என் மலர்
பெரம்பலூர்
- வீட்டை விட்டு வெளியே சென்றவிவசாயி மாயமானார்.
- மனைவி போலீசில் புகார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணுசாமி(வயது 44). விவசாயி. இவர் கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர். பின்னர் மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி அமுதா உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அரும்பாவூர் போலீசில் அமுதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கண்ணுசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.
- 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
- சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால்
பெரம்பலூர்:
ஓட்டக்கோவில் கிராமம் அருகே கடந்த மாதம் போலி மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து வியாபாரம் செய்த ராயம்புரம் காலனி தெருவை சேர்ந்த அர்ஜுனனின் மகன் பிரகாஷ் என்ற பிரகஸ்பதி(வயது 24), ஓட்டக்கோவில் காலனி தெருவை சேர்ந்த கந்தசாமியின் மனைவி மதியழகி, மதியழகியின் மகன்கள் இனிக்கும்சேட்டு(34) கோல்டு வினோத்(31) ஆகிய 4 பேரையும் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து மதியழகியை திருச்சி மகளிர் சிறையிலும், மற்ற 3 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் வெளியே வந்தால் பல்வேறு சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
- சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம் சென்றனர்.
- 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
பெரம்பலூர்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஊர்வலம் சென்றனர். பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே புறப்பட்ட இந்த ஊர்வலத்தை தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி வரவேற்றார்.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும். காய்கறி, உணவூட்ட செலவினத்தை அந்தந்த மாதத்தில் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை முதல்-அமைச்சர் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சத்துணவு ஊழியர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அழகேஸ்வரி நன்றி கூறினார். பின்னர் அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்குமாறு கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
- முதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார்
- அரும்பாவூர் போலீசார் விசாரணை
பெரம்பலூர்
பெ ரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியை சேர்ந்தவர் பெருமாயி (வயது 64). இவர் சம்பவத்தன்று வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாரி மோதி பெண் பலியானார்.
- மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 52). இவர் தனது மகன் இந்திரஜித் என்பவருடன் பாடாலூர் சந்தை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு தனது வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த இந்திரஜித்தை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர், தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வரதராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ரெங்கராஜ் சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கருப்பையன், மாவட்ட செயலாளர் அகஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்டி சாலையோர வியாபாரிகளின் பிரச்சினைகளை களைந்திட வேண்டும். வெண்டர் கமிட்டி கூட்டத்தை மாதந்தோறும் நடத்திட வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சரக்கு வாகனங்களில் விற்பனை செய்யும் திடீர் கடைகளை அகற்றிட வேண்டும். தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தினமும் அகற்றிட வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு கழிவறை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இலவசமாக தள்ளுவண்டி வழங்கிட வேண்டும். புதிய அடையாள அட்டை வழங்கிட வேண்டும். பெரம்பலூரில் நகரில் நடைபெறும் தொடர் திருட்டை தடுத்திட அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்."
- தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது
- கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்றது
பெரம்பலூர்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பெரம்பலூர் மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், பத்மாவதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாவு, புஷ்பாமேரி மற்றும் ஓய்வு பிரிவு மாவட்டசெயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை ச்செய லாளரும், மாவட்ட செயலாளரு மான ராஜே ந்திரன் சிறப்புரை யாற்றினார்.
இதில் கற்பித்தல் அல்லாத பிறபணிகளுக்கு ஆசிரியர் களை ஈடுபடுத்துவதால் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் ஏற்படக் கூடிய இடர்பாடுகள், விதிகளுக்குப் புறம்பாக நடைபெற்று வரும் மாவட்ட மாறுதல்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மாறுதல் கலந்தாய்வில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக தாய் ஒன்றியத்தில் பணியாற்றி வந்த ஆசிரியர்களை பணிநிரவல் என்ற பெயரில் வேறு ஒன்றியங்களுக்கு மாறுதல் செய்துவிட்டு, தற்போது தாய் ஒன்றியத்தில் காலிப்பணியிடம் ஏற்படும்போது பணி நிரவல் பெற்றவர்களை மீளப்பணியமர்த்தாமல், வேறு மாவட்டங்களில் பணியாற்றிவந்த ஆசிரியர்களுக்கு, விதி களுக்குப் புறம்பாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாறுதல் வழங்க ப்பட்டுள்ளதைச் சரிசெய்திட வேண்டும். இக்கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கடிதம் அனுப்புவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- பெரம்பலூரில் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது
- சுதந்திர போராட்ட வீரர்கள், நலத்திட்ங்கள் குறித்து
பெரம்பலூர்:
மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் என்ற தலைப்பில் மூன்று நாட்கள் நடைபெறும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி பெரம்பலூரில் தொடங்கியது.
சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலக மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குனர் மா.அண்ணாதுரை தலைமை வகித்து அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் சிறப்பு க்கள் மற்றும் மத்திய அரசு திட்டங்கள், நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் குத்துவிளக்கேற்றி வைத்து கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட சித்த அலுவலர் எஸ்.காமராஜ் ,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆர். சுகந்தி பேசினர்.
கண்காட்சியில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் வீரர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. குறித்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், இந்திய அஞ்சல் துறை, சித்தா, மாவட்ட சமூக நலத்துறை ,தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டு திட்டங்கள், நல திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருச்சி மத்திய மக்கள் தொடர்பக கள் விளம்பர அலுவலர் கே.தேவிபத்மநாபன் வரவேற்றார். உதவியாளர் கே. ரவீந்திரன் நன்றி கூறினார்.
- வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க-நீக்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது
- பெரம்பலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக
பெரம்பலூர்:
பெரம்பலூர் வாக்காளர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளவும் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. இந்த விண்ணப்பங்களை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ, அல்லது வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலோ மனு தாக்கல் செய்து கொள்ளலாம். மேலும், https://voterportal.eci.gov.in, www.elections.tn.gov.in என்ற இணையத்தளம் முகவரியிலும், Voter help line app என்ற செல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு முகாம்கள்
இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிக்காக 2-ம் கட்டமாக நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இம்முகாம் நாட்களை பயன்படுத்தி 1.1.2023-ம் நாளில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி பயனடையலாம்.
அடையாள அட்டை வழங்கப்படும்
இதுதவிர, இளம் வாக்காளர் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க இனி ஜனவரி-1, ஏப்ரல்-1, ஜூலை-1 மற்றும் அக்டோபர்-1 என ஆண்டுக்கு 4 நாட்களை தகுதி நாட்களாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 17 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட முன்பதிவு செய்து கொள்ளலாம், அவ்வாறு முன்பதிவு செய்தவர்கள் 18 வயது பூர்த்தியானவுடன் பெயர் சேர்க்கப்பட்டு, பின்னர் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
ஆதார் எண்ணுடன் இணைப்பு
மேலும் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை தூய்மைபடுத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைத்தல் என்ற முக்கியமான பணியும் நடைபெற்று வருகிறது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ள மேற்கண்ட சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
பெரம்பலூர்:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமையில் வளர்ச்சித்துறை அலுவலர்களில் மொத்தம் 346 பேரில், 148 பேர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தினால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களிலும், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
- எச்.ஐ.வி. குறித்து கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- நோய் பாதித்தவர்களிடம் அன்பு செலுத்த அறிவுறுத்தல்
பெரம்பலூர்
பெரம்பலூரில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், சமூகத்தில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமலும், ஒதுக்காமலும், சக மனிதர்களை போன்று அன்பு செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சியை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு எச்.ஐ.வி. நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மாவட்ட திட்ட மேலாளர் (பொறுப்பு) சுமதி மற்றும் எச்.ஐ.வி. உடன் வாழ்பவர்களுக்கான தொண்டு நிறுவனம், நம்பிக்கை மையம், சுகவாழ்வு மைய ஆலோசகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்னும் 9 நாட்களுக்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் காயம் அடைந்தார்.
- 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகன் நரேஷ் (வயது 17). இவர் காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை இடைவேளை நேரத்தில் நரேஷ் தனது நண்பர்களுடன் கழிவறையின் மறைப்பு சுவர் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது மறைப்பு சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததில் நரேசுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நரேஷ் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






