என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • வீட்டில் தூங்கிய பெண்களிடம் 12 பவுன் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    • இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் உள்ள கைப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. இவரது மனைவி சரோஜா மற்றும் அவரது உறவினரான அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி, காரைப்பாடியை சேர்ந்த புவனா ஆகியோர் பூமாலை வீட்டின் முன்பக்கத்தில் இரவில் படுத்து தூங்கினர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கேட்டை திறந்து வரண்டா உள்ளே சென்று சரோஜா, தனலட்சுமி, புவனா ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த மொத்தம் 12 பவுன் சங்கிலிகளை பறித்தனர்.

    இதனால் திடுக்கிட்டு விழித்த 3 பேரும், சங்கிலியை மீட்பதற்காக போராடினர். அப்போது அவர்களை கீழே தள்ளிவிட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பருத்திக்கு உரிய விலை கிடைக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    • பருத்தி சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை விவசாயிகளால் செலவிடப்படுகிறது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். மாவட்டத்தில் முக்கிய பயிராக பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்திலேயே பருத்தி அதிகளவில் பயிரிடப்படும் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் திகழ்கிறது. பருத்திக்கு என்று வேப்பந்தட்டையில் ஆராய்ச்சி நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த நிலையத்தில்தான் தமிழகத்திலேயே முதன்முறையாக பருத்தியை அறுவடை செய்ய நவீன எந்திரம் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. ஆண்டுதோறும் மாவட்டத்தில் சராசரியாக பருத்தி 10 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

    ஆனால் பருத்திக்கு சரியான விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தற்போது பருத்தி அறுவடை பணி முடியும் தருவாயில் உள்ளது. பருத்தி சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை விவசாயிகளால் செலவிடப்படுகிறது. பருத்திக்கு மருந்து அதிகம் அடிக்க வேண்டியிருக்கிறது. தற்போது பருத்தி களை எடுக்கும் பணியில் இருந்து அறுவடை வரை போதிய கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அவர்கள் சம்பளம் அதிகம் கேட்கிறார்கள். பருத்தி களை எடுக்கும் எந்திரங்களும் வாடகைக்கு உடனடியாக கிடைப்பதில்லை. பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து பருத்தியை காப்பாற்றி அறுவடைக்கு கொண்டு வருவதற்குள் விவசாயிகள் படாதபாடு படுகின்றனர்.

    பருத்திக்கு விவசாயிகள் இவ்வளவு செலவழித்தும் அதற்கான லாபம் கிடைப்பதில்லை. தற்போது பருத்தி ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.7 ஆயிரத்து 500 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. பருத்தியை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர். மேலும் இடைத்தரகர்கள் எடை மோசடியில் ஈடுபடுகின்றனர். பருத்தியை குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்தால்தான் விவசாயிகள் நஷ்டப்படமாட்டார்கள். மாவட்டத்தில் பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு காந்தி நகரிலும், வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடியிலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திக்கு சரியான விலை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.

    விவசாயிகளில் சிலருக்கு அந்த ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் இருக்கிறது என்று கூட தெரிவதில்லை. அங்கு பருத்தியை ஏலத்திற்கு கொண்டு செல்ல போக்குவரத்து செலவு அதிகமாகிறது. பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர்-இரூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 100 ஏக்கர் நிலத்தில், பெரம்பலூர் மாவட்ட ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது தற்போதுவரை வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. ஜவுளி பூங்கா தொடங்கப்பட்டால் மாவட்டத்தில் உள்ள பருத்திக்கு தேவை அதிகமாகும் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

    • பெரம்பலூரில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம், தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கு தங்கமணி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கத்தால் பிரபாகரனுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை பிரபாகரன் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனை தங்கமணி கண்டித்து, வீட்டில் தூங்குமாறு கூறியுள்ளார். பின்னர் அவர் இதுகுறித்து அருகே உள்ள வீட்டிற்கு சென்று பிரபாகரனின் தாய்க்கு போன் மூலம் தகவல் தெரிவித்து விட்டு, மதியம் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தங்கமணி அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்தார். அப்போது மின் விசிறி கொக்கியில் ஒயரில் தூக்கில் தூக்குப்போட்ட நிலையில் பிரபாகரன் தொங்கினார்.

