search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    ஊராட்சி மன்ற தலைவர் மனைவி உள்பட 2 பெண்களிடம் 13 பவுன் நகை பறிப்பு

    பெரம்பலூர் அருகே நள்ளிரவில் ஊராட்சி மன்ற தலைவர் மனைவி உள்பட 2 பெண்களிடம் 13 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புஜங்கராயநல்லூர் கிராமத்தில் வடக்கு தெருவை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி சுமதி (வயது 46). இவர் தனது வீட்டில் கால்நடைகள் வளர்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் வீட்டின் அருகிலுள்ள பட்டியில் ஆடுகளை கயிற்றால் கட்டிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு முகமூடி அணிந்த 3 நபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவன் மட்டும் திடீரென்று சுமதி அருகே வந்தான். அவனை பார்த்த சுமதி யார் நீ என்று கேட்டார்.

    அவன் பதில் ஏதும் கூறாமல் சுமதியை தாக்க தொடங்கினான். அதற்குள் அவனுடன் வந்த மற்ற இருவரும் சுமதியை பிடித்துக் கொள்ள, அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.

    இதுகுறித்து சுமதி அளித்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே அதே கொள்ளை கும்பல் அருகிலுள்ள பேரையூர் கிராமத்திற்குள்ளும் புகுந்தது.

    பேரையூர் ஊராட்சிமன்ற தலைவராக இருந்து வரும் மோகன் என்பவரது வீட்டின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்ற முகமூடி கொள்ளையர்கள் தனி அறையில் இருந்து பீரோவை லாவகமாக திறந்தனர். ஆனால் அதில் நகை, பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

    பின்னர் வீட்டை விட்டு வெளியேறும் முன்பு அங்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மோகனின் மனைவி ராணி (40) கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்தனர். தூக்கம் கலைந்த ராணி எழுந்து கூச்சல் போட்டார். உடனே கணவர் மோகனும் வந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அந்த கும்பல் மோகனை சரமாரியாக தாக்கியதோடு, அவர்கள் கையில் சிக்கிய 4 பவுன் தங்க சங்கிலியோடு தப்பிச்சென்றனர்.

    இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் மோகன் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு புறம் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்திக்கொண்டு இருக்கும்போதே அருகிலுள்ள மற்றொரு தெருவில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    Next Story
    ×