என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • அரசு இ-சேவா மற்றும் பொதுசேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
    • நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது:

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கும் வகையில் ஆண்டு நேர்காணல் செய்யப்பட வேண்டும்.

    கொரோனா பெறும் தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டிற்கான நேர்காணல் நடைபெறாத நிலையில் தற்போது அரசாணை நிலை எண் படி ஓய்வூதியர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பின்வரும் ஏதேனும் ஒருமுறையை பின்பற்றி இவ்வாண்டிற்கான (2022-23) நேர்காணல் செய்து கொள்ள வேண்டும்.

    மின்னணு வாழ்நாள் சான்று தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் நேரில் கருவூலத்திற்கு வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக ஓய்வூதியர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு சேவை முறையை பின்பற்றி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

    அரசு இ-சேவா மற்றும் பொதுசேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். அல்லது ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். கருவூல முகாம் இலவச சேவையை பயன்படுத்தி இணையதள மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

    இணையதளத்தில் பதிவிறக்கம் மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள் ஆதார் எண், பி.பி.ஒ. எண், வங்கி கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் போன்ற விவரங்களை அளிக்க வேண்டும். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றினை www.tn.gov.in/karuvoolam/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ஓய்வூதியர் வங்கி கணக்கு உள்ள வங்கியின் கிளைமேலாளர் (அல்லது) அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது) தாசில்தார், துணை தாசில்தார் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலமாக தொடர்புடைய கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

    வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் இருந்து வாழ்வு சான்றிதழை பதிவிறக்கம் செய்து இந்திய தூதரக அலுவலர், மாஜிஸ்திரேட், நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பலாம். குறைபாடுகள் இருப்பின்... மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

    ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணலில் ஏதும் குறைபாடுகள் இருப்பின் தொடர்புடைய மாவட்டக்கருவூல அலுவலர் அல்லது மண்டல இணை இயக்குனர் அல்லது சென்னை கருவூல கணக்குத்துறை ஆணையரகம், பேராசிரியர் அன்பழகன் மாளிகை, 3-வது தளம், சென்னை- 600036 என்ற முகவரிக்கோ, dta.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 044-24321761, 044-24321764, 044-24321765 என்ற தொலைபேசி எண்களுக்கோ அல்லது திருச்சி மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தை rjdtry@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 0431-2414046 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவித்து பயன்பெறலாம். மேலும் அரியலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் அரியலூர் கருவூலத்தினை 04329-228910 என்ற தொலைபேசி எண்ணிலும், dtoari.tndta@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்,

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரம்பலூர் அருகே விவசாயிகள் பணம் செலுத்தியும் விவசாயிகளின் நிலத்தை அளந்து கொடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்பட்டது
    • வருவாய் ஆய்வாளர் பணியில் இருக்கிறாரா, இல்லையா என்ற சந்தேகம் பொதுமக்களிடம் உள்ளது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வரகூர் பிர்கா எல்லைக்கு உட்பட்ட ஓலைப்பாடி கிராமத்தில் சார்ந்த ராமலிங்கம் என்பவர் தனக்கு சொந்தமான ஓலைப்பாடி கிழக்கு பகுதி நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் அன்று ரூ.800 பணம் செலுத்தி உள்ளார்

    மீண்டும் இந்த மாதம் 12-ந்தேதியன்று ரூ.400 பணம் செலுத்தி அளந்து கொடுக்க சொல்லியுள்ளார். ஆனால் சர்வேயர் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதேபோல் அப்பகுதியை சார்ந்த சாவித்திரி என்பவர் ஓலைப்பாடி கிழக்கு பகுதியில் நிலத்தை அளக்க கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணம் செலுத்தி தனது நிலத்தை அளந்து காட்ட வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.

    இருந்தபோதலும் எந்த நடவடிக்கையும் இல்லாததை தொடர்ந்துகடந்த 1.10.2021 அன்று மீண்டும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். அவருக்கும் எந்த அதிகாரியும் வந்து அளந்து கொடுக்கவில்லை.

