என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • முதல்வருக்கு பேரளி, குன்னத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
    • பெரம்பலூருக்கு வருகை தந்த

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரியலூரில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவிற்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று மாலை பெரம்பலூரிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் பேரளி மற்றும் குன்னம் கிராமத்தில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக அதன் ஒன்றிய செயலாளரும் ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான என். கிருஷ்ணமூர்த்தி சார்பில் மேலமாத்தூரில் சிறப்பான வரவேற்பு முதல்வருக்கு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர் அணியினர் இளைஞர் அணியினர் தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • அகழாய்வு பணிகள் நடைபெற்ற பகுதியினை பார்வையிட்டார்

    பெரம்பலூர்

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் 12.30 மணியளவில் சிப்காட் தொழில் பூங்காவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அதில் அமையவுள்ள பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தோடு பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா மற்றும் தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாற்றம் செய்தார்.

    அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5.15 மணிக்கு அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் மாளிகைமேட்டுக்கு சென்று, அங்கு அகழாய்வு பணிகள் நடைபெற்ற பகுதியினை நேரில் பார்வையிடுகிறார்.

    நலத்திட்ட உதவிகள்

    இதில், மாளிகைமேடு அகழாய்வில் கண்டறியப்பட்ட பழமையான பொருட்கள் மற்றும் அகழாய்வு மேற்கொண்ட பகுதிகளை பார்வையிடுகிறார். பின்னர் இரவில் அரியலூர் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அங்கு 2 மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

    அமைச்சர் வருகையையொட்டி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    "

    • தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின், பெரம்பலூா் மாவட்ட 4 ஆவது மாநாடு நடந்தது
    • மாவட்ட 4 வது மாநாடு நடந்தது

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின், பெரம்பலூா் மாவட்ட 4 ஆவது மாநாடு நடைபெற்றது.

    பெரம்பலூா் லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற இம் மாநாட்டுக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவா் என். செல்லதுரை தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தொடக்க உரையாற்றினாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் கே.எம். சக்திவேல் அஞ்சலி தீா்மானமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலா் எம். கருணாநிதி மாநாட்டு அறிக்கையும் வாசித்தனா். மாநிலத் தலைவா் பி. செல்லக்கண்ணு நிறைவுரையாற்றினாா். தொடா்ந்து நடைபெற்ற நிா்வாகிகள் தோ்வில், மாவட்டத் தலைவராக எஸ். பாஸ்கரன், மாவட்டச் செயலராக ஆா். கோகுலகிருஷ்ணன், பொருளாளராக எம். கருணாநிதி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

    இதில், மருத்துவா் சி. கருணாகரன், சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின், மாவட்டத் தலைவா் ரெங்கநாதன், மாவட்ட பொருளாளா் அ. கலையரசி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாயப் பிரிவு மாநில துணைச் செயலா் வீர செங்கோலன், வழக்குரைஞா் ப. காமராசு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

    முன்னதாக, வழக்குரைஞா் ஸ்டாலின் வரவேற்றாா். தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகி பி. கிருஷ்ணசாமி நன்றி கூறினாா் 

    • 2-ம் நிலை காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வினை 5,466 பேர் எழுதினர்.
    • 1,368 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகளில் உள்ள 2-ம் நிலை காவலர் பதவிகளுக்கான 3 ஆயிரத்து 552 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இருந்து இந்த தேர்வினை எழுத 5,347 ஆண்களும், 1,487 பெண்களும் என மொத்தம் 6,834 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் எழுத்து தேர்வு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்திலும், ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரி வளாகத்திலும் உள்ள தேர்வு மையங்களில் நடந்தது.