    இது குறித்த தகவலின்பேரில் அங்கு 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர், பிரபாகரனை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    • தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நட்சத்திரக் கலைவிழா நடைபெற்றது
    • பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் வழங்கி பாராட்டினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் சார்பில் 2 -ம் நாள் நட்சத்திரா கலைவிழாவில் சாதனையாளர்களுக்கு விருது மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் நீலராஜ், துணை தலைவர் அனந்தலட்சுமி, இயக்குநர்கள் ராஜபூபதி, மணி, நிதிஅலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பத்மபூஷன் விருது பெற்ற பிரபல பின்னணி பாடகி சுசீலா, வேளாண் விஞ்ஞானி எசனை பெருமாள் (எ)சுருளிராஜன் மற்றும் சமூக ஆர்வலர் எஸ்.எஸ்.எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் சுல்தான் இப்ராகிம் ஆகியோருக்கு சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.

    நடிகை ஐஸ்வர்யாலெட்சுமி, திரைப்பட பின்னணி பாடகர்கள் மானசி, ஸ்டீபன் செக்காரியா, பிரியங்கா மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஆதவன், சவுண்டு சந்தியா ஆகியோர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    3ம் நாளான இன்று (25 -ந் தேதி) கலை நிகழ்ச்சியில் நடிகை சுருதிஹாசன், நடிகர் அருண்விஜய், நிகழ்ச்சி தொகுப்பாளர் மணிமேகலை, சின்னத்திரை நடிகர் அஸ்வத், ராபர்ட், கானா பாடகர் சுதாகர், பாடாகர் பூவையர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    • பெரம்பலூர் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யபட்டார்
    • ஆசிரியர் செல்வகுமார் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த பட்டதாரி ஆங்கில ஆசிரியர் செல்வகுமார் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கோபிநாத் கொடுத்த புகார் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆசிரியர் செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அறிவுறுத்தலின் பேரில் ஆசிரியர் செல்வக்குமாரை தற்காலிக பணிநீக்கம் செய்து பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டுள்ளார்.


    • அரசு பள்ளிகளில் கெட்டுப்போன முட்டைகள் வினியோகம் செய்யப்பட்டது.
    • மாற்று முட்டை வினியோகிக்க நடவடிக்கை

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சில பள்ளிகளுக்கு சத்துணவில் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக கடந்த சில நாட்களாக அனுப்பப்பட்ட முட்டைகள் கெட்டு போயிருந்ததாக சம்பந்தப்பட்ட அலுவலருக்கு புகார்கள் வந்தது. அதில் ஒரு சில பள்ளிகளில் அதற்கு பதிலாக வேறு முட்டைகள் வாங்கி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர் கூறுகையில், நேற்று முன்தினமும், நேற்றும் கெட்டு போன முட்டைகள் அனுப்பப்பட்டதாக புகார் வந்தது. அனைத்து முட்டைகளும் கெட்டு போகவில்லை, சில முட்டைகள் தான் கெட்டுப்போய் உள்ளது. மாற்று முட்டை வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, என்றார்.

    • தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நட்சத்திர கலைவிழா தொடங்கியது
    • மாணவர்கள் தாங்கள் சாதிக்க நினைப்பதை துணிச்சலோடு செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் நட்சத்திரா கலைவிழா நேற்று துவங்கியது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சீனிவாசன் தலைமை தாங்கி விழாவினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-பாடசாலைக் கல்வியானது வகுப்பறைக் கல்வியுடன் நின்று விடக்கூடாது. அது சிந்தனைத்திறன், மொழித்திறன், ஆக்கத்திறன், நடனக் கலைத்திறன் போன்ற திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.

    மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை சரியான நேரத்தில் பயன்படுத்தி சாதனையாளர்களாக சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தினைப் பெற வேண்டும்.மாணவர்கள் தாங்கள் எதை சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை தைரியமாகவும், துணிச்சலோடும் செய்யவேண்டும். கலை என்ற சொல் உணர்ச்சிக்கும், கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் என்றார்.செயலாளர் நீலராஜ், துணைத் தலைவர் அனந்தலட்சுமி, இயக்குநர்கள் ராஜபூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர், நிவானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் நடிகர் மிர்ச்சி சிவா கலந்துகொண்டு பேசுகையில், நமக்கான மதிப்பு ஒருவருக்கு புரியவில்லை என்றால் அவர்களை நாம் மதிக்ககூடாது.யாருக்கு பின்னாலும் நாம் செல்லக்கூடாது, சிலர் நம்ம கூட வரவில்லை என்றால் அதற்கான கொடுப்பனை அவர்களுக்கு இல்லை என நினைத்து கொள்ள வேண்டும். எனவே நேரத்தை வீணாடிக்கால் படித்து வாழ்க்கையில் சாதித்து காட்டவேண்டும் என்றார்.

