என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூர் அருகே மனைவியிடம் கோபித்து சென்ற கட்டிட தொழிலாளி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்
    • வெள்ளாற்றில் ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்

    பெரம்பலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அரங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவியும், சதீஷ்குமார் (23), விக்னேஷ்வர் (20) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

    இந்நிலையில் செந்தில்குமார் தமது மாமனார் வீட்டில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் சண்டை போட்டுவிட்டு வெளியேறியவர் பின்னர் வீடு திரும்பவில்லை. 2 நாட்களாகியும் அவர் திரும்பாததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் எந்த தகவலும் இல்லை.

    இந்நிலையில் குன்னம் தாலுகா வெள்ளாற்றில் ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து வெள்ளாற்றுக்கு விரைந்து சென்ற மங்களமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பிணமாக மிதந்தவரை மீட்டனர்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் மாயமான செந்தில்குமார் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து மங்களமேடு போலீசார் ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் நியாய விலைக்கடையில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்
    • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் அனைத்து மூல சான்றிதழ்களையும் அவற்றின் 2 ஜெராக்ஸ் நகல்களில் சுய சான்றிடப்பட்டு கொண்டு வரப்பட வேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், பெரம்பலூர் மாவடத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 56 விற்பனையாளர்கள் மற்றும் 2 கட்டுநர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணபங்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டுள்ளது.

    இதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு இம்மாதம் 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலும் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 27-ந்தேதி அன்றும் பெரம்பலூர் துறையூர் சலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி (தமிழ் வழிக் கல்வி) வளாகத்தில் நடைபெற உள்ளது.

    மேற்படி, நேர்முகத் தேர்விற்கான அனுமதிச்சீட்டு 3.12.2022 முதல் பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தின் வழி (www.drbpblr.net/hallticket.php) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    நேர்முக அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நேர்முகத்தேர்விற்கான அனுமதி சீட்டினை விண்ணப்பதாரர் கொண்டு வந்தால் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும், நேர்முக தேர்விற்கு வரும்பொழுது விண்ணதாரர் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்துள்ள அதே புகைபடத்தின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் அனைத்து மூல சான்றிதழ்களையும் அவற்றின் 2 ஜெராக்ஸ் நகல்களில் சுய சான்றிடப்பட்டு கொண்டு வரப்பட வேண்டும்.

    விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதி பெற்ற விண்ணபதாரர்கள் மட்டுமே நேர்முக தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படின் பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய குழுவின் தொலைபேசி எண். 04328-296140 மற்றும் drbpblr2022@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கார் மோதி வியாபாரி பலியானார்
    • சாலையை கடக்க முயன்ற போது விபத்து

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி பாப்பாத்தி (வயது 50). வெங்காய வியாபாரியான இவர் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் சந்தைகளுக்கு சென்று வெங்காய வியாபாரத்தில் ஈடுபடுவார்.

    இந்தநிலையில் நேற்று அரியலூரில் நடைபெற்ற சந்தைக்கு வியாபாரத்திற்கு சென்ற பாப்பாத்தி இரவில் இரூர் திரும்பிக்கொண்டிருந்தார். பேருந்தில் இருந்து இறங்கிய அவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாப்பாத்தி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாளை அறவழி போராட்டம் நடத்தப்படும் என எஸ்.டி.பி.ஐ.யின் மாநில தலைவர் பேட்டி அளித்துள்ளார்.
    • பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாளை

    பெரம்பலூர்

    பெரம்பலூரில், மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று (நாளை செவ்வாய்க்கிழமை) பாசிச எதிர்ப்பு தினமாக அனுசரித்து நாடு முழுவதும் அறவழி போராட்டத்தை நடத்துகிறோம். ஜனநாயக அடிப்படையில் நடத்தப்பட்ட அநீதிக்கு, நீதி வேண்டி இப்போராட்டம் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீதியரசர் அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றம் புரிந்த 17 காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது இதுவரை சட்டரீதியான நடவடிக்கை இல்லை. குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளது. இது தி.மு.க. அரசின் இரட்டை நிலையை காட்டுகிறது. தூத்துக்குடியில் நடைபெற்ற மாபெரும் படுகொலைக்கு காரணமான, குற்றம் புரிந்த அனைத்து அதிகாரிகளும் சட்டப்படி பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.
    • ஆதி திராவிடர்-பழங்குடியினர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஆதி திராவிடர் மற்றும் 1 பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி, திட்டத் தொகையில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்.

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராகவும் அல்லது விவசாய கூலி தொழில் செய்பவராகவும் இருக்க வேண்டும். தொழில் மற்றும் விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது. இத்திட்டத்தின் கீழ் நிலமற்றவர்கள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். வாங்கப்படும் நிலத்தினை 10 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் விண்ணப்பிக்கலாம்தொடர்பு கொள்ளலாம்.

    மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் மாவட்ட தாட்கோ, மேலாளர் அலுவலகத்தை அணுகி, உரிய விவரத்தினை பெற்று புகைப்படம், சாதி சான்று, வருமான சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று, ஆதார் அட்டை, ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328 - 276317, 9445029470 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
    • விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே வட கிழக்கு பருவமழை பெய்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் வெயில் வாட்டி வந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. மேலும் நேற்று அதிகாலை முதல் இரவு வரை அவ்வவ்போது விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது. மதியம் 2.30 மணியளவில் சுமார் அரை மணி நேரம் பெய்த மழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏரி, குளங்களுக்கு மீண்டும் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

    • மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் வண்ணாரம்பூண்டியை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இது தொடர்பாக சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று வி.களத்தூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் பெண்ணைக்கோணம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த்(வயது 22), திருமாந்துறையை சேர்ந்த முத்துக்குமார்(21) என்பதும், அவர்கள் சரவணனின் மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரையும் கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம் நடைபெற்றது.
    • சிறப்பு வழிபாடும் வெகு விமரிசையாக நடந்தது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 ராசிகள் 27 நட்சத்திரங்களுக்குமான குபேரர் மீன ஆசனத்தில் வீற்றிருக்குமாறு ஏகாம்பரேஸ்வரர் கல் தூண்களின் சிற்பங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் காமாட்சி அம்பாள் சன்னதிக்கு எதிரில் மகா குபேரருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் மகா குபேரர் சித்ரலேகாவுடன் தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். இந்த சன்னதியில் ஒவ்வொரு மாதமும் குபேரரின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று மகா குபேர ஹோமம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று பூரட்டாதி நட்சத்திரத்தை ஒட்டி மகா குபேரருக்கு ஹோமமும், சிறப்பு வழிபாடும் வெகு விமரிசையாக நடந்தது.

    • 2 வீடுகள் தீப்பற்றி எரிந்தன
    • தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீயை அணைத்தனர்

    பெரம்பலூர்

    குரும்பலூர் பேரூராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் வடக்கு தெருவை சோந்தவர் மாசி பெரியண்ணன் (வயது 48). இவரும், இவரது தம்பி ராஜாவும்(44) அருகருகே இருந்த குடிசை வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் மாசி பெரியண்ணனின் மகள் மிதுனா(11) மட்டும் வீட்டில் இருந்தபோது திடீரென்று குடிசை வீட்டின் மேற்கூரை தீப்பற்றி எரிய தொடங்கியது.

    இதனை கண்ட மிதுனா வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து, அக்கம், பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு குடிசை வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். மேலும் அப்போது லேசான மழை பெய்ததால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் வீடுகளில் எரிந்த தீயை அக்கம், பக்கத்தினர் அணைத்து விட்டனர். இதில் 2 வீடுகளில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீப்பற்றியதை உடனடியாக கவனித்ததால் சிறுமி மிதுனா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குரும்பலூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் முடியும் வரை

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கிராமியம் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பாளையம், குரும்பலூர், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புது ஆத்தூர், லாடபுரம், மேலப்புலியூர், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், அடைக்கம்பட்டி, புது அம்மாபாளையம், டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலிங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்."

    • ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • 16 வகையான திரவியங்களால் நடைபெற்றது

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் வேதநாராயண பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. சனிக்கிழமையையொட்டி நேற்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு 108 வடைமாலை, வெற்றிலை மாலை மற்றும் பூ அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாலையூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • 71 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 2,225 பேர் தேர்வு எழுதினர்.
    • 9.50 மணி முதல் காலை 10.50 மணி வரை நடந்தது.

    பெரம்பலூர்

    மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 17 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.50 மணி முதல் காலை 10.50 மணி வரை நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த எழுத்து தேர்வினை எழுத மொத்தம் 2,225 பேர் விண்ணப்பித்துள்ளனர். எழுத்து தேர்வு பெரம்பலூர் வட்டத்திற்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளிலும், வேப்பந்தட்டை வட்டத்திற்கு வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், குன்னம் வட்டத்திற்கு வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் வட்டத்திற்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்றது. தேர்வு அறைக்கு காலை 9.30 மணியில் இருந்து தேர்வாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வாளர்கள் தேர்வு கூட நுழைவு சீட்டு (ஹால் டிக்கெட்), கருப்பு பால் பாயிண்ட் பேனா ஆகியவற்றை தவிர வேறு எந்தவொரு பொருட்களையும் தேர்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

    ×