search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய கொடி ஏற்றுவதற்கு வசதியாக 2.30 லட்சம் கொடி வழங்கப்பட்டுள்ளது - பெரம்பலூர் கலெக்டர் தகவல்
    X

    தேசிய கொடி ஏற்றுவதற்கு வசதியாக 2.30 லட்சம் கொடி வழங்கப்பட்டுள்ளது - பெரம்பலூர் கலெக்டர் தகவல்

    • கிராம பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது.
    • பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய திருநாட்டின் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் வீடுகள்தோறும் தேசிய கொடியினை ஏற்றுவதற்காக மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள வீடுகளுக்கும் மொத்தம் 1.98 லட்சம் அளவிலான கொடிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் தேசியக்கொடிகளை ஏற்றுவதற்காக சுமார் 32,000 கொடிகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 39,681 தேசிய கொடிகளும்,பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 35,301 தேசிய கொடிகளும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 37,256 தேசிய கொடிகளும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 48,436 தேசிய கொடிகளும், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் 3,400 தேசிய கொடிகளும்,

    குரும்பலூர் பேரூராட்சியில் 3,694 தேசிய கொடிகளும், அரும்பாவூர் பேரூராட்சியில் 4,100 தேசிய கொடிகளும், பூலாம்பாடி பேரூராட்சியில் 3,216 தேசிய கொடிகளும்,பெரம்பலூர் நகராட்சியில் 14,706 தேசிய கொடிகளும் என மொத்தம் 1,89,790 தேசிய கொடிகள் வீடுகளில் மட்டும் ஏற்றுவதற்காக வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், அரசு துறை சார்ந்த அலுவலகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏற்றுவதற்காக என மொத்தம் 2.30 லட்சம் தேசிய கொடிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் மற்றும் அரசு அலுவலர்களும் தங்களது இல்லங்களில் மற்றும் தங்களது அலுவலகத்திலும் தேசிய கொடி ஏற்றி உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    கிராம பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தேசியக்கொடிகளை ஏற்றுகின்றனர். வணிக நிறுவனங்களில் நிறுவனத்தின் நிர்வாகிகளும், சிறு,குறு தொழிற்சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தேசிய கொடியினை ஏற்றி வருகின்றனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை வழங்கப்பட்ட கொடிகளில் 80 சதவீத கொடிகள் பொதுமக்கள் தங்களது இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் ஏற்றியுள்ளனர். அதுமட்டுமல்லாது அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளிலும் சுதந்திரத்திருநாள் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது.

    நேற்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இந்தியத் திருநாட்டின் சுதந்திர நாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×