என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரத்தை சேர்ந்த சீரங்கம்மாள் என்பவரின் மகன் மணிகண்டன்.
    • வீடு ஒதுக்கிய விபரங்கள், அதன் உண்மை தன்மை ஆகியவற்றை தணிக்கை செய்தால் மேலும் பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரத்தை சேர்ந்த சீரங்கம்மாள் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் திருச்சியில் வசித்து வரும் நிலையில் லாடபுரத்தில் வீடுகட்ட அரசிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.

    இந்தநிலையில் அவர் பெயரில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்து மூதாட்டி சீரங்கம்மாளின் வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. வீடு எதுவும் கட்டாத சூழலில் வீடு கட்டியதாக கூறி சீரங்கம்மாளின் வங்கி கணக்கிற்கு மூன்று தவணைகளாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணமும் வரவு வைக்கப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே லாடபுரத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் சீரங்கம்மாளை வங்கிக்கு அழைத்து சென்று, பஞ்சாயத்து பணம் உன் கணக்கில் தவறுதலாக ஏறியுள்ளது அதனை எடுத்து கொடுக்க சொல்லி பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    வீடு கட்டியதாக வரவு வைக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துடன் சீரங்கம்மாளின் சேமிப்பு பணம் ரூ.7 ஆயிரத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. சீரங்கம்மாளும் அறியாமை காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் கூப்பிடும் போதெல்லாம் வங்கிக்கு சென்று பணத்தை எடுத்துக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

    இந்தநிலையில் தன்பெயரில் வீடு ஒதுக்கீடு செய்து அதனை கட்டாமலேயே பண மோசடி நடந்ததை அறிந்து சீரங்கம்மாளின் மகன் மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் சென்று கேட்டதாகவும், அதற்கு அவர் முறையாக பதில் அளிக்காததுடன், தனது தாயின் பணத்தையும் திருப்பி தரமறுத்து விட்டதாகவும் மணிகண்டன் கூறினார்.

    இந்த முறைகேடு தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மணிகண்டன் புகார் மனு அளித்திருந்தார். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இது தொடர்பாக நடைபெற்ற விசாரணை குறித்து விசாரணை அதிகாரியும் வட்டாரவளர்ச்சி அலுவலருமான அறிவழகன் கூறுகையில், இந்த புகாரில் உண்மை உள்ளது என்றும், மணிகண்டன் பெயரில் வீடு கட்டியதாக, வேறொரு வீட்டை காட்டி பணம் விடுவித்து மோசடி நடந்ததும் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

    விசாரணை குறித்த அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தில் வீடுகட்டாமலேயே கட்டியதாக கூறி முறைகேடு நடைபெற்றது உண்மை என தெரியவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் வீடு ஒதுக்கிய விபரங்கள், அதன் உண்மை தன்மை ஆகியவற்றை தணிக்கை செய்தால் மேலும் பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தீவனப்புல் வளர்க்கவும்-புல்கறணைகள் வாங்கவும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.
    • கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதை தொகுப்பும் மற்றும் புல்கறணைகள் ஒரு பயனாளிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களை சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பரிந்துரைப்பார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்கக்கூடாது. மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் விண்ணப்பம் செய்ய பெரம்பலூர் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி, உரிய விவரத்தினைப் பெற்று புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, ஆகிய சான்றுகளுடன் ஆன்லைனில் http://application.tahdco.com, http://fast.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-276317, 9445029470 ஆகிய தொலைப்பேசி எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்."

    • புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, சின்ன வெண்மணி கிராமத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள குன்னம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) எஸ்.சி.வி.டி. பாடத்திட்டத்தில் கீழ்கண்ட தொழிற் பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. 2 வருட தொழிற்பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மின்சார பணியாளர் 20 இடங்களும், பொருத்துனர் 20 இடங்களும், கட்டிடபட வரைவாளர் 24 இடங்களும், மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவான தையல் தொழில்நுட்ப பிரிவில் 40 இடங்கள் உள்ளன. இதற்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சேர வரும் பயிற்சியாளர்கள் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலையும், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4 கொண்டு வர வேண்டும்.சேர்க்கை கட்டணமாக ஓராண்டு தொழிற் பிரிவுக்கு ரூ.185-ம், 2 ஆண்டு தொழிற் பிரிவுக்கு ரூ.195-ம் செலுத்த வேண்டும். தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை 9499055881 என்ற செல்போன் எண்ணிலும், குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை (கூடுதல் பொறுப்பு) 9047949366 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்."

    • வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றன
    • 9-ந் தேதி வரை மாநில அளவிலான போட்டிகள்

    பெரம்பலூர்

    2022-23-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறையின் மானிய கோரிக்கையின்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் கலை திறன்களை வெளிக்கொணரும் விதமாக வட்டாரம் மற்றும் மாவட்டத்தில் கலை திருவிழா நடத்தப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி அளவில் 6 முதல் 12-ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கலை திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் முதல் இடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு வட்டார அளவில் கலை திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    பள்ளி அளவில் 9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கலை திருவிழா போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டாரங்களில் அளவில் போட்டிகள் நடைபெற்றன.

    வட்டார அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை மாவட்ட அளவிலும், அதில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை மாநில அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் வழங்கப்பட உள்ளது. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மைப்பெறும் மாணவ-மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனர்.

    • இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் சகோதரர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்
    • போலீசார் சிறையில் அடைத்தனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இருசக்கர வாகனங்களை திருடும் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில் லாடபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பார்த்திபன், அவரது தம்பி மணிவண்ணன், களரம்பட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் சந்துரு(வயது 21) மற்றும் 18 வயதுடைய சிறுவன் ஆகிய 4 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபன், மணிவண்ணன், சந்துரு ஆகிய 3 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சிறுவனை ஜாமீனில் விடுவித்தனர்.

    • லாரி மோதி வாலிபர் பலியானார்.
    • சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    பெரம்பலூர்

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா சீதேவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் டாஸ்மாக் கடையில் லோடுமேனாக பணியாற்றி வந்தார். நேற்று மாலை செட்டிகுளம் டாஸ்மாக் கடையில் லோடு இறக்குவதற்காக சிறுவயலூர்-குரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரியில் மோதி சம்பவ இடத்திலே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மின் ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தமிழ்நாடு மின்வாரியம் உடனே தொடங்க வேண்டும். மின் வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்வாரியத்தில் உள்ள அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தயங்க மாட்டோம் என்று அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • கார்த்திகை தீப சிறப்பு கிப்ட் பேக் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது
    • அஸ்வீன்ஸ் பேக்கரியில்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட் அன்ட் பேக்கரியில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு கிப்ட் பேக் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன், தலைமை செயல் அலுவலர் அஸ்வின் ஆகியோர் கூறுகையில்,

    பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட் அண்டு பேக்கரி நிறுவனம் பெரம்பலூர் - கல்பாடி பிரிவு சாலையிலுள்ள அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவன தொழிற்சாலையுடன் ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ், பேக்கரி ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும், திருச்சி, சென்னை, துறையூர், சேலம், ஆத்தூர், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், பாண்டிச்சேரி உள்பட 26 கிளைகளுடன் பேக்கரி செயல்பட்டு வருகிறது.

    எங்களது நிறுவனத்தின் மூலம் அனைத்து பண்டிகை நாட்களையும் சிறப்பாக கொண்டாடிடும் வகையில் அந்தந்த பண்டிகைக்கு ஏற்ப இந்திய பண்பாடு மற்றும் கலாச்சாரத்துக்கு உகந்த, இனிப்பு மற்றும் பட்சணங்களை பாரம்பரிய முறையில் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்.

    இதன்படி வரும் 6ம்தேதி கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டில் நிவேதனம் செய்து வழிபட வசதியாக அவல் பொரி உருண்டை, நெல்பொரி உருண்டை, அதிரசம், கடலை உருண்டை, மனவலம் உருண்டை, அகல்விளக்கு ஆகியவை அடங்கிய சிறப்பு கிப்ட் பேக் விற்பனையை தொடங்கியுள்ளது.

    தற்போது கிப்ட் பேக் தேவை படுவோருக்கு முன்பதிவு செய்யப்படுகிறது.அஸ்வின்ஸ் உணவுத் தொழிற்சாலையின் அவுட் லெட் மற்றும் அனைத்து கிளைகளிலும் தரமாகவும், சுவையாகவும், குறைந்த விலையில் கார்த்திகை தீப சிறப்பு கிப்ட் பேக் கிடைக்கும் என தெரிவித்தனர்.

