என் மலர்
பெரம்பலூர்
- கோவில் வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. பெரம்பலூர்
- நாட்டு நலப்பணி திட்ட முகாம்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் புது விராலிப்பட்டி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. முகாமில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதனை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பொன்னுத்துரை பார்வையிட்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி ஊக்கப்படுத்தினார். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்."
- மகளிருக்கான சாலையோர சைக்கிள் போட்டி நடந்தது
- உடற்கல்வி ஆய்வாளர் தொடங்கிவைத்தார்
பெரம்பலூர்:
பள்ளிக்கல்வி துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான மகளிருக்கான புதிய விளையாட்டுகளான சிலம்பம், ஜூடோ , சாலை யோர சைக்கிள் போட்டி ஆகிய போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் விளையாட்டு போட்டியினை தொடங்கி வைத்தார். சிலம்பம், ஜூடோ , சாலை யோர சைக்கிள் போட்டி ஆகிய போட்டிகள் 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் நடத்தப்பட்டன. இதில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர்.
சாலையோர சைக்கிள் போட்டியில் 14 வயதில் பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பேரழகி முதலிடத்தையும், பாடாலூர் ஸ்ரீ அம்பாள் மேல்நிலைப்பள்ளி மாணவி தியா இரண்டாம் பரிசினையும், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினி மூன்றாம் பரிசினையும் வென்றனர்.
17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மிருதுல்லா முதலிடத்தையும், கிழுமத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி சுபாஷினி இரண்டாம் பரிசினையும், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா மூன்றாம் பரிசினையும் வென்றனர்.
19 வயதுக்குட்பட்ட பிரிவில் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தேவிகா முதல் பரிசினையும், காரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பூமிகா இரண்டாம் பரிசினையும், கிழுமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சந்தோஷினி மூன்றாம் பரிசினையும் வென்றனர்.
ஜூடோ போட்டியில் பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஜான்சிராணி முதலிடத்தையும், அகரம் புனித மேரிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜீவிகா இரண்டாம் இடத்தையும், சிலம்பம் போட்டியில் புதுவேட்டடக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சாருலதா முதலிடத்தையும், மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆனந்தி இரண்டாம் இடத்தையும், துங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செல்லம்மாள் மூன்றாம் இடத்தையும் வென்றனர்.
இந்த போட்டிகளில் முதலிடத்தை பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
- சாலை விதிகளை மீறியதாக 2,756 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
- பெரம்பலூர் மாவட்டத்தில்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் சாலைவிதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 756 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஸ்பி மணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழகம் முழுவதும் சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத தொகை உயர்த்தி நடைமுறை ப்படுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையினரால் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து புதிய அபராத தொகை விதிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நேற்று வரை பெரம்பலூர் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டுவது, வாகனத்தில் அதிக பாரத்தை ஏற்றி செல்வது, வாகனத்தில் பயணம் செய்யும் போது சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்வது, வாகன உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற சாலை விதிகளை பின்பற்றாத 2 ஆயிரத்து 756 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து சாலை விதிமுறைகளை பின்பற்றி விபத்துக்களை தவிர்க்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
- தீக்குளித்து உயிரிழந்த சுங்க சாவடி ஊழியர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது
- விசிக சார்பில் வழங்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் குன்னம் அடுத்துள்ள சு. ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது44) இவர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சுங்க சாவடி அதிகாரியிடம் தனக்கு ஒரு நாள் விடுமுறை கேட்டார். ஆனால் விடுமுறை அளிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். கோபால் ஒருநாள் மட்டும் வேலைக்கு செல்லவில்லை. இதையடுத்து சுங்க சாவடி அதிகாரிகள் கோபாலை ஐந்து நாட்கள் பணி நீக்கம் செய்தனர். இதில் மன உளைச்சலால் கோபால் இரு தினங்களுக்கு முன்பு தனக்குத்தானே உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து இறந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன், உயிரிழந்த கோபால் மனைவி முனியம்மாவை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிதியுதவி அளிக்க கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மண்டல செயலாளர் கிட்டு, வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், ஏ ஐ டி யு சி மாநிலச் செயலாளர் விஜயகுமார், கிளை செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முனியம்மாள் வீட்டிற்கு சென்று நிதி உதவி அளித்தனர்.
- டிப்பர் லாரி மோதி என்ஜினீயர் பலியானார்.
- தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52), என்ஜினீயர். இவர் பெரம்பலூரில் தனியார் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், திருசன் என்ற மகனும், கீர்த்திஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் தனது மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் ஏரிக்கரை எதிரே உள்ள நெடுவாசல் பிரிவு சாலையில் இருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தவழியே சென்ற டிப்பர் லாரி செல்வராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் பீதியடைந்த டிரைவர் டிப்பர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், விபத்தை ஏற்படுத்தியவர் திருச்சி மாவட்டம் லால்குடி நடராஜபுரத்தை சேர்ந்த மாரி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானார்.
- எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மகன் பாரதி என்ற பார்த்திபன் (வயது 28), எலக்ட்ரீசியன். இவர் நேற்று மாலை 17 வயதுடைய சிறுவனை அழைத்து கொண்டு விளாமுத்தூர் கோகுலம் நகரில் வசிக்கும் ராஜா என்பவரின் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்றார்.
