என் மலர்
பெரம்பலூர்
- விஷம் குடித்து கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- திருமணமாகாத ஏக்கத்தில் சம்பவம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள சாஸ்திரிபுரத்தை சேர்ந்தவர் துரை (வயது 34), கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகாததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த துரை கடந்த மாதம் 14-ந் தேதி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து (விஷம்) குடித்துவிட்டு அரும்பாவூர் கொட்டாரக்குன்று செல்லும் சாலையோரம் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் துரை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை பிரியா தலைமை தாங்கினார். இதில், மாவட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கதிரவன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- வாலிபரை சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 20-ந்தேதி வாலிபர் ஒருவர் நுழைந்து கலெக்டர் அலுவலகத்தின் தரைதளத்தில் வரவேற்பு பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க பணிகள்- திட்ட செயலாக்கம் குறித்த புகைப்படங்கள் வைத்திருந்த காட்சி அமைப்பின் கண்ணாடியை கட்டையால் உடைத்து சேதப்படுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் துறைமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளையராஜா (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்."
- மகன் வீட்டிற்கு வந்த பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்
- தீராத வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டு வந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள தெரணி கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி மலர்கொடி (வயது 55). கணவர் இறந்துவிட்டதால் மலர்கொடி தனியாக வசித்து வந்தார். இவரது மகள் விஜயாவுக்கு திருமணமாக செட்டிக்குளத்தில் கணவருடன் வசித்து வருகிறார். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற மலர்கொடி செட்டிக்குளத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். இன்று அதிகாலை 2 மணிக்கு எழுந்து வெளியே சென்ற மலர்கொடி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது மகள் விஜயா வெளியில் சென்று தேடிப்பார்த்தார். அப்போது வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள கிணற்றின் அருகில் தாய் மலர்கொடியின் செருப்பு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி பார்த்தபோது அங்கு இறந்த நிலையில் மலர்கொடி மீட்கப்பட்டார். அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சிறுவாச்சூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது
- துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது
பெரம்பலூர்
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் கிராமம் தோறும் கிராமிய திருவிழா மாவட்ட அளவிலான எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதன்படி சிறுவாச்சூரில் நடந்த கிராமிய திருவிழாவிற்கு ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணை தலைவர் சுகிதா முன்னிலை வகித்தார். மாவட்ட திட்ட மேலாளர் சுமதி எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து விரிவாக பேசினார். பின்னர் ஓசை கலைக்குழுவினரின் எச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் கரகாட்ட கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் பத்மாவதி , காசநோய் பிரிவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அழகேசன், சிறுவாச்சூர் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் (பொ) ,வட்டார சுகாதார செவிலியர் மல்லிகா, கிராம சுகாதார செவிலியர் சமணஸ் மேரி, சுகாதார ஆய்வாளர் அசோக் குமார் மற்றும் சிறுவாச்சூர் அரசு பள்ளி மாணவ, மாணவியர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிருஷ்ணாபுரம் ஆலோசகர் பழனிவேல்ராஜா நன்றி கூறினார்.
- பெரம்பலூர் - துறையூர் இருவழிச் சாலை திறக்கப்பட்டது
- நடைபெற்ற அரசு விழாவில்
பெரம்பலூர்:
பெரம்பலூர் முதல் துறையூர் வரையிலான 30 கிலோ மீட்டர் இருவழித்தட சாலை திறக்கப்பட்டதையடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பாக சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் மூலம் பெரம்பலூர் முதல் துறையூர் வரையிலான 30 கி.மீ நீளமுள்ள சாலையை ரூ.2.09 கோடியில் நிலம் எடுத்து இருவழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்து, நக்கசேலம், குரும்பலூர் நகரப்பகுதிகளுக்கு மாற்றாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் 12 சிறுபாலங்கள், 53 குறுபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சாலை வழிகளில் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சோலார் பிளிங்கா விளக்குகள், உயர்மின்கோபுர விளக்குகளும், குடியிருப்புப் பகுதிகளில் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் வசதியும், சாலையோர மின்விளக்குகளும், கழிவறை, தண்ணீர் மற்றும் விளக்கு வசதிகளுடன் கூடிய பஸ் நிழற்குடைகளும் கட்டப்பட்டுள்ளன.
