என் மலர்
நீங்கள் தேடியது "AMMAN TEMPLE KUMBABISHEKAM"
- பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூரில் அமைந்துள்ள தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது
- புராண காலத்தில் பாண்டவர்கள் பயன்படுத்திய கலை நுணுக்கத்துடன் கூடிய வேலைப்பாடுகளை நினைவூட்டும் வகையில் திரிசூலம் அமைக்கப்பட்டுள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூரில் தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான காவிரியின் வடபுறம் அமைந்துள்ளது ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில். கி.பி. 1800 ஆம் ஆண்டுகளில் செங்கற்களால் இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் காலப்போக்கில் கோவில் சிதலமடைந்தது. இதனால் பூலாம்பாடி பேரூர் கிராம மக்களும், பக்தர்களும் பெரிதும் கவலை அடைந்தனர்.
இதையடுத்து 2015-ல் விநாயகர் சதுர்த்தி அன்று கோவிலை புனரமைக்க பூர்வாங்க பணிகளை தொடங்கினர். ஆனால் அப்போது நிலவிய கடும் வறட்சி புனரமைப்பு பணிக்கு முட்டுக்கட்டையானது.
இந்த நிலையில் புனரமைப்பு குழுவினர் ஒருவரின் கனவில் அம்மன் தோன்றி கோவில் புனரமைப்பை முன்னெடுத்துச் செல்ல தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ் குமாரை அடையாளம் காட்டி மறைந்தார்.
உடனே புனரமைப்பு குழுவினர் அவரைத் தேடி சென்றனர். ஏற்கனவே கடல் கடந்து வெளிநாடுகளில் பல தொழில்கள் செய்து வரும் அவர் பூலாம்பாடி பேரூர் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இருப்பினும் அம்மன் அருள் வாக்குப்படி பிரகதீஷ் குமார் கோவிலை புனரமைக்கவும் ஒப்புக் கொண்டார்.
இந்த கோவில் கும்பாபிஷேகத்தில் ஊர் மக்களின் பங்களிப்பும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று பிரகதீஷ் குமார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஊர் மக்களிடம் நன்கொடை வசூல் செய்யப்பட்டன.
இருந்த போதிலும் அந்தத் தொகை மலைக்கும் மடுவுக்கும் ஆன வித்தியாசமாக இருந்தது. இதனை அவரது கவனத்திற்கு கொண்டு சென்றபோது, தேவையான பொருள் செலவினை தானே ஏற்றுக் கொள்வதாக கூறி திருக்கடையூர் உலக புகழ்பெற்ற ஸ்தபதி கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து கோவில் புனரமைப்பு பணிகளை ஒப்படைத்தனர். இவர் கடந்த 40 ஆண்டுகளாக சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, மியான்மர் போன்ற நாடுகளில் கோவில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது திருப்பணிகள் பூர்த்தி அடைந்துள்ளன. 5 கலசங்களுடன் ராஜகோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. இதில் 126 சிலைகள் இடம்பெற்றுள்ளது.மேலும் பித்தளை கவசம் பொருத்திய கொடிமரமும் நிறுவப்பட்டுள்ளது.
இங்கு மூலவராக திரவுபதியம்மன் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மேலும் தென்மேற்கே செல்வ விநாயகரும், வடமேற்கே தர்மராஜா சுவாமியும் அருள்பாலிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் புராண காலத்தில் பாண்டவர்கள் பயன்படுத்திய கலை நுணுக்கத்துடன் கூடிய வேலைப்பாடுகளை நினைவூட்டும் வகையில் திரிசூலம் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணருக்கு தனி சன்னதியும்.
வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் திரௌபதி அம்மன் முக்காலமும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக அரணாக இருந்து வருகிறார். இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பொங்கல் மற்றும் தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் சக்தி அழைத்தனின் போது ஆண்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள்.
கோவில் திருப்பணிகள் முழுமை அடைந்ததை எடுத்து பூலாம்பாடி ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் புனராவர்த்தன நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா திருக்குட நன்னீராட்டு பெருவிழா வருகிற 6-ந்தேதி வளர்பிறையில் நடத்த உத்தேசிக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 4-ந்தேதி காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஆகிய சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. அதன் பின்னர் மாலை முதல் காலை யாக பூஜை, தீபாராதனை ஆகியவை நடக்கிறது. இதையடுத்து 5-ந்தேதி காலை இரண்டாம் காலை யாக பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜை , பிம்ப பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாத்துதல், தீபாராதனை ஆகியவை நடத்தப்படுகிறது.
கும்பாபிஷேகம் நடைபெறும் 6-ந்தேதி புதன்கிழமை அன்று அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் காலை யாக பூஜை நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக காலை 6 மணிக்கு மகா பூர்ணாகுதி கும்பங்கள் புறப்பட்டு ஆலயம் வலம் வருதல் நடக்கிறது. தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா காலை 6.45 மணி முதல் 7.25 மணிக்குள் நடைபெறுகிறது. இதில் விமானம் ராஜகோபுரம், மூலாலய மூர்த்தி கும்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ் குமார் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.






