என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெண்களை பஸ்சில் ஏற்ற மறுப்பு தெரிவிக்கின்றனர்.
    • இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் பழைய விராலிப்பட்டி கிராமத்தில் இருந்து நூறுநாள் வேலை செய்யும் பெண்கள் புது விராலிப்பட்டி குப்புசாமி கோவில் வரை கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இந்த நிலையில் அவர்கள் அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்ய வேண்டும் என்றால், அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பெண்களை பஸ்சில் ஏற்ற மறுக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம்
    • இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 ராசிகள் 27 நட்சத்திரங்களுக்கான குபேரன் மீன ஆசனத்தில் வீற்றிருக்குமாறு ஏகாம்பரேஸ்வரர் சிற்பம் கல் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் காமாட்சி அம்பாள் சன்னதிக்கு எதிரில் மகா குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் மகா குபேரர் சித்ரலேகாவுடன் தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். இந்த சன்னதியில் ஒவ்வொரு மாதமும் குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று மகா குபேர ஹோமம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி பூரட்டாதி நட்சத்திரத்தையொட்டி மகா குபேரனுக்கு சிறப்பு வழிபாடு வெகு விமரிசையாக நடந்தது. சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அப்போது குபேர ஹோமமும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சித்ரலேகா சமேத மகா குபேரனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    • பூச்சி கடித்து மர வியாபாரி உயிரிழந்தார்
    • இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, மருவத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). மர வியாபாரி. இவர் கவுல்பாளையம்-அருமடல் செல்லும் சாலையில் வாங்கி போட்டிருந்த மரங்களை நேற்று காலை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது ராஜேந்திரனை ஏதோ பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை சிகிச்சைக்காக, அவருடைய மகன் சரண்ராஜ் (25) மோட்டார் சைக்கிளில் மருவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனையில் ராஜேந்திரன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்து பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பெரியம்மாபாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 160-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து கிராம மக்கள் முன்னிலையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஆசிரியரை கண்டித்துள்ளனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பள்ளியில் பயிலும் சில மாணவிகளிடம், அந்த ஆசிரியர் வகுப்பறையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்களிடம், அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர். மேலும் நேற்று பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பொதுமக்கள் சார்பில் தொலைபேசி வாயிலாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலகுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துனர் மகேஸ்வரி ஆகியோர் அந்த பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஆசிரியர், மாணவிகளிடம் தவறான தொடுதல், தவறான பார்வை மற்றும் குறிப்பிட்ட மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மாணவிகள் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நன்னடத்தை அலுவலர் கோபிநாத், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • பெரம்பலூரில் தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு பேரணி பேரணி நடந்தது.பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் கற்பகம் கொடியைசைத்து தொடங்கிவைத்து பொதுமக்கள் மற்றும் வணிக பெருமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.இப்பேரணியானது பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி சங்குபேட்டை வழியாக சென்று திரும்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர். இதில் தமிழின் பெருமையை வெளிப்படுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பப்பட்டது.மேலும் மாணவ, மாணவிகள் "அன்னைத் தமிழே ஆட்சிமொழி, தமிழில் பெயர்ப்பலகை அமையட்டும், தமிழ்நாட்டின் வீதியெல்லாம் தமிழ் தழைக்கட்டும்" என்பதை வலியுறுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களை வணிக நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ அங்கையற்கண்ணி, ஆர்டிஓ நிறைமதி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தை திருமணம் செய்த வாலிபருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கபட்டுள்ளது
    • பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வர் தனது மகளை காணவில்லை எனவும், அரணாரை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் லட்சுமணன் என்பவர் மீது சந்தேகமாகவுள்ளதாகவும் , தனது மகளை கண்டுபிடித்து தருமாறு பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இதில் அரணாரை வடக்குகாலனியை சேர்ந்த மாரிமுத்து மகன் லட்சுமணன் (வயது31) என்பவர் சிறு வயது பெண் குழந்தை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் லட்சுமணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்து. அரசு தரப்பில் வக்கீல் சுந்தரராஜன் ஆஜரானார். நேற்று விசாரணை செய்த நீதிபதி முத்துகுமரவேல் குற்றவாளி லட்சுமணனுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    • மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