    வருவாய் ஆய்வாளர் பணியில் இருக்கிறாரா, இல்லையா என்ற சந்தேகம் பொதுமக்களிடம் உள்ளது. இவர்கள் மட்டுமின்றி இப்பகுதியில் பல விவசாயிகள் தங்கள் நிலத்தை அளந்து காட்டவேண்டும் என்று அரசுக்கு பணம் கட்டி மனு கொடுத்து காத்திருந்த வண்ணமே உள்ளனர்.

    ஆனால் நடவடிக்கை மட்டும் எடுத்தது இல்லை. இது சம்மந்தமாக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குன்னம் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    வரகூர் பிர்காவில் உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஏழை எளிய விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் வண்ணம் அவர்கள் நிலத்தினை உடனே அளந்து கொடுக்க கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் குன்னம் வட்டாட்சியர் என மாறி மாறி மனு கொடுத்து வருகின்றனர்.

    இவர்களின் குறையை மாவட்ட நிர்வாகம் ஆராய்ந்து அவர்களின் நிலத்தினை அளந்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • போட்டியில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
    • போட்டியில் அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கும் பரிசு தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டன

    பெரம்பலூர் நரிக்குறவர் சமுதாய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை ஊராட்சிக்குட்பட்ட மலையப்ப நகரில் நடந்தது.

    இந்த போட்டியில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    இதையடுத்து, போட்டியில் முதலிடத்தை பிடித்த கள்ளக்குறிச்சி மாவட்டம், மாடம்பூண்டி அணிக்கு ரூ.10 ஆயிரமும், 2-ம் இடத்தை பிடித்த பெரம்பலூர் மாவட்டம், எறையூர் அணிக்கு ரூ.5 ஆயிரமும், 3-ம் இடத்தை பிடித்த கோவை மாவட்டம், காரமடை அணிக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் மற்றும் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.

    மேலும் போட்டியில் அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கும் பரிசு தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டன.

    • பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் அனைவரும் இலவச பஸ் பயண அட்டையை பயன்படுத்துகின்றனர்.
    • இது பற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா விராலிபட்டி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் செட்டிகுளம் கிராமத்திற்கு சென்று பயின்று வருகின்றனர்.

    பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் அனைவரும் இலவச பஸ் பயண அட்டையை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் பள்ளி மாணவர்கள் செல்லும் அரசு பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பள்ளி நேரத்தில் பஸ் இயக்கக்கோரி புதுவிராலிபட்டி பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள், பயிற்சி இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்
    • ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    பெரம்பலூர் பள்ளி, கல்லூரி விடுதிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கான 16 பள்ளி விடுதிகள், 2 கல்லூரி, பாலிடெக்னிக் விடுதிகள் மற்றும் மாணவிகளுக்கு 10 பள்ளி விடுதிகள், 6 கல்லூரி, பாலிடெக்னிக் விடுதிகள் என மொத்தம் 34 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ-மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் பயிலும் மாணவ-மாணவிகள் சேர்க்க தகுதியுடையவர்கள் ஆவர்.

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ-மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர். அனைத்து விடுதி மாணவ-மாணவிகளுக்கும் உணவு மற்றும் தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள், பயிற்சி இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

    ஆண்டு வருமானம் பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    இந்த தகுதியுடைய மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் இருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 21-ந்தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை வருகிற 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இலங்கை தமிழர்கள் மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும் பொழுதும் அளிக்கலாம். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக் கொள்ளவும், அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கிபயில அனுமதிக்கப்படும். எனவே, மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூரில் அமைந்துள்ள தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது
    • புராண காலத்தில் பாண்டவர்கள் பயன்படுத்திய கலை நுணுக்கத்துடன் கூடிய வேலைப்பாடுகளை நினைவூட்டும் வகையில் திரிசூலம் அமைக்கப்பட்டுள்ளது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூரில் தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான காவிரியின் வடபுறம் அமைந்துள்ளது ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில். கி.பி. 1800 ஆம் ஆண்டுகளில் செங்கற்களால் இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் காலப்போக்கில் கோவில் சிதலமடைந்தது. இதனால் பூலாம்பாடி பேரூர் கிராம மக்களும், பக்தர்களும் பெரிதும் கவலை அடைந்தனர்.