அரியலூரில் நேற்று நடந்த அரசு விழாவில் இந்த சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து ஆலம்பாடியில் அச்சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
- தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்
- நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரை சேர்ந்த முன்னாள் தி.மு.க. வரகூர் எம்.எல்.ஏ. வக்கீல் பா. துரைசாமி தி.மு.க. மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வேப்பூரை சேர்ந்த வி.எஸ். பெரியசாமி மாநில வர்த்தக அணி துணை செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா பரிந்துரையின் அடிப்படையில் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் மேற்கண்ட நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.
புதிய நிர்வாகிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன், டாக்டர் வல்லவன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது
- மாவட்ட உதவி திட்ட அலுவலர் பங்கேற்றார்
பெரம்பலூர்:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடக்கிய கல்வித் திட்டக்கூறின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டது.
பெரம்பலூர் ரோவர் மேல்நிலை பள்ளியில் வட்டார வளமையம் சார்பில் நடந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போட்டியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கிவைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, கல்வி ஒருங்கிணைப் பாளர்கள் பாரதிதாசன், சுப்ரமணியன், ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ் ஆகியோர் பேசினர். குழு நடனம், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு , நடனம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பாசிரியர்கள் துர்கா, ரூபி, மரகதம் ஆகியோர் முன்னின்று போட்டிகளை நடத்தினர். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ் வரவேற்றார். முடிவில் சிறப்பாசிரியர் துர்கா நன்றி கூறினார்.
இதே போல் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை கயல்விழி தலைமையிலும், ஆசிரியர் பயிற்றுநர் குணசேகரன் முன்னிலையிலும், எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் தலைமையிலும், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலைவாணன், ஜனனி ஆகியோர் முன்னிலையி லும்,பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள பகல் நேர பாதுகாப்பு மையத்தில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன் தலைமையிலும்,
பள்ளியின் தலைமையாசிரியை திருமலைச்செல்வி முன்னிலையிலும் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள் ராணிபரிமளா, மகேஸ்வரி மற்றும் தனவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
- தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- பேனர் கிழிக்கப்பட்டதால்
பெரம்பலூர்
மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பெரம்பலூர் புறநகர் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் அடியில் கட்சியின் தொடக்க நாளான தை 1-ந்தேதியை முன்னிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கிழித்து சென்றனர். இதையடுத்து அந்த பேனரை மர்ம நபர்கள் வேண்டும் என்றே கிழித்துள்ளனர் என்று கூறி, நள்ளிரவில் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களை நான்கு ரோட்டில் சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் பேனரை கிழித்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவனிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது
- குழியில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.
- அப்பகுதியில் விளையாட சென்றான்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ரோகித்சர்மா(வயது 3). இவன் நேற்று தனது பாட்டி தங்கம்மாளுடன், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளான். பின்னர் அவன் அப்பகுதியில் விளையாட சென்றான். இதற்கிடையே அந்த ரேஷன் கடை அருகில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டிருந்தது. மேலும் நேற்று முன்தினம் பெய்த மழையால், அந்த குழி முழுவதும் தண்ணீர் நிரம்பி இருந்தது. இந்நிலையில் விளையாட சென்ற ரோகித்சர்மா அந்த குழியில் தவறி விழுந்தான். இதில் நீரில் மூழ்கி அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதற்கிடையே தனது பேரனை காணவில்லையே என தங்கம்மாள், அப்பகுதியில் தேடியுள்ளார்.
அப்போது ரோகித்சர்மா குழியில் உள்ள தண்ணீரில் மூழ்கி இறந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அங்கு வந்த உறவினர்கள் ரோகித் சர்மாவின் உடலை கண்டு கதறி அழுதது, அங்கு இருந்தவர்களையும் கண்கலங்க செய்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரோகித் சர்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்களிடம் கை குலுக்கிய முதல்வர் நலம் விசாரித்தார்
- மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
பெரம்பலூர்:
திருச்சியிலிருந்து பெரம்பலூருக்கு காரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பாடலூரில் காரை நிறுத்தி கீழே இறங்கினார்.
