என் மலர்
பெரம்பலூர்
- அத்தியூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்தியூர் கிராம மக்கள் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வளாகத்தில் திடீரென்று அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி உள்ளிட்ட எதுவும் செய்து தரவில்லை.
பழுதான கைப்பம்புகள் சரி செய்யப்படவில்லை. கால்வாய்களை சீரமைக்கப்படவில்லை. கொசு மருந்து அடிப்பதில்லை. மகளிர் பொது சுகாதார வளாகம் பராமரிக்கப்படுவதில்லை. குப்பைகள் ஊரின் அருகே கொட்டப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். அப்போது கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்துவார் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரும் வந்து இதுவரை விசாரணை நடத்தவில்லை. எனவே எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதையடுத்து அவர்களில் சிலர் இது தொடர்பாக கலெக்டரை சந்தித்துமனு கொடுத்து விட்டு வந்தனர்.
- காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய கோரி நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய மீனவர் காங்கிரசின் துணைத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய கோரி மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
- இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
- புதிய மையம் தொடங்குவதற்கான 2 நாள் பயிற்சி
பெரம்பலூர்:
பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை ஆகிய ஒன்றியங்களில் இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கான புதிய மையம் தொடங்குவதற்கான 2 நாள் பயிற்சி சங்குப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (கிழக்கு) நடந்தது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூா்த்தி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள் ரமேஷ், அன்பரசு, நவநீதன், இல்லம் தேடி கல்வி பெரம்பலூர் ஒன்றிய வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் அங்காளஈஸ்வரி, ரமேஷ் ஆகியோர் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு 1 முதல் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.
- சாலை பணியாளர் சங்கத்தின் 7-வது மாநில மாநாடு நடைபெற்றது.
- 2-வது நாள் மாநாடு நடந்தது
பெரம்பலூர்:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் 7-வது மாநில மாநாடு பெரம்பலூாில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாள் மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகராஜா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி, பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி கொடுத்ததற்கும், கோவில் பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட, உட்கோட்ட பொறியாளர் அலுவலகங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கொத்து கூலியாக, தினக்கூலியாக பணியாற்றி வரும் தொழில்நுட்ப பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவித்து,
அவர்களை காலமுறை ஊதியத்தில் தமிழக அரசு நியமித்திட வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மாநகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க பணியில் சாலை பணியாளர்கள் சங்கம் விடுமுறை நாளில் தீவிர தூய்மை பணியில் ஈடுபடுவோம்.
1.1.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3 சதவீத அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு சம்பளத்தை அரசு ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் 2-வது நாள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
- தூக்கில் விவசாயில் பிணமாக தொங்கினார்
- வீட்டில் இருந்து சென்றவர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 44)விவசாயி. இவரது மனைவி நித்யா (33). இவர்களுக்கு 2 ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர் செந்துறை அருகே உள்ள பூமுடையான்குடிக்காடு கிராமத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு 15 நாட்களுக்கு முன்பு வந்து உள்ளார். நேற்று தனது உடமைகளை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் இருங்களாக்குறிச்சியில் இருந்து ஆணைவாரி ஓடை செல்லும் வழியில் உள்ள புளிய மரத்தில் நிர்வாண நிலையில் மகேஸ்வரன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். இதனை அவ்வழியே சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து குவாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மகேஸ்வரன் யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருப்பார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டிருப்பாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 787 வழக்குகளுக்கு ரூ.3½ கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
- ஆணைக்குழுவின் தலைவர் தலைமையில் தாங்கினார்
பெரம்பலூர்:
உச்ச நீதிமன்றம், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பல்கீஸ் தலைமையில் தாங்கினார். இதில் மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி முத்துகுமரவேல்,
குடும்ப நல நீதிபதி தனசேகரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான லதா, சப்-கோர்ட்டு நீதிபதி அண்ணாமலை, நீதித்துறை நடுவர்கள் சுப்புலெட்சுமி, சங்கீதாசேகர், சிவகாமசுந்தரி, வேப்பந்தட்டை உரிமையியல் நீதித்துறை நடுவர் பர்வதராஜ் ஆறுமுகம், குன்னம் உரிமையியல் நீதித்துறை நடுவர் கவிதா அகியோர் கொண்ட 6 அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு வழங்கியது.
இதில் 55 வங்கி வழக்கில் ரூ.25 லட்சத்து 71 ஆயிரத்து 225-க்கும், 45 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் ரூ.2 கோடியே 75 லட்சத்து 89 ஆயிரத்து 200-க்கும், 9 சிவில் வழக்குகள் ரூ.20 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், 677 சிறு அளவிலான குற்றவியல் வழக்குகள் ரூ.4 லட்சத்து 32 ஆயிரத்து 800-க்கும், 1 காசோலை வழக்கு ரூ.10 லட்சத்துக்கும் என மொத்தம் 787 வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 36 லட்சத்து 43 ஆயிரத்து 225-க்கு தீர்வு காணப்பட்டது.
தீர்வு பெறப்பட்ட வழக்கின் மனுதாரர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பல்கீஸ் நஷ்ட ஈடு தொகைக்கான காசோலையை வழங்கினார். இதில் வக்கீல்கள்-மனுதாரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் செய்திருந்தனர்.
- பெரம்பலூரில் கொரோனாவுக்கு 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நேற்று ஒருவர் குணமாகினார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது மீண்டும் கொரோனா பரவி வருகிறது. இதனால் கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 22 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று ஒருவர் குணமாகினார். ஆனால் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 29 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
- நந்தி பெருமானை வழிப்பட்டனர்.