    இதையடுத்து 2015-ல் விநாயகர் சதுர்த்தி அன்று கோவிலை புனரமைக்க பூர்வாங்க பணிகளை தொடங்கினர். ஆனால் அப்போது நிலவிய கடும் வறட்சி புனரமைப்பு பணிக்கு முட்டுக்கட்டையானது.

    இந்த நிலையில் புனரமைப்பு குழுவினர் ஒருவரின் கனவில் அம்மன் தோன்றி கோவில் புனரமைப்பை முன்னெடுத்துச் செல்ல தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ் குமாரை அடையாளம் காட்டி மறைந்தார்.

    உடனே புனரமைப்பு குழுவினர் அவரைத் தேடி சென்றனர். ஏற்கனவே கடல் கடந்து வெளிநாடுகளில் பல தொழில்கள் செய்து வரும் அவர் பூலாம்பாடி பேரூர் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இருப்பினும் அம்மன் அருள் வாக்குப்படி பிரகதீஷ் குமார் கோவிலை புனரமைக்கவும் ஒப்புக் கொண்டார்.

    இந்த கோவில் கும்பாபிஷேகத்தில் ஊர் மக்களின் பங்களிப்பும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று பிரகதீஷ் குமார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஊர் மக்களிடம் நன்கொடை வசூல் செய்யப்பட்டன.

    இருந்த போதிலும் அந்தத் தொகை மலைக்கும் மடுவுக்கும் ஆன வித்தியாசமாக இருந்தது. இதனை அவரது கவனத்திற்கு கொண்டு சென்றபோது, தேவையான பொருள் செலவினை தானே ஏற்றுக் கொள்வதாக கூறி திருக்கடையூர் உலக புகழ்பெற்ற ஸ்தபதி கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து கோவில் புனரமைப்பு பணிகளை ஒப்படைத்தனர். இவர் கடந்த 40 ஆண்டுகளாக சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, மியான்மர் போன்ற நாடுகளில் கோவில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    தற்போது திருப்பணிகள் பூர்த்தி அடைந்துள்ளன. 5 கலசங்களுடன் ராஜகோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. இதில் 126 சிலைகள் இடம்பெற்றுள்ளது.மேலும் பித்தளை கவசம் பொருத்திய கொடிமரமும் நிறுவப்பட்டுள்ளது.

    இங்கு மூலவராக திரவுபதியம்மன் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மேலும் தென்மேற்கே செல்வ விநாயகரும், வடமேற்கே தர்மராஜா சுவாமியும் அருள்பாலிக்கின்றனர்.

    அதுமட்டுமல்லாமல் புராண காலத்தில் பாண்டவர்கள் பயன்படுத்திய கலை நுணுக்கத்துடன் கூடிய வேலைப்பாடுகளை நினைவூட்டும் வகையில் திரிசூலம் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணருக்கு தனி சன்னதியும்.

    வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் திரௌபதி அம்மன் முக்காலமும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக அரணாக இருந்து வருகிறார். இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பொங்கல் மற்றும் தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் சக்தி அழைத்தனின் போது ஆண்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள்.

    கோவில் திருப்பணிகள் முழுமை அடைந்ததை எடுத்து பூலாம்பாடி ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் புனராவர்த்தன நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா திருக்குட நன்னீராட்டு பெருவிழா வருகிற 6-ந்தேதி வளர்பிறையில் நடத்த உத்தேசிக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 4-ந்தேதி காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஆகிய சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. அதன் பின்னர் மாலை முதல் காலை யாக பூஜை, தீபாராதனை ஆகியவை நடக்கிறது. இதையடுத்து 5-ந்தேதி காலை இரண்டாம் காலை யாக பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜை , பிம்ப பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாத்துதல், தீபாராதனை ஆகியவை நடத்தப்படுகிறது.

