாவகமாக திறந்தனர். ஆனால் அதில் நகை, பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
பின்னர் வீட்டை விட்டு வெளியேறும் முன்பு அங்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மோகனின் மனைவி ராணி (40) கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்தனர். தூக்கம் கலைந்த ராணி எழுந்து கூச்சல் போட்டார். உடனே கணவர் மோகனும் வந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அந்த கும்பல் மோகனை சரமாரியாக தாக்கியதோடு, அவர்கள் கையில் சிக்கிய 4 பவுன் தங்க சங்கிலியோடு தப்பிச்சென்றனர்.
இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் மோகன் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு புறம் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்திக்கொண்டு இருக்கும்போதே அருகிலுள்ள மற்றொரு தெருவில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா,செட்டிகுளம் கிராமத்தில் உள்ள அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்த ரெங்கநாயகி (வயது 70) மற்றும் செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த புஷ்பா(65) ஆகியோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அப்போது ரெங்க நாயகி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியையும், புஷ்பா அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியையும் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும், இது குறித்து தனித்தனியாக பாடாலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர்:
நகராட்சி ஆணையர் குமரிமன்னன் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகள், பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள கடைகள், பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சி சொந்தமான கடைகள் ஆகியவற்றின் வாடகை தொகை செலுத்தாத உரிமதாரர்களுக்கு வாடகை செலுத்தவேண்டி நகராட்சி மூலம் அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக வாடகையை செலுத்த வேண்டும். மீறி வாடகை செலுத்தாவர்களின் கடைகள் நகராட்சி சட்ட விதிகளின் படி பூட்டி சீல் வைக்கப்படும். மேலும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும்.செலுத்த தவறினால் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் ஆத்தூர் சாலையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் ஆத்தூர் சாலையில் ஒரு டீக்கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பெரம்பலூர் வள்ளலார் தெருவை சேர்ந்த வடிவேல் (வயது 54) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 62 லாட்டரி சீட்டுகளையும் ரூ.8 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் வடிவேலை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர் தாமஸ் பாஸ்கர் தலைமையில் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், இந்த ஆண்டு கொரோனா மற்றும் தேர்தல் ஆகிய காரணங்களால் அன்னமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியவில்லை. எனவே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 13-ந்தேதி எங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி பெற்று தரவும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடு செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் செயலாளர் செல்வகுமார் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம், அரசலூர், கள்ளப்பட்டி, விசுவக்குடி, பூலாம்பாடி, தொண்டமாந்துறை, கொளத்தூர், சில்லக்குடி ஆகிய கிராமங்களில் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு அரசிடம் அனுமதி பெற்றுத்தரவும், பாதுகாப்பு ஏற்பாடு செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
குன்னம் தாலுகாவில் உள்ள பேரளி, பீல்வாடி ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பீல்வாடியில் இருந்து பேரளி செல்லும் பகுதிகளில் விவசாய விளை நிலங்கள், வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகள் உள்ளன. அந்த பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்று தனிநபர் ஒருவர் எம்சாண்ட் செயற்கை மணல் தயாரிக்கவும், தார் உற்பத்தி செய்யும் நிறுவனம், கிரஷர் அமைக்கவும் முயற்சிகள் எடுத்து வருகிறார். இதனால் விவசாய விளை நிலங்களும், காப்பு காடுகளும், அதில் வசிக்கும் வன விலங்களும் பாதிக்கப்படும்.
இது தொடர்பாக பேரளி, சித்தளி ஊராட்சிகளில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், விவசாயம், வன விலங்குகள் ஆகியவற்றின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு அவருக்கு மேற்கண்டவை அமைக்க அரசு அனுமதி வழங்கக்கூடாது. அனுமதி வழங்கினால் ஊர் பொதுமக்களை திரட்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும், என்று கூறியிருந்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு பிறகு நேற்றுதான் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று மனுக்களை கணினியில் பதிவு செய்து கலெக்டரிடம் அளித்தனர். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 438 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
இல்லத்தரசிகளின் சமையலறையில் காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. மேலும் வட மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது.
இதனால் தினமும் உயர்ந்து வரும் பெட்ரோல்- டீசல் விலையை போல், காய்கறிகளின் விலையும் தினமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரம்பலூரில் கடந்த வாரம் மார்க்கெட், உழவர் சந்தையில் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்ற தக்காளி, தற்போது விலை உயர்ந்து கிலோ ரூ.120-க்கு விற்பனையாகி வருகிறது.
இதேபோல் கத்தரிக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், பீன்ஸ் விலை தலா ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு கிலோ ரூ.40-க்கும், கேரட், வெண்டைக்காய், மாங்காய் தலா ஒரு கிலோ ரூ.80-க்கும் விற்பனையானது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் தலா ஒரு கிலோ ரூ.40 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
முட்டைக்கோஸ், பீட்ரூட் தலா ஒரு கிலோ ரூ.60-க்கும், கொத்தமல்லி, புதினா கட்டு தலா ஒன்று ரூ.50-க்கும் விற்பனையானது. முருங்கைக்காய் கிலோ ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைவிட சில்லறை விற்பனை கடைகளில் காய்கறிகள் விலை சற்று அதிகமாக விற்கப்படுகிறது.
கடந்த சில நாட்களில் மேற்கண்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது. பெரும்பாலானோர் சமையலில் தக்காளியை தவிர்த்து வருகின்றனர். பெரம்பலூரில் பல ஓட்டல்களில் தக்காளி சட்டினி நிறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் காய்கறிகள் விலை அதிகரித்த காரணத்தால், அசைவத்துக்கு மாறியுள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் காய்கறிகளின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். காய்கறிகள், சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வால் ஓட்டல்களிலும் உணவு பொருட்களின் விலை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூரை சேர்ந்தவர் திலீப்குமார். இவரது மனைவி செல்வராணி(வயது 36). இவர்களுக்கு பிளஸ்-2 படிக்கும் மகளும், 9-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். இந்நிலையில் செல்வராணி 3-வது முறையாக கர்ப்பமானார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த செல்வராணிக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து செல்வராணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரையும், குழந்தையையும் ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இருவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரது உடலையும் வீட்டிற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு போலீசார் விரைந்து சென்று இறந்த தாய் மற்றும் குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






