என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூரில் கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா தேசிய கொடியை ஏற்றினார்.
    • தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்று (15.8.2022) நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, 84 பயனாளிகளுக்கு ரூ.26,41,830 மதிப்பிலான நலதிட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த 115 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட காவல் கண்கானிப்பாளர்மணி , மாவட்ட வருவாய் அலுவலர்அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

    தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டனர்.

    இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்பிரபாகரன் அவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    விழாவில்பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 20 மாணவிகள், குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவனின் யோகா நிகழ்ச்சி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 20 மாணவிகள், கவுதம புத்தர் சிறப்பு பள்ளியைச் சார்ந்த 10 மாணவர்கள், சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 50 மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழச்சிகள் நடைபெற்றது.

    • வயலில் 2 பெண் மயில்கள் மர்மமான முறையில் செத்துக்கிடந்தன.
    • மயில்கள் எப்படி இறந்தன ? என்பது குறித்து வனத்துறையினரும், போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பிரம்மதேசத்தை சேர்ந்தவர் மணிவேல்(வயது 75). இவருக்கு சொந்தமான வயலில் நேற்று முன்தினம் மதியம் 2 பெண் மயில்கள் மர்மமான முறையில் செத்துக்கிடந்தன. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து உடனடியாக மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்த மயில்களை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், அவற்றை வாலிகண்டபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் கால்நடை டாக்டர் மூலம் மயில்கள் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. மயில்கள் எப்படி ெசத்தன? என்பது குறித்து வனத்துறையினரும், போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது
    • பெரகம்பி ஆகிய பகுதிகளிலும், செட்டிகுளம், நாரணமங்கலம், அயிலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களிலும் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது


    பெரம்பலூர் :

    பெரம்பலூர் பகுதிகளான சிறுவாச்சூர், செட்டிகுளம், வேப்பந்தட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    பெரம்பலூர் தமிழ்நாடு மின்வாரிய சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், செட்டிகுளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனபாடி, கவுல்பாளையம், தீரன் நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்ப நகர், பெரகம்பி ஆகிய பகுதிகளிலும், செட்டிகுளம், நாரணமங்கலம், அயிலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களிலும் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    இதேேபால் பெரம்பலூர் (கிராமியம்) உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-எசனை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.இவ்வாறு அவர் அதில் ெதரிவித்துள்ளார்.

    இதேபோல் கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், முகமது பட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகபாடி, உடும்பியம், வெங்கனூர், பெரியம்மாபாளையம், பிள்ளையார் பாளையம், தொண்டபாடி, ஈச்சங்காடு, பூம்புகார், பாலையூர், பெரிய வடகரை, வெண்பாவூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என்று கிருஷ்ணாபுரம் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

    • ராஜேந்திரன் சிறுவாச்சூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பியபோது பாபுவின் மகன் ராஜா வழிமறித்துள்ளார்
    • ராஜேந்திரனை ராஜா, அவரது தம்பி வெங்கடேசன் மற்றும் பாபு, அவரது மனைவி ராணி ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூரை அடுத்த செல்லியம்பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 50). விவசாயி. இவரது தம்பி பாபு. இவர்களது குடும்பத்தினருக்கு இடையே சொத்து தகராறும், முன்விரோதமும் இருந்து வந்தது.

    இந்நிலையில் ராஜேந்திரன், தான் வாங்கிய கடனை திருப்பி தருவதற்காக தனக்குரிய நிலத்தை விற்பனை செய்ய முயன்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் சிறுவாச்சூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பியபோது பாபுவின் மகன் ராஜா வழிமறித்துள்ளார்.

    இதில் ராஜேந்திரனுக்கும், ராஜாவிற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ராஜேந்திரனை ராஜா, அவரது தம்பி வெங்கடேசன் மற்றும் பாபு, அவரது மனைவி ராணி ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் ராஜேந்திரனுக்கு பற்கள் உடைந்தன.