    கும்பாபிஷேகம் நடைபெறும் 6-ந்தேதி புதன்கிழமை அன்று அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் காலை யாக பூஜை நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக காலை 6 மணிக்கு மகா பூர்ணாகுதி கும்பங்கள் புறப்பட்டு ஆலயம் வலம் வருதல் நடக்கிறது. தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா காலை 6.45 மணி முதல் 7.25 மணிக்குள் நடைபெறுகிறது. இதில் விமானம் ராஜகோபுரம், மூலாலய மூர்த்தி கும்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ் குமார் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

    • பெரம்பலூர், கடலூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் திருவாளந்துறை- திருக்கல்பூண்டி உயர்மட்ட பாலம் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    • இந்த மேம்பாலம் அமைவதன் மூலம் பெரம்பலூர், கடலூர் ஆகிய 2 மாவட்டங்களையும் சேர்ந்த 20-க்கும் அதிகமான கிராமங்களுக்கு மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கும் பயண தொலைவு, நேரம், அலைச்சல், எரிபொருள், செலவினம் ஆகியன மிச்சமாகும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் திருவாளந்துறை மற்றும் கடலூர் மாவட்டம் திருக்கல்பூண்டி இடையே வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

    அதேபோல் ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலின்போதும் இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மறக்காமல் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தொடர்ந்து வாக்குறுதி அளித்து வருவதும் காலம் காலமாய் இருக்கிறது.

    அரசியல கட்சிகள் சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையிலும் திருவாளந்துறை-திருக்கல்பூண்டி இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி இடம்பெறாமல் இருந்ததில்லை. ஆனாலம் தற்போது வரை அந்த திட்டம் கண்டுகொள்ளப்படாமலேயே இருந்து வருகிறது.

    பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் இந்த உயர்மட்ட பாலம் திட்டம் குறித்து பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2017 ம் ஆண்டு நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, பெரம்பலூர்-கடலூர் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் திருவாளந்துறை-திருக்கல் பூண்டி இடையே வெள்ளாற்றின் குறுக்கே ரூ.14 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

    ஆனால் அந்த திட்டம் இதுவரை தொடங்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இதுகுறித்து ம.தி.மு.க. மாணவர் மன்ற மாநில துணை அமைப்பாளர் தமிழருண் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள திருவாளந்துறை, இனாம், அகரம், வி.களத்தூர் உள்ளிட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு வேலைகள் நிமித்தமாக வெள்ளாற்றின் மறுகரையில் உள்ள கடலூர் மாவட்டத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.

    அதே போல கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திருவாளந்துறை கிராமத்தில் வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள பிரசித்த பெற்ற தோலீஸ்வரர் கோவிலில் வழிபடவும், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் மற்றும் பல்வேறு ேதவைகளுக்காகவும் வந்து செல்கின்றனர்.

    வெள்ளாற்றில் தண்ணீர் இல்லாத போது இரு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ஆற்றில் இறங்கி நடந்தும் இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலமாகவும் மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து லெ்கின்றனர்.

    ஆனால் ஆற்றில் தண்ணீர் இருந்தால் 18 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே திருவாளந்துறை-திருக்கல்பூண்டி இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதனிடையே 2017-ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்த திட்டம் இன்றளவும் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில் உள்ளது.

    இதையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த மேம்பாலம் கட்டும் பணியின் நிலை குறித்து பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளரிடம் கேட்டதற்கு கடந்த 2021 ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி பதில் வரப்பெற்றது. அதில் ரூ.10.34 கோடியில் மேம்பாலம் கட்டுவதற்கு திருச்சி கோட்ட நெடுஞ்சாலைத் துறையினரால் திட்ட அறிக்கைத் தயாரித்து அரசின் நிர்வாக அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் நிர்வாக அனுமதி கிடைத்தவுடன் டெண்டர் விடப்பட்டு பணிகள் ெதாடங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த மேம்பாலம் அமைவதன் மூலம் பெரம்பலூர், கடலூர் ஆகிய 2 மாவட்டங்களையும் சேர்ந்த 20-க்கும் அதிகமான கிராமங்களுக்கு மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கும் பயண தொலைவு, நேரம், அலைச்சல், எரிபொருள், செலவினம் ஆகியன மிச்சமாகும்.