    விழாவில் சினிமா நடிகை இவானா, காமெடியன்கள் மதுரை முத்து, அன்னபாரதி, ஜி.பி.முத்து, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் குழுவினர்கள், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அஞ்சனா, தீபக் ஆகியோர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.2 ம் நாளான இன்று (24-ந்தேதி, வெள்ளிக்கிழமை) நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பத்மபூஷன் விருது பெற்ற பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, வேளாண் விஞ்ஞானி எசனை பெருமாள் (எ) சுருளிராஜன் மற்றும் சமூக ஆர்வலர் எஸ்.எஸ்.எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் சுல்தான் இப்ராகிம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

    மேலும் நடிகை ஐஸ்வர்யாலெட்சுமி, திரைப்பட பின்னணி பாடகர்கள் மானசி, ஸ்டீபன் செக்காரியா, பிரியங்கா மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஆதவன், சவுண்டு சந்தியா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர். இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் நடந்த நட்சத்திர கலை விழாவினை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சீனிவாசன் தொடங்கி வைத்து பேசிய காட்சி. அருகில் செயலாளர் நீல்ராஜ், துணைத் தலைவர் அனந்தலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

    • தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் குடும்பவிழா நடைபெற உள்ளது
    • திரளானோர் பங்கேற்க மாவட்ட தலைவர் அழைப்பு

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தமிழ்நாடு யாதவ மகாசபை, பெரம்பலூர் மாவட்ட அமைப்பின் சார்பில் யாதவர்களின் குடும்பவிழா வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிஅளவில் துறைமங்கலத்தில் உள்ள ஜே.கே.மகாலில் நடக்கிறது.விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட தலைவரும், ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனருமான என்.முத்தையா தலைமை தாங்குகிறார்.

    இதில் மாநில தலைவரும், அமேட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் சரஸ்வதி மருத்துவக்கல்லூரிகளின் நிறுவனத்தலைவருமான டாக்டர் நாசே. ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.மாவட்ட அவைத்தலைவரும், செட்டிகுளம் லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியின் தாளாளருமான தமிழ்வாணன், பண்பாட்டுக்கழக செயலாளரும், மகாத்மா பப்ளிக் பள்ளியின் பொறுப்பாளருமான ராஜ்குமார் முன்னிலை வகிக்கின்றனர்.

    முன்னதாக பெரம்பலூர் பாலக்கரையில் யாதவர்களின் பண்பாட்டு ஊர்வலம் தொடங்குகிறது. இதில் மாநிலதலைவர் ராமச்சந்திரன் யாதவிற்கு சிறப்பான வரவேற்பும், பிரம்மபுரீசுவரர் கோவில், மதனகோபாலசுவாமி கோவில் மற்றும் எளம்பலூர் சாலை பாலமுருகன் கோவில் பூர்ணகும்ப மரியாதையும் அளிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பழையபேருந்துநிலையம், காமராஜர் வளைவு சிக்னல், சங்குப்பேட்டை, மதனகோபாபுலம், வெங்கடேசபுரம், பாலக்கரை, வழியாக சென்று விழா நடைபெறும் திருமண மகாலை அடைகிறது.

    விழாவில் மாநில பொதுச்செயலாளர் வேல்.மனோகரன், பொருளாளர் எத்திராஜ், மாநில மூத்த தலைவர் செல்வராஜ் மற்றும் மாநில மகளிரணி, இளைஞரணி செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர். இதில் 12 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற யாதவகுல மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே ரொக்கபரிசுகளும், கேடயமும் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.

    மேலும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றும், மாநில தலைவரை வரவேற்கும் நிகழ்ச்சி மற்றும் குடும்ப விழாவில் அனைத்து யாதவ பெருமக்களும் கலந்து கொண்டு குலப்பெருமையை நிலைநாட்ட வருகை தந்து விழாவை சிறப்பித்து தருமாறு மாவட்ட தலைவர் ஸ்ரீஅம்மன் முத்தையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    விழா ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் செல்வராஜ், பொருளாளர் எஸ்.பி.ராமர் மற்றும் மாவட்ட துணை பொறுப்பாளர்கள், மகளிரணி, இளைஞரணி உள்ளிட்ட மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், பெரம்பலூர் நகர, வேப்ப ந்தட்டை, பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர் ஒன்றிய நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.


    • இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
    • கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள், காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் உள்ளது.இத்திருக்கோயில் ஜுர்ணோ தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவானது நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவானது கடந்த 21-ம் தேதி வாஸ்து பூஜை, நவக்கிரக பூஜையோடு யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    தொடர்ந்து எட்டுத்திக்கு பூஜை, புற்றாங்கண் மண் எடுத்தல், பிரவேசபலி, கோ பூஜை, நாடி சந்தானம் பூஜை களோடு நான்கு கால யாக வேள்வியோடு, மஹா பூர்ணாஹுதியும் தீபாராதனையும் நடைபெற்றது. இதனையடுத்து மேளதாளம் முழங்க யாக சாலையிலிருந்து குடங்கள் புறப்பாடடோடு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    தொடர்ந்து லஷ்மி பூஜை மகா ஹோமத்தோடு காமாட்சி உடனுறை கைலாச நாதர் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையடுத்து பக்தர்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.இந்த கும்பாபிஷேக விழாவில் வயலப்பாடி, வேப்பூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்

    • மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்
    • பெற்றோர்கள் கொடுத்த புகாரின்பேரில் நடவடிக்கை

    பெரம்பலூர்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் தாலுகா, ஜோகிப்பட்டி அஞ்சல் புல்லா கவுண்டனூரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் செல்வக்குமார் (வயது33). இவர் தற்போது பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் கே.கே. நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த தகவலின்பேரில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துனர் மகேஸ்வரி ஆகியோர் பள்ளிக்கு சென்று பள்ளி மாணவிகளிடம் விசாரணை செய்தனர்.

    இதில் ஆங்கில ஆசிரியர் செல்வகுமார் மாணவிகளிடம் தவறான தொடுதலும், தவறான பார்வையும் மற்றும் குறிப்பிட்ட சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலும் மேற்கொண்டது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு நன்னடத்தை அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து அரசு பள்ளி ஆசிரியர் செல்வக்குமாரை கைது செய்து பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினார், வழக்கை விசாரித்த நீதிபதி முத்துகுமரவேல், ஆசிரியர் செல்வக்குமாரை வரும் மார்ச் 9ம்தேதி வரை காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து செல்வக்குமார் பெரம்பலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.


    • கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி உண்ணாவிரதம் நடைபெற்றது.
    • சம்பவ இடத்திற்கு வந்த வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் மற்றும் வி.களத்தூர் போலீசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மரவநத்தம் அம்பேத்கர் தெருவில் கழிவுநீர் கால்வாய் சரியாக அமைத்து தராததால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியது. இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். கால்வாய் அமைக்கும் பணி தொடங்காததால் நேற்று பொதுமக்கள் ஒன்று திரண்டு மரவநத்தம் கிராமத்தின் பஸ் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் மற்றும் வி.களத்தூர் போலீசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனடியாக பொக்லைன் எந்திரம் கொண்டு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி வைத்து இந்தப்பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


    • பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது
    • பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கத்தில் கடந்த 8-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகள் தனித்தனியாகவும், மாணவர்களுக்கான கால்பந்து போட்டியும் நடைபெற்றது. இதில் நீச்சல் போட்டிகள் 200 மீட்டர் பிரீ ஸ்டைல், பிரஸ்ட் ஸ்ட்டோக், பேக் ஸ்ட்டோக், பட்டர் பிளை, 400 மீட்டர் தனி நபர் மெட்லே ஆகிய 5 வகையான பிரிவுகளில் நடைபெற்றது. நீச்சல் போட்டிகளில் 50 மாணவர்களும், 21 மாணவிகளும், கால்பந்து போட்டியில் 13 அணிகளை சேர்ந்த 216 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ.ஆயிரமும் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த வீரர்-வீராங்கனைகளும், குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் வருகிற மே மாதத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே விளையாட்டு அரங்கத்தில் இன்று (வியாழக்கிழமை) பொது பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு தடகளம், கபடி, இறகுபந்து ஆகிய விளையாட்டு போட்டிகளும் தனித்தனியாகவும், ஆண்களுக்கு வாலிபால், சிலம்பம் போட்டிகளும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியும் நடைபெறவுள்ளது.

    ×