    இதையடுத்து ராஜேந்திரன் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜா, வெங்கடேசன் உள்பட 4 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து, வெங்கடேசனை (25) கைது செய்தனர். ராஜா உள்பட மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • கலைவாணன் முன்விரோதம் காரணமாக, செல்வகுமார் ஓடை புறம்போக்கில் வீடு கட்டி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்
    • அதேபோல் வழக்கு தொடர்ந்த கலைவாணனும், ஓடை புறம்போக்கில் வீடு கட்டி இருப்பது தெரியவந்தது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பள்ளகாளிங்கராய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன்(வயது 45). இருசக்கர வாகன உதிரி பாகம் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் செல்வகுமார்(42). விவசாயி. இருவரும் உறவினர்கள்.

    இந்நிலையில் கலைவாணன் முன்விரோதம் காரணமாக, செல்வகுமார் ஓடை புறம்போக்கில் வீடு கட்டி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை ஐகோர்ட்டு விசாரித்தது.

    இதில், செல்வகுமார் கட்டிக்கொண்டு இருக்கும் வீடு ஓடை ஒத்தையடி பாதை என்று வகைப்படுத்தப்பட்ட அரசு புறம்போக்கில் கட்டப்பட்டுள்ளதாக தெரியவந்தது. அதேபோல் வழக்கு தொடர்ந்த கலைவாணனும், ஓடை புறம்போக்கில் வீடு கட்டி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து செல்வகுமார் மற்றும் கலைவாணன் ஆகியோர் நீர்வழி புறம்போக்கில் வீடு கட்டி உள்ளதால், அவற்றை அகற்றுமாறு வருவாய் துறையினருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.அவர்கள் இருவரும் தாங்களாகவே வீடுகளை அகற்றாததால் நேற்று கலைவாணன் மற்றும் செல்வகுமார் ஆகியோருக்கு சொந்தமான வீடுகளை குன்னம் தாசில்தார் அனிதா, வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் மற்றும் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

    • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர்பந்தலில் அந்த கார் வந்தது.
    • வலது புறமாக சென்ற பஸ் ஒன்று மிக நெருக்கமாக வந்ததால் காரை ஹபீப் இடது பக்கமாக திருப்பினார்.

    பெரம்பலூர் ;

    சென்னை கோடம்பாக்கம் 2-வது தெரு ஈஸ்வர் நகரை சேர்ந்தவர் ஹபீப் (வயது 40). இவர், தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் வந்ததால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக நேற்று மதியம் தனது காரில் பள்ளி நண்பர்களான சென்னை பாரிஸ் ஆண்டர்சன் தெருவை சேர்ந்த சிக்கந்தர்(40), கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷாஹிப் (40) ஆகியோரை அழைத்து கொண்டு புறப்பட்டார்.

    ஹபீப் காரை ஓட்டினார். மாலை 5.30 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர்பந்தலில் அந்த கார் வந்தது. அப்போது வலது புறமாக சென்ற பஸ் ஒன்று மிக நெருக்கமாக வந்ததால் காரை ஹபீப் இடது பக்கமாக திருப்பினார்.

    அப்போது கார் சாலையை விட்டு இறங்கி, முன்னால் சாலையோரமாக பழுதாக நின்ற லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் காரில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி ஹபீப், சிக்கந்தர், ஷாஹிப் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிக்கந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிராம பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது.
    • பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய திருநாட்டின் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் வீடுகள்தோறும் தேசிய கொடியினை ஏற்றுவதற்காக மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள வீடுகளுக்கும் மொத்தம் 1.98 லட்சம் அளவிலான கொடிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் தேசியக்கொடிகளை ஏற்றுவதற்காக சுமார் 32,000 கொடிகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 39,681 தேசிய கொடிகளும்,பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 35,301 தேசிய கொடிகளும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 37,256 தேசிய கொடிகளும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 48,436 தேசிய கொடிகளும், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் 3,400 தேசிய கொடிகளும்,