    எனவே 2 மாவட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு திருவாளந்துறை-திருக்கல்பூண்டி இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணியை அரசு உடனே தொடங்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    • பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.
    • கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் செல்போன் பழுதுநீக்குதல் மற்றும் சேவை தொழிற்பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது

    பயிற்சியின் கால அளவு 30 நாட்கள். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

    இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை, வங்கி புத்தகம் ஆகியவற்றின் நகல் 2 , பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3 ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து ஜூன் 30ம் தேதி நடக்கவிருக்கும் நுழைவு தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம்,ஷெரீப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328-277896, என்ற எண்ணிலோ +91 9488840328 தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

    • கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 5ம்தேதி விழுப்புரம் அருகே லோடு ஆட்டோ சென்றபோது விபத்து ஏற்பட்டு அதில் லோகநாதன் இறந்தார்.
    • லோகநாதனின் விபத்து காப்பீட்டு இன்சூரன்ஸ் தொகை வழங்ககோரி அவரது குடும்பத்தினர்களாக சம்பூர்ணம் மற்றும் அவரது பிள்ளைகளான செல்லம்மாள், ராஜா, சரோஜா, சதீஸ் ஆகியோர் பெரம்பலூரில் உள்ள பைனான்ஸ் கம்பெனி லிமிடேட்டை அணுகினர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி சம்பூர்ணம்(வயது47), இவரது மகள் செல்லம்மாள் (27), மகன் ராஜா(24), மகள் சரோஜா (21), மகன் சதீஸ் (18) ஆகியோர் கடந்த 2010ம் ஆண்டு லோகநாதன் தொழில் செய்வதற்காக சோழமண்டலம் முதலீடு மற்றும் பைனான்ஸ் கம்பெனியில் கடன் பெற்று லோடு ஆட்டோ வாங்கினார். அப்போது லோகநாதன் பெயரில் ரூ. 2 லட்சத்து 98 ஆயிரத்து 337 க்கு தனி நபர் விபத்து காப்பீடு செய்யப்பட்டு அதற்கான பத்திரத்திரத்தை சோழமண்டலம் பைனான்ஸ் வழங்கியிருந்தது.

    இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 5ம்தேதி விழுப்புரம் அருகே லோடு ஆட்டோ சென்றபோது விபத்து ஏற்பட்டு அதில் லோகநாதன் இறந்தார். இது குறித்து முண்டியபாக்கம் போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.

    லோகநாதனின் விபத்து காப்பீட்டு இன்சூரன்ஸ் தொகை வழங்ககோரி அவரது குடும்பத்தினர்களாக சம்பூர்ணம் மற்றும் அவரது பிள்ளைகளான செல்லம்மாள், ராஜா, சரோஜா, சதீஸ் ஆகியோர் பெரம்பலூரில் உள்ள சோழமண்டலம் முதலீடு மற்றும் பைனான்ஸ் கம்பெனி லிமிடேட்டை அணுகினர். ஆனால் அதற்கு இன்சூரன்ஸ் தொகை வழங்க சோழமண்டலம் பைனான்ஸ் கிளை மேலாளர் மறுத்துள்ளார். இதை தொடர்ந்து சென்னை சோழமண்டல பைனான்ஸ் கிளை மேலாளர் மற்றும் பொதுமேலாளர் ஆகியோரிடம் முறையிட்டும் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படவில்லை.

