மாயமான கட்டிட தொழிலாளி ஆற்றில் பிணமாக மீட்பு

பெரம்பலூர் அருகே மனைவியிடம் கோபித்து சென்ற கட்டிட தொழிலாளி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்வெள்ளாற்றில் ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்
மாயமான கட்டிட தொழிலாளி ஆற்றில் பிணமாக மீட்பு
Published on

பெரம்பலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அரங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவியும், சதீஷ்குமார் (23), விக்னேஷ்வர் (20) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் செந்தில்குமார் தமது மாமனார் வீட்டில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் சண்டை போட்டுவிட்டு வெளியேறியவர் பின்னர் வீடு திரும்பவில்லை. 2 நாட்களாகியும் அவர் திரும்பாததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில் குன்னம் தாலுகா வெள்ளாற்றில் ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து வெள்ளாற்றுக்கு விரைந்து சென்ற மங்களமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பிணமாக மிதந்தவரை மீட்டனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் மாயமான செந்தில்குமார் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து மங்களமேடு போலீசார் ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com