    குரும்பலூர் பேரூராட்சியில் 3,694 தேசிய கொடிகளும், அரும்பாவூர் பேரூராட்சியில் 4,100 தேசிய கொடிகளும், பூலாம்பாடி பேரூராட்சியில் 3,216 தேசிய கொடிகளும்,பெரம்பலூர் நகராட்சியில் 14,706 தேசிய கொடிகளும் என மொத்தம் 1,89,790 தேசிய கொடிகள் வீடுகளில் மட்டும் ஏற்றுவதற்காக வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், அரசு துறை சார்ந்த அலுவலகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏற்றுவதற்காக என மொத்தம் 2.30 லட்சம் தேசிய கொடிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் மற்றும் அரசு அலுவலர்களும் தங்களது இல்லங்களில் மற்றும் தங்களது அலுவலகத்திலும் தேசிய கொடி ஏற்றி உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    கிராம பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தேசியக்கொடிகளை ஏற்றுகின்றனர். வணிக நிறுவனங்களில் நிறுவனத்தின் நிர்வாகிகளும், சிறு,குறு தொழிற்சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தேசிய கொடியினை ஏற்றி வருகின்றனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை வழங்கப்பட்ட கொடிகளில் 80 சதவீத கொடிகள் பொதுமக்கள் தங்களது இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் ஏற்றியுள்ளனர். அதுமட்டுமல்லாது அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளிலும் சுதந்திரத்திருநாள் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது.

    நேற்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இந்தியத் திருநாட்டின் சுதந்திர நாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

    • அனைத்து அரசு பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்துவதோடு தொடர்ந்து பராமரிப்பதை உறுதி செய்யவேண்டும்.
    • 6 ம்வகுப்பு முதல் 10 வகுப்புகளுக்கு கற்றல் கற்பித்தல் சிறக்க பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கவேண்டும்,

    பெரம்பலூர் :

    தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார், மாநில பொதுசெயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில பொருளாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு துலைவர் சுப்பிரமணி சிறப்புரையாற்றினார். முன்னதாக மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் வரவேற்றார்.

    இதில் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடத்தி தேர்வு பெறும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 உதவி தொகை வழங்கப்படும் என அறிவித்தற்கு நன்றி தெரிவிப்பது, மத்திய அரசு ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் தகுதி திறனாய்வு தேர்வு நடத்தி மாதந்தோறும் உதவி தொகை வழங்குவது போல் மாநில அரசும் வழங்கவேண்டும்,

    தற்போதைய தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறைகளை கல்வியாளர்களை கொண்டு மாற்றிடவேண்டும். அனைத்து அரசு பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்துவதோடு தொடர்ந்து பராமரிப்பதை உறுதி செய்யவேண்டும். 6 ம்வகுப்பு முதல் 10 வகுப்புகளுக்கு கற்றல் கற்பித்தல் சிறக்க பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கவேண்டும், அனைத்து வகை உயர், மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வ ஆசிரியர் பணியிடம் உருவாக்கவேண்டும்,

    தி.மு.க. கொடுத்த தேர்தல் அறிக்கையின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். மத்திய அரசு போல் தமிழக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவித்துவிட்டு வழங்காதிருப்பதை கண்டிப்பதோடு, உடனடியாக அகவிலைப்படியை வழங்கவேண்டும். சரண் விடுப்பு ஒப்படைப்பு செய்ய விதித்துள்ள தடையை உடனடியாக நீக்கவேண்டும். 2004 முதல் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் அவர்களது தொகுப்பூதிய பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக மாற்றி ஆணை பிறப்பிக்கவேண்டும்.

    ஆசிரியர்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றவேண்டும், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அரசாணையில் குறிப்பிட்டுள்ளப்படி பெற்றோர்களை எவ்வித நிபந்தனையின்றி சேர்க்கவேண்டும். பணிநிரவல் கலந்தாய்வின்படி மாறுதல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களில் சிலருக்கு 6 மாதகால ஊதியம் கிடைக்கவில்லை, எனவே ஆசிரியர்களின் வாழ்வாதாரமான மாத ஊதியத்தை தாமதம் இல்லாமல் வழங்கவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கவுரவத்தலைவர் பாபுவாணன், பொருளாளர் இலங்கைசெழியன், முன்னாள் தலைவர்கள் ராஜ்குமார், ராமமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் அருண்குமார் நன்றி கூறினார்.