அப்போது பார்த்திபன் வீட்டின் பின்புறம் உள்ள மின் விளக்கை சரி செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பார்த்திபனுடன் வந்த சிறுவனிடம் மின்சாரத்தின் மெயின் சுவிட்சை ஆன் செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது பார்த்திபன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பார்த்திபனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பார்த்திபன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் மீது கண்டெய்னர் மோதி விபத்து
- 7 பயணிகள் படுகாயம்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே உள்ள லப்பை காடு பகுதியில் இருந்து கடலூர் மாவட்டம் தொழுதூர் வழியாக பெரம்பலூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்ஸினை பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 56) என்பவர் ஓட்டிச் சென்றார்.
பஸ்ஸில் இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் கடலூர் மாவட்டத்தை தாண்டி மங்களமேடு பகுதியில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிர்பாராத விதமாக அவ்வழியாகச் சென்ற கண்டைனர் லாரி எதிர்பாராத விதமாக வலது பக்கம் பஸ்ஸின் பக்கவாட்டில் மோதியது.
இதில் அந்த பஸ்ஸில் பயணம் செய்த குன்னம் பகுதியைச் சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர்கள் பிரசன்னா( 16) சுதன்ராஜ்( 20 ) மற்றும் கண்ணன் (23) சரவணன்( 32) குன்னம் ஒகலூர் பகுதியைச் சேர்ந்த நதியா (24) சுவாதி( 21) மல்லிகா (21) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கண்டெய்னர் லாரியை ஒட்டி வந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த டிரைவர் அருளானந்தம் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- வதிஷ்டபுரம் ஊராட்சியில் சாலையை சீரமைக்க கோரி
பெரம்பலூர்:
அகரம்சீகூர் அடுத்துள்ள வதிஷ்டபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளகாலிங்கராயநல்லூர் கிராமத்தில் 2- வது வார்டில் உள்ள தெருக்களில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கன மழையின் காரணமாக கழிவுநீர் மற்றும் மழை நீர் வெளியே செல்லாமல் தேங்கி நிற்கிறது.
இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் சுத்தம் செய்துதரும்படியும் மழைநீர் தேங்கி நிற்காமல் வெளியேற செய்து தரும்படியும் கோரிக்கை வைத்தனர். மேலும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சிமெண்ட் சாலை அமைத்து தரவும் கூறினார்கள்.
ஆனால் ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை நீர் தெருக்களில் தேங்கி நிற்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் வார்டுகளில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சி ஆத்திரமடைந்த பொதுமக்கள், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் விரைந்து சென்று பொதுமக்களிடம் விரைவில் சாலையை சரி செய்து தருவதாக உறுதி அளித்தன் பெயரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- பள்ளிக்கு ரூ.2 லட்ச மதிப்பில் தளவாடப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது
- திம்மூர் ஊராட்சி ஒன்றியத்தில்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் திம்மூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் தளவாடப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவி தலைமை தாங்கினார். திம்மூர் ஊராட்சி மன்ற தலைவர் அழகேசன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வேம்பு, ஊராட்சி மன்ற துணை தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரூ.2 லட்சம் மதிப்பில் திம்மூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான என்.கே கர்ணன் தளவாடப் பொருள்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வராஜ், பெரியசாமி, முன்னாள் தலைவர்கள் பச்சமுத்து, செல்வராஜ், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், திம்மூர் கிராம முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அனைவரையும் உதவி தலைமை ஆசிரியர் ஆனந்த் வரவேற்றார். முடிவில் பிரபாகரன் நன்றி கூறினார்.
- விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சோலைமுத்து(வயது 80). இவர் அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த 3 நாட்களாக தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சோலைமுத்து நேற்று காலை அரளி விதையை (விஷம்) அரைத்து தின்றார். இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சோலைமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- மன உளைச்சலில் நடந்த சம்பவம்
பெரம்பலூர்
கீழ எசனை கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் முத்தையா(வயது 35). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலக்கட்டையில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த வேலையும் செய்ய முடியாமல் படுத்த படுக்கையாக இருந்துவந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் சம்பவத்தன்று பருத்திக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வாந்தி எடுத்து கிடந்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடந்தன.
- மாவட்ட அளவிலான நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூரில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. போட்டிகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்து பேசினார். இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கும் நோக்கில், வாய்ப்பாட்டு இசை செவ்வியல், வாய்ப்பாட்டு இசை பாரம்பரிய நாட்டுப்புற வகை, கருவி இசை தாள வாத்தியம், கருவி இசை மெல்லிசை, நடனம் செவ்வியல், நடனம் பாரம்பரிய நாட்டுபுற வகை, காட்சிக்கலை இருபரிமாணம், காட்சிக்கலை முப்பரிமாணம், உள்ளூர் தொன்மை பொம்மைகள் விளையாட்டுகள் மற்றும் நாடகம், தனிநபர் நடிப்பு போன்ற கலைப் பண்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் குழந்தைராஜன், அண்ணாதுரை, சண்முகசுந்தரம், மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற உள்ளனர் என்று மாவட்ட திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்."