அப்போது அங்கு 50 மீட்டர் ரம் நடந்து சென்று, சாலையோரம் வரவேற்க நின்ற பள்ளி மாணவ, மாணவிகளிடம் கைகளை குலுக்கி நலமா இருக்கீங்களா என விசாரித்தார். பின்னர் பொதுமக்களை தேடி சென்று அவர்களது கைகளை குலுக்கி எல்லோரும் நல்ல இருக்கீங்களா என கேட்டார். முதல்வர் காரை விட்டு இறங்கி நடந்து வருவதை பார்த்த மக்கள் ஆரவாரம் செய்து கைகளை குலுக்க ஆர்வம் காட்டினர். பின்னர் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களையும் முதல்வர் பெற்றுக் கொண்டார். பின்னர் காரில் சென்ற முதல்வர் சிறுவாச்சூரில் பள்ளி மாணவர்களை பார்த்ததும் காரை விட்டு கீழே இறங்கி கைகுலுக்கி நலம் விசாரித்து விட்டு சென்றார்.
வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ரஜேந்திரன் தலைமையில் பேரளி மற்றும் குன்னம் கிராமத்தில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் அதன் ஒன்றிய செயலாளரும் ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி சார்பில் மேல மாத்தூரில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜா அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தங்கி ஓய்வெடுத்தார். அப்போது மதியம் உணவு இடைவேளை சமயத்தில், முதல்வர் ஸ்டாலினிடம் விவசாய சங்க தலைவர்கள் ராஜாசிதம்பரம், திருச்சி அய்யாக்கண்னு மற்றும் நரிக்குறவர்கள் சங்க மாநில தலைவர் காரைசுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கட்சி செயல்பாடு குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.
பின்னர் அரியலூருக்கு கிளம்பியபோது முதல்வர் ஸ்டாலின், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்தவுடன் காரை நிறுத்தி விட்டு நடந்தே சென்று பொதுமக்களை பார்த்து கும்பிட்டு, கோரிக்கை மனுக்களை பெற்ற முதல்வர் 100 மீட்டர் தூரம் நடந்து சென்று பெண்கள், குழந்தைகள், கட்சியினர் என்று அனைவரையும் பாரத்து புன்முறுவலுடன் கை குலுக்கி பேசினார்.
- சிப்காட் தொழில் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்
பெரம்பலூர்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு கார் மூலம் வருகை தந்தார். இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல் சிப்காட் தொழில் பூங்காவை திறந்து வைத்தார்.
சிப்காட் தொழில் பூங்காவில் பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டினார். சிப்காட் தொழில் பூங்கா தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், கோவை, பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தபடி, பெரம்பலூர் மாவட்டத்தில், எறையூர் கிராமத்தில் 243.49 ஏக்கர் பரப்பளவில் இந்த சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக குறுகிய காலத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமையவுள்ள பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தோடு, பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா மற்றும் அதன் 10 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலமாக ரூ.740 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன், 4 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது. இதுவரை மொத்தம் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.2 ஆயிரத்து 440 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 29 ஆயிரத்து 500 ேபருக்கு வேலை வாய்ப்பும் உருவாக்கப்பட உள்ளது.
மேலும் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் சேர்த்து, எதிர்காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைய உள்ள தோல் அல்லாத காலணி மற்றும் அதன் தொகுப்பு தொழில் நிறுவனங்களின் மூலம் ஈர்க்கப்படும் முதலீடு ரூ.5 ஆயிரம் கோடியை எட்டும் என்றும், 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் . பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாடு இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடைய செய்து வருகிறது.
இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, தொல். திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சுந்தரவல்லி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ. வெங்கடபிரியா தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, கோத்தாரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜின்னா ரஃபிக் அஹமத், எவர்வேன் நிறுவனத்தின் தலைவர் ராங் வு சேங் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