    • கிராம ஊராட்சித் தலைவா்களுடன் கலெக்டர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
    • பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற பணியாற்ற வேண்டும்

    பெரம்பலூர்:

    ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், கிராம பகுதிகளில் விழா கொண்டாடுவது குறித்து ஊராட்சித் தலைவா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

    75 ஆவது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சித் தலைவா்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி, சுதந்திரப் போராட்டத் தியாகிகளை போற்றும் விதமாகக் கொண்டாட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கொடிகள் கிராம ஊராட்சிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஊராட்சித் தலைவா்கள் தலைமையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இன்று காலை தேசியக்கொடியை உரிய மாண்புடன் ஏற்ற வேண்டும்.

    தேசியக் கொடியை ஏற்றுவதற்கான வழிமுறைகளை பின்பற்றி அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவதற்கான பணிகளை ஊராட்சித் தலைவா்கள் முன்னின்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஆக. 15 ஆம் தேதி மாலை 6 மணி வரை பறக்கவிட வேண்டும். பின்னா், மாலை உரிய மரியாதையுடன் கொடியை இறக்க வேண்டும்.

    சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கடந்த 31 ஆம் தேதி வரை மேற்கொண்ட வரவு செலவுகள் குறித்த பதாகைகளை பொதுமக்கள் பாா்வையில் தெரியுமாறு அமைக்க வேண்டும். சிறப்பான முறையில் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி, பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற ஊராட்சித் தலைவா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

    • அடிப்படை வளர்ச்சி பணிகளுக்கு ரூ.90 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
    • ப்ளஸ் மேக்ஸ் ஹெல்த் கோ் பவுண்டேசன் சாா்பில் வழங்கப்பட்டது

    பெரம்பலூா்:

    பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி பேரூராட்சியில், 15 வாா்டுகளில் 10 ஆயித்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந் நிலையில், இங்கு சாலை, குடிநீா், மின் விளக்கு, கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை.

    பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டுமென, பன்னாட்டு தொழிலதிபா் டத்தோ எஸ். பிரகதீஸ்குமாரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்படி, பொதுமக்களின் பங்களிப்புத் தொகையுடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளத் தேவையான முயற்சிகளில் ஈடுபட்ட டத்தோ பிரகதீஸ்குமாா், சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களிடம் கூறி பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து வீதிகளிலும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கண்டறிந்து, அதற்கான செலவினங்களையும் கேட்டறிந்தாா்.

    அதன்படி, ரூ. 33 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டு, தனது ப்ளஸ் மேக்ஸ் ஹெல்த்கோ் பவுண்டேசன் சாா்பில் பங்களிப்புத் தொகையாக ரூ. 13 கோடி வழங்கப்பட உள்ளது. இதன் முதல்கட்டமாக ரூ. 90 லட்சத்துக்கான காசோலையை பேரூராட்சி செயல் அலுவலா் சிவராமனிடம், டத்தோ எஸ். பிரகதீஸ்குமாா் வழங்கினாா்.

    • கிருஷ்ணாபுரம் நம்பிக்கை மையத்திற்கு தரச்சான்று வழங்கப்பட்டது.
    • தேசிய அளவிலான எச்.ஐ.வி. பரிசோதனை

    பெரம்பலூர்:

    வேப்பந்தட்டை:

    திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய அளவிலான எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களுக்கு பாராட்டு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மையத்திற்கு பாராட்டு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் நேரு கலந்து கொண்டு, மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் பாரதி பிரியாவிடம் தரச்சான்றிதழை வழங்கினார். இதில் மருத்துவமனையின் ஆய்வக நுட்புனர் ஜஸ்டின் தினகரன், ஆற்றுப்படுத்துனர் பழனிவேல் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்"

    • விபத்தில் மரணமடைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
    • கடந்த 10-ந்தேதி மூளைச்சாவு அடைந்தார்

    பெரம்பலூர்:

    திருச்சி புத்தூர் பாத்திமா தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 65). இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி மாவட்ட குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிற்சங்க தலைவர், ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்து வந்தார்.கடந்த மாதம் 30-ந்தேதி மகேந்திரன் தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழக்குடிகாடு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு திருமாந்துறையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த ஷேர் ஆட்டோ மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து கடந்த 10-ந்தேதி மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் விருப்பத்தின் பேரில், மகேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதில் அவரது கண்கள், இருதயம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள், தானமாக வழங்கப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்படுகிறது. மேற்கண்ட விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    ×