பெரம்பலூர்:
ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் மற்றும்
இதே போல் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பெரம்பலூர் அகிலாண்டஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிப்பட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சாலைப்பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் 2 நாள் நடைபெறும் மாநில மாநாடு துவங்கியது. மாநாட்டிற்கு மாநில தலைவர் சண்முகராஜா தலைமை வகித்தார். துணைப்பொது செயலாளர்கள் ராஜாசிதமபரம், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை தலைவர் செல்லச்சாமி மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநில பொதுசெயலாளர் ரவிச்சந்திரன் வேலை அறிக்கை வாசித்தார். மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம், சின்ராசு, ராஜேந்திரன், சங்கரபாண்டி, மாநில செயலாளர்கள் சிவானந்தன், சென்னியப்பன், ராஜமாணிக்கம் உட்பட பலர் பேசினர்.
இதில் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். காலியாக உள்ள 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர் பணியிடங்களை இளைஞர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். பணிக்காலத்தில் இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். தர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அரசு பணியிடங்களை ஒழித்திட வகை செய்யும் பணியாளர் சீரமைப்பு குழுவை கலைக்கவேண்டும். சீருடை, சலவைப்படி, விபத்துப்படி, சைக்கிள் படி வழங்கவேண்டும். வேகமாக வளர்ச்சியடைந்துவரும் பெரம்பலூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். மேகதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் தன்னிச்சையான நடவடிக்கையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லாதவாறு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகியவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- அடுத்தடுத்த வீடுகளில் தொடர் திருட்டு சம்பவத்தால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- 14 பவுன் நகை திருடு போய் இருப்பது தெரியவந்தது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் அருகே 2 இடங்களில் பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே. புதூர் கிராமம், நடுத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி ஜெயமணி. காலை வீட்டை பூட்டிவிட்டு பாண்டியனும், ஜெயமணியும் கூலி ஆட்களை அழைத்துக் கொண்டு வயலில் சின்ன வெங்காய நடவு பணிக்காக சென்றுவிட்டனர்.
மதியம் வீட்டிற்கு வந்த ஜெயமணி வீட்டின் கதவு பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் வயலில் உள்ள கணவரை வீட்டுக்கு அழைத்து வந்து பார்த்த பொழுது பீரோவின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 14 பவுன் நகை திருடு போய் இருப்பது தெரியவந்தது.
தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் கைரேகை நிபுணர்களடன் சம்பவஇடத்திற்கு சென்று பார்வையிட்டு கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர், இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் கே.கே நகரை சேர்ந்தவர் சிவா(வயது27). இவர் நாரணமங்கலத்தில் உள்ள எம்ஆர்எப் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார், காலையில் சிவா தனது மனைவி அழகுராணியுடன் காய்கறி வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை வீட்டின் மாடத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
சுமார் ஒரு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்து பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது டேபிள் மேல் வைத்திருந்த 2 பவுன் செயின், அரை பவுன் மோதிம், ஒரு செல்போன் ஆகியவை காணமல் போனது தெரியவந்தது.
அவரது வீட்டின் அருகில் சிசிடிவி கேமரா பதிவை பார்த்தபோது இரண்டு பெண்கள் வந்து சாவியை எடுத்து வீட்டை திறந்து திருடிச்சென்றது தெரியவந்தது. அந்த இரண்டு பெண்கள் அந்த தெருவில் சுற்றி வந்ததும் தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட 2 பெண்களை தேடிவருகின்றனர்.
- கல்லாற்றில் பாலம் அமைக்க வேண்டும் என்று ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- அக்னி பாத் எனும் திட்டத்தை கைவிடவேண்டும்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் ம.தி.மு.க. கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளரும், எம்எல்வுமான சின்னப்பா தலைமையில் நடந்தது. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ரோவர் வரதராஜன், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர் சேர்க்கை மேற்பார்வையாளரும், தேர்தல் பணிக்குழு துணை செயலாளருமான செந்தில் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி, சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் பொருட்டு தமிழக அரசின் சட்டப்போராட்டத்திற்கு மதிமுக தொடர்ந்து ஆதரவு அளிப்பது,
அக்னி பாத் எனும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துதல், இயற்கை சூழலை சீரழித்து வரும் சீமை கருவேல மரங்களை அகற்றி மண் வளத்தை காத்திட வேண்டும், அகரம்- தைக்கால் இடையே உள்ள கல்லாற்றில் பாலம் அமைக்கவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாவட்ட பொருளாளர் ஜெயசீலன் வரவேற்றார். முடிவில் மாவட்ட துணை செயலாளர் பேரளி சரவணன் நன்றி கூறினார்.
- வெங்காய குடோன் எரிந்து சேதமானது
- 60 மூட்டை சின்ன வெங்காயம் இருந்தது
பெரம்பலூர் :
பெரம்பலூர் அருகே லாடபுரத்தில் மர்ம நபர் தீவைத்ததால் வெங்காய குடோன் எரிந்து சாம்பலானது.
பெரம்பலூர் அருகே லாடபுரம் 1 வது வார்டு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மகன் ரவி (வயது45). இவர் லாடபுரம் பஸ் ஸ்டாப் அருகில் கீத்துக் கொட்டாயால் ஆன வெங்காய குடோன் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அதிகாலை 2 மணி அளவில் குடோன் தீப்பற்றி எரிந்து. தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மேலும் தீபாரவாமல் தடுத்து அனைத்தனர்.
இந்த வெங்காய குடோலின் 60 மூட்டை சின்ன வெங்காயம் இருந்தது. 2 தராசுகள் மற்றும் 100 காலி சாக்குகள் எல்லாம் தீயில் கருகின. தீ விபத்தால் ஒரு லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து தீவைத்த மர்ம நபரை தேடிவருகின்றனர்.