    தேர்வு எழுத தேர்வாளர்கள் காலை 8.30 மணிக்கு முன்பாகவே தேர்வு மையத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். அதில் ஆண், பெண்களை தனித்தனியாக வரிசைப்படுத்தி போலீசார் நிற்க வைத்தனர். தேர்வு எழுத வந்த ஆண்களை ஆண் போலீசாரும், பெண்களை பெண் போலீசாரும் சோதனையிட்டும், மெட்டல் டிடெக்டர் எந்திரம் வழியாக வரச்சொல்லியும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்ட பிறகே தேர்வு மையத்திற்கு உள்ளே செல்ல அவர்களை அனுமதித்தனர். தேர்வாளர்கள் பேனா, தேர்வு நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை ஆகியவற்றை மட்டும் தேர்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள செல்போன், புளூடூத், கால்குலேட்டர் போன்ற அதிநவீன மின் சாதனங்களையும், கைக்கடிகாரம், தொலைநகலி போன்ற சாதனங்களையும், பென்சில் ஆகியவற்றையும் தேர்வாளர்கள் கொண்டு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். அதனை கொண்டு வந்தவர்களிடம் இருந்து, அந்த பொருட்களை போலீசார் வாங்கி வைத்து, தேர்வு முடிந்த பிறகு அவர்களிடம் மீண்டும் ஒப்படைத்தனர்.

    சரியாக காலை 10 மணிக்கு தொடங்கிய எழுத்து தேர்வு 12.40 மணிக்கு முடிந்தது. பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இருந்து தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 6,834 பேரில், 4,302 ஆண்களும், 1,164 பெண்களும் என மொத்தம் 5,466 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1,045 ஆண்களும், 323 பெண்களும் என மொத்தம் 1,368 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    எழுத்து தேர்வினை திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி ஆகியோர் பார்வையிட்டனர். தேர்வு மைய பணி மற்றும் பாதுகாப்பு பணியில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்."

    • கவர்னரை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • விவசாய சங்க தலைவர்களை சந்திக்க மறுத்த

    பெரம்பலூர்

    சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் பேரணியின் முடிவில் விவசாய சங்க தலைவர்கள் தமிழக கவர்னரை சந்திக்க சென்றனர். ஆனால் விவசாய சங்க தலைவர்களை சந்திக்க கவர்னர் மறுத்ததாக கூறப்படுகிறது. விவசாய சங்க தலைவர்களை சந்திக்க மறுத்த தமிழக கவர்னரை கண்டித்தும், கவர்னர் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தியும் நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் பெரம்பலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நடந்தன.
    • பெரம்பலூரில் 2-வது நாளாக

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளாக நேற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாமில் 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6-ம் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர் நீக்கம் திருத்தத்திற்கு படிவம் 7-ம், திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-ம், இடமாற்றம் திருத்தத்திற்கு படிவம் 8 ஏ-ம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான திருத்தத்திற்கு படிவம் 6 ஏ-ம் பயன்படுத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர். 17 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட விண்ணப்பங்களை அளித்து முன்பதிவு செய்தனர். மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து கொள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். மேலும் வாக்காளர்கள் சிறப்பு சுருக்க திருத்த முகாமிற்கான விண்ணப்பங்களை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ, அல்லது வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலோ பெற்றும் அரசு வேலை நாட்களில் வருகிற 8-ந்தேதிக்குள் பூர்த்தி செய்து அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    • வீட்டில் தனியாக வசித்து வருகிறார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பொம்மனபாடி கிராமத்தில் வசித்து வருபவர் செல்லம்(வயது 75). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள், ெசல்லத்திடம் நைசாக பேச்சு கொடுத்தனர்.

    அப்போது அவர்கள் செல்லத்திடம் 'நீங்கள் அணிந்திருப்பது தங்க சங்கிலியா?' என்று கேட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த செல்லம், அந்த நபர்களின் கேள்விக்கு பதில் கூறாமல் இருந்துள்ளார்.

    அப்போது அந்த நபர்கள் திடீரென செல்லத்தின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த செல்லம் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    பின்னர் இது குறித்து பாடாலூர் போலீசில் செல்லம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வீட்டில் இருந்த 

    • ரத்த தான முகாம் நடந்தது
    • அஸ்வின்ஸ் குழுமம் சார்பில்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட் அன்ட் பேக்கரி மற்றும் ரெஸ்டாரெண்ட்ஸ் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ரத்ததான முகாம் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி 10 வது ஆண்டாக ரத்ததான முகாம் அஸ்வின்ஸ் பார்ட்டி ஹாலில் நடந்தது.

    அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன் தலைமை வகித்து ரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார். முகாமிற்கு அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குனர் அஸ்வின் முன்னிலை வகித்தார். முத்து ரத்த வங்கி நிர்வாகி வீரமுத்து, டாக்டர்கள் வெங்கட்ரமணண், பிரகாஷ்ஆகியோர் உரிய மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் செவிலியர் குழுவினர் ரத்தம் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இதில் அஸ்வின்ஸ் குழுமத்தை சேர்ந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் என 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். ரத்ததானம் வழங்கிய வர்ளுக்கு ஊட்டச்சத்து பொருட்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டது.

    முகாமிற்கான ஏற்பாடுகளை அஸ்வின்ஸ் குழும மேலாளர்கள் சூரி வெங்கடேசன், அசோக்குமார் மற்றும் மனிதவள மேம்பாட்டு அலுவலர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தேசிய மருந்தியல் வார விழா நடந்தது
    • போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட பார்மசி அன்ட் ஸ்டாகிஸ்ட் அசோசியேஷன் சார்பில் 61-வது தேசிய மருந்தியல் வார விழா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மருந்து கட்டுப்பாட்டு துறை திருச்சி மண்டல உதவி இயக்குநர் அதியமான், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ஸ்ரீதேவி ஆகியோர் பேசுகையில், போதை பொருள் ஒழிப்பு மற்றும் புதிய சட்டம் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் அனைத்தையும் விதிகளுக்கு உட்பட்டு வியாபாரம் செய்ய வேண்டும், மீறினால் கடுமையான தண்டனைக்குள்ளாவீர்கள் என தெரிவித்தனர். இதில் மருந்து வணிகர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக செயலாளர் சரவணன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.

    • சிறப்பு புகைப்படக்கண்காட்சி நிறைவு விழா நடந்தது
    • அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள்

    பெரம்பலூர்:

    மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள்நலத்திட்டங்கள் என்ற தலைப்பில் பெரம்பலூரில் 3 நாட்கள் நடைபெற்ற சிறப்பு புகைப்படக்கண்காட்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது. திருச்சி மத்திய மக்கள் தொடர்பக கள விளம்பர அலுவலர் தேவிபத்மநாபன், வக்கீல் காமராஜ் ஆகியோர் பேசினார். பின்னர் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இக்கண்காட்சியில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் ஒருங்கிணைந்தகுழந்தைகள் வளர்ச்சித் திட்டம், இந்திய அஞ்சல் துறை, சித்தா, மாவட்ட சமூக நலத்துறை, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம்,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டு திட்டங்கள், நல திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சிகள் மூலம் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த திரைப்படம் ஒளிப்பரப்பட்டது. இதில் இக்கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பார்வையிட்டு பயனடைந்தனர். கள விளம்பர உதவியாளர் அருண்குமார் வரவேற்றார், முடிவில் கள விளம்பர உதவியாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

    • இந்திய அரசியலமைப்பு தின விழா நடந்தது
    • வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் இந்திய அரசிலமைப்பு தினம் 2022 விழா நடந்தது. விழாவிற்கு யூனியன் சேர்மன் மீனாம்பாள் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டான்லி செல்லகுமார், அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் (பொ) துரைமுருகன், சைபர் கிரைம் (தொழில்நுட்பம்) எஸ்ஐ சிவமீனா. வக்கீல் நிதிகள் அறக்கட்டளை இயக்குநர் ராமச்சந்திரன், மாவட்ட வள அலுவலர் நல்லுசாமி தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபதி, இயற்கை மருத்துவர் வேல்முருகன் ஆகியோர் பேசினர். பின்னர் அரசியல் அமைப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக நேருயுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா வரவேற்றார். கணக்காளர் தமிழரசன் நன்றி கூறினார்.

    • திருக்குறள் ஒப்பிக்கும் போட்டியில் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

    பெரம்பலூர்

    உலக பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை பள்ளி மாணவ-மாணவிகள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வி அறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் 'திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1,330 குறட்பாக்களையும் மனனம் (மனப்பாடம்) செய்து ஒப்பிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசாக தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.இதன்படி 2022-23-ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் 1,330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தால், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்பு பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற மாணவ-மாணவிகள் இருப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்த போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் (டிசம்பர்) 28-ந் தேதி மாலைக்குள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம். அல்லது https://tamilvalarchithurai.tn.gov.in என்ற தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் விண்ணப்பத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04328-225988 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்."

    ×