என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • விபத்தில் மரணமடைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
    • கடந்த 10-ந்தேதி மூளைச்சாவு அடைந்தார்

    பெரம்பலூர்:

    திருச்சி புத்தூர் பாத்திமா தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 65). இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி மாவட்ட குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிற்சங்க தலைவர், ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்து வந்தார்.கடந்த மாதம் 30-ந்தேதி மகேந்திரன் தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழக்குடிகாடு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு திருமாந்துறையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த ஷேர் ஆட்டோ மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து கடந்த 10-ந்தேதி மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் விருப்பத்தின் பேரில், மகேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதில் அவரது கண்கள், இருதயம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள், தானமாக வழங்கப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்படுகிறது. மேற்கண்ட விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
    • தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

    பெரம்பலூர்:

    தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெரம்பலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திருவிழா நாட்கள், நீண்ட அரசு விடுமுறை நாட்கள் வரும்போதெல்லாம் கூடுதல் அரசு பஸ்களை இயக்கி பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தற்போது 3 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு கூடுதலாக அரசு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 500 முதல் 1,000 அரசு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.

    இந்த விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்களில் கூடுதலாக கட்டணங்கள் வசூல் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே போக்குவரத்துத்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    போக்குவரத்துத்துறை சார்பில் இணை போக்குவரத்து ஆணையர், துணை போக்குவரத்து ஆணையர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்ட குழு கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். கடந்த ஆண்டு இது போன்று புகார் வந்தபோது நானே நேரடியாக சென்று ஆய்வு செய்தேன். அதன் பிறகு கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை பொதுமக்களுக்கு திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கூடுதலாக கட்டணங்கள் வசூல் செய்யப்பட்ட ஆம்னி பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களில் கூடுதலாக கட்டணங்கள் வசூல் செய்தால் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • செல்போன் கடை ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த செல்போன் கடை ஊழியர் வினோத்தை கொலை செய்த வழக்கில் ஏற்கனவே 18 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அதில் பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு முத்து நகரை சேர்ந்த வீராசாமியின் மகன் பப்லு என்ற சத்தியமூர்த்தியை (வயது 24) நேற்று போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ஓடும் பஸ்சில் பயணியிடம் 2 பெண்கள் சங்கிலியை பறித்தனர்
    • போலீசில் ஒப்படைத்தனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூருக்கு நேற்று மாலை ஒரு அரசு டவுன் பஸ் பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது எசனை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது ஒரு பெண் பயணியின் அருகே இருந்த 2 பெண்கள் சேர்ந்து தங்க சங்கிலியை பறித்துள்ளனர். இதனை கண்ட அந்த பெண், சக பயணிகள் உதவியுடன் அந்த 2 பெண்களையும் கையும், களவுமாக பிடித்து, அவர்களிடம் இருந்து சங்கிலியை கைப்பற்றி பெரம்பலூர் போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தார். பின்னர் அவர்களை போலீசார் அழைத்து சென்றனர். அந்த பெண் பயணி புகார் தராததால், அந்த 2 பெண்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகையிலை பொருட்களை விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • மளிகை கடை நடத்தி வருகிறார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 32). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக வி.களத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவரது கடையில் நடத்திய சோதனையில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 6 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லோகேஸ்வரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • அன்னை சித்தர் 2ம் ஆண்டு குரு பூஜை விழா நடைபெற்றது
    • அறக்க–ட்டளை நிர்வாகஅறங்கா–வலர் தலைமை வகித்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே–யுள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகளின் இரண்டாமாண்டு குருபூஜை விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு, அறக்க–ட்டளை நிர்வாகஅறங்கா–வலர் மாதாஜி ரோகிணி ராஜ்குமார் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் தவயோகி சுந்தரமாகலிங்க சுவாமிகள், தவத்திருதவ–யோகி தவசிநாதன் சுவாமி–கள் முன்னிலை வகித்தனர். சன்மார்க்க அன்பர்களால் அகவல் பாராயணமும், சிவனடியார்களால் திருமுறை பாராயணமும் செய்யப்பட்டது.

    தொடர்ந்து, கோபூஜை, அஸ்வ பூஜை, 210 சித்தர்கள் யாக பூஜை நடத்தப்பட்டு, 1,000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் சாதுக்களுக்கு அன்னதானமும், வஸ்திர தானமும் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, அறக்க–ட்டளை சார்பில்மாவட்ட அரசு தலைமை மருத்துவ–மனைக்கு இணைஇயக்குநர் அசோகனிடம், சிவகாசி தொழிலதிபர் அதிபன் போஸ், சிங்கப்பூர் மெய்ய–ன்பர் பாபாஜி, சிங்கப்பூர் தொழிலதிபர் கண்ணப்ப செட்டியார், ஓய்வுபெற்ற இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவகுமார், மருத்துவர் ராஜாசிதம்பரம், சன்மார்க்க சங்க மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜன், சிவசேனா கட்சி மாநில செயல் தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலையில் உயிர்காக்கும் கருவி வழ–ங்கப்பட்டது.

    விழாவையொட்டி, மலையூர் சதாசிவம், திருக்கோ–விலூர் ஜீவஸ்ரீனிவாசன் ஆகியோரின் திருவருள்பா கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், தொழிலதிபர் பி.டி. ராஜன், தஞ்சை சண்முகம், திரைப்பட இயக்குநர் திருமலை, திரைப்பட இணை இயக்குநர் ஜெயதீபன், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத் துணைத் தலைவர் சுவாமி ராமானந்தா, பெங்களூரைச் சேர்ந்த பாலமுரளி, சென்னையைச் சேர்ந்த பள்ளி தாளாளர் கோமதி அம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை மகா சித்தர்கள் கோயில் நிர்வாகி மாதாஜி ராதா சின்னசாமி, சன்மார்க்க மெய்யன்பர் கிஷோர்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • செட்டிகுளம் அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கினர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், செட்டிக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி, பெரம்பலூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பினர் சார்பில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பொன்னுதுரை (பொறுப்பு) தலைமை வகித்தார்.ஜூனியர் ரெட் கிராஸ் பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் ஜோதிவேல், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் தெய்வானை, லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பாடாலூர் காவல் நிலைய தலைமை காவலர் உதயகுமார் கலந்து கொண்டு கஞ்சா, மது, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், அதன் மூலம் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்னைகள் பற்றி மாணவரிடம் எடுத்துரைத்தார்.

    மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர்.தொடர்ந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் பெரம்பலூர் மாவட்ட கௌரவ செயலாளர் ஜெயராமன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பள்ளி மாணவ, மாணவியர்கள் போதை பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும், பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கியும், பதாகை ஏந்தியவாறு பள்ளியில் தொடங்கி சார்பதிவாளர் அலுவலகம்,தபால் நிலைய அலுவலகம், வங்கிகள் வழியாக தொடங்கிய இடத்தில் பேரணி நிறைவு பெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கலாதங்கராசு,பேரிடர் மேலாண்மை மாநில கருத்தாளர் பாஸ்கர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் விஜய்அரவிந்த் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பள்ளி தொழிற் கல்வி ஆசிரியரும்,ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளருமான ராதாகிருஷ்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தார். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரஞ்சித்குமார் வரவேற்றார். நிறைவாக, சாரணர் சாரணியர் இயக்கத்தின் வேப்பூர் கல்வி மாவட்ட செயலாளர் தனபால் நன்றி கூறினார்.

    • நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்
    • உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி லட்சுமி (வயது 52). இவருக்கு வேப்பந்தட்டை- ஆத்தூர் சாலையில் விவசாய நிலம் உள்ளது. அங்கு இவருக்கும் மற்றொருவருக்கும் பாதை தொடர்பான பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக வருவாய் துறையினர் அளப்பதற்கு சென்று உள்ளனர்.அப்போது லட்சுமி வழக்கு நிலுவையில் உள்ளதால் தங்களது நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொள்ள முயற்சி செய்தார். அவரை அருகே இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

    பின்னர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சரவணனிடம் பாதை பிரச்சினை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் நிலம் அளப்பதை ஒரு மாத காலம் தள்ளிப்போட வேண்டும் எனக்கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்கு தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர் ஒப்புதல் தெரிவித்தனர். பின்னர் அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் நேற்று ரோந்து சென்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பழைய பஸ் நிலையம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பெரம்பலூர் மேட்டு தெரு, ராமபிள்ளை காலனியை சேர்ந்த கமல்பாஷாவை (வயது 46) கைது செய்தனர். அவரிடம் இருந்த வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,100 பறிமுதல் செய்யப்பட்டது."

    • இந்திய தொழிலாளர் கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது
    • அடிப்படை வசதிகள் செய்துதர கோரி நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தியும், கந்துவட்டி வசூலை கண்டித்தும் இந்திய தொழிலாளர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குகிறோம்ய என்கிற பெயரில் அதிகமான வட்டிக்கு கடன் கொடுத்தும், கடன் கட்டாதவர்களை கட்டப்பஞ்சாயத்து கும்பலை வைத்து மிரட்டி வசூலிக்கும் கந்து வட்டி கும்பலின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தவேண்டும்.

    நொச்சியம் ஊராட்சிக்குட்பட்ட விளாமுத்தூர் கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு சுடுகாட்டு பாதை சீரமைக்கவேண்டும், கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் கட்சியினர் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


    • குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது
    • சமூக அக்கறையுடன் கையாள வேண்டும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் பாலக்கரையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம், யுனிசெப் மற்றும் தோழமை தன்னார்வலத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பெரம்பலூர் மாவட்ட அளவிலான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை குறைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அப்பணியை சமூக அக்கறையுடன் கையாண்டு பொதுமக்களிடம் விரைந்து செல்வதற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இக்கூட்டத்தில் சீரார் நிதி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்ட சட்ட ஆலோசனைகளும், குழந்தைகளின் கருத்துகளுக்கு மதிப்பளிப்தோடு ஊடகங்களில் குழந்தைகள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (மாநில வள மையம்) பூரணி, மூத்த பத்திரிகையாளர் ராமசுப்ரமணியன் (எ) மணி, தோழமை தொண்டு நிறுவன இயக்குநர் தேவநேயன், வழக்கறிஞர் சுப. தென்பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மகாகிருஷ்ணன், பெருமாள், தோழமை ஒருங்கிணைப்பாளர் பிரபாகர், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் ரோவர் கல்லூரியில் பயிலும் ஊடகவியல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடந்தது
    • புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் 2 வது பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சுதர்சன் தலைமை வகித்து பேசினார். மாநில செயலாளர் சிவக்குமார், மாநில துணை தலைவர்கள் பழனிவேல், முத்துசாமி, கருப்புசாமி, ஹரிகிருஷ்ணன், மாநில பொருளாளர் பத்மநாதன், மாவட்ட தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர்கள் கார்மேகம், அழகேசன், செல்வமணி உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    பொதுப்பணித்துறையில் ஒப்பந்தகாரர் பதிவு மறுவகைப்படுத்துதல், வகுப்பை உயர்த்தி பதிவு செய்தல் தொடர்பாக அதற்குரிய காலஅவகாசத்தை வரும் 31-ந் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கியும், ஒப்பந்தகாரர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் வேலு ஆகியோருக்கும் நன்றி தெரிவிப்பது உட்பட பல தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் ராஜசேகர் வரவேற்றார், முடிவில் மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

    ×