    • பத்திர பதிவாளர், சார் பதிவாளருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
    • பெரம்பலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கடைவீதியை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி தனலட்சுமி. இவர் பெரம்பலூர் தெற்கு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டினை கிரையம் பெற்று அதனை பதிவு செய்வதற்காக கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம்தேதி பெரம்பலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உரிய பத்திரம் மற்றும் பதிவு கட்டணம் செலுத்தினார்.

    ஆவணங்கள் மற்றும் பதிவு கட்டணம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு பதிவு செய்யவில்லை. ஏன் என கேட்டதற்கு அந்த வீட்டை விற்பனை செய்ய மணிவண்ணன் என்பவர் தடை மனு அளித்துள்ளார். ஆகையால் பதிவு செய்ய இயலாது என சார்பதிவாளர் கூறியுள்ளார்.

    தான் வாங்கிய சொத்திற்கு சரியான மார்க்கெட் மதிப்பினை செய்து முத்திரை கட்டணம் செலுத்தியும் பத்திரபதிவு செய்யாமல் நிலுவையில் வைத்துவிட்டு அலைகழித்ததால் தன்னுடைய பத்திரம் மற்றும் ஆவணங்களை திரும்பி தருமாறு சார்பதிவாளரிடம் தனலட்சுமி கேட்டுள்ளார். பலமுறை எழுத்து பூர்வமாக கேட்டும் ஆவணங்களை சார்பதிவாளர் திருப்பி தரவில்லை.

    இதனால் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 22ம்தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் ஜவஹர், உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் நேற்று அளித்த தீர்ப்பில் சேவை குறைபாடு புரிந்து சார்பதிவாளர் மற்றும் பதிவாளர் ஆகியோர் பாதிக்கப்பட்ட தனலட்சுமிக்கு ரூ. 50 ஆயிரம் நஷ்ட ஈடும், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.60 ஆயிரம் வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

    • ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி மாணவி தங்கம் வென்று சாதனை படைத்தனர்
    • மாநில அளவில் நடந்த தடகள போட்டியில்

    பெரம்பலூர்:

    ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் மெட்ரிக் மேனிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான தடகளப் போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக மாநில அளவிலான தடகளப் போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கடந்த மாதம் 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அதில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேனிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சாத்விகா 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவியை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சேர்மென் டாக்டர் சிவசுப்ரமணியம் மற்றும் செயலாளர் விவேகானந்தன் இனிப்பு வழங்கி பாராட்டினார். மாநில அளவில் வெற்றி பெற்றதைப் போல் தேசிய அளவிலான போட்டியிலும் வெற்றி பெற தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும், சத்தான உணவு பழக்க முறைகளை கடைபிடிக்க வேண்டுமென சேர்மன் அறிவுறுத்தினார். சிறப்பாக பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும், பயிற்சியாளரையும், ஊக்குவித்த பெற்றோரையும் சேர்மென் வாழ்த்தினார்.

    • வயிற்று வலியால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • தனியாக வசித்து வந்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெரணி கிராமத்தை சேர்ந்தவர் மலர்க்கொடி (வயது 55). இவருடைய கணவர் இறந்து விட்டதால் மலர்க்கொடி தனியாக வசித்து வந்தார். மேலும் இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று காலை இவரது மகள் விஜயா தனது தாயாரை பார்ப்பதற்காக செட்டிகுளத்தில் இருந்து வந்தார். அப்போது மலர்க்கொடி தீராத வயிற்றுவலி காரணமாக தோட்டத்தின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் மலர்க்கொடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 12-ந்தேதிக்குள் விண்ணப்பத்தினை அனுப்பி வைக்கலாம்

    பெரம்பலூர்

    பட்டியல் இன முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2022-2023-ம் ஆண்டிற்கான விருது ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. எனவே, பட்டியலின முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு புரிந்து தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்களில் தகுதியான நபர்கள் இருப்பின் விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்து, அதே அலுவலகத்திற்கு வருகிற 12-ந்தேதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது"

    ×