என் மலர்
உள்ளூர் செய்திகள்

டெங்கு காய்ச்சல்
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் சூழ்நிலையில், மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர்களில் 3 பேர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இது தவிர பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 2 பேர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ததால் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவ வாய்ப்பு உள்ளது. டெங்கு காய்ச்சல் ஏ.டி.எஸ். என்ற வகையிலான கொசுவின் மூலம் பரவுகிறது. தேங்கி நிற்கும் நல்ல தண்ணீரில் இந்த கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், காய்ச்சல் அதிகமாக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து மருத்துவ முகாம் நடத்திடவும், மேலும் சுகாதார பணிகளை முழு வீச்சில் முடுக்கி விட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