    • வெளிநாட்டில் இறந்த மகனின் உடலை கொண்டு வர கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.அதன்படி பெரம்பலூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ராசாத்தி (வயது 60). இவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில், எனது மகன் சங்கர் (38). 14 ஆண்டுகளாக அபுதாபி ஹைலேண்ட் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 19ம்தேதி சொந்த ஊருக்கு வருவதாக கூறினார். இந்நிலையில் கடந்த 20ம்தேதி சங்கர் இறந்துவிட்டதாக கம்பெனியிலிருந்து தகவல் வந்தது. எனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. இறந்த எனது மகனின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறியுள்ளார்.வடக்கு மாதவி, ஏரிக்கரை பகுதி மக்கள் சார்பாக 8 வது வார்டு உறுப்பினர் சந்தோசம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தங்களுக்கு நிரந்தர பாதை அமைத்து தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதே போல் பெரம்பலூர் எளம்பலூர் தண்ணீர் பந்தல் எம்ஜிஆர் நகர் பகுதி மக்கள் சார்பில் வெண்ணிலா அளித்தள்ள கோரிக்கை மனுவில், சுமார் 50 ஆண்டுகளாக இந்த பகுதியில் நிரந்திர இடம் இல்லாமல் இருப்பதாகவும், அரசு மூலம் இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • பா.ஜ.க. பட்டியல் அணி தலைவரை கைது செய்ய கோரி
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்திருமாவளன் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருவதாக கூறி பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் வீரசெங்கோலன், வக்கீல் ஸ்டாலின், உதயக்குமார், நகராட்சி கவுன்சிலர் தங்க சண்முக சுந்தரம் மற்றும் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், தமிழ் இயக்கக மாவட்ட தலைவர் தேனரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வீட்டில் வெளியே நின்று கொண்டிருந்தார்
    • பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி செல்வமணி(வயது 55). இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் செல்வமணி கழுத்தில் அணிந்திருந்த 8. 3/4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பித்து சென்று விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து நகை பறித்து ஓடியது சென்ற மர்ம நபர்கள் தேடி வருகின்றனர்.

    • பெண்களை மிரட்டி பணம் பறித்து கைது
    • குண்டர் சட்டத்தில் என்ஜினீயருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே கோனேரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் விமல் (வயது 31) இன்ஜினியர். விமல் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், துன்புறுத்துவதோடு, அருவருக்கத்தக்க கொச்சை வார்த்தைகளால் பேசி, தாக்கியதோடு 50 பவுன் நகையும், லட்சக்கணக்கான பணம் வரதட்சணையாக கேட்டு கொடுமை படுத்தி உள்ளார்.இதுகுறித்து புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் விமல் மது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விமலின் செல்போனை பார்த்த பொழுது அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்திருந்ததும், அதனை வைத்து அவர்களிடம் மிரட்டி விமல் பணம் பறித்ததும் தெரியவந்ததையடுத்து போலீசார் விமலை கைது செய்து கிளைச்சிறையில் அடைத்தனர்.எஸ்பி ஷ்யாம்ளாதேவி பரிந்துரையின் பேரில் இன்ஜினியர் விமலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் விமலை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
    • கழனிவாசல் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாகுபடி செய்து அறுவடை செய்யப்படு நெல்லை இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்குவதோடு பல்வேறு மோசடி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் நெல்லினை தமிழக அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட கழனிவாசல் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு சன்ன ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2160ம், மோட்டா ரக நெல்லிற்கு ரூ. 2115-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.கழனிவாசல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பட்டியல் எழுத்தர் கோபிநாத் , ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், துணை தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் ஆண்டாள் குடியரசு மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் இருசக்கர வாகன ஷோரூம் ஒன்று அமைந்துள்ளது. இதற்கு பின்பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த ராஜா சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான காலி மனை உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை அந்த காலிமனை பகுதியில் இருந்து துர்நாற்றத்துடன் கூடிய புகை வெளிவந்தது. இதையடுத்து அப்பகுதியினர் அருகில் சென்று பார்த்தபோது அங்கு உடல் எரிந்த நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். உடனடியாக நிலத்தின் உரிமையாளர் ராஜா சிதம்பரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலுக்கு அருகிலேயே மண்எண்ணெய் கேன் ஒன்றும் கிடந்தது. எனவே நள்ளிரவில் அவரை யாராவது மர்ம நபர்கள் கடத்தி வந்து இங்கு வைத்து எரித்து கொலை செய்தார்களா? அல்லது அந்த வாலிபர் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பிணமாக கிடந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அதே பகுதியில் யாராவது மாயமாகி உள்ளார்களா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×