    இதனால் மனஉளைச்சல் அடைந்த சம்பூர்ணம் மற்றும் அவரது பிள்ளைகளான செல்லம்மாள், ராஜா, சரோஜா, சதீஸ் ஆகியோர் தங்களுக்கு வழங்கவேண்டிய விபத்து காப்பீட்டு தொகையை பெரம்பலூரில் உள்ள சோழமண்டலம் முதலீடு மற்றும் பைனான்ஸ் கம்பெனியிடமிருந்து பெற்றுத்தரக்கோரி கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம்தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த கோர்ட் தலைவரும், நீதிபதியுமான ஜவஹர் மற்றும் கோர்ட் உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, சேவை குறைபாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் சம்பூர்ணம் மற்றும் அவரது பிள்ளைகளான செல்லம்மாள், ராஜா, சரோஜா, சதீஸ் ஆகியோருக்கு இன்சூரன்ஸ் தொகையான ரூ.2 லட்சத்து 98 ஆயிரத்து 337 மற்றும் மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக

    ரூ. 1 லட்சமும், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் 4 லட்சத்து 8ஆயிரத்து 337 ரூபாயை சோழமண்டம் முதலீடு மற்றும் பைனான்ஸ் கம்பெனியின் மேலாளர், கிளை மேலாளர், பொதுமேலாளர் ஆகியோர் 45 நாட்களுக்குள் வழங்கவேண்டும், இல்லையென்றால் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து 9 சதவீத வட்டியுடன் தொகையை வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.

    • தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்புற வங்கிகள் மூலம் நடப்பு 2022-2023ம் நிதியாண்டில் ரூ. 4 ஆயிரத்து 267 கோடி கடன வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • இந்த நிதியாண்டிற்கான கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்திற்கு 81 சதவீதமும், சிறு, குறு தொழிலுக்கு 10 சதவீதமும், இதர முன்னுரிமை கடன்களுக்கு 9 சதவீதமும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கிகள் ஆலோசனை குழு ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை வகித்து கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசுகையில்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்புற வங்கிகள் மூலம் நடப்பு 2022-2023ம் நிதியாண்டில் ரூ. 4 ஆயிரத்து 267 கோடி கடன வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் விவசாய கடன்களுக்காக ரூ.3 ஆயிரத்து 470 கோடியும், சிறு, குறு தொழில்களுக்கு ரூ.450 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ. 347 கோடியும் கடனாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ 147 கோடி ரூபாய் வங்கிகளுக்கு கூடுதலான இலக்கு நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிதியாண்டிற்கான கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்திற்கு 81 சதவீதமும், சிறு, குறு தொழிலுக்கு 10 சதவீதமும், இதர முன்னுரிமை கடன்களுக்கு 9 சதவீதமும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடன் திட்ட அறிக்கையின்படி அனைத்து வங்கிகளும் இலக்கினை அடைய முழுவீச்சில் செயல்படவேண்டும். வங்கியாளர்கள் அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட்டு மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தெரிவித்தார்.

    கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மண்டல உதவி பொதுமேலாளர் கோடிஸ்வராவ், முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் பிரபாகரன், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ஆனந்தி மற்றும் அனைத்து வங்கி கிளை மேலாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
    • வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    பெரம்பலூர்:

    சமுதாய வளர்ச்சிக்கு பயன்படும் வகையிலான நூல்கள் எழுதும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிட கிறிஸ்தவர், பழங்குடியினர் பிரிவை சார்ந்த 10 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் என மொத்தம் 11 எழுத்தாளர்களுக்கு உதவித்தொகையாக ரூ.1 லட்சம் வழக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப்படும் நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர் அந்த நூலினை வெளியிடுவதற்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் தங்களின் பெயர், முகவரி, படைப்பின் பொருள் விண்ணப்பங்கள் மற்றும் படைப்பின் 2 பிரதிகள் போன்ற விவரங்களுடன் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், பெரம்பலூர்- 621112 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்."

    • கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த வாலிபர் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இறந்தவர் யார்?, என விசாரணை

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, திம்மூர் கிராமத்தில் பச்சமுத்து என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில நேற்று மாலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்